Friday, November 16, 2007

அமெரிக்காவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டமை கவலைக்குரியது - கஜேந்திரன்

[வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007]

தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் சொத்துக்களை முடக்குவதற்கு அமெரிக்க திறைசேரி தீர்மானம் எடுத்துள்ளமையானது தமிழ் மக்களுக்கு மிகுந்த கவலையையும் ஏமாற்றத்தினையும் ஏற்படுத்தியுள்ளது என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு..

செல்வராஜா கஜேந்திரன்
பாராளுமன்ற உறுப்பினர்
யாழ் தேர்தல் மாவட்டம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
16-11-2007

அமெரிக்காவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் (த.பு.க) சொத்துக்கள் முடக்கப்பட்டமை கவலைக்குரியது

தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் சொத்துக்களை முடக்குவதற்கு அமெரிக்க திறைசேரி தீர்மானம் எடுத்துள்ளமையானது தமிழ் மக்களுக்கு மிகுந்த கவலையையும் ஏமாற்றத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று தசாப்த காலமாக தமிழ் மக்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பு போர் நடவடிக்கையின்போது பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறான சந்தற்பங்களில் ஐக்கிய நாடுகள் சபைக்கு சொந்தமான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களைவிட பலமடங்கு அதிகமான மனிதாபிமான உதவிகளை தமிழர் புனவாழ்வுக்கழகம் வழங்கி வந்துள்ளது.

தமிழ் மக்களின் வாழ்விடங்களை அழித்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கான பொருளாதார மூலங்களை அழித்து சொந்த வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிப்பதன் மூலம் சொந்த மண்ணிலே அகதிகளாக அனைத்துக்கும் கையேந்திவாழ அரசு நிற்பந்தித்துள்ளது.

இதன் மூலம் தமிழ் மக்களின் கல்வி பொருளாதாரம், கலை கலாச்சாரம் பண்பாடு அனைத்தையும் அழித்து விடவே சிங்கள அரசுமுயன்றுவருகின்றது. அகதிகளாக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் கையேந்திவாழாமல் சொந்தக்காலில் சுயகொரவமாக வாழ வழிசமைத்ததுடன் தமிழ் மக்கள் தமது கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை இழந்து விடாமல் காப்பதிலும் த.பு.க ஈடுபாட்டுடன் உழைத்துள்ளது.

கடந்த 2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமிப் பேரலைதாக்கத்தின் பின்னர் அந்த அழிவிலிருந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மறுவாழ்வை ஏற்படுத்திக் கொடுப்பதில் த.பு.க பெரும் பங்கு வதித்தது என்பது அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிங்ரன் அவர்களும் நன்கு அறிவார்.2002 ம் ஆண்டு சமாதான உடன்படிக்கைக்கு பின்னர் ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் யுத்தம் அமெரிக்காவின் நிதியுதவி யுத்தப்பயிற்சி, மற்றும் ஆலோசனை என்பவற்றுடன் அமெரிக்க அரசின் முழு ஆசீர்வாதத்துடனேயே மகிந்த யுத்தத்தினை நடாத்தி வருகின்றார்.இந்த யுத்தத்தின்போது 250000 திற்கும் அதிகமான பொது மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

2005 டிசம்பர் மாதத்தின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் இடம் பெயர்ந்து வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களை அவர்கள் வாழும் இடங்களில் சென்று பார்க்க முடியாத நிலையில் ஏனைய ஐ.நா அமைப்புக்களும் சர்வதேச தொண்டு நிறுவனங்களும் உள்ள நிலையில் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் அம் மக்கள் மத்தியில் நின்று சேவையாற்றி வருவது அமெரிக்கா அறியவில்லையா.

அரச பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களை அழிவுகளுக்கும் அவலங்களுக்கும் உள்ளாக்கிவரும் ஸ்ரீலங்கா அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்துவரும் அமெரிக்கா மேற்படி ஸ்ரீலங்கா அரசின் நடவடிக்கைகளால் அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியளித்து அரவணைத்து வரும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் சொத்துக்களை முடக்குவதற்கு தீர்மானித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக மகிந்த முன்னெடுத்து வரும் இன அழிப்பு போரை மேலும் தீவிரப்படுத்தி ஏற்கனவே அவலங்களை சந்தித்துவரும் தமிழ் மக்களுக்கு மேலும் மேலும் இடப்பெயர்வுகளையும் அழிவுகளையும் கொடுப்பதற்கே வழிவகுப்பதாகவே அமைகின்றது.

மேற்படி தீர்மானத்தின் மூலம் இலங்கை தீவில் தமிழ் மக்கள் வேரோடு அழிக்கப்படுவதை அமெரிக்கா விரும்புவதாகவே தமிழ் மக்கள் அஞ்சுகின்றனர். தமிழ் மக்களை பாதிக்கும் வகையில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள தீர்மானத்தினை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோருகின்றேன்.

செல்வராஜா கஜேந்திரன்
பாராளுமன்ற உறுப்பினர்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.