[செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2007] நவம்பர் இரண்டாம் திகதி இதே நாள் எட்டு வருடங்களின் முன் வன்னிக் காடுகள் தம் மேனிசிலிர்க்க புளகாங்கிதம் தாளாமல் ஆனந்தக் கண்ணீர் சிந்தின. அன்று தான் வன்னிக் காட்டின் மார்பைப் பிளந்து தமிழர் மீது 'இறுதி வெற்றி" (ஜெயசிக்குறு) என வந்த சிங்களப் படையை துவம்சம் செய்து இந்தக்காட்டின் பிள்ளைகள் முன்னேறிக் கொண்டிருந்தனர். காடும் தன் பிள்ளைகளின் தீரம் கண்டு திமிர் கொண்டு எழுந்தது. வர்ணிக்க முடியா போர்க்களம். வகை சொல்ல இயலா வெற்றி. குதிரைக்கு கொம்பு முளைத்தாற்போல் உலகத் தமிழருக்கெல்லாம் திமிர் ஏறிய திருநாள் அன்று. எட்டு வருடம் கழித்து அதே நாள் காலை விடிந்த பொழுதில் எல்லாவற்றையும் எப்பொழுதும் கண்ணுற்றிருக்கும் வானம் வன்னியில் அழுதது. இன்று அது ஏன் அழுகிறதென்று அந்தக் கணம் யாரும் அறியார். வானம் அழ வன்னியின் காடுகளும் அழுதன வன்னியின் ஓலைக்கூரைகளும் அழுதன. காடுகளோ அழுகையை நிறுத்துவதாகக் காணோம். மெல்லச் செய்தி கசிய அழுகின்ற கூரைகளின் உள்ளே மனிதர்களும் அழுதார்கள். தமிழ்ச்செல்வன் இறந்துவிட்டார். அடர்காட்டின் நடுநிசியில் உலவும் அமைதி போன்று நிலவிற்று அந்தப் பொழுது. சற்றைக்கெல்லாம் 'புலிகளின் குரல்" வானொலியின் முகாரி இசை காட்டினதும் மனிதர்களினதும் மனங்களை மூர்க்கமாய் பிசைந்து வருகிறது. யார் வருவார் ஆறுதல் சொல்ல யார் உளார் நமக்கென்று! வானொலியில் அறிவிப்பு வருகிறது. 'ஐந்தாம் திகதி தனது கல்லறைக்குப் போகும் முன் தமிழ்ச்செல்வன் வன்னியின் வீதிகளால் இறுதி உலா வருவார்." என்று. ¤ ¤ ¤ மூன்றாம் திகதி வன்னிக் காட்டின் பூமரங்கள் எல்லாம் தம்மால் முடிந்தளவு பூத்தன. வன்னியின் மக்களெல்லாம் இறுதி உலாவரும் தம் பிள்ளை தமிழ்ச்செல்வனுக்கு மலர்தூவி மண்டியிட்டு அழ பூக்களுக்கு எங்கே போவது இந்தக்காடு? இதைப் புரிந்து தானோ என்னவோ இந்தக்காடு அன்று முடிந்தளவு பூத்தது. வன்னியே வீதிக்கு வந்து காத்து நின்றது. தமிழ்ச்செல்வன் வருவாராம். ¤ ¤ ¤ காலை பதினொரு மணி கிளிநொச்சியிலிருந்து கண்ணாடிப் பேழையில் தமிழ்ச்செல்வனின் முதற்பயணம் வட்டக்கச்சிக்கு. அந்த ஊரேகூடித் தெருவில் நின்றது. இன்றுதான் தமிழ்ச்செல்வன் எதிரே வரும் தன் மக்களைப் பார்த்து புன்னகைக்காத முதல் நாள். தன் எதிரே வரும் மூத்தவர்களைக் கண்டும் ஊனக்காலோடு கோலுன்றி எழுந்து நிற்காத முதல் நாள் இன்றுதான். தன் மக்கள் கதறி அழுதும் அதை சட்டை செய்யாது பேசாமல் போவது இன்று தான். மலர்களும் மாலைகளும் பேழைமேல் குவிய அதனை ஒதுக்கித் தள்ளுகிறார்கள் அருகிருந்த புலிவீரர்கள். நகரும் ஊர்தியின் பின்னாலும் ஆற்றாமையோடு அழுதழுது ஓடி வருகிறார்கள் மக்கள். இன்னும் ஒரு கணமாயினும் தமிழ்ச்செல்வனை கூடுதலாய்ப் பார்த்து விட மாட்டோமா என்ற தவிப்பில். அதில் ஒரு பெண்மணி கதறியபடி ஓடி வருகிறார். 'ஒருக்காச் சிரியடா ஒருக்காச் சிரியடா ஒருக்காச் சிரிச்சுப் போட்டுப் போ" அவரோ எதையும் கேட்பதாயில்லை பார்ப்பதாயில்லை அசைவற்றுப் போய்க்கொண்டிருக்கிறார். மதியம் விசுவமடுவால் ஊர்தி இறுதி உலாப் போகிறது. வீதியெங்கும் நிரை நிரையாய் நிற்கிறார்கள் மக்கள். மிகவும் முதியவர் ஒருவர் தன் முதிய துணைவியை ஒரு கையிலும் ஊன்றிய கோலை மறு கையிலுமாகக் கொண்டு வருகிறார். அவர் பாடையேற படுக்கையில் காத்திருக்கும் வன்னியின் ஒரு முதுமனிதர் என்று அவரது நடையும் அவரது கோலமும் காட்டுகிறது. இன்று தான் அவர் தன் சக்தியெல்லாம் திரட்டி எழுந்து நடந்து வருகிறார். மரண ஆசையோ! அவரது முயற்சி பலனளிக்கிறது. ஊர்தி அவ்விடத்தை விட்டு நகரமுன் அவர் ஊர்தியை அடைந்து விட்டார். தன் முதிய துணைவியின் கையில் இருந்த பூக்களில் பாதியை வாங்கஇ துணைவி கையைப் பேழையில் பிடித்து விடுகிறார். பூவைப் பேழையில் வைத்து 'ஐயா" என்று ஒற்றைச் சொல்லை மட்டும் உதிர்க்கிறார் மனிதர். பழுத்த ஒளியே அற்றுப்போன கண்களில் இருந்து நீர் வழிந்து ஓடுகிறது. தமிழ்ச் செல்வன் இதைப் பார்க்கவில்லை. தமிழ்ச்செல்வனை இம்முதியவர் முன்னெப்போதும் பார்த்திருப்பாரா? தமிழ்ச்செல்வன் போகிறார். ¤ ¤ ¤ புதுக்குடியிருப்பு வன்னியின் சிறிய பட்டணம். மக்கள் வெள்ளத்தைக் கடந்து வீதியால் ஊர்தியை நகர்த்தவே முடியவில்லை. பயணத்திற்காகத் திட்டமிட்ட நேரம் தாண்டிக்கொண்டேயிருந்தது. சனங்கள் தமிழ்ச்செல்வனை விடுவதாயில்லை. முல்லைத்தீவுக்கு தமிழ்ச்செல்வன் போகவும் இரவு பத்துப்பதினொரு மணியாயிற்று. மக்களோ மழையில் காத்துக்கொண்டேயிருக்கிறார்கள். 'சுனாமி" தன் வயிறாற மனிதர்களைத் தின்று தீர்த்த இடமிதுதான். ஒற்றைக் கணத்தில் ஒரு பட்டணமே கற்குவியலாய் மாறிய அந்த நாளில் மறுகணமே - வந்த அலைநீர் மீண்டும் கடலில் வடிய முன்பே ஸ்தலத்திற்கு வந்து இந்த மக்களை மீட்டவர் அல்லவா இப்போது வருகிறார். உலகமே அதிசயத்தில் ஆழ்ந்து போகும் வண்ணம் விடுதலைப் புலிகளின் ஆளுமையைக் காட்டியவர் அல்லவா வருகிறார். கடற்கரை ஜேசுபிரானையே அலை அள்ளிப் போனபோது மீட்பராய் அன்று வந்த தமிழ்ச்செல்வன் இப்போ மீளாத்துயிலில் வந்ததை அந்த மக்களால் தாங்கவே இயலவில்லை. ஒரு தாய் அழுகிறாள் 'உனக்கென்று கட்டிய மாலையே காய்ந்து போயிற்று இவ்வளவு நேரம் எங்கையா போனாய்! இதைக் காணவா இந்தப் பாழுங்கடல் என்னைக் கொண்டுபோகாமல் விட்டது" இதைக்கேட்டா வானம் அழுகிறது அதில் நனைந்தபடி மக்களும் அழுகிறார்கள். தமிழ்ச்செல்வன் முல்லைத்தீவை விட்டுப் போகிறார். கடல் தமிழ்ச்செல்வனின் காலடிக்கு வர படாத பாடு படுகின்றது. வீதியை முட்டமுடியாமல் அழுதபடி திரும்புகின்றன அலைகள். இந்த மக்களைத் தின்று பாவம் செய்த கடலில் தமிழ்ச்செல்வனின் பாதம் நீட்ட முடியவில்லை. ¤ ¤ ¤ முள்ளியவளைக்கு வரவும் நடுச்சாமம் ஒரு மணியாயிற்று. மழை இப்பொழுதும் பெய்து கொண்டிருக்கிறது. பயணத்தின் திட்டப்படி இன்று மாலையே முள்ளியவளையை விட்டு ஊர்தி புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கு வந்தடைந்த நேரம் இரவு ஒரு மணி. கால் வலிக்கக் கால் வலிக்க காத்திருந்த மக்கள் களைப்புற்றார்களில்லை. தமிழ்ச்செல்வனைக் காணாமல் அவர்கள் வீடு திரும்பினார்களில்லை. முள்ளியவளையே நடுநிசியில் அழுகிறது தமிழ்ச்செல்வனுக்காக. மழை பெய்கிறது ஊர்தியை நோக்கி சனம் நெருக்கியடிக்கிறது. இதன் பின்னால் தரையோடு தரையாக தாவி வருகிறது ஒரு உருவம். அது ஒரு பெண்மணி. இரண்டு கால்களும் ஊனமுற்ற ஒரு சப்பாணிப் பெண். அவளது மனம் மட்டும் ஊனமேயல்ல. கைகளை ஊன்றித் தரையில் தாவி வருகிறாள் அவள். யாரும் அவளைக் கண்டு கொள்ளும் பொழுதல்ல அது. நடுநிசியோடு வீதியை அண்மித்து விட்டாள். ஆயினும் ஊர்தியை நெருங்க முடியவில்லை. சனக்கூட்டம் குறுக்கே நின்றது. பக்க வாட்டாகப் பார்த்தாள் அங்கு நீர் தேங்கி சகதியாய்க் கிடந்தது. முன்னேற முடியாமல் அந்தரித்துப் போனாள் அவள். இறுதியில் மூர்க்கம் கொண்டவளாய் சகதிச் சேற்றில் கைகளை ஊன்றி தாவி வருகிறாள். தமிழ்ச்செல்வனைப் பார்க்க முடியவில்லை. ஊர்தியில் நின்ற போராளி குதித்து சனங்களை விலத்தி அவளுக்கு வழிவிடுகிறான். 'ஓ" என்று புலம்புகிறாள் அந்தப் பெண். அந்த நடுநிசியில் கொட்டும் மழையிலும் அவள் கதறியழும் காட்சியைக் கண்ணுற்றாயினும் தமிழ்ச்செல்வன் உயிர் பெறக்கூடாதா? ¤ ¤ ¤ மல்லாவியை நோக்கித் தமிழ்ச்செல்வன் வந்து கொண்டிருக்கிறார். இது வன்னி விளாங்குளம் துயிலுமில்லத்தடி. இங்கு தான் ஒருநாள் இப்பெரும் ஆளுமை விக்கி அழுததைக் கண்டேன். தனது உதவியாளர்களில் ஒருவனாய் இருந்த இளவயதுப் போராளி ஒருவன் ஒரு களத்தில் வீரச்சாவடைந்தான். அவனை அடக்கம் செய்வதற்காக ஒரு காலைப் பொழுதில் இந்தத் துயிலுமில்லம் வந்திருந்தார் தமிழ்ச்செல்வன். துக்கத்தில் அவர் முகம் தொங்கிக் கிடந்தது. கண்கள் வெறுமையைப் பார்த்துக் கொண்டிருந்தன. புதைகுழிக்கு மண் போட்டு வருகிறார் அவர். வீரச்சாவடைந்த மாவீரனின் தாயும்இ தந்தையும் மரநிழலில் நிற்கிறார்கள். அவர்கள் மிகவும் வயோதிபர்கள். எழுபது வயதிற்கும் மேல் இருக்கும்போல் தெரிந்தது. தந்தைக்கு இருகண்களும் தெரியாது. தாயாரை நோய் தின்றுகொண்டிருப்பது தெரிந்தது. தமிழ்ச்செல்வன் அவர்களின் அருகே போகிறார் ஆறுதல் சொல்ல. ஆனால் நடந்ததோ வேறு. அவர்கள் இவரது கையைப் பிடித்த கணமே மறைக்க முடியாத் துயரம் இவர் கண்களில் நீராய் கொட்டுகிறது. விக்கி அழுகிறார் தமிழ்ச்செல்வன். அவர் நெஞ்சில் கனத்த துக்கம் வெடித்து ஆறுதல் சொல்லும் ஆளுமையைப் பறித்து விட்டது. கல்லறைக் கதவு திறந்து பார் வீரனே உனக்காய் அழுதவன் இறுதியாய் போகிறான். முன்னாள் யாழ். மாவட்டத் தளபதிஇ தமிழ் மக்களின் அரசியல் தலைவன்இ தமிழீழத்தின் இராஜதந்திரி உதவிக்கு நின்ற இள வயதுப் போராளிக்காய் அழுத இடம் கடந்து போகிறான். மல்லாவி வன்னியின் இன்னொரு சிறு பட்டணம். முதல் நாளிரவு எட்டு மணிக்கு நடப்பதாய் இருந்த வீரவணக்கக் கூட்டத்தை இன்று முன்னிரவில் தான் தொடங்க முடிந்தது. மழையில் நனைந்தபடி மக்கள் வெள்ளமாய் திரண்டிருக்கின்றனர். கொட்டும் மழையில் நனைந்தபடி குலையாமல் நடந்த முதல் கூட்டம் இதுவோ! ¤ ¤ ¤ கல்விளானை தமிழ்ச்செல்வன் அடையவும் நடுநிசியாகிவிட்டது. பன்னிரண்டு மணியாயிருக்கலாம். இது ஒரு காட்டுக்கிராமம். இங்கெல்லாம் நடுநிசியில் பேய் உலாவும் எனப் பெண்களும் குழந்தைகளும் வெளியில் வரார். ஆனால் இன்றோ வீடே வீதியில் நிற்கிறது. எல்லா வீட்டின் முன்னேயும் பற்றை வெட்டி தோரணம் கட்டி மெழுகிய தரையில் வைத்துள்ள நாற்காலியில் தமிழ்ச்செல்வனின் படம். படம் மழையில் நனைந்து விடாமல் குடையைக் கட்டியிருக்கிறார்கள். தாங்களோ மழையில் நனைந்தபடி. கைக்குழந்தைகள் தொட்டு முதியவர் வரை மலரோடு மழைத்தூறலில் காத்திருந்தார்கள். இந்த ஏழைகளிடம் இன்னொரு குடையேது தாம் நனையாதிருக்க. ¤ ¤ ¤ ஊர்தி முழங்காவில் போய் ஜெயபுரம் வர சாமம் இரண்டு மணியாயிற்று. வீதிகளில் மக்கள் கூட்டம்இ வீடுகள் தான் வெறுமையாய்க் கிடந்தன. வன்னியே வழமை மாறிற்று. கூட்டத்தில் சிறுமி ஒருத்தி மாலையைப் போட்டு 'மாமா மாமா" என அழுகிறாள். யாரிவள்? முன்னெப்போதாச்சும் இவரைக் கண்டிருப்பாளா? ஏழு வயதிருக்கலாம். இவளைப் பாதித்தது என்ன? யாரறிவார். முன்னர் இதே ஊரில் மைதானம் ஒன்றில் விளையாட்டு விழா ஒன்றிற்காக தமிழ்ச்செல்வன் வந்திருந்தார். கொழுத்தும் வெயிலில் மைதானத்தில் இவர் நின்று கொண்டிருந்தார். மைதானத்தின் நடுவே நின்ற இதேயளவுச் சிறுமியை அவர் தன் அருகே அழைத்தார். கூச்சமின்றி அவளும் வந்தாள். தன் கால்களின் முன்னே அவளை நிறுத்தி தன் கைகளை அவளின் உச்சந்தலையில் வைத்துக் கொண்டு நின்றார். குழந்தைக்கு வெயில் சுட்டுவிடக்கூடாதே. அன்று அதைக் கண்டநான் அவளாக இருக்குமோ இவள் என எண்ணினேன் - இல்லை அவள் இப் பொழுது பருவமடைந்த பெண்ணாகி இருக்கக்கூடும். ¤ ¤ ¤ சாமம் வன்னேரியை வந்தடைகிறது ஊர்தி. வீதியெங்கும் சுட்டி விளக்கோடு மக்கள் நிற்கிறார்கள். வீதியின் குறுக்கே விளக்கேந்தியபடி நிற்கிறது ஒரு நிரை. தமிழ்ச்செல்வனின் வரவுக்காய் காத்திருந்துஇ காத்திருந்து களைத்துப் போனாலும் எங்கே தமக்கு அந்தத் திருமுகத்தைக் காட்டாமல் கொண்டு சென்று விடுவார்களோ என்ற அச்சத்தில் குறுக்கே நிற்கிறார்கள் இவர்கள். இவர்கள் ஆறி அழ அவர் முகத்தைக் காட்டுவதற்கு காலம் தான் எமக்கு இல்லாது போயிற்று. ¤ ¤ ¤ ஸ்கந்தபுரத்தை வந்தடைந்தது ஊர்தி. மக்கள் இருளில் கையில்லாந் தர்களுடன் திரண்டிருக்கின்றனர். மலர்தூவி வணங்கும் கூட்டத்தினிடையே ஒரு தாயின் குரல் ஓங்கிக்கதறுகின்றது. 'என்ர ராசா திட்டிப் போட்டனே! நான் திட்டிப்போட்டனே! என்ர பிள்ளைய இயக்கத்தில சேர்த்திட்டாங்கள் என்று உன்னைத் தீராமல் திட்டிப் போட்டேனே இந்தப் பாவி! நான் ஒரு பாவியடா பாவி" அந்தப் பேதைத் தாய் தன் துக்கத்தின் ஆற்றாமையால் சபித்ததால் தான் இவனுக்குச் சாவு நேர்ந்ததோ என்றெண்ணிக் கதறுகிறாள். இவளை யார் ஆற்றக்கூடும். காட்டின் இருளைக் கிழித்து அவளின் கதறல் கேட்கிறது. கூடி நின்றவரெலாம் அழுகிறார்கள். ¤ ¤ ¤ முக்கொம்பன் போனது ஊர்தி. பின் குஞ்சுப்பரந்தனூடாக பரந்தன் கடந்து ஐந்தாம் திகதி காலைப் பொழுதாகிற்று கிளிநொச்சி வந்து சேர. கிளிநொச்சி வீதிகள் இளைத்துப் போகுமளவு மக்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள் தமிழ்ச்செல்வனைக் கடைசியாய் காண. பல்லாயிரம் மக்கள் அணிதிரண்டு வணக்கம் செலுத்தி வழியனுப்புகின்றனர். சிங்களக் குண்டு வீசும் விமானம் தலைக்கு மேலே பறக்கிறது. பல்லாயிரத்தில் எவர் ஒருவரும் தம் பாதுகாப்புத் தேடி ஓடினாரில்லை. தமிழ்ச்செல்வன் நித்திய துயிலுக்காய் மக்களைக் கடந்து மெல்ல மெல்ல கல்லறை போகிறார். வயோதிபத்தாய் ஒருத்தி வீதியில் நெரியும் கூட்டத்தில் நின்று கதறுகிறாள். 'உந்த இந்திய இராணுவத்திட்ட இருந்தே செல்வத்தை என்னமாய்ப் பாதுகாத்தம். இப்பபோய் பறிகொடுத்திட்டாங்களே எங்கட செல்வத்தைப் பறிகொடுத்திட்டாங்களே" ¤ ¤ ¤ புரட்சியை அடைகாக்கும் இந்த மக்களிடமிருந்தா யாரும் புலிகளைத் தோற்கடித்து விடக்கூடும். ஐயமின்றி தூங்கப்போ தமிழ்ச்செல்வா! நன்றி: வெள்ளிநாதம் (09.11.07)
Tuesday, November 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.