Saturday, November 17, 2007

வைகோ, பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் பிணையில் விடுதலை

[சனிக்கிழமை, 17 நவம்பர் 2007]

பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கான வீரவணக்க ஊர்வலத்தை அனுமதி மறுப்பை மீறி நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 262 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் பிணை கோரி சென்னை எழும்பூர் 13 ஆவது நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். நீதிபதி முருகானந்தம் (பொறுப்பு) முன்னிலையில் இந்த மனுக்கள் நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் வழக்கறிஞர் காயத்ரியும், வைகோ, பழ.நெடுமாறன் தரப்பில் வழக்கறிஞர் தேவதாசும் முன்னிலையாகி வாதாடினார்கள். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி முருகானந்தம் நேற்று மாலையில் தனது தீர்ப்பை வழங்கினார்.

தீர்ப்பில் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட 262 பேரையும் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டார். அனைவரும் தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ஒரு நபர் பிணையில் விடுதலை ஆகலாம் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார். மேலும் விசாரணை காவல்துறை அதிகாரி அழைக்கும் போது விசாரணைக்கு வரவேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார்.

262 பேருக்கும் தலா ஒருநபர் பிணை என்றால் 262 பேர் நீதிமன்றுக்கு வரவேண்டும். எனவே, குறைந்தபட்சம் 100 பேர் பிணை போட வந்தால் போதும் என்று நீதிபதி நிபந்தனையை சற்று தளர்த்தினார். பிணைக் தொகையை கட்டி 100 பேரை வரவழைத்த பிறகு வைகோ உள்ளிட்ட அனைவரும் சிறையிலிருந்து விடுதலை ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நேற்றே நடந்தன.

2 comments:

  1. எமக்கு ஆதரவான குரல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க முனைந்தாலும் என்றைக்கும் அது அணையாது என்பதை அடக்குமுறையாளர் புரிந்து கொள்ள வேண்டும்.

    எமக்காச் சிறை சென்ற எம்முறவுகளுக்கு நன்றி தெரிவிப்பதைத் தவிர, வேற ஏதுவுமே எம்மால் முடியவில்லை.

    -தூயவன்-

    ReplyDelete
  2. சிறைமீண்ட செந்தமிழ் மறவர்கள் வைகோ, நெடுமாறன் இருவருக்கும் ஈழத்தமிழர்களின் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

    vettri-vel

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.