[செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2007] தமிழீழ விடுதலைப் புலிகளின் கை ஓங்கும் முன்னரே தற்போதைய நிலையைத் தக்க வைத்துக்கொண்டு புதிய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அறிவுறுத்தியுள்ளது. கொழும்பு ஊடகவியலாளர்களிடம் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல திங்கட்கிழமை கூறியதாவது: அனுராதபுரம் வான் படைத்தளத்தில் கார்ப் பந்தயப் போட்டி நடைபெற்ற போது புலிகளின் அணி ஊடுருவியுள்ளமை தெரியவந்துள்ளது. அரசாங்க ஊடகங்களே இன்று நாட்டிற்கு வினையை தேடிக்கொடுக்கின்றன. தொப்பிக்கலவில் அரசு தாக்குதல் நடத்தப்போவதாக அரச ஊடகங்கள் முந்திக்கொண்டு தகவல்களை வெளியிட்டதால் அங்கிருந்த 1,200 புலிகளும் தாக்குதலுக்கு முன்னரே பாதுகாப்பாக வெளியேறிவிட்டனர். இப்போது வடக்கு மீதான தாக்குதலை அனுராதபுரத்தில் இருந்தே அரசு வழி நடத்தப்போவதாக அரச ஊடகங்கள் முந்தியடித்துக்கொண்டு தெரிவித்தன. அதனால் இன்று அனுராதபுரம் வான் படைத்தளமும் தாக்குதலுக்கு இலக்காகி விட்டது. அனுராதபுரம் வான் படைத்தளத்தை அரசினால் பாதுகாக்க முடியவில்லை. தற்போது புதியதொரு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செய்துகொள்ள வேண்டிய நிலை வந்துவிட்டது. ஏனெனில் புலிகளின் கைகள் விரைவில் மேலோங்கப்போகின்றன. அப்படி ஓர் நிலை வந்தால் பலவீனப்பட்ட நிலையிலேயே அரசாங்கம் பேச்சுவார்த்தைக்குச் செல்ல நேரிடும். எனவே தற்போது இருக்கும் நிலையை தக்க வைத்துக்கொண்டு புதியதொரு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மகிந்த அரசாங்கம் செய்துகொள்ள வேண்டும். மகிந்த அரசுக்கு மாபெரும் வெட்கம் மிக் ரக வானூர்திகள் உள்ளன. ராடர்கள் உள்ளன. பாதுகாப்புப் பலமாக உள்ளது. வானூர்தி நிலையங்களுக்கு மேலாக ஒரு பறவை பறந்தால் கூட சுட்டு வீழ்த்தி விடுவோம் என்று பெருமை பேசினார்கள். வான்படைத் தளங்களை புலிகளால் நெருங்கக்கூட முடியாது என்றார்கள். இன்று என்ன நடந்திருக்கிறது. மகிந்த அரசாங்கம் இது குறித்து வெட்கப்பட வேண்டும். கதிர்காமத்திற்கும், அனுராதபுரத்திற்கும் வந்து தாக்கிய புலிகளால் நாட்டின் ஏனைய பகுதிகளில் தாக்குதல் நடத்த முடியாதா? அனுராதபுரத்தில் எத்தனை வானூர்திகளை இழந்துள்ளனர்?. அவை குறித்த தகவல்களை மறைக்கின்றனர். இது குறித்து நாங்கள் ஏதாவது கூறினால் எங்களை புலிகள் என்கிறார்கள். இதற்கு யார் பொறுப்பு? படையினரின் உயிர்களோடு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விளையாடுகிறார். அவர் இத்தகைய தாக்குதல்களுக்கு பொறுப்பேற்பதோடு பதவியும் விலக வேண்டும். அனுராதபுரத்தில் வானூர்திகளை புலிகள் அழித்தமை மகிந்த கொம்பனிக்கு மகிழ்ச்சியான விடயமே. ஏனெனில் அவர்கள் அழிந்த வானூர்திகளுக்குப் பதிலாக புதிய வானூர்திகளைக் கொள்வனவு செய்வார்கள். அதில் பெருந்தொகை ஊழலும் புரிவார்கள். அனுராதபுரம் தாக்குதல் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட மாபெரும் வெட்கம். இந்த வெட்கத்தை ஏற்படுத்த காரணமானவர்கள் கோத்தபாயவும், வான்படைத் தளபதியும்தான். அவர்கள் இத்தகைய வெட்கத்தின் பின்னராவது பதவி விலகவேண்டும் என்றார்.
Tuesday, October 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.