Friday, February 08, 2008

உந்துகணைத் தாக்குதலிலேயே கடற்படைப் படகு மூழ்கியது: கடற்படை

[வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2008] மன்னார் கடற்பரப்பில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதலின் போது உந்துகணைத் தாக்குதலிலேயே சிறிலங்கா கடற்படை படகு முழ்கடிக்கப்பட்டதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: இரு கடற்படைப் படகுகள் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதலுக்கு உள்ளானது தொடர்பாக நாம் இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ச இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்தை நேற்று முன்நாள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையின் கடற்பரப்பில் கடந்த திங்கட்கிழமை 400 இந்திய மீன்பிடிப்படகுகள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு சென்ற கடற்படையினரிடம் அவற்றில் ஒரு படகு உதவி கோரியது. அதனைத் தொடர்ந்து கடற்படையினரின் இரு படகுகளும் அங்கு சென்றன. கடற்படையினரின் படகுகள் மீன்பிடிப்படகை அண்மித்த போது கடற்படையினரின் ஒரு படகின் மீது 3 உந்துகணைகள் ஏவப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து கடற்படை படகு முழ்கியது. அந்தப் படகில் இருந்த 7 கடற்படையினரில் ஒருவரே காயத்துடன் தப்பியுள்ளார். உந்துகணைத் தாக்குதலைத் தொடர்ந்து கடற்படைப் படகின் மீது துப்பாக்கிப் பிரயோகமும் நடத்தப்பட்டுள்ளது என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வடக்கு மற்றும் மேற்கு கடற்பிரதேசங்களில் கடல் கண்ணிவெடிகளை விதைத்துள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிறிலங்கா கடற்படையினர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. . புதினம்.கொம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.