Wednesday, December 26, 2007

திருமலை கடற்கரைச்சேனையில் சிங்களக் குடியேற்றம்- ஒரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை: விடுதலைப் புலிகள் குற்றச்சாட்டு

[புதன்கிழமை, 26 டிசெம்பர் 2007]

திருகோணமலை பிரதேசத்தின் தமிழ்க் கிராமங்களில் ஒன்றான கடற்கரைச்சேனையில் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாக சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்படுவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

சிறிலங்கா இராணுவத்தினது வலிந்த தாக்குதல் நடவடிக்கையினால் திருகோணமலை கடற்கரைச்சேனை பகுதியிலிருந்து கடந்த ஆண்டு தமிழ் மக்கள் கட்டாயமாக வெளியேற்றபட்டனர். 2006 ஆம் ஆண்டு அனைத்துலகம் பார்த்துக் கொண்டிருக்க சிறிலங்கா இராணுவத்தின் திட்டமிட்ட எறிகணைத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் காயங்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர்.

சிறிலங்கா அரசாங்கத்தினது இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையாக தமிழர்களின் அப்பாரம்பரிய பிரதேசம் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதனால் தமிழ் மக்கள் தங்களது சொந்தக் கிராமங்களில் மீண்டும் குடியேற இயலாத வகையில் தடுக்கப்பட்டனர்.

அதிஉயர் பாதுகாப்பு வலயம் என்று அழைக்கப்படு கடற்கரைச் சேனையில் 25 சிங்கள கிராமங்களைச் சேர்ந்தோர் குடியேற்றப்பட்டுள்ளனர்.

கிழக்கில் தமிழ் மக்களை வலிந்து வெளியேற்றிவிட்டு சிறு அளவில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கிவிட்டு பின்னர் அதனை யாருக்கும் தெரியாமல் படிப்படியாக விரிவாக்கம் செய்து வரும் சிங்களக் குடியேற்றத்தின் வெளிப்பாடுதான் இது.

1985 ஆம் ஆண்டு திருகோணமலை திரியாய் கிராமத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்து அழித்துவிட்டு அப்பகுதியில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கியமை என்பது சிறிலங்கா அரசாங்கத்தின் சிங்களக் குடியேற்றங்களில் ஒரு உ தாரணமாகும்.

திரியாயில் 1985 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் நாள், வாகனங்களில் சென்ற சிறிலங்கா இராணுவத்தினர் தாங்கள் சுடுவதற்கு முன் அங்கிருந்து தமிழ் மக்கள் வெளியேற வேண்டும் எச்சரித்தனர். 1,100 வீடுகளை எரித்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்கியிருந்தனர். 1985 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 5 ஆம் நாள், இடம்பெயர்ந்திருந்த மக்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். அத்தாக்குதலில் 10 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். தொடர்ந்து ஓகஸ்ட் 14 ஆம் நாள், பேரூந்து ஒன்றில் 6 பொதுமக்கள் ஏற்றப்பட்டு வெட்டிக்கொல்லப்பட்டனர். சிறிலங்கா இராணுவ வன்முறையால் தமிழர்கள் படிப்படியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தமிழர்கள் வெளியேறிய உடன் அப்பகுதியில் சிங்களவர்களைக் கொண்டு படிப்படியாக குடியேற்றங்களை உருவாக்கினர்.

இத்தகைய நடவடிக்கையானது ஒரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையே. பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.