[புதன்கிழமை, 14 நவம்பர் 2007]
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில் சிறிலங்காவில் கடத்தல்களும் காணாமல் போதல்களும் தொடரும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் சனல் - 04 தொலைக்காட்சியில் இலங்கை நிலைமைகள் தொடர்பான நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
அதில் சரத் பொன்சேகா கூறியுள்ளதாவது:
கடத்தல்கள் தொடர்பாக குற்றம் சாட்டுவோர் மேற்கத்தைய நாடுகளினது கருத்துகளை பிரதிபலிப்பவர்கள். நூற்றுக்கணக்கானோர் காணாமல் போனதாகவும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அது தொடர்பில் எதுவித முறைப்பாடும் காவல்நிலையத்தில் கூட கொடுக்கப்படவில்லை. அவர்கள் காவல் நிலையத்திற்கு சென்று முறையிட்டதாகவோ சாட்சியங்களை அளித்ததாகவோ எதுவித சாட்சியமும் இல்லை. நாங்கள் கவலை கொள்கிறோம். அப்பாவி பொதுமக்களுக்கு நாங்கள் பாதுகாப்பளிக்கிறோம்.
கிழக்கில் கருணா குழுவினரோ அல்லது இதர துணை இராணுவக் குழுக்களோ கடத்தல்களில் ஈடுபடுகின்றனர் என்று நீங்கள் கூறினால் அது விடுதலைப் புலிகளுக்கும் துணை இராணுவக் குழுக்களுக்கும் இடையேயான பிரச்சினை.
கிழக்கு என்பது இயல்பு நிலைமை உள்ள பகுதி அல்ல. அங்கு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மக்கள் கொல்லப்படுவதும் கடத்தப்படும் தொடர்கிறது என்றார் சரத் பொன்சேகா.
அதே நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த மக்கள் கண்காணிப்புக் குழு ஒருங்கிணைப்பாளரான மனோ கணேசன், கடத்தப்படுவோரைக் கொண்டு செல்லும் வாகனங்கள் அனைத்தும் கொழும்பின் சோதனை நிலையங்களினூடேதான் செல்கிறது. ஆனால் எங்கும் அந்த வாகனங்கள் தடுக்கப்படவில்லை. இதன் மூலமாக கடத்தலில் ஈடுபடுவோருக்கும் படையினருக்கும் இடையேயான தொடர்பை புரிந்துகொள்ள முடியும். இதற்காக ரொக்கெட் விஞ்ஞானம் படித்திருக்க வேண்டிய தேவையில்லை. அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்க சக்திகளே இப்படுகொலைகளுடன் தொடர்பில் உள்ளனர் என்றார் அவர்.
சனல் - 04 தொலைக்காட்சிக் குழுவினர் கிழக்கில் பொதுமக்களிடம் கருத்துகளைப் பதிவு செய்வதற்கு முயற்சித்த போது துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரால் அச்சுறுத்தப்பட்டனர். "அகதிகள் முகாமுக்கு இரவும் பகலும் செல்லுகிற கருணா குழுவினர் கடத்தலில் ஈடுபடுவதாக" பொதுமக்கள் அச்சத்தினூடே தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துரைரட்ணம் கூறுகையில், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் அனுதாபிகளைக் கண்டறிய அரசாங்கத்துக்கு கருணா குழு போன்ற துணை இராணுவக் குழுக்கள் தேவைப்படுகிறது என்றார்.
சனல் - 04 குழுவினர் யாழ்ப்பாணத்தில் 4 நாட்கள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் யாழ்ப்பாணத்துக்கு அவர்கள் சென்ற பின்னர் இராணுவத்தினரின் பார்வையிலின்றி எதனையும் செய்யக்கூடாது என்று இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் யாழ். நகரை இராணுவத்தினர் 90 நிமிடம் சுற்றிக் காண்பித்துள்ளனர். இதனையடுத்து மறுநாளே அக்குழுவினர் யாழிலிருந்து வெளியேறிவிட்டனர். அவர்கள் அங்கு சென்றிருந்த காலப்பகுதியில் 4 பேர் காணாமல் போயிருந்தனர் என்றும் அந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.