Monday, November 05, 2007

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை சிங்கள தேசம் வீழ்த்தியதற்கு பதில் என்ன?: ச.பொட்டு விளக்கம்

[திங்கட்கிழமை, 05 நவம்பர் 2007]


பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை சிங்கள தேசம் வீழ்த்தியதற்கு தமிழர்களின் பதில் என்ன என்பது குறித்து தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச. பொட்டு விளக்கம் அளித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் இறுதி வீரவணக்க நிகழ்வில் அவர் ஆற்றிய உரை:

தமிழ்ச்செல்வனின் இழப்பு தமிழினத்துக்கு பேரிழப்பு. தொடக்க காலத்தில் ஒரு மருத்துவப் போராளியாக, போர்க்கள விற்பன்னராக மட்டும்தான் தமிழ்ச்செல்வன் என்று தெரிந்திருந்தது. ஆனால் எமது தேசியத் தலைவருக்கோ தமிழ்ச்செல்வனை ஒரு தேசத்தின் அரசியலை முன்னெடுக்கக்கூடிய தேசத்தின் அரசியல் என்று கூறுவதனை விட விடுதலை வேண்டி நிற்கும் விடுதலை அரசியலை முன்னெடுக்கத்தக்க வகையில் ஒரு அரசியல் ஞானியாக தென்பட்டார்.

தேசியத் தலைவரின் பார்வையில் பட்டதால்தான் இன்று தமிழ்ச்செல்வன் உலகத் தமிழினத்துக்கு முன்னால் விடுதலைக்கான நியாயத்தை உரைக்கும் ஒரு உரைகல்லாக தமிழ் மக்களின் குரலாக பணிசெய்து அதில் கணிசமான வெற்றியும் பெற்று இன்று எம்மிடமிருந்து விடை பெற்றுள்ளார்.

தேசியத் தலைவர் அவர்களின் எதிர்பார்ப்புக்களுக்கு அமைய அர்ப்பணிப்புக்களுடன் அரசியல் பணி செய்தவர் தமிழ்ச்செல்வன்.

தமிழ்ச்செல்வனின் அரசியல் திறன் என்பது உலகம் அறிந்தது. உலகம் முழுவதும் இன்று தமிழ்ச்செல்வனை பற்றி உரைக்கின்றது. அவரின் அரசியல் திறனைப்பற்றி கூறுகின்றது. அனைத்துலக ஊடகங்கள் எல்லாம் ஊடகங்களை அவர் கையாண்ட விதம் பற்றி கூறுகின்றன.

தமிழ்ச்செல்வனின் அரசியல் திறனானது தமிழீழ விடுதலை என்ற அசைக்கமுடியாத அவரின் ஆழ்மனதில் பதிந்திருந்த விடுதலைப்பற்றாய் வந்தது. எமது தலைவர், தமிழ்ச்செல்வனின் அரசியல் திறனை சரியாக இனம்கண்டு கொண்டனர். அதன் மூலம் இன்று உலகமே பார்த்து வியக்கின்ற ஒரு இளம் அரசியல் தலைவனை தமிழினத்தின் மத்தியிலே தலைவர் உருவாக்கியுள்ளார்.

தமிழ்ச்செல்வன் எம்மை விட்டு பிரிந்தவிட்ட சூழலில் அனைத்துலக சமூகத்தின் நியாத் தராசு தொடர்பான எண்ணங்களும் கருத்துக்களும் எழுவது தவிர்க்கமுடியாது.

இன்று தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் வருகை தர முடியவில்லை. தமிழ்ச்செல்வனின் தாயாரும் உடன்பிறப்புக்களும் கிளிநொச்சிக்கு வருகை தருவதற்கு சிறிலங்கா அரசு தடை விதித்துள்ளது என்பது நோர்வேயால் எமக்கு பக்குவமாக கூறப்படுகின்றது.

உலகின் நியாயத் தராசானது ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கத்தில் எந்த வகையில் செயற்படும் என்பதை இன்று நாம் பார்க்கின்றோம். அனைத்துலக சமூகத்தின் முன்னால் எமது நியாயத்தை புரியவைத்து விடுதலை வேண்டி நிற்கும் ஓரினத்தின் குரலை தமிழ்ச்செல்வன் சரியாகவும் ஆணித்தரமாகவும் முன்வைத்தார். ஆனால் ஒரு படை, பலம்மிக்க பொருளாதார பலம்மிக்க ஒரு அரசும் வேறெந்த உதவிகளும் தனித்து தமது விடுதலைக்காக போராடும் இனமும் ஒரே தராசில் வைக்கப்பட்டன.

அனைத்துலக சமூகத்தின் நியாயத் தராசானது நியாயமின்றி நடந்து கொண்டது. அந்த நியாமின்மையின் ஒரு விலைதான் இன்றைய தமிழ்ச்செல்வனின் வீரச்சாவு. தமிழ்ச்செல்வனின் வீரச்சாவுக்கு என்ன பதில் என்று கேட்கின்றார்கள்.

சிங்கள தேசம் தமிழ்ச்செல்வனை வீழ்த்தியதற்கு பதில் என்னென்று கேட்கிறார்கள். அதற்கு சொல்லக்கூடியது ஒரு பதில் தான். ஒரு சில படையினரோ அல்லது ஓராயிரம் படையினரோ ஒரு சில அரசியல் தலைவர்களோ ஒரு சில வல்லாதிக்க சக்திகளோ தமிழ்ச்செல்வனின் உயிருக்கு ஈடாக முடியாது. தமிழீழம் என்ற உயர்ந்த கனவு தமிழீழத்திதற்காக தமது உயிர்களை ஈர்ந்த மாவீரர்களின் கனவை ஈடுசெய்ய உழைப்பதே தமிழ்ச்செல்வனின் உயிருக்கான விலை.

அந்த உணர்வு என்பது தமிழ்ச்செல்வன் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களின் மனங்களில் பதித்து விட்டுச் சென்றுள்ளார் என்று சொன்னால் அந்த உணர்வை இனிவரும் காலங்களில் சிங்கள தேசம் சந்திப்பது தான்.

இனிவரும் எத்தனை ஆண்டு காலத்தின் பின்பும் தமிழர்களை அடக்கி வைத்திருந்தாலும் சுதந்திரத்திற்கான குரலை ஒலித்துக்கொண்டே இருப்பார்கள். ஓய விடமாட்டார்கள் என்ற உறுதியை எடுத்துக்கொள்வது தான் தமிழ்ச்செல்வனின் உயிருக்கான விலையாக இருக்கும்.

இந்த உறுதியுடன் பயணிப்பதே தமிழ்ச்செல்வனுக்கு செலுத்தும் உயர்ந்த வீரவணக்கமாக இருக்கும் என்றார் பொட்டு.

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஆற்றிய உரை:

இன்று தமிழினம் அன்புடன் நேசித்த ஒரு அரசியல் தலைவனை, பொறுப்பாளனை இழந்து நிற்கிறது. மண்ணின் விடுதலைக்காக மக்களின் சுதந்திர வாழ்வுக்காக அல்லும்- பகலும் அயராது ஊன் உறக்கம் இன்றி உழைத்த உத்தமனை இன்று தமிழீழ தேசம் இழந்து நிற்கிறது.

நீண்டகாலமாக எமது விடுதலைப் போராட்டத்தில் விடுதலையை விரைந்து பெறவேண்டும் என்ற சுதந்திர உணர்வுடன் விடுதலை உணர்வுடன் தனது சிறுவயது முதல் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து உழைத்தவர்.

ஒரு போராளியாக தளபதியாக மட்டுமல்ல எமது மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்கின்ற அரசியல் அபிலாசைகளுக்காக ஒரு போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்ற அரசியல்துறைப் பொறுப்பாளராக, இராஜதந்திரியாக தனது வரலாற்றை தமிழ்ச்செல்வன் பதித்து சென்றுள்ளார்.

எமது தேசியத் தலைவர், தமிழ்ச்செல்வனின் ஆற்றல்களை இனங்கண்டு தலைவரின் சிந்தனைகளை வடிவம் கொடுக்கின்றராவாக தமிழ்ச்செல்வன் விளங்கினார். இதன் காரணமாக தமிழ் மக்களின் விடுதலைக்கான அரசியல் பணியை தமிழ்ச்செல்வன் அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வந்தார். தமிழ்ச்செல்வனின் இழப்பென்பது தமிழீழ விடுதலைப்பயணத்தை வீச்சுடன் முன்னெடுத்து செல்ல வைத்துள்ளது என்றார் பா.நடேசன்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.