Thursday, November 15, 2007

கருணாவை கொல்ல ஜெனீவாவில் மகிந்த, டக்ளஸ், "ஏசியன் ரிபியூன்" கே.ரி.ராஜசிங்கம் சதித் திட்டம்: "சண்டே லீடர்"

[வியாழக்கிழமை, 15 நவம்பர் 2007]


சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்தவரான கருணாவை கொலை செய்ய சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, ஈ.பி.டி.பி. டக்ளஸ் தேவானந்தா, "ஏசியன் ரிபியூன்" இணையத்தளத்தின் ஆசிரியர் கே.ரி.ராஜசிங்கம் ஆகியோர் சதித்திட்டம் தீட்டியதாக கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே லீடர் வார இதழ் தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.11.07) வெளிவந்த "சண்டே லீடர்" வார இதழில் இது தொடர்பாக சோனாலி சமரசிங்க எழுதியுள்ளதாவது:

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கி வந்த கருணாவை அகற்றுவதற்கான பாரிய திட்டம் மகிந்த அரசினால் தீட்டப்பட்டது தொடர்பான விடயங்கள் தற்போது வெளிவரத்தொடங்கியுள்ளன. கருணாவின் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான விடயங்கள் அனைத்துலக அளவில் குவிமையப்படுத்தப்பட்டதால் பிள்ளையானை கருணாவின் வெற்றிடத்தை நிரப்புவதற்கான திட்டங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பகுதியில் தனது அமைப்பிற்கு எதிராக மோசமான போரில் ஈடுபட்ட கருணாவை போலியான கடவுச்சீட்டின் உதவியுடன் சிறிலங்கா அரசு இங்கிலாந்திற்கு செப்ரெம்பர் மாதம் 18 ஆம் நாள் நாடு கடத்தி களவாக செல்வதற்கு உதவியது.

கருணா பின்னர் நவம்பர் மாதம் 3 ஆம் நாள் அவரின் குழுவில் இருந்து பிரிந்து சென்ற பிள்ளையான் குழுவினரால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இங்கிலாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

புதிய பொறுப்பாளராக பிள்ளையான்

கருணா கைத ுசெய்யப்பட்டு 48 மணி நேரத்திற்குள் மட்டக்களப்பில் உள்ள அனைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அலுவலங்களையும் பிள்ளையான் குழுவினர் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்;. கருணாவின் விசுவாசமானவரும் அரசியல் பொறுப்பாளருமான வி.திலீபன் சயனைட் வில்லைகளை உட்கொண்டு இந்த உட்குழு மோதல்களின் இறுதிப் பலியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருணாவின் மோசமான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசின் உயர்மட்டத்தினர் தெளிவாக தெரிந்து வைத்திருந்தனர் என்பதற்கான போதிய ஆதாரங்கள் ஆவண ரீதியாக சண்டே லீடரிடம் இருக்கின்றது. அத்துடன் அரச உயர்மட்டத்தினர் சிலர் கருணாவின் கடத்தல், வெள்ளை வான் நடவடிக்கைகள், படுகொலை, கடத்தல்களும் கப்பம் வாங்குதலும் என்பனவற்றிற்கு வெளிப்படையாக ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கியுள்ளனர்.
கே.ரி.ராஜசிங்கம் என்ற சுவீடனில் வசிக்கும் ஏசியா "ஏசியன் ரிபியூன்" இணையத்தள பிரதம ஆசிரியர் இந்த விவகாரங்களுக்கான திட்டங்களை தீட்டுவதின் பின்னணியில் இருந்திருக்கிறார் என்பதுவும் இதன் மூலம் தனது சொந்த வர்த்தகங்களை விரிவாக்குவதற்கான நோக்கங்களையும் கொண்டிருக்கிறார் என்பதுவும் தற்போது எமக்கு ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

அதாவது கருணா தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் இணைவதற்கு மகிந்த அரசு உதவி செய்தது மட்டுமல்லாது, ஆட்கடத்தல் மற்றும் சிறிலங்கா அரசினால் கருணா குழுவிற்கு வழங்கப்பட்ட நிதியுதவி என்பன மூலம் 50 கோடி ரூபாய்களை இங்கிலாந்திற்கு கடத்திச் செல்வதற்கும் உதவியுள்ளது.

சதித்திட்டம் தீட்டல்

இந்த விடயங்கள் கடந்த ஒக்ரோபர் மாதம் 24 ஆம் நாள் கே.ரி.ராஜசிங்கத்தினால் மகிந்தவின் ஆலோசகர் சுனிமல் பெர்னான்டோவிற்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வமான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கருணா கைது செய்யப்படுவதற்கு பத்து நாட்களுக்கு முன்னர் இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மகிந்தவினை கே.ரி.ராஜசிங்கம் ஜெனீவாவில் யூன் மாதம் 2007 இல் சந்தித்து கலந்துரையாடியதன் அடிப்படையிலே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.

பிள்ளையானுடன் கே.ரி.ராஜசிங்கம் நடத்திய கலந்துரையாடலை ஒட்டுக்கேட்டதில் இருந்தும் மற்றும் ஏனைய ஆவணங்களில் இருந்தும் கருணாவிற்கும் பிள்ளையானுக்கும் இடையில் சகோதர யுத்தத் தீயினை மூட்டி பிள்ளையானை கருணா குழுவின் அரசியல் முகமாக பிரச்சாரப்படுத்தி கருணாவிற்கு முன்னரே பிள்ளையானின் குழுவினை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கு கே.ரி.ராஜசிங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

கே.ரி.ராஜசிங்கம் என்பவர் "ஏசியன் ரிபியூன்" இணையதள பிரதம செய்தி ஆசிரியர் ஆவார். இவர் பாங்கொக்கில் 2001 ஆம் ஆண்டு இந்த இணையத்தளத்தினை செயற்படுத்தினார். தற்போது சுவீடனில் வசிக்கும் இவர் தனது பொருளாதார நலன்களுக்காக சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றார். இவரது சொந்த இடம் பருத்தித்துறை ஆகும்.

தேசப்பற்றிற்காக கடுமையாக உழைப்பவர்களாக தம்மைக் காட்டிக்கொள்ளும் சிலர், சமாதானம் பற்றிப் பேசுபவர்களை தமது நிறுவனங்களுக்கான நிதியைத் திரட்டுவதற்காக போரைப் பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் இந்த கொள்ளைக் குழுவினர் தமது வர்த்தக சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் நிதிகளை சேகரிப்பதற்காகவும் வெறுப்பினையும் தவறான தேசியப்பற்றையும் பரப்புகிறார்கள்.

மூடிய அறைக்குள் கலந்துரையாடல்

மகிந்த, "ஏசியன் ரிபியூன்" கே.ரி.ராஜசிங்கம் மற்றும் ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையில் ஜெனீவாவில் உள்ள இன்ரகொன்ரினன்ரல் உல்லாச விடுதியின் 1727 இலக்க அறையில் ஒரு மணிநேரம் நீடித்த கலந்துரையாடலின் திடுக்கிடும் விவரங்கள் தற்போது வெளிவரத்தொடங்கியுள்ளன. அதாவது யூன் மாதம் 15 ஆம் நாள் மாலை 4-5 மணியளவில் கருணா விவகாரம் தொடர்பாக இவர்கள் முக்கிய விடயங்களை கலந்துரையாடியுள்ளார்கள்.

ஜெனீவாவிற்கு மகிந்த யூன் மாதம் 14 ஆம் நாள் அனைத்துலக தொழிலாளர் நிறுவனத்தின் மகாநாட்டிற்காக வருகை தந்திருந்தார். அவருடன் ஐ.நாவிற்கான நிரந்தரப் பிரதிநிதியான தயான் ஜெயதிலக்கவும் காணப்பட்டார். மகிந்த ஜெனீவாவில் இறங்கிய 24 மணிநேரத்திற்குள் இன்ரகொன்ரினன்ரெல் உல்லாச விடுதியில் கே.ரி.ராஜசிங்கத்துடன் சந்திப்பு நடந்திருக்கின்றது.

இங்குதான் மகிந்த அரசிற்கு பாரிய அனைத்துலக நெருக்கடிகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்திய கருணா விவகாரம் கலந்துரையாடப்பட்டது. இவ்விடயங்கள் சுருக்கமான அறிக்கையாகத் தயாரிக்கப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக மகிந்தவின் ஆலோசகர் சுனிமல் பெர்ணான்டோவிற்கு மின்னஞ்சலில் அனுப்பப்பட்டது. "சண்ட லீடர்" இந்த அறிக்கைகளையும் ஏனைய ஆவணங்களையும் எடுத்து வைத்துள்ளது என்பதை இந்த இடத்தில் வாசகர்களுக்கு குறிப்பிட விரும்புகின்றோம்.

ஜெனீவாவில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விவகாரங்களுடன் கல்வி மற்றும் விளம்பரங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இதனை வருகின்ற வாரங்களில் வெளிப்படுத்துவோம். தற்போது கிழக்கு தொடர்பாகவே கவனம் செலுத்தவுள்ளோம்.

இந்த கலந்துரையாடலானது மகிந்த, ஏசியன் "ஏசியன் ரிபியூன்" பிரதம ஆசிரியரின் நாட்டிற்கான சேவையினைப் பாராட்டியதுடன் ஆரம்பித்தது. அத்துடன் தொடர்ந்தும் சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளை பாராட்டி உலகிற்கு வெளிக்கொண்டு வருவதற்கு செயற்படும் ஏசியன் ரிபியூனுக்கு தனது ஆதரவும் ஒத்துழைப்பும் இருக்கும் என்று மகிந்த மேலும் தெரிவித்தார்.

இந்திய உறவுகள்

இந்தியாவுடனான சிறிலங்கா உறவுகள் எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பாக கே.ரி.ராஜசிங்கம் பல பரிந்துரைகளை இச்சந்திப்பில் முன்வைத்தார். இக்கலந்துரையாடல்களின் போது இந்தியத் தலைவர்களான மன்மோகன்சிங், பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தி மற்றும் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் போன்றவர்களை சந்தித்து, இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியா தம்மிடம் எதனை எதிர்பார்க்கின்றது என்பதைக் கண்டறிய சிறிலங்கா ஒரு சிறப்புக் குழுவினரை அனுப்புவதற்கு மகிந்த ஒத்துக்கொண்டார்.

சிங்கள கடும்போக்காளரான எல்.டி.மகிந்த பாலாவுடன் தானும் இணைந்து இந்தியா செல்வதற்கு தயாராக இருப்பதாக கே.ரி.ராஜசிங்கம் தெரிவித்தார். மகிந்த உடனடியாகவே டக்ளசிடம் இதனை ஒழுங்குபடுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

ராஜசிங்கம் ஒரு செய்மதி தொலைக்காட்சி சேவையினை புதிதாக செயற்படுத்தி ரூபவாகினி மற்றும் ITN போன்ற நிறுவனங்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பெற்று உலக நாடுகளுக்கு ஒளிபரப்ப விரும்புவதாகத் தெரிவித்தார். மகிந்த உடனடியாகவே இதற்கான அனுமதியினை வழங்கினார். ஆர்வம் மிக்க கண்டங்களுக்கான இந்த ஒளிபரப்புத் திட்டத்திற்கு மாதாந்தம் 22,000 யூரோக்கள் தேவைப்படும் என கே.ரி.ராஜசிங்கம் தெரிவித்தபோது உடனடியாகவே தான் அதனை வழங்குவேன் என்று மகிந்த தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது 24 மணிநேரமும் சிறிலங்காவின் பிரச்சாரத்தினை முன்னெடுக்கின்ற "யூரோ ஏசியன்" வானொலி சேவைக்கு சிறிலங்கா அரசாங்க நிறுவனங்கள் விளம்பரங்களை வழங்குவதில்லை என்றும் ராஜசிங்கம் இச்சந்திப்பில் குறைபட்டுக்கொண்டார். ராஜபக்ச இதனை உடனடியாக கவனத்தில் எடுப்பதாகவும் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் இச்சந்திப்பில் தெரிவித்துக்கொண்டார்.

கருணாவைத் தொலைத்துக் கட்டுதல்

கருணாவை அகற்றிவிட்டு அவரது இடத்திற்கு பிள்ளையானை அமர்த்துவது தொடர்பாக ராஜசிங்கம் தனது விரிவான திட்டத்தை இச்சந்திப்பில் விளங்கப்படுத்தினார். கருணா தற்போது பயனற்ற ஒரு நபராக மாறிவிட்டார். வடபோர் முனையின் பிரதேசம் தொடர்பாகவோ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பாகவோ பெரிதாக கருணாவிடம் தற்போது அறிவோ கருத்துக்களோ கிடையாது என்பதால் அவரை கழித்துவிடுவதே நல்லது என்று கே.ரி.ராஜசிங்கம் தெரிவித்தார். அத்துடன் பிள்ளையானும் இது போன்றே கழிக்கப்பட வேண்டிய நபர் என்றும் வன்னியில் உள்ள புலிகள் அமைப்பில் மேலும் பிரிவினைகளை உருவாக்கி அதன் மூலம் அங்கிருந்து தகவல்களை வழங்கக்கூடியவர்களை பெற்றுக்கொள்வதே நல்லது என்று மேலும் அவர் தெரிவித்தார்.

மகிந்த இதனை செவிமடுத்த பின்னர் தனது பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.

இது நிகழ்ந்து மூன்று மாதங்களுக்குள் சிறிலங்காவின் அரச அதிகாரிகளின் துணையுடன் இராஜதந்திரிகளுக்கான D1944260 கடவுச்சீட்டின் உதவியுடன் இங்கிலாந்திற்கு கருணா சென்றார்.

போலிக் கடவுச்சீட்டு

குடிவரவு- குடியகல்வுத் திணைக்களத்தினால் அரச உயர் அதிகாரிகளின் கட்டளைகளுக்கமைய இந்தப் போலியான இராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டு கருணாவிற்கு கோகில குணவர்த்தன என்ற பெயரில் ஓகஸ்ட மாதம் 30 ஆம் நாள் வழங்கப்பட்டது. இதன்பின்னர் இந்த போலிக்கடவுச்சீட்டிற்கு செப்ரெம்பர் மாதம் 5 ஆம் நாள் கொழும்பில் உள்ள இங்கிலாந்து தூதரகம் விசாவினை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சின் பரிந்துரைக்கு அமைய வழங்கியது.

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சானது இங்கிலாந்தில் நடைபெறும் காலநிலை மாற்றம் தொடர்பான மகாநாட்டில் பங்குபற்றுவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலுடன் அவர்களுக்கான கடவுச்சீட்டுகளையும் கொழும்பில் உள்ள இங்கிலாந்து தூதரகத்திற்கு செப்ரெம்பர் மாதம் 5 ஆம் நாள் அனுப்பியிருந்தது. இதில் கோகுல குணவர்த்தனவின் இராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டும் உள்ளடங்கியிருந்தது.

பௌத்த பிக்குகள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சுற்றுச்சூழல்துறை அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவின் அமைச்சின் கீழ் இயங்கும் வனவள உயிரினங்களின் பாதுகாப்புத் திணைக்களத்தின் இயக்குனர் நாயகமாக கோகில குணவர்த்தன அந்தக் கடவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தார்.

இதற்கு ஒருவாரம் கழித்து மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து சம்பிக்க ரணவக்க செப்ரெம்பர் மாதம் 22 ஆம் நாள் காலநிலை மாற்றம் தொடர்பான மகாநாடு ஒன்றிற்காக நியூயோர்க் செல்லவிருந்தார். இதற்கிடையிலே ஒருதொகுதி வன இலாகாவினருடன் இங்கிலாந்திற்கு கருணா இதேபோன்ற ஒரு மகாநாட்டிற்கு சென்றிருந்தமை வேடிக்கையான விடயம்தான்.

கருணா, செப்ரெம்பர் மாதம் 18 ஆம் நாள் லண்டன் கித்ரூ வானூர்தி நிலையத்திற்கு செல்வதற்காக கட்டுநாயக்கா வந்திருந்தபொழுது அவருக்கு உதவி புரிந்தவர் கட்டுநாயக்கா வானூர்தி நிலையத் துணைப் பொறுப்பாளர் சலித்த விஜயசுந்தர ஆவார்.

இங்கிலாந்தின் பிரபல்யம் மிக்க கென்சிங்டன் பகுதியில் கருணாவும் அவரது மனைவியும் மூன்று பிள்ளைகளும் வசித்த இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரது மனைவியும் குழந்தைகளும் ஏற்கனவே தமது அகதிகள் அந்தஸ்தைக் கோரி விண்ணப்பித்து இருந்தனர்.

கருணாவும் கைது செய்யப்பட்டவுடனே அரசியல் தஞ்சம் கோர முயற்சித்தார். எனினும் அவரது மனித உரிமை மீறல்கள் நடவடிக்கை காரணமாக இங்கிலாந்தின் குடிவரவு- குடியகல்வுத் திணைக்களம் இதனை எவ்வாறு கையாளும் என்பது தெரியாமல் இருக்கின்றது.

கருணாவிற்கு ஆதரவும் ஒத்துழைப்பும்

ராஜபக்ச அரசாங்கமும் அதனது பல்வேறு கட்டமைப்புக்களும் கருணாவிற்கு ஒத்துழைப்பு வழங்குவது மட்டுமல்லாது இராஜதந்திர கடவுச்சீட்டினை வழங்கியும் உள்ளது. அத்துடன் கட்டுநாயக்கா வானூர்தி நிலைய துணை அதிகாரி கருணாவுடன் வானூர்தி வரைக்கும் சென்றிருக்கிறார். அவர் அதனை இதுவரைக்கும் மறுக்கவும் இல்லை.

இதேபோன்று முன்னாள் கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால தம்மிக்க பெரேரா என்பவருக்கு போலிக் கடவுச்சீட்டு வழங்கியதற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தம்மிக்க உள்நாட்டு குற்றவாளி எனில் கருணா அனைத்துலகப் பயங்கரவாதி. உலகின் முதன்மை அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையினால் அவர் போர்க் குற்றவாளி என குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
முழு அரசாங்கமுமே இவ்வாறான குற்றச்செயல்களை செய்யும்போது சட்டங்கள் எதனைத்தான் செய்யமுடியும்?

இது இவ்வாறிருக்க கே.ரி.ராஜசிங்கத்திற்கும் மகிந்தவின் ஆலோசகர் சுனிமல் பெர்ணான்டோவிற்கும் இடையில் இடம்பெற்ற தொடர்பாடல்களின் சில பகுதிகளை கீழே பார்க்கலாம்.

இந்தக் கலந்துரையாடலில் விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கேணல் கருணாவிற்கும் பிள்ளையானுக்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது.

கே.ரி.ராஜசிங்கம் இக்கலந்துரையாடலில் மகிந்தவுக்கு கூறியதாவது, கருணாவின் சார்பாக முரண்பாடுகளில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதியான ராதிகா குமாரசாமியிடம் ஒரு மகாநாட்டிலே தொடர்புகொண்டு கருணா குழுவினர் இனிவரும் காலங்களில் சிறுவர்களை படையிலே சேர்த்துக்கொள்ளமாட்டார்கள் என்று வாக்குறுதி அளித்ததாக தெரிவித்தார்.

இனிவரும் காலங்களில் சிறுவர்கள் ஆயுதப்படையில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள் என்று கூறியதன் மூலம் கடந்த காலங்களில் கருணா குழுவினர் சிறுவர்களை படையில் சேர்த்துக்கொண்டுள்ளார்கள் என்றும் அதற்கு ஆதரவாக சிறிலங்காப் படையினரில் ஒருபகுதியினர் நடந்துகொண்டுள்ளார்கள் என்றும் ஐ.நாவிற்கான ராதிகா குமாரசாமியின் சிறப்புப் பிரதிநிதி அலன் ரொக் தெரிவித்த அறிக்கைக்கு இது வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளது.

ராஜசிங்கம் கருணாவிற்காகவும் சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பாகவும் ஐ.நா மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு போன்ற அமைப்பின் பிரதிநிதிகள் பங்குபற்றிய மகாநாட்டில் கருணாவுடன் இணைந்து பங்குபற்றி இத்தகைய வாக்குறுதிகளை வழங்கியது மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது. இது தொடர்பாக ஐ.நாவின் அலுவலகம் தெரிவித்த அறிக்கையில், டிசம்பர் மாதம் 4 ஆம் நாள் 2006 ஆம் ஆண்டு ராதிகா குமாரசாமியினைத் தொடர்புகொண்டு கருணா கலந்துரையாடியதாகத் தெரிவித்தனர். அத்துடன் ராதிகா குமாரசாமி தனது உத்தியோகபூர்வ அறிக்கையில் கருணாவின் இந்த நடவடிக்கை மிகப்பெரிய முயற்சி என்றும் இது சிறிலங்காவில் சிறுவர்கள் ஆயுதப்படையில் இணைக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் இந்த வருடம் மே மாதம் 4 ஆம் நாள் தனது குழுவினர் மீதே கருணா தாக்குதல் நடத்தியதாகவும் பிள்ளையான் குழுவினரின் ஆதரவாளர்களைக் கொல்லும்படி கட்டளையிட்டதாகவும் ராஜபக்சவிடம் கே.ரி.ராஜசிங்கம் தெரிவித்தார். அத்துடன் திலீபன் மற்றும் ஜீவேந்திரன் ஆகியோர் தமக்காக சொந்தமாக குழுக்களை வைத்திருக்க வேண்டும் என்றும் கருணா கூறியதாக கே.ரி.ராஜசிங்கம் மேலும் தெரிவித்தார்.
அவர்களின் குழுக்களில் 190 சிறுவர்கள் இருந்ததாகவும் அத்துடன் இனியபாரதியிடம் கருணா மேலும் சிறுவர்களை ஆட்சேர்க்கும்படி கட்டளையிட்டதாகவும் கே.ரி.ராஜசிங்கம் தெரிவித்தார்.

அதாவது இதன்மூலம் கருணாவிடம் சிறுவர்கள் படையில் இருந்ததாகவும் அது மகிந்தவுக்கு இதுவரைக்கும் தெரியாது இருந்தது என்பது போலவும் கே.ரி.ராஜசிங்கத்தின் கலந்துரையாடல் காணப்பட்டது. இதில் உள்ள துன்பியல் என்னவெனில் ராதிகா குமாரசாமிக்கு டிசம்பர் மாதம் 2006 ஆம் ஆண்டு கருணா சார்பாக சிறுவர்கள் படையில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள் என்ற வாக்குறுதி இதே கே.ரி.ராஜசிங்கத்தால் வழங்கப்பட்டது.
இப்பொழுது யூன் 2007 இல் இவரே கருணா சிறுவர்களை படையில் இணைப்பதாக ஒப்புக்கொள்கிறார். "ஏசியன் ரிபியூன்" கருணாவிற்கு ஆதரவு வழங்கியமைக்கு காரணம் அவரது குழுவினர் அரசியல் பிரதான நீரோட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்றும் எதுவிதமான கடத்தல், கப்பம் பெறுதல், படுகொலைகள் மற்றும் சிறுவர்களை படையில் இணைத்தல் போன்ற நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடமாட்டார்கள் என்று நம்பியதாலேயே என மகிந்தவிற்கு கே.ரி.ராஜசிங்கம் விளங்கப்படுத்தினார்.

விடுதலைப் புலிகளின் தலைவரை தண்டிப்பதற்கான பிரம்பு

யாழ்ப்பாணிகள் என்று கருணா பிரதேசவாதம் கதைத்த போதிலும் தான் அவருக்கு ஆதரவளித்தமைக்கான காரணம் பிரபாகரனைத் தண்டிப்பதற்கான கருவியாக கருணா பயன்படுவார் என்பதுதான் என்று கே.ரி.ராஜசிங்கம் மேலும் மகிந்தவிற்கு விளக்கமளித்தார்.

எவ்வாறெனினும் கருணா பயங்கரவாதியாகத் தனது வாழ்வினைத் தொடங்கினாலும் அவரைத் திருத்தி புனரமைக்க முடியும் என்று தான் நம்பியது தவறானது என்று கே.ரி. ராஜசிங்கம் கவலைப்பட்டு கூறினார். கருணா பிரதான அரசியல் நீரோட்டத்தில் இறங்கப்போவதாகக் கூறினாலும் அவர் மூன்று-நான்கு தலைமுறைகளாக வாழ்ந்த யாழ்ப்பாண மக்களை வெளியேற்றியது மிகவும் வருந்தத்தக்க செயற்பாடு என்றும் தனது முன்னைய தலைவரைப் பின்பற்றி அவரும் இனச்சுத்திகரிப்பையே செய்தார் என்றும் தெரிவித்தார்.

பிரயோசனமற்ற கருணா

சுமையாக மாறிவிட்ட கருணாவினை விரட்டிவிட்டு கருணாவிலும் பார்க்க கிழக்கில் மிகப் பிரபலமான பிள்ளையானுடனும் அவரது ஆட்களுடனும் வேலை செய்யுமாறு அரசாங்கத்திடம் கே.ரி.ராஐசிங்கம் அழுத்தமாக கருத்துத் தெரிவித்தார். கருணாவை கைதுசெய்ய பிள்ளையான் திட்டமிட்டார் என்றும் பாதுகாப்பு அமைச்சின் எதிர்விளைவு இதற்கு எப்பிடியிருக்கும் என்ற உறுதியற்ற நிலையால் பிள்ளையான் தயக்கம் காட்டினார் என்றும் கடந்த யூன் மாதமளவில் ராஐசிங்கம் மகிந்தவிடம் தெரிவித்தார்.

கிழக்கில் தேர்தல் நடைபெற்று கருணா குழுவிற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது முன்னணி பிரமுகர்களை உள்ளடக்கிய சுயாதீனக் குழு போட்டியிட்டால் தங்களது கட்டுக்காசைக் கூட கருணா குழுவினால் மீளப்பெற முடியாது என்று ராஐசிங்கம் தெரிவித்தார். ஆனால் அவர்களால் பயங்கர ஆயுதங்களை பாவித்து அச்சுறுத்தி தேர்தல் மோசடிகள் செய்தும் வாக்குப்பெட்டிகளுக்குள் வாக்குக்களைத் திணிக்கவும் செய்வார்கள் என்று அவர் கூறினார்.

இந்தப் பின்னணியில், கருணா விரட்டப்பட வேண்டும் என்று மகிந்தவிடம் கே.ரி.ராஐசிங்கம் கூறினார்.

இதற்கு மகிந்த இணங்கியதுடன் பதிவுக்குறிப்புக்களின் படி தனது பாதுகாப்புத் தரப்புக்களுடன் பேசி தேவையானவற்றைச் செய்வதாக வாக்குறுதியளித்தார். தனது அடியாள் இனியபாரதி மூலம் தன்னை கருணா அச்சுறுத்தியதாகவும், தன்னையும் தன்குடும்பத்தினரையும் கூலிக்கொலைகாரர்கள் மூலம் கொல்லப் போவதாக கருணா சபதம் செய்ததாகவும் கே.ரி.ராஐசிங்கம் கூறினார்.

தேவானந்தா முதுகில் குத்தினார்

மகிந்தவுடனான தனது யூன் மாதச் சந்திப்புப்பற்றி ஒக்ரோபர் 24 ஆம் நாளிட்ட நாளிடப்பட்டு சுனிமல் பெர்ணான்டோவுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரயோசனம் என்பது பற்றி தடித்த எழுத்துக்களில் குறியீடிட்டு கே.ரி.ராஐசிங்கம் விசித்திரமான கேள்வியை எழுப்பினார். இந்த யூன் மாதக் கூட்டத்தில் தேவானந்தாவும் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் தனது எழுதப்பட்ட யூன் சந்திப்புத் தொடர்பான கூட்டக்குறிப்பில் தேவானந்தாவை கடல் கடந்து வாழும் சிறிலங்காக்காரர்களுக்குப் பொறுப்பான அமைச்சர் என்று தேவானந்தா முன்னிலையிலேயே குறிப்பிட்டதாக கே.ரி.ராஐசிங்கம் கூறுகின்றார்.

(டக்ளஸ் தேவானந்தா தனது ஈபிடிபி அரசியலை பிரபலப்படுத்துவதைத் தவிர ஒரு போதும் அரசாங்கத்தினை முன்னிலைப்படுத்தி பிரபலப்படுத்த முயற்சித்ததில்லை என்ற எண்ணத்தையே கே.ரி.ராஐசிங்கம் கொண்டுள்ளார். இதனால் வெளிநாடு வாழ் சிறிலங்காக்காரர்களுக்குப் பொறுப்பான அமைச்சராக இருப்பதற்கு தகுந்த நபர் பசில் பெர்னாண்டோவே என்று கே.ரி.ராஐசிங்கம் கருதுகின்றார்)

இதன் மூலம் அரசியலின் அசிங்க விளையாட்டினை தான் அறியாத நபரல்ல என்பதை கே.ரி.ராஐசிங்கம் வெளிப்படுத்திக்காட்டியுள்ளார்.

கபடத்தனம்

உண்மையில், சிறிலங்கா- இந்தியா உறவுகளில் இந்தியா எதை எதிர்பார்க்கின்றது என்பதை சிறிலங்கா கண்டறிய வேண்டும் என்று கே.ரி.ராஐசிங்கம் கருத்து தெரிவித்த போது பதிலளித்த மகிந்த, ஜெனீவாவிலிருந்து கொழும்பு திரும்புகையில் புதுடில்லி சென்று தெரிவிக்கப்பட்ட விடயங்களில் சிலவற்றை அங்கு விவாதிக்குமாறு தான் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கூறியுள்ளதாகக் கூறினார்.

இதற்குப் பிற்பாடு கருத்துக் கூறிய கே.ரி.ராஐசிங்கம் தானும் சிங்கள மற்றும் முஸ்லிம் பிரமுகர்களுடன் செல்லத்தயாராகவுள்ளதாகவும்- சிங்களவர்களின் அபிலாசைகளை இந்தியத் தலைவர்களுக்கு எடுத்துக் கூறக்கூடிய HLD மைத்திரிபாலவையும் இந்தக்குழுவிற்குள் அடக்குவதாகவும் கூறினார்.

அந்த அறிக்கையின் படி, மகிந்த இந்த அபிப்பிராயங்களுக்கு உடன்பட்டு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தேவானந்தாவிற்கு தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபரங்கள் உச்சபட்ச இரகசியமானதாக இருக்க வேண்டும் என்றும் இணங்கப்பட்டது.

ஆனாலும், கபடத்தனமாக கே.ரி.ராஜசிங்கம் தனத பெர்னாண்டோவிற்கான ஓக்ரோபர் மாதம் 24 ஆம் நாள் அறிக்கையில் மீண்டும் அடைப்புக்குறிக்குள் பின்வருமாறு கூறினார்: (டக்ளஸ் தேவானந்தா இந்தத்திட்டத்தில் ஆர்வம் காட்டத் தவறியது துரதிர்ஸ்டவசமானது. இதனால் அவர் இந்தியத ்தலைவர்களுடனான இந்த ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்புக்கு நியமிக்கக்கூடாது என்று நான் கருதுகின்றேன்)

மீண்டும், யூன் கூட்டத்திற்கு செல்வோம்.

"ஏசியன் ரிபியூன்" ஆசிரியர், மகிந்தவுடன் இப்போது இராஐதந்திர பிரதிநிதித்துவம் பற்றிப் பேசுகின்றார்.

பிழையான இராஐதந்திரிகள்

பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் ஏசியன் ரிபியூனுக்கு ஒத்துழைப்பதில்லை என்று கே.ரி.ராஐசிங்கம் கண்டனம் தெரிவித்தார். பெண் தூதுவராக கசனுகா செனவிரடனவும் முதல் செயலாளர் மக்ஸ்வெல் கீகலும் ஒத்துழைப்பதில்லை என்றும் தொலைபேசி அழைப்புக்களுக்கு பதிலளிப்பதில்லை என்றும் அவர் கூறினார்.

மேலிருந்து கீழ்வரை முழு சிறிலங்கா தூதரகப் பணிமனை மீள் ஒழுங்கு செய்யப்படல் வேண்டும் என்று கே.ரி.ராஐசிங்கம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மகிந்தவின் ஆலோசகராக தன்னை தரமுயர்த்திக் கொண்டது போல் காணப்பட்ட "ஏசியன் ரிபியூன்" ஆசிரியர் அடுத்து தனது விமர்சன கண்களை பிரான்சில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் மீதும் திருப்பினார். அந்தப் பெண் தூதுவர் தகவல்களை வெளிப்படுத்துவதற்கு மிகுந்த தயக்கத்தினைக் காட்டுவதாக கூறினார்.

அவர் 2007 ஆம் ஆண்டு கடைசியில் பணியிலிருந்து வெளியேறுவார் என்பதை கே.ரி.ராஐசிங்கம் அந்த சந்திப்பில் உறுதிப்படுத்திக் கொண்டார்.

வேடிக்க என்னவெனில், ஒரு ஆச்சரியமான முறையில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவினால் அந்தத் தூதுவர் பணியிலிருந்து மீள அழைக்கப்பட்டு வேறொருவர் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

யூனில் நடைபெற்ற ஜெனீவாச் சந்திப்பின் போது வகுக்கப்பட்ட பெரும் திட்டம் மெதுவாக அரங்கேறத் தொடங்குகின்றது.

இது கே.ரி.ராஐசிங்கம் தனது கதைகளுக்கான ஆதாரங்களை மகிந்த பாதுகாக்க வேண்டும் என்று தொடர்ந்து நச்சரிப்பாகவே இருக்கலாம். ஒரு இராஐதந்திர தூதரகம் முன்னுக்கு வந்து எங்களது வேலைக்கு உதவிசெய்ய தவறினால் எங்களால் அரச எதிர்ப்பு சக்திகளை வாறு ஐரோப்பாவில் எதிர்த்து போரிடலாம் என்று அவர் மகிந்தவிடம் கேட்டார்.

பிரான்சும், இங்கிலாந்தும் மட்டும் குற்றம் செய்தவர்கள் அல்ல. ஒஸ்லோவில் உள்ள சிறிலங்காத் தூதரகம் பிற தமிழர் குழுக்களுடன் இணைந்து வேலை செய்ய முன்வரவில்லை என கே.ரி.ராஐசிங்கம் சுட்டிக்காட்டினார். அங்கிருந்த முன்னைய தூதுவர் அகமட் ஐவாட் ஒஸ்லோவில் உள்ள புலிகளுடனும், எரிக் சொல்கைய்ம் மற்றும் பிறருடனும் நெருக்கமாக இருந்தார் என்று கே.ரி.ராஐசிங்கம் கூறினார்.

புதிய தூதுவரும் அப்படித்தான் என்று கே.ரி.ராஐசிங்கம் கூறினார்.

தூதரகங்கள் தோல்விகரமானவை

இந்தச் கலந்துரையாடலில் மேற்கில் உள்ள தூதரகங்கள் பற்றி கவனம் செலுத்தப்பட்டது. இவை நாட்டிற்கும் நாட்டிற்கும் உள்ள உறவு பற்றியே அதிகம் அக்கறை கொள்வதாக ராஐசிங்கம் கூறினார். இந்த தூதரகங்கள் மிகச் சிறியளவிலான புலத்தவர்களுடன் கலந்து பேசிவிட்டு தமது வாராந்த அறிக்கையை அனுப்புகின்றன. ஆனால், புலத்தவருடன் அரசியல் ரீதியாகவும், பிற வழிகளிலும் கலந்து பேசி இந்த புலத்தவர் அமைப்புக்களுக்கு வலுகட்டாயமாக உட்சென்று, அரசுக்கு ஆதரவானதாக மாற்றி சிறிலங்காவின் நலன்களை முன்னெடுக்க ஏற்புடைய பொறிமுறை கிடையாது என்று அவர் கூறினார்.

புதிய இராஐதந்திர நிலை

வெளிநாட்டு இராஐதந்திரம் தொடர்பான துரித பயிற்சி வழங்கப்பட்ட ஒரு அமைச்சக அதிகாரி ஆலோசகராக நியமிக்கப்பட்டு சுயாதீனமான பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று கே.ரி.ராஐசிங்கம் அபிப்பிராயம் கூறினார். இந்த அதிகாரி கடல் கடந்து வாழும் சிறிலங்காக் காரர்களுக்கான அமைச்சின் வழிகாட்டலில் இயங்க வேண்டும் என்றும் கூறினார்.

இத்தகைய பொறுப்புக்கு மேற்கிலும்- அவுஸ்ரேலியாவிலும் உள்ள தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் உள்வாங்கப்படல் வேண்டும் என்று இந்த யூன் கூட்டத்தில் ராஐபக்ச உடன்பட்டார்.

ஏசியன் ரிபியூனிற்கு நிதி வழங்கல்

இந்த யூன் மாதக் கூட்டத்தில் நிதி உதவியும், வணிக விரிவாக்கமும் பற்றிப் பேசப்பட்டது.

ஆம், நீங்கள் ஊகித்தது போன்று ஏசியன் ரிபியூனிற்கு. இது இவ்வாறுதான் சென்றது.

ரூபவாகினி மற்றும் ITN என்பனவற்றின் செய்தி மற்றும் சிறிலங்கா தொடர்புபட்ட நிகழ்ச்சிகளை ஒரு புதிய செய்மதி ஒளிபரப்பில் சம நேரத்தில் தான் பாவிக்கத் தயாராகவிருப்பதாக கே.ரி.ராஐசிங்கம் பிரேரித்தார். இதன்மூலம் ஆசிய, ஐரோப்பிய, ஆபிரிக்க மற்றும் அமெரிக்க பார்வையாளர்கள் அரசின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறியலாம் என்றும் கூறினார்.

கொட்பேட் (hotbird) செய்மதியைப் பயன்படுத்தி இதனைச் செய்வதற்கு பெரும் நிதி தேவைப்படும் என்று கே.ரி.ராஐசிங்கம் விளங்கப்படுத்தினார். ஒரு கண்டத்திற்கு 22,000 ஈரோக்கள் தேவைப்படும் என்று அவர் மகிந்தவிடம் கூறினார். இந்த செய்மதியின் பதிவுகள் குறித்த கண்டத்திலேயே தெளிவாக தெரியும் என்றும் விளங்கப்படுத்தினார்.

மகிந்த இதற்கு உடன்பட்டார். மேலும் ஒரு கண்டத்தில் ஆரம்பித்து மெதுவாக விரிவாக்கம் செய்வது பாதுகாப்பானது என்றும் அவர் கூறினார். ராஐபக்ச தனது முழு ஆதரவையும் கே.ரி.ராஐசிங்கத்திற்கு தருவதாக வாக்குறுதி கொடுத்தார்.

மகிந்த ஆலோசகரிற்கு அனுப்பப்பட்ட கூட்டக்குறிப்புகளின் படி ராஐசிங்கம் ரூபவாகினி மற்றும் ITN நிகழ்ச்சிகளைப் பாவிப்பதற்கான தேவையான அனுமதிகளை வழங்கியுள்ளார்.

இரு தொலைக்காட்சி நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் கே.ரி.ராஐசிங்கத்தின் ஊடக நிகழ்ச்சிகளுக்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு அறிவுறுத்தல் அனுப்பப்பட வேண்டும் என்று மகிந்த தெரிவித்தார்.

அரச விளம்பரங்கள் இல்லை

அரச நிறுவனங்களான சிறிலங்கன் ஏர்லைன்ஸ், உல்லாசப் பயணிகள் சபை, தேயிலை சபை, சிலோன் வங்கி, மக்கள் வங்கி போன்றனவற்றிலிருந்து தன்னால் எதுவித ஆதரவையும் பெறமுடியவில்லை என்று கே.ரி.ராஐசிங்கம் முறையிடத் தவறவில்லை. இதுவரை எதுவித அரச கூட்டுத்தாபனங்களும் முன்வந்து ஏசியன் ரிபியூனில் விளம்பரம் செய்யவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

மகிந்த இந்த விடயத்தினை பார்ப்பதாக உதவிகரமாக வாக்களித்தார்.

ஏசியன் ரிபியூனின் ஈர ோஏசியன் செய்மதி வானாலி எனும் பெரிய திட்டம் பற்றி கே.ரி.ராஐசிங்கம் ராஐபக்சவிற்கு தெரியப்படுத்தினார். இந்த செய்மதி வானொலி ஆசிய கல்விக்கான அனைத்துலக நிறுவனம் என்ற ஏசியன் ரிபியூனை வெளியிடும் நிறுவனத்தின் மற்றுமொரு ஊடக திட்டம் என்று தெரிவித்தார்.

ஈரோ ஏசியன் செய்மதி வானொலி ஆரம்பத்தில் செய்மதி ஊடாகவும், இணையம் ஊடாகவும் வழங்கப்படும். சிறிலங்காவைப் பொறுத்தவரை FM வானெலி ஊடாக தீவு முழுவதும் தான் இதனை ஒலிபரப்ப உள்ளதாகவும், இதற்கு தேவையான FM வானொலி அனுமதியினையும், ஒலிபரப்பு கோபுர வசதிகளையும் தருமாறு அவர் மகிந்தவிடம் கோரினார்.

உடைவுக்கு பின்னால்…

இது அவ்வாறு இருக்க, எம்மிடம் உள்ள மற்றைய தொடர்பாடல்கள் தொடர்பான விவரங்களில், கே.ரி.ராஐசிங்கம் தானே கருணாவினை சிறிலங்கா அரசு விரட்டுவதற்கு கருவியாக இருந்ததாகவும், புலிகளிடமிருந்து உடைவதற்கு காரணமாக இருந்ததாகவும் உரிமை கோருகின்றார்.

தானே புலிகளிடமிருந்து பிளவுபட கருணாவை முன்னிலைப்படுத்தி உற்சாகப்படுத்தியதாகவும், ஆனால் தனது இரண்டாம் நிலை தளபதியான பிள்ளையானுடன் குழுச் சண்டையில் கருணா ஈடுபட்ட போது முரண்பட்டதாகவும் உரிமை கோருகின்றார்.

புதிய அரசியல் கட்சியினைப் பதிவதற்கான அடிப்படை வேலைகளை கே.ரி.ராஐசிங்கமே செய்துள்ளதுடன் பிள்ளையானை கருணா குழுவின் புதிய தலைவனாகவும் ஆக்கியுள்ளார். பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடலின் படி புதிய அரசியல் கட்சியினை பதிவதற்கும், கட்சிக்கான புதிய சின்னத்தினை செய்வதற்காகவும் பிள்ளையானுடனும் பிற கிழக்கு உறுப்பினர்களுடனும் கே.ரி.ராஐசிங்கம் தொடர்பில் இருந்துள்ளார்.

உண்மையில் கருணா தனது புதிய அரசியல் கட்சியான தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைப் பதிவு செய்வதற்கு முன்னரே பிள்ளையானுடன் பேசி வருவதுடன் பிள்ளையானை விரைந்து செயற்படுமாறு அழுத்தம் கொடுத்து வந்துள்ளார்.

விரைவாக கட்சியின் யாப்பினை செய்யுமாறும், உறுப்பினர் பட்டியலை உருவாக்குமாறும் பிள்ளையானுக்கு கே.ரி.ராஐசிங்கம் ஆலோசனை கூறியுள்ளார். ஆனால், கருணாவின் துணையான கிருஸ்ணனின் உதவியுடன் மற்றைய குழு விரைவாக கட்சியாகப் பதிவ ுபெற்றுவிடும் என்று பிள்ளையான் கருதினார்.

நயவஞ்சக ஆத்மா

இதன்பின்னர் கே.ரி.ராஐசிங்கத்தின் நயவஞ்சக ஆத்மா வெளிப்பட்டது. கிருஸ்ணன் வரமுன்னர் நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறினார். ஒரு நிமிடம் பிள்ளையானின் மனித முகம் வெளிப்பட்டது. பாவம் என ஒரு நிமிட பலவீனத்தினை வெளிப்படுத்தினார். ஐயா நான் இரக்கப்படுகின்றேன்.

ஆனால், ஏசியன் ரிபியூனின் ஆசிரியர் பிடிவாதமாக இருந்தார். இல்லை, இல்லை அவர் ஒரு பயங்கரமான ஆள் அவர் வந்தால் அவரை உள்ளுக்கு தள்ள வேண்டும்.

இந்தத் தொடர்பாடல்களின் படி, அவர் மகிந்தவினை யூன் மாதத்தில் சந்தித்தது மட்டுமல்ல அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயுடன் பிள்ளையான் குழுவினை கட்சியாகப் பதிவு செய்யும் விடயத்தில் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.

அண்மையில் நவம்பர் 1 ஆம் நாள், 2007 தொடர்பாடல்களில் பிள்ளையான் தனது குழுவில் உள்ள எவரையும் நம்ப மாட்டார் என்றும், அவர் 2,000 பெயர்களை முகவரிகளுடன் பெற்று- தமிழில் கட்ச ியாப்பினை எழுதும் முடிவில் உள்ளார் என்றும் கே.ரி.ராஐசிங்கம் எழுதியுள்ளார். மேலும், இதன் மூலம் கருணாவினை பிள்ளையான் புறம்தள்ளி தனது கட்சியினை இரகசியமாகப் பதிந்து தனது பிடியினை இறுக்கமாக வைத்திருக்க முயற்சிக்கின்றார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த தேவைக்காக பிள்ளையானின் சட்டத்தரணியாக்கப்பட்ட ரகு என்பவர் கே.ரி.ராஐசிங்கத்தின் முழு ஆதரவுடனும் கட்சி கூட்டக்குறிப்பினை தாயாரிப்பதற்கு தேவையான திட்டமொன்றை வகுத்து தேர்தல் ஆணையாளரிடமிருந்து அரசியல் கட்சியாகுவதற்கான சம்மதத்தினை தொலைநகல் மூலம் பெற்றுள்ளார்.

உயர்மட்டத்துடன் தொடர்பு

சுவிற்சர்லாந்தின் கதகதப்பான காலநிலையில் கடந்த யூன் மாதத்தில் வகுக்கப்பட்ட திட்டத்தினை அமுல்படுத்துவதற்காக கே.ரி.இராஐசிங்கம், அரச இடைத்தரகர்களுடனும், பாதுகாப்பு அதிகாரிகளுடனும், மகிந்தவுக்கு நெருக்கமான வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளுடனும் தொடர்புகளை வைத்துள்ளார்.

"ஏசியன் ரிபியூன்", WIAS என்பன உட்பட்ட இந்த அனைத்து வெளியீடுகளையும் விட முன்னிற்பது ஒருபுறம் மகிந்தவின் ஆசையினை தட்டி எழுப்பி WIAS ற்கு தெற்கில் ஒரு வலுவான அடித்தளத்தினைத்தரும் திட்டமாகும். அது ராஐபக்சவின் சுயசரிதையை "தெற்கு அடிமட்டத்தின் வலு- மகிந்தவின் பயணம்" என்ற தலைப்பில் எழுதும் திட்டமாகும்.

தனது புகைப்படம் அனைத்து விளம்பரப் பலகைகளிலும் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல சீனாவில் இடம்பெறவுள்ள 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் நினைவு ஸ்தூபிகளிலும் இடம்பெற வேண்டும் என்ற ஆசைகொண்ட மகிந்த இத்தகைய யோசனையை நிராகரிக்கும் சாத்தியங்கள் இல்லை.

ஆனால், கே.ரி.ராஐசிங்கத்திற்கு இது எல்லாம் லங்காதாய் தொடர்பான விவகாரமல்ல. அவர் இத்தகைய அனைத்து அழுக்கு நிறைந்த விவகாரங்களையும் தனது வணிகத்திற்கான நிதியுடன் இணைக்கும் உறுதி கொண்டிருந்தார்.

இத்தகைய நிதி வழங்கல் மற்றும் விளம்பரம் தொடர்பான விடயங்கள் யாவும் ராஐசிங்கத்தால் உயர்மட்டத்துடன் ஜெனீவாவில் வைத்துப் பேசப்பட்டு விட்டது.

நிதி வழங்கல்

அரசிடமிருந்து நிதி பெறும் முயற்சியின் ஒரு பகுதியாக ஏசியன் ரிபியூனும், கே.ரி.ராஐசிங்கமும் தங்களது ஆவணங்களில் பலரது பெயர்களை தாரளமாகப் பயன்படுத்தினார்கள். அவுஸ்ரேலியப் பணிமனையின் தலைமையாளர் HLD மகிந்தபால, அமெரிக்க பணிமனையின் டயா குமாஜ், சிறிலங்காப் பணிமனையின் சஜீஸ்வர செனதீர போன்றோர்களின் பெயர்கள் பாவிக்கப்பட்டன.

மேலும், சிறிலங்காவின் ஐ.நா.வின் ஜெனீவாவிற்கான நிரந்தரப் பிரதிநிதி டயான் ஜெயதிலக்க, திஸரானி குணசேகர, லீல் பத்திரான என்ற முன்னாள் ஜே.வி.பி. கைதி போன்ற பத்தி எழுத்தாளர்களது பெயரும் பயன்படுத்தப்பட்டது.

2007 ஆம் ஆண்டிற்கு 518000 அமெரிக்க டொலர்களை கே.ரி.ராஐசிங்கம் செலவீனமாக மதிப்பீடு செய்துள்ளார்.

நினைவில் வைத்திருங்கள் அவரிடம் உள்ளது ஒரு இணையத்தள பதிப்பு, எதுவித திரும்ப வரும் செலவீனங்களும் அதற்குக் கிடையாது.

ஜெனீவா இன்ரர்கொண்டனல் சொகுசு விடுதியில் வகுக்கப்பட்ட இத்தகைய திட்டத்தின் கீழ் செபரெம்பர் மாதம் 17 இல் கருணா இராஐதந்தர கடவுச்சீட்டு மூலம் கோகில குணவர்த்தன என்ற பெயரில் நாட்டை விட்டு வெளியே கடத்திச் செல்லப்பட்டார்.

கே.ரி.ராஐசிங்கம் பிள்ளையான் தொலைபேசி

கருணா கைது செய்யப்படுவதற்கு சிலநாட்கள் முன்னர் "ஏசியன் ரிபியூன" ஆசிரியருக்கும், பிள்ளையானுக்கும் இடையே நிகழ்ந்த பதிவுபெற்ற உரையாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது.

பிள்ளையான் ஒரு பத்மினி பற்றிப் பேசுகின்றார். கருணாவின் இரண்டாவது ஆள் என்று கருதப்படும் கிருஸ்ணன் லண்டனில் இருந்து கொழும்புக்கு திரும்பவுள்ளார் என்ற சூழலில் இந்த உரையாடல் நடத்தப்பட்டது.

ராஐசிங்கம்: ஹலோ

பிள்ளையான்: ஹலோ

ராஐசிங்கம்: இப்ப நேரம் 10:15 - இன்று வெள்ளிக்கிழமை. அவர் வெளியே போயிருப்பார். (மூன்றாம் ஆள்)

பிள்ளையான்: ஓம்

ராஐசிங்கம்: நீர் ஒரு யாப்பு வரையவும், உறுப்பினர் பட்டியலும் செய்ய வேண்டும்.

பிள்ளையான்: ஓகே

ராஐசிங்கம்: நான் அதற்கு முதல் அவனோட கதைக்கிறன்

பிள்ளையான்: எவ்வளவு காலம் எடுக்கும். ஏனென்டால் அவர்கள் ஒன்றை எங்களுக்கு முதல் எழுதியிட்டினம். எப்படி அதை நிற்பாட்டிறது?

ராஐசிங்கம்: யார் பதிவு செய்வதற்கு உதவி செய்தவை?

பிள்ளையான்: கிருஸ்ணன் எண்டு நினைக்கிறன்

ராஐசிங்கம்: கிருஸ்ணன் வரமுதல் நாங்கள் செய்யலாம். ஆனால் கிருஸ்ணன் வரமுதல் நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும்.

பிள்ளையான்: ஐய – நான் இரக்கப்படுறன்

ராஐசிங்கம்: இல்லை. ஆள் ஒரு பயங்கரமான ஆள். அவன் வந்தால் ஆளை உள்ள தள்ள வேணும். தீப்பொறி எண்ட பேப்பர் சொல்கிறது பத்மினி தப்பி ஓடியிட்டாவாம். இதை கேள்விபட்டனீரா?

பிள்ளையான்: ஓம். கேள்விப்பட்டனான்.

சுனிமலுக்கு நினைவுக் கோளாறு

மகிந்தவின் ஆலோசகர் சுனிமல் பெர்ணான்டோவுடன் "சண்டே லீடர்" தொடர்பு கொண்டபோது ராஐசிங்கத்தினால் அனுப்பப்பட்ட மின்னஞ்சலினை தன்னால் நினைவு கூற முடியவில்லை என்று கூறினார்.

தனது மின்னஞ்சலினை திங்கட்கிழமை பரிசோதிப்பதாகக் கூறினார்.

இந்த மின்னஞ்சல் ராஐசிங்கம், ராஐபக்சவினை சந்தித்துப் பேசியது தொடர்பாக முக்கிய அறிக்கையினைக் கொண்டது என்று நாங்கள் கூறிய போது, தனது ஆலோசகர் பணி மிக மட்டுப்படுத்தப்பட்டது என்றும், ஆங்கிலம் படிப்பிப்பதுதான் தனது வேலை என்றும், இதனால் அத்தகைய முக்கியத்துவமான விடயங்கள் கொண்ட மின்னஞ்சல் தனக்கு எவ்வாறு அனுப்பப்படும் என்று தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் கூறினார்.

மின்னஞ்சல் கிடைத்ததை அல்லது கே.ரி.ராஐசிங்கத்தினை தெரியும் என்பதை சுனிமல் மறுக்கவில்லை. ஏசியன் ரிபியூனுக்கு நெருக்கமான வட்டாரங்களின் தகவல்களின் படி கே.ரி.ராஐசிங்கம், சுனிமல் தனது நெருங்கிய நண்பர் என்று சொல்லி வருகின்றார்.

கே.ரி.ராஜசிங்கம் கருத்துக் கூற மறுப்பு

"ஏசியன் ரிபியூன்" ஆசியர் கே.ரி.ராஐசிங்கத்திற்கு இந்த விடயங்கள் தொடர்பாக எழுதி பேசுவதற்கு "சண்டே லீடர்" கோரியது. ஆனால் பதில் பின்வருமாறு அமைந்தது:

வணக்கம், வருந்துகின்றேன். நீங்கள் மின்னஞ்சலில் அனுப்பிய விடயம் தொடர்பாக பேச முடியாதுள்ளது.

நன்றி கே.ரி. ராஐசிங்கம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.