[ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2007] தென்னிலங்கையின் யால பகுதியில் ஊடுருவியுள்ள 30 தமிழீழ விடுதலைப் புலிகளை சமாளிக்க 3,000 படையினரை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அனுப்பியதன் மூலம் அதன் அரசியல் தாக்கம் என்ன என்பதனை அறியக்கூடியதாக உள்ளது என்று சிறிலங்காவின் வார ஏடான "லக்பிம" தனது பாதுகாப்பு ஆய்வில் தெரிவித்துள்ளது. "லக்பிம"வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மக்கள் எதிர்பார்க்காதவாறு இரு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி தாவி வருவதால் சிறிலங்கா ஒரு நிச்சயமற்ற அரசியல் எதிர்காலத்திற்குள் உள்நுழைந்துள்ளது. அரசாங்கத்துக்கும், எதிர்த்தரப்பிற்கும் இடையில் நடைபெறும் அரசியல் போர் வடபகுதி களத்தில் நடப்பதை விட உக்கிரமடைந்துள்ளது. வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு அரசின் ஆதரவுக் கட்சியான ஜே.வி.பி. 4 நிபந்தனைகளை விதித்துள்ளது. போர் நிறுத்தத்தை இரத்துச் செய்தல், அனைத்துக்கட்சி குழுவைக் கலைத்தல், ஐ.நா. அதிகாரிகளின் வரவை தடுத்தல், இந்த நிபந்தனைகள் எதுவும் வரவு-செலவுத் திட்டத்துடன் தொடர்புடையன அல்ல. ஆனால் ஏற்கனவே காகிதத்தில் உள்ள போர்நிறுத்த உடன்பாட்டில் இருந்து விலகுவதாக வெளிப்படையாக அறிவிப்பதும், அனைத்து கட்சிக்குழுவை கலைப்பதும் அரசின் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும். அது அரசின் இராணுவ உத்திகளிலும் சிக்கல்களை உருவாக்கும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரே அரசின் துரும்புச்சீட்டு. "படையினர் அரச தலைவரில் தங்கியிருப்பதுண்டு, ஆனால் அரச தலைவர் படையினரில் தங்கியிருக்கும் நிலையே இங்கு உருவாகியுள்ளதாக" ஒரு மூத்த படையதிகாரி தெரிவித்துள்ளார். அரசின் படை நடவடிக்கைகள் எல்லாம் எப்போதும் சரியாகவும் பெரிய வெற்றகரமாகவும் அமைவதில்லை. படை நடவடிக்கைகளுடன் சேர்ந்து மேற்கொள்ளப்படாத அரசியல் நடவடிக்கைகள் படை நடவடிக்கைகளில் எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தாது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கை குறித்து அரசு மிகிழ்ச்சியில் இருந்த போது யால வனவிலங்கு சரணாலயப் பகுதிக்குள் விடுதலைப் புலிகள் ஊடுருவியது அதிர்ச்சிகரமானது. விடுதலைப் புலிகளின் உத்திகள் தெளிவானது, அவர்கள் மகிந்த ராஜபக்சவின் மாவட்டத்திற்கே போரைக் கொண்டு சென்றுள்ளதாக காண்பித்துள்ளனர். விடுதலைப் புலிகள் யால பகுதியில் ஊடுருவியது ஒரு உளவியல் நடவடிக்கையாகும். இதனால் தென்பகுதி மக்களிடம் தோன்றியுள்ள உளவியல் பாதிப்புக்கள் கணிசமானவை. அரசியல் பாதிப்புக்களும் அதிகம். வன்னியில் உள்ள படையினரில் கணிசமானவர்களை திசமகாராகம நோக்கித் திருப்புவதும் விடுதலைப் புலிகளின் உத்தி. மூன்று பற்றலியன்களைச் சேர்ந்த 1,000 படையினர் யால பகுதியில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 500 படையினர் ஏற்கனவே அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். அங்கு ஏற்கனவே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 1,000 காவல்துறையினர் மற்றும் 1,000 ஊர்காவல் படையினருக்கு மேலதிகமாக இந்த 1,000 படையினர் அங்கு அனுப்பட உள்ளனர். அந்தப் பகுதியில் ஊடுருவியுள்ள 30 விடுதலைப் புலிகளைச் சமாளிப்பதற்கு இவ்வளவு தொகை படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அம்பாந்தோட்ட மாவட்டத்தின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் சுனந்த ரணசிங்க கடந்த வாரம் நியமிக்கப்பட்டுள்ளார். யால பகுதிக்குள் விடுதலைப் புலிகள் ஊடுருவியது ஆச்சரியமானது ஒன்றல்ல. ஏனெனில் அவர்களுக்கான விநியோகங்கள் மற்றும் தேவைகள் மிகவும் குறைவானது. அவர்கள் சிறப்பு நடவடிக்கை குழுவினர். எனவே இந்த குழு பதுங்கி தாக்குதல்களையே அதிகம் மேற்கொள்ளும். எனவே தான் தல்கஸ்மன்கடப் பகுதியில் அமைந்திருந்த படை நிலை மீதான தாக்குதலின் போது அங்கிருந்த பொருட்களையும் விடுதலைப் புலிகள் எடுத்துச் சென்றிருந்தனர். மற்றுமொரு சம்பவத்தில் ரிடிதென்னப் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குச் சென்ற 3 ஆயுதம் தாங்கிய நபர்கள் பிஸ்கட்டுகளையும், தேனீரும் பெற்றுச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. யால பகுதிக்கு மிகவும் அதிகளவில் படையினர் அனுப்பப்பட்டது அதன் அரசியல் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியுள்ளது. வட களமுனைகளில் அசாதாரண அமைதி நிலவுகின்றது. 10 நாட்களுக்கு முன்னரே முகமாலையில் கடும் சமர் நடைபெற்றிருந்தது. இதில் படையினரின் வான் நகர்வு பிரிகேட் மற்றும் சிறப்புப் படை அணிகள் பங்குபற்றியிருந்தன. இதனைத் தொடர்ந்து படையினர் தற்போது மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வவுனியாவில் உள்ள ராடார் திரைகளில் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் கடந்த புதன்கிழமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொழும்பு நகரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், படையினரும் உசார்படுத்தப்பட்டனர். 25 கி.மீ. வரையிலும் வானில் அடையாளம் காணப்படாத வானூர்திகள் பறந்ததை ராடார்களில் அவதானித்துள்ளதாக படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ராடார்களில் ஏதும் பிரச்சினையா என்பது தொடர்பில் தெளிவில்லாமல் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ராடாரில் வெளிநாட்டு வானூர்திகளும் அவதானிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசு போராடி வருகின்றது. எனவே அதன் விளக்கங்களில் உண்மையை அறிவது கடினம். வான் படையினர் ஒத்திகைகளை நடத்தியதாக ரம்புக்வெல தெரிவித்திருந்தார். ஆனால் ராடார் திரைகளில் அவதானிக்கப்பட்டது தொடர்பாக அவர் எதுவும் தெரிவிக்கவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, November 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.