[சனிக்கிழமை, 27 ஒக்ரோபர் 2007] அனுராதபுரம் மக்கள், 22 ஆண்டுகளுக்குப் பின்னர் மரண பீதியை கடந்த ஒக்ரோபர் 22 ஆம் நாள் எதிர்கொள்ள நேரிட்டதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்ம்பிம" சிங்கள வார ஏட்டில் "அனுராதபுரம் தாக்குதல்" செய்தி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: சிங்கள பௌத்த கலாச்சாரத்தின் முக்கிய இடமாக விளங்கும் அனுராதபுரத்தில் கடந்த 22 ஆம் நாள் பயங்கரமும் பீதியுமே ஆட்சி செய்தன. சரித்திரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள அந்த நகரத்தின் மக்களுக்கு கடந்த 22 ஆம் நாள் ஒவ்வொரு வினாடியும் மரண பயத்தையே கொடுத்தது. அனுராதபுர மக்கள் இத்தகைய ஒரு நிலைக்கு கடைசியாக 22 வருடங்களுக்கு முன்னரே முகம் கொடுத்திருந்தனர். அது 1985 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் நாளாகும். கடத்தப்பட்ட சிறிலங்கா போக்குவரத்துச் சபை பேரூந்தில் வந்த கெரில்லாக்கள் ஆயுதங்களுடன் அநுராதபுரத்திற்கு வந்தனர். அவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டனர். 285 பேர் காயமடைந்தனர். சிறிமகா போதியை வணங்க வந்தவர்களுக்கே இந்நிலை ஏற்பட்டது. அனுராதபுரத்தின் பாதுகாப்பு அதிகரிப்புகள் இச்சம்பவத்தின் பின்னர் அனுராதபுர நகரத்தின் பாதுகாப்பை வலுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். வணக்க ஸ்தலத்திற்கு உள்ளிட்ட பிரதேசம் அதியுயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டது. பாதுகாப்பு அரண்கள், முட்கம்பிகள் அதிகரிக்கப்பட்டன. 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஈழப் போர் வேகமாக பரவி வந்த காலப்பகுதியில் அனுராதபுரத்தில் நாளுக்கு நாள் இராணுவ முகாம்கள் அதிகரித்தன. இதற்குக் காரணம் வடக்கிற்கும் கிழக்கிற்கும் நடுவில் இருந்த பாதுகாப்புப் பிரதேசமான அனுராதபுரம் இராணுவத்தினரின் மாற்றீட்டு இடமாக இருந்தமையாகும். யாழ். - கண்டி வீதியான ஏ-9 பாதையைப் பிடிப்பதற்காக 1997ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஜெயசிகுறு இராணுவ நடவடிக்கைகளின் தொடக்கத்துடன் இந்த நடவடிக்கைகள் அதிகமாக இடம்பெற்றன. இதனால் அனுராதபுர நகரை அண்டியிருக்கும் வான் படைத்தளத்திற்கும் பணிகள் அதிகரித்தன. வவுனியாவில் இருக்கும் வான் படைத்தளத்திற்கும் கெரில்லாக்களின் அச்சுறுத்தல் அதிகரித்தமையினால் அநேக பணிகள் அனுராதபுரம் வான் படைத்தளத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டன. 600 ஏக்கர் பிரதேசத்தில் அமைந்துள்ள வான் படைத்தளத்தின் ஒரு பக்கத்தில் இருப்பது நுவர வாவியாகும். இதனால் வான் படைத்தளத்திற்கு வரும் வானூர்திகளும் முகாமிலிருந்து புறப்படும் வானூர்திகளும் நுவர வாவிக்கு மேலாகவே தமது பயணங்களை மேற்கொள்கின்றன. அத்துடன் சிறிலங்கா வான் படையின் வானோடிகளுக்குப் பயிற்சியளிக்கும் பிரதான நிலையமும் அனுராதபுரம் வான் படைத்தளத்திலேயே உள்ளது. இந்த மார்ச் முதலாம் நாள் அனுராதபுரத்தில் உடைந்து விழுந்ததும் பயிற்சியளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பீரி-6 ரக வானூர்தியாகும். அதன்போது பயிற்சி ஆலோசகரும் கடெட் அதிகாரி ஒருவரும் உயிரிழந்தனர். இராணுவத்தினரின் விக்டரி மருத்துவமனை அனுராதபுரத்தில் இருப்பதாலும் அனுராதபுரம் மருத்துவமனையின் வசதிகள் நல்ல நிலையில் இருப்பதாலும் காயமடையும் அநேகமான படையினர் வானூர்தி மூலம் அனுராதபுரத்திற்கே கொண்டு வரப்படுகின்றனர். கடந்த மாதத்தில் இருமுறை அநுராதபுரம் நகரத்தின் பாதுகாப்பை இரண்டு, மூன்று மடங்காக அதிகரிக்க உயர்பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இராணுவத்தின் 58 ஆவது ஆண்டு நிறைவையொட்டி அனுராதபுரத்தில் இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கடந்த 6 ஆம் நாள் அனுராதபுரத்திற்கு வந்தபோது முதல் முறையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இரண்டாவது முறையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது, அனுராதபுரம் சாலியபுரத்தில் அமைந்துள்ள கஜபா ரெஜிமென்டின் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற கஜபா சுப்பர் கோஸ் மோட்டார் வாகன மற்றும் மோட்டார் சைக்கிள் போட்டி நடைபெற்ற கடந்த 21ஆம் நாளாகும். இந்த போட்டியைக் கண்டுகளிக்க உயர் பாதுகாப்பு அதிகாரிகள் பலர் அநுராதபுரத்திற்கு வந்திருந்தனர். இந்த நிலையில் அனுராதபுரம் வான்படை முகாமின் நடவடிக்கைகள் வழமை போல இடம்பெற்று வந்தன. வான் படைத்தளத்தின் பாதுகாப்பிற்காக நாற்புறமும் கம்பி வேலிகள் போடப்பட்டிருந்தன. அந்த கம்பி வேலிகளுக்கு பின்புறம் பதுங்கு குழிகளும் அமைக்கப்பட்டிருந்தன. ஆயுதம் தாங்கிய வான் படையினர் அந்த பதுங்குகுழிகளில் காவல் புரிந்தனர். எனினும் வான் படையினரின் கண்களுக்குத் தெரியாமல் கெரில்லாக்கள் முகாமிற்குள் புகும் நடவடிக்கைகளை 22 ஆம் நாள் அதிகாலை தொடங்கினர். கரும்புலிகள் யார்? அவர்கள் சாதாரண விடுதலைப்புலி உறுப்பினர்கள் அல்ல. அவர்கள் கரும்புலிகள். கரும்புலி என்பது தற்கொலைத் தாக்குதல்களை நடத்தும் விடுதலைப் புலிகளிடம் இருக்கும் மரண ஆயுதமாகும். சிறப்பு இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்கே கரும்புலிகளைப் பிரபாகரன் பயன்படுத்துவார். முக்கிய பிரமுகர்கள், பொருளாதார மையங்கள், முக்கிய இடத்தை வகிக்கும் இராணுவ முகாம்களின் மீது தாக்குதல் நடத்தவும் இராணுவத் தாக்குதல்களை முறியடிக்கவுமே கரும்புலிகளைப் பிரபாகரன் பயன்படுத்துவார். வழமையாக சிறப்பு இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்படும் கரும்புலிகளுக்கு அதற்காக சுமார் 4 மாதகால சிறப்புப் பயிற்சியளிக்கப்படும். அத்துடன் ஏனைய போராளிகளைப் போலன்றி அவர்களுக்கு 3 வேளையும் நல்ல உணவுப் பொருட்கள் கிடைப்பதுடன் விடுதலைப் புலிகளின் வீர செயற்பாடுகளைக் கொண்ட படங்களைப் பார்ப்பதற்கும் மத சடங்குகளில் கலந்துகொள்ளவும் சந்தர்ப்பம் கிடைக்கும். தற்கொலைத் தாக்குதலுக்கு என வன்னியிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் கரும்புலிகளுக்கு சிறப்பு வரப்பிரசாதம் கிடைக்கும். தமது தலைவரான பிரபாகரனுடன் ஒன்றாக அமர்ந்து உணவு உட்கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும். சில நேரங்களில் பிரபாகரனுடன் இறுதியாக புகைப்படம் எடுக்கவும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. கட்டுநாயக்க தாக்குதல் சுதந்திரத்திற்குப் பின்னர் சிறிலங்காவின் பொருளாதாரத்திற்கு பெரும் பின்னடைவினை ஏற்படுத்திய கட்டுநாயக்க தாக்குதல் கரும்புலிகளின் தாக்குதலுக்கு ஒரு உதாரணமாகும். 2001 ஜூலை 24 ஆம் நாள் அதிகாலை 3:30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட அந்த தாக்குதலில் கிபீர் தாக்குதல் ஜெட்கள் 2, எம்ஐ-17 ரக உலங்கு வானூர்தி - 02, மிக்-27 தாக்குதல் ஜெட் - 01, கே-8 ரக வானூர்திகள் - 03, எயார்லங்கா நிறுவனத்திற்குச் சொந்தமான 03 எயார் பேரூந்துகள் தாக்கியழிக்கப்பட்டன. இந்த தாக்குதலுக்காக வந்த 13 கரும்புலிகளும் இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். புலிகளின் தாக்குதலில் 5 படையினர் கொல்லப்பட்டனர். காட்டில் ஊடுருவிய புலிகள் இம்முறை கரும்புலிகளின் இலக்காக இருந்தது குறைந்த பாதுகாப்பின் கீழ் இருந்ததாகக் கூறப்படும் அனுராதபுரம் தளமாகும். நுவர வாவி பக்கத்திலிருக்கும் கம்பி வேலிகளை வெட்டி, விடுதலைப் புலிகள் வான் படைத்தளத்திற்குள் நுழைந்திருப்பதாக இதுவரை மேற்கொள்ளப்பட்டிருக்கும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த இடத்திற்கும் நுவரவாவிக்கும் இடையிலிருப்பது காடாகும். இந்த காட்டுப் பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் பிரதேசவாசிகள் தோட்டச் செய்கைகளை மேற்கொள்கின்றனர். அனுராதபுரம், அசோகபுரம் கன்னட்டியில் வசிக்கும் ஹங்வெல்லகே டேனியல் அப்பு என்பவர் தோட்டச் செய்கையில் ஈடுபடும் ஒருவராவார். கடந்த 20 ஆம் நாள் தோட்டத்திற்குச் சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. தலையில்லாத அவரது சடலம் மறுநாள் காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. அந்த சடலத்தைச் சோதனையிட்ட படையினர் டேனியல் அப்புவின் தலை அனுபவமுள்ள கொலைக்காரனாலேயே வெட்டப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். கூரிய ஆயுதமொன்றாலேயே அவரின் தலை வெட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சிறப்பு நடவடிக்கைகளுக்குச் செல்லும் கெரில்லாக்கள், கொமாண்டோக்கள் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் ரம்போ எனப்படும் கத்தியைப் பயன்படுத்துகின்றனர். அது ஏனையவர்களுக்குத் தெரியாமல் விரோதியின் சத்தத்தை மூடுவதற்காகும். "அந்த நபரின் கழுத்தை வெட்டியது வான் படைத்தளத்தின் மீதான தாக்குதலுக்கு வந்த விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்று எங்களுக்குச் சந்தேகம் நிலவுகிறது. சிலவேளை அந்த நபர் காட்டிற்குச் சென்றபோது அவர் விடுதலைப் புலிகளைக் கண்டிருக்கலாம். அதனால் இரகசியத்தைக் காக்க விடுதலைப் புலிகள் அவரைக் கொன்றிருக்கலாம்." என்று பாதுகாப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவி;த்துள்ளார். சினைப்பர் தாக்குதல் வான் படைத்தளத்தின் மீதான தாக்குதலின் பின்னர் இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதலின் போது டேனியல் அப்புவின் தலை 23 ஆம் நாள் கண்டுபிடிக்கப்பட்டது. எவ்வாறாயினும் கம்பி வேலிகளை வெட்டி முகாமிற்குள் வந்த கரும்புலிகள் முதலில் பதுங்குழிகளில் இருந்த வான் படையினரை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்காக அவர்கள் சினைப்பர்களைப் பயன்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. சுடும் போது சத்தம் எழுப்பாத ஆயுதத்தையே சினைப்பர் என்பர். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரை கொலை செய்வதற்கும் சினைப்பர் துப்பாக்கியையே பயன்படுத்தினர். மிகத் தொலைவில் இருக்கும் இலக்கையும் எட்டக்கூடியதாயிருப்பது இதன் சிறப்பம்சமாகும். சுடும்போது சத்தம் வெளியேறாமையினால் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவதனை ஏனைய வான் ப்படையினர் அறியாது இருந்திருக்கலாம். இதனால் விடுதலைப் புலிகள் சினைப்பரைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி 6 பதுங்குழிகளை கைப்பற்றியுள்ளனர். பின்னர் எஞ்சிய விடுதலைப் புலிகள் 3 பிரிவுகளாக பிரிந்துள்ளனர். வான் படையினரின் சீருடையை ஒத்த உடையையே அவர்களும் அணிந்திருந்தனர். சிலர் தளத்திலிருந்து ஆயுதக் களஞ்சியசாலைக்குச் செல்ல முயற்சித்துள்ளனர். எனினும் அந்த முயற்சியை முறியடித்துள்ளனர். வானூர்திகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடம் ஒரு பிரிவினரின் இலக்காகியது. அந்த கரும்புலிகளுக்கு முன்னால் செல்ல இடமளித்து மற்றைய பிரிவு இடத்திற்கு இடமிருந்து வான் படையினரை நோக்கி ஆர்.பி.ஜி. தாக்குதலை நடத்தினர். அப்போது கரும்புலிகள் சிலர் வான் படைத்தளத்திலிருந்த வானூர்தி எதிர்ப்புக் கருவிகளை கைப்பற்றினர். பின்னர் அந்த ஆயுதங்களைக் கொண்டு வானூர்திகள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் தாக்குதல் நடத்தினர். இந்த வெடிச் சத்தங்களால் அனுராதபுரம் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகினர். அவர்களுக்கு காணக் கிடைத்தது ஒன்றேயொன்றுதான். வான் படைத்தளத்திற்குள் நிகழ்ந்த வாண வேடிக்கை மட்டுமே அது. சில வேளைகளில் நெருப்புப் பந்தைப் போன்ற ஒன்று முகாமை நோக்கிச் சென்றதை நகரவாசிகள் கண்டுள்ளனர். அது கரும்புலிகள் மேற்கொண்ட ஆர்.பி.ஜி. தாக்குதல் ஆகும். தமது சகாக்கள் வழங்கிய ஆர்.பி.ஜி. தாக்குதல் துணையுடன் வானூர்தி தளத்திற்குள் நுழைந்த கரும்புலிகள் ஆர்.பி.ஜி. தாக்குதல் நடத்தி எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகள் இரண்டை அழித்தனர். இத்தாக்குதல்களால் அச்சமடைந்த நுவரவாவிக்கு அண்மையிலிருந்த மக்கள் நுவரவாவிக்கு மேலாக அதிகாலை 3:20 மணியளவில் உழவு இயந்திரத்தின் ஓசையைப் போன்ற சத்தமொன்றைக் கேட்டுள்ளனர். விடுதலைப் புலிகளிடமிருக்கும் இரு ஸ்லின் இசெட்-143 வானூர்திகளிலிருந்தே அந்த சத்தம் எழுந்துள்ளது. விளக்குகளை அணைத்துவிட்டு தென்னை மரத்தின் உயரத்தில் பறந்த அந்த வானூர்திகள் வான் படைத்தளத்தை நோக்கிப் பறந்ததை நகரவாசிகள் கண்டுள்ளனர். வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகள் விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப்பட்டிருந்தமையினால் வான் படையினரால் அவற்றின் மீது தாக்குதல் நடத்த முடியாது போய்விட்டது. ஒரு விநாடியில் இடி விழுந்ததைப் போன்றதொரு சத்தம் வான் படைத்தளத்திலிருந்து கேட்டது. அதனையடுத்து வான் படைத்தளத்தின் வான்வெளியில் தீப்பிழம்பினால் பாரிய வெளிச்சம் ஏற்பட்டது. இத்தாக்குதலின் பின்னரான விசாரணைகளில் விடுதலைப் புலிகளின் இரு வானூர்திகள் மூலம் 4 குண்டுகள் போடப்பட்டமை தெரியவந்துள்ளது. கரும்புலிகள் வானூர்தி எதிர்ப்பு கருவிகளைக் கைப்பற்றிய பின்னரே இந்த வானூர்திகள் வந்துள்ளன. கரும்புலிகள் செய்மதி தொலைபேசியினூடாக அறிவித்ததையடுத்தே அவர்களின் வானூர்திகள் வந்துள்ளன என நம்பப்படுகிறது. இதேவேளை விடுதலைப் புலிகளின் இரு வானூர்திகளும் பறந்ததை வவுனியாவில் உள்ள வான் படைத்தளத்தின் ராடார் கருவிகள் அவதானித்துள்ளன. இவற்றைத் துரத்திச் சென்று தாக்குதல் நடத்த வவுனியா வான் படைத்தளத்தில் தரித்து நின்ற பெல்-212 ரக உலங்குவானூர்தி சென்றுள்ளது. 2 வானோடிகளும், 2 படையினரும் அதில் இருந்தனர். அந்த உலங்குவானூர்தி விபத்திற்கு இலக்காகி தொரமடலாவ பிரதேசத்தில் உள்ள கல்குழியில் விழுந்துள்ளது. வானூர்தியை சோதனையிடச் சென்ற படையினருக்கு சிதைந்து போன வானோடிகளினதும், படையினரது சடலங்களுமே கிடைத்தன. 22 ஆம் நாள் காலை வரை விடுதலைப் புலிகள் வான் படைத்தளத்திற்குள் நிலை பெற்று படையினரை எதிர்த்துத் தாக்குதல் நடத்தி வந்தனர். வான் படையினரால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமையினால் சிறப்புப் படைப்பிரிவைத் தாக்குதலுக்காக அழைக்க தீர்மானித்தனர். சிறப்புப் படையினர் விடுதலைப் புலிகள் இருந்த பதுங்கு குழிகளுக்குள் தாக்குதல் நடத்தி அதனைக் கைப்பற்றினர். எனினும் 2 பதுங்குகுழிகள் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இறுதியில் இராணுவத்தினரின் போர் தாங்கிகளின் மூலம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அந்த பதுங்குழிகளும் அழிக்கப்பட்டன. அதிலிருந்த கரும்புலிகளும் அழிக்கப்பட்டனர். இத்தாக்குதலுக்காக வந்த 21 கரும்புலிகளும் தாக்குதலில் மரணமடைந்ததாக வான்படையினர் தெரிவிக்கின்றனர். புலிகளின் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அழிந்தது நான்கா? எட்டா? இத்தாக்குதலின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல 4 வானூர்திகள் அழிக்கப்பட்டதாக கூறினார். எம்ஐ-24 ரக உலங்கு வானூர்திகள் - 02, கே-08 ரக வானூர்தியொன்று தாக்குதலில் அழிந்ததாகவும் மற்றுமொரு வானூர்தி உடைந்து விழுந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். எனினும் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க கடந்த 24 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் 8 வானூர்திகள் அழிக்கப்பட்டதாக தெரிவித்தார். அதற்கமைய எம்ஐ-24 ரக உலங்குவானூர்தி - 01, பீச் க்ராப்ட் வானூர்தி - 01, பிரி-6 ரக வானூர்திகள் - 03, கே-8 ரக வானூர்தி - 01, எம்ஐ-17 ரக வானூர்தி - 01 அழிக்கப்பட்டதாகவும், எம்ஐ-24 ரக வானூர்தி - 01 சேதமடைந்திருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார். அழிக்கப்பட்ட வானூர்திகளில் அதிக விலை மதிப்பைக் கொண்டது பீச் கிராப்ட் வானூர்தியாகும். அவ்வாறான இரு வானூர்திகளே சிறிலங்காவிடம் இருப்பதாக வான் படை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வானூர்தியில் இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டிருப்பதால் கடந்த காலங்களில் தற்போது தாக்குதலுக்கு இலக்கான வானூர்தியே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதிநுட்பமான கமரா கருவிகளைக் கொண்ட நவீன தொழில்நுட்பத்துடனான இந்த வானூர்தி உளவு பார்ப்பதற்கே பயன்படுத்தப்பட்டது. இத்தாக்குதலில் அழிந்த எம்ஐ-24 ரக உலங்குவானூர்தியானது வான் படையினரிடம் இருந்த சிறந்த வானூர்தியாகும். கடற்புலிகளின் மீதான தாக்குதலுக்கு இந்த வானூர்தியே பயன்படுத்தப்பட்டுள்ளது. எம்ஐ-17 ரக உலங்குவானூர்தி படையினரையும் பொருட்களையும் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அழிக்கப்பட்ட ஏனைய வானூர்திகள் வானோடிகளுக்குப் பயிற்சியளிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் அநேக சந்தர்ப்பங்களில் தோல்வியை மறைத்து பிழையை சரியாக்கும் நடவடிக்கைகளிலேயே ஈடுபடுகிறது என்பது தெளிவாகிறது. அதற்கு சிறந்த உதாரணம் பீச்கிராப்ட் அழிக்கப்பட்டதை அறிந்தும் அதனை மூடி மறைத்ததாகும். அதனை வெளியிட்டாலும் பிரதமரால் உண்மையைத் தொடர்ந்தும் மறைக்க முடியாது போய்விட்டது. இத்தாக்குதலை நோக்கினால் முகாமைச் சுற்றியிருந்த பாதுகாப்பு போதுமானதாக இன்மையாலேயே விடுதலைப் புலிகள் இலகுவாக முகாமிற்குள் நுழைந்தார்கள் எனத் தெரிகிறது. அத்துடன் அவர்கள் வான் எதிர்ப்புக் கருவிகளைக் கைப்பற்றியமை மற்றும் ஆயுதக்கிடங்கை நோக்கிச் சென்றமையானது அவர்கள் அந்த இடத்தைப்பற்றி தெளிவாக அறிந்து வைத்துள்ளனர் என்பதையே காட்டுகின்றது. இதனால் விடுதலைப் புலிகள் பெரும் திட்டத்துடனேயே இத்தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பது தெளிவாகிறது. அது வெறுமனே நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. குடும்பிமலையில் தோல்வியடைந்த விடுதலைப் புலிகள் தமது தோல்வியை மறைக்க இத்தாக்குதலை நடத்தியதாக அரசாங்கம் கூறுகிறது. எனினும் இதுவரை தெரியவந்திருக்கும் விடயங்களுக்கு அமைய வான் படைத்தளம் பற்றிய தகவல்கள் சில மாதங்களுக்கு முன்னரே விடுதலைப் புலிகளின் வசம் கிடைத்துள்ளது. அவர்கள் அந்த தாக்குதலை நடத்தும் முன்னர் வன்னியில் அதற்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர். இத்தாக்குதலின் பின்னர் அனுராதபுரத்தில் கூட்டு கட்டளைத்தளபதியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். பனாகொடை 11 ஆவது படையணித்தலைவரான மேஜர் ஜெனரல் சனத் கருணாரத்னவே அவர். வடக்கு - கிழக்கு, கொழும்பு, வன்னி தவிர இலங்கையின் ஏனைய அனைத்து பகுதிகளும் அவரின் நிர்வாகத்தின் கீழேயே உள்ளது. எனினும் அனைத்தும் முடிந்த பின்னரே இவை அனைத்தும் நிகழ்கின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி:புதினம்
Saturday, October 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.