[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2008] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இன்று இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தையடுத்து கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தின் ஊடான தொடருந்து போக்குவரத்துக்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு இடம்பெற்றபோது கோட்டையிலிருந்து வெளியிடங்களுக்குச் செல்லும் தொடருந்துகள் பல புறப்படத் தயாராக இருந்ததாகவும், வெளியிடங்களிலிருந்தும் பல தொடருந்துகள் வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் தொடருந்து நிலையத்தில் பெருமளவு சனநெரிசல் அப்போது காணப்பட்டது. இந்நிலையிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:10 மணியளவில் தொடருந்து நிலையத்தின் 3 ஆவது இலக்க மேடையில் குண்டு வெடித்தது. சம்பவ இடத்திலேயே 9 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 3 பேர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். ஒருவருடைய உடல் வயிற்றுப் பகுதியுடன் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இது தற்கொலைத் தாக்குதலாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட சடலம் தற்கொலைத் தாக்குதலை நடத்தியவருடையதாக இருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் நடைபெற்ற உடனடியாகவே காவல்துறையினரும், பெருமளவு படையினரும் தொடருந்து நிலையத்தில் குவிக்கப்பட்டனர். கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புக் காரணங்களுக்காக கோட்டைக்கான அனைத்து தொடருந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கொழும்பு தேசிய மருத்துவமனையில் 103 பேர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் காயமடைந்தவர்களில் பலர் சிறுவர்கள் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. கொழும்பு தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு குறித்து இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்ததாவது: கொழும்பில் இருந்து அம்பேபுச நோக்கிச் செல்வதற்கு தயாரான தொடருந்து தரித்து நின்ற பகுதியிலேயே இக்குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது. இது ஒரு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக் குண்டுதாரி ஒரு பெண் என்பதும் தெரியவந்துள்ளது. அவரது தலைப்பகுதியும் உடல் அவயங்களும் தொடருந்து நிலையத்தின் 3 ஆவது இலக்க மேடை அமைந்துள்ள பகுதியில் மீட்கப்பட்டது. இத்தாக்குதலில் 10 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 100 பேர் வரை காயமடைந்துள்ளனர் என்றார். இதேவேளை கொழும்பு மருத்துவமனைப் பணிப்பாளர் அனில் ஜயசிங்க கூறியதாவது: மருத்துவமனைக்கு முதலில் 5 பேரின் சடலங்களும் காயமடைந்த 97 பேரும் கொண்டு வரப்பட்டனர். உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் பெண்கள் ஆவர். காயமடைந்தவர்களில் 12 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார். இத்தாக்குதல் சம்பவத்தை அடுத்து கொழும்பில் இருந்து வெளியிடங்களுக்கான தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து கொழும்பு தொடருந்து நிலைய அதிகாரி ஒருவர் தகவல் தருகையில், இத்தாக்குதலை அடுத்து கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கான தொடருந்து சேவைகள் சில மணிநேரம் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இன்று இரவு அவை வழமைக்கு திரும்பவுள்ளன. எனினும் வவுனியாவிற்கான சேவைகளை பாதுகாப்புக் கருதி மதவாச்சியுடன் நிறுத்துமாறு பாதுகாப்புத்தரப்பினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்புத் தரப்பினரின் மறு அறிவித்தல் கிடைக்கும் வரை வவுனியாவிற்கான தொடருந்து சேவைகள் மதவாச்சி வரையே நடைபெறும். தொடருந்து பயணிகள் மதவாச்சியில் இருந்து வவுனியா செல்வதற்கு தாம் ஒழுங்கு செய்வதாக படைத் தரப்பினர் அறிவித்துள்ளனர் என்றார்.
Monday, February 04, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.