Sunday, September 30, 2007

கிழக்கில் மீண்டும் பலம் பெற்று வரும் விடுதலைப் புலிகள்: கொழும்பு ஊடகம்.!!

[ஞாயிற்றுக்கிழமை, 30 செப்ரெம்பர் 2007]

சிறிலங்காப் படையினரின் கவனம் வட போர்முனையில் குவிந்து வருகையில், கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது.

சண்டே ரைம்சின் பாதுகாப்பு ஆய்வுப் பத்தியில் இக்பால் அத்தாஸ் எழுதிய முக்கிய பகுதிகள்:

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை அகிய மூன்று மாவட்டங்களிலும் விடுதலைப் புலிகள் சிறிய குழுக்களாக இயங்கி வருவது படையினருக்கு பெரும் கவலைகளைத் தோற்றுவித்துள்ளது. திருகோணமலை நகர் மற்றும் தம்பலகாமம் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் புலனாய்வு உறுப்பினர்கள் நடமாடி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் கும்புறுப்பிட்டி, கண்டல்காடு, கந்தளாய் ஆகிய பகுதிகளிலும் செயற்திறன் மிக்கதாக உள்ளனர்.

கடந்த ஜூலையில் படையினர் குடும்பிமலையைக் கைப்பற்றிய பின்னர் முதன் முதலாக விடுதலைப் புலிகளின் சிறிய அணி ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் ஊடுருவியுள்ளது. அவர்கள் கொக்கட்டிச்சோலை, வவுணதீவு பகுதிகளில் நடமாடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படையினர் குடும்பிமலையை கைப்பற்றியதில் இருந்து விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்டத்தில் தமது புலனாய்வு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். அவர்கள் சிறப்பு அதிரடிப்படையினருடன் அங்கு மோதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கிழக்கில் இருந்து படையினரின் கவனம் திரும்புவதனை தடுக்கும் முகமான விடுதலைப் புலிகளின் இந்த நடவடிக்கைகள் சிறியனவாக இருந்த போதும் அது வளர்ச்சி பெற்று வருகின்றது. இது மற்றுமொரு பாரிய பிரச்சினையாகும். கிழக்கில் தமது நடவடிக்கைகளை அதிகரிப்பதன் மூலம் வன்னியில் உள்ள படையினருக்கு அழுத்தங்களை கொடுப்பது தான் விடுதலைப் புலிகளின் நோக்கம். இது இரு நோக்கங்களை கொண்டது, அதாவது கிழக்கில் அரசின் அபிவிருத்தி திட்டங்களை நிறுத்துதல், உள்ளுராட்சி மற்றும் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு நெருக்கடிகளை ஏற்படுத்துதல் என்பனவாகும்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு சிறப்பு அதிரடிப்படையினரின் கைகளில் வீழ்ந்து வருகின்றது. அங்கிருக்கும் படையினர் வடபகுதி நோக்கி நகர்த்தப்பட்டு வருகின்றனர். கடந்த வாரங்களில் ஓய்வுபெற்ற சிறப்பு அதிரடிப்படையினரும் கவர்ச்சிகரமான ஊதியங்களுடன் பணிக்கு மீள அழைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வெளியில் தெரியாத படி கிழக்கில் இருந்து துணை இராணுவக் குழுக்களையும் பாதுகாப்புத் தரப்பு அகற்ற முடிவெடுத்துள்ளது.

கருணா நாட்டை விட்டு தப்பி ஓடியதற்கும் இதுவே காரணம். அவர் இங்கு இருந்த காலப்பகுதியிலும் அதிகளவான பாதுகாப்புக்கள் அவருக்கு வழங்கப்படவில்லை. படுகொலைகள், கடத்தல்கள், பணம் பறித்தல் போன்றவற்றில் கருணா குழு பெருமளவில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

எனினும் துணை இராணுவ குழுவினர் பெருமளவான ஆயுதங்களை கொண்டிருப்பதனால் அவர்களை கிழக்கில் இருந்து படையினர் அகற்றுவது இலகுவான காரியம் அல்ல.

அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் துணை இராணுவக் குழுவினரை செயலிழக்கச் செய்வதற்கு நீண்டகாலம் எடுக்கும். ஆனால் அவர்களின் ஆயுதங்களை எவ்வாறு மீளப்பெறுவது என்பதே தற்போதைய மிகப்பெரிய கேள்வி. அவர்கள் தமது ஆயுதங்களை பாதாள உலகக்கும்பலுக்கும் விற்பனை செய்யலாம்.

ஐக்கிய நாடுகள் சபையின் 62 பொதுச் சபைக் கூட்டத் தொடரில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பேசுவதற்கு ஒரு நாளைக்கு முன்னரே மன்னார் மீதான படை நடவடிக்கை ஆரம்பமாகி உள்ளது. அங்கு பேசிய மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சவின் அண்மைய கருத்தை உறுதிப்படுத்தி உள்ளார்.

விடுதலைப் புலிகளை 100 விகிதம் முறியடிக்கப் போவதாக இரு வாரங்களுக்கு முன்னர் கோத்தபாயா ராஜபக்ச தெரிவித்திருந்தார். மகிந்த ராஜபக்ச உரையாற்றுவதற்கு முன்னைய நாளில் விடுதலைப் புலிகளும் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

இலங்கையில் நடைபெறும் பேரை முடிவுக்கு கொண்டு வரும் நாளாக கோத்தபாயா ராஜபக்ச தெரிவித்த நாளும் அதிக தூரத்தில் இல்லை. சிங்க றெஜிமென்ட் படையில் கொல்லப்பட்ட படையினருக்கான நினைவு நிகழ்வில் அதனை கோத்தபாயா ராஜபக்ச தெரிவித்திருந்தார். எனவே எதிர்வரும் வாரங்களில் விடுதலைப் புலிகளுடன் அதிக மோதல்கள் இடம்பெறலாம் என்பதனையே அதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

மன்னார் மோதல்களில் இழப்புக்களைச் சந்திக்கும் படையினர்

கடந்த எட்டு நாட்களாக வடபகுதியில் மேற்கு கடற்கரைப் பிரதேசமான மன்னார் பகுதியில் படையினரின் நடவடிக்கைகள் தீவிரம் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கை தற்போதும் நடைபெற்று வருவதால் அதன் நோக்கம் என்ன என்பது குறித்து தற்போது கூறுவது கடினமானது. ஆனால் போர் வட போர்முனைக்கு நகர்ந்துள்ளது தெளிவானது.

கடந்த திங்கட்கிழமை (24.09.07) படையினர் மன்னாரின் வடமுனையான கட்டுக்கரைக்குளம், விடத்தல்தீவு நோக்கி முன்நகர்ந்தனர். இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கொண்டுவந்து பதுக்கி வருவதாக கிடைத்த புலனாய்வுத் தகவல்களை தொடர்ந்தே இந்த நடவடிக்கை ஆரம்பமாகியது. அவர்கள் மன்னார் வளைகுடாக் கடலினூடாக ஆயுதங்களை தருவித்து வருகின்றனர். எனினும் மற்றைய படை நடவடிக்கைகள் போல இந்த நடவடிக்கைக்கு படையினர் பெயர் எதுவும் சூட்டவில்லை.

போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினது கவனத்தைப் பெறாத வகையில் இதனை படையினர் மிகவும் கவனமாக தவிர்த்துள்ளனர். இதனை கண்காணிப்புக் குழு போர் நிறுத்த மீறல்களாக பதிவு செய்யலாம். 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்தம் தற்போது காகிதத்தில் மட்டும் உள்ளது என்பது நன்கு தெரிந்த விடயம்.

கடந்த ஒரு வாரமாக வவுனியா நகரின் மேற்குப் பகுதியின் நிலமை மாற்றமடைந்துள்ளது. 16 மைல்கள் தொலைவில் உள்ள பெரியதம்பனைப் பகுதியில் இருந்து பெருமளவான காயமடைந்த படையினரை ஏற்றிக்கொண்டு நோயாளர் காவு வாகனங்கள் வவுனியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் கடுமையாக காயமடைந்த படையினர் அனுராதபுர மருத்துவமனைக்கு உலங்குவானூர்திகள் மூலம் கொண்டு செல்லப்படுவதுடன், பின்னர் அவர்கள் கொழும்பிற்கும் மாற்றப்படுகின்றனர்.

படையினர் கடுமையான எதிர்த்தாக்குதல்களை சந்தித்து வருகின்றனர். எனினும் அவர்கள் முன்நகர முயற்சித்து வருகின்றனர். அங்கு நேரடியான மோதல்கள் மட்டுப்படுத்தப்பட்டவையாக உள்ளன. கண்ணிவெடிகளும், பொறிவெடிகளிலும் சிக்கி பெருமளவான படையினர் காயமடைந்து வருகின்றனர்.

படையினர் அதனை கவனமாக அகற்ற முற்படுகையில் விடுதலைப் புலிகளின் மோட்டார் எறிகணைகள் வேகமாகவும், தொடர்ச்சியாகவும் வீழ்ந்து வெடிக்கின்றன. இதன் போது இரு படையினர் கொல்லப்பட்டதுடன், 20 படையினர் காயமடைந்ததாகவும் அதிகாரபூர்வமாக கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் அந்த பகுதியில் உள்ள மூத்த படை அதிகாரி ஒருவர் இந்த தொகை மிக அதிகமானது என தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை தாக்குதல் ஆரம்பித்த போது படையினர் பல முனைகளில் தாக்குதல்களை ஆரம்பித்திருந்தனர். அதில் வன்னியின் தெற்குப் பகுதிகளான மன்னார், வவுனியா, மணலாறு ஆகிய பகுதிகள் அடங்கும்.

தம்பனைப் பகுதியில் நடைபெற்ற சமரில் இராணுவத்தின் இலகு காலாட்படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளார். அவரின் நிலை தொடர்பாக பல முரணான தகவல்கள் கூறப்படுகின்றன. மோட்டார் தாக்குதலில் காயமடைந்து அவர் வீழ்ந்தனை சிலர் கண்டதாக தெரிவித்துள்ள போதும், அவர் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டதாக வேறு சிலர் கூறியுள்ளனர்.

தம்பனையில் நடைபெற்ற சமரில் இரு படையினர் கொல்லப்பட்டதுடன், 31 படையினர் காயமடைந்துள்ளனர். எனினும் முகமாலை, கிளாலி, நாகர்கோவில் பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்தன.

முகமாலையில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் வன்னியின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் வான் படையினரின் எம்ஐ-24 தாக்குதல் உலங்குவானூர்திகளும் நேற்று சனிக்கிழமை தாக்குதலில் ஈடுபட்டிருந்தன. நேற்று முன்தினம் வான் படையினரின் தாக்குதல் வானூர்திகள் முல்லைத்தீவின் பல பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியிருந்தன.

கிளாலியில் நடைபெற்ற சமரில் இரு படையினர் கொல்லப்பட்டதுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர். இந்த பரவலான தாக்குதல்களின் மத்தியிலும் படையினரின் கவனம் மன்னார்ப் பகுதியில் குவிந்துள்ளது என்பது தெளிவானது. இதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன.

சிலாவத்துறை மற்றும் அரிப்புப் பகுதிகளை கைப்பற்றிய படையினர், கொழும்பு நகர் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு திட்டமிடும் பகுதியை கைப்பற்றியதாக தெரிவித்திருந்தனர். அதற்கு அப்பால் அதன் மூலம் மன்னார் வளைகுடா ஊடாக ஆயுதங்களையும் ஏனைய பொருட்களையும் விடுதலைப் புலிகள் தருவிப்பதனை தடுத்ததுடன், மன்னார் சுற்றுப்புறத்தையும் பாதுகாக்கும் நடவடிக்கை அதுவாகும். மன்னாருக்கு வடக்கே உள்ள கடற்கரைப் பகுதிகள் மீதான நடவடிக்கையும் விடுதலைப் புலிகளின் விநியோகங்களை தடுக்கும் நடவடிக்கையாகும்.

மன்னார் கரையோரப் பகுதிகளை படையினர் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது அவர்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும். தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து தென்னிந்தியாவிற்கு செல்வதனையும் அதன் மூலம் தடுக்க முடியும். அதாவது இரு நோக்கங்களை நிறைவேற்றலாம், விடுதலைப் புலிகளுக்கான விநியோகங்களை தடுத்தல், தென்னிந்தியாவிற்கு செல்லும் மக்களை தடுத்தல். இது விடுதலைப் புலிகளுக்கு அழுத்தங்களை உருவாக்கலாம்.

ஆனால் கிழக்கைப் போல வடபகுதி படையினருக்கு சாதகமான பகுதி அல்ல. போர் நிறுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் தம்மை அங்கு நன்கு பலப்படுத்தியுள்ளனர். அங்கு விடுதலைப் புலிகளின் நிர்வாகம், காவல்துறை, நீதித்துறை என்பன இயங்கி வருகின்றன.

எனவே வன்னி மீதான படை நடவடிக்கை கிழக்கில் நடைபெற்றதில் இருந்து வேறுபட்டதாகவே இருக்கும். அவர்கள் இழந்த பகுதிகளுக்காகவே அல்லது பகுதிகளை தக்க வைப்பதற்காகவோ சமர் புரியாதுவிட்டாலும், வெற்றிகரமான எதிர்த்தாக்குதல்களை நிகழ்த்தலாம். அங்கு அவர்கள் கடந்த ஐந்து வருடங்களாக தம்மை பலப்படுத்தி வந்துள்ளனர். எனவே தான் அவர்கள் எந்த படை நடவடிக்கைக்கும் கடுமையான எதிர்ச்சமரை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே அங்கு மெதுவாகவே களநிலைகள் மாற்றமடைந்து வருகின்றன. சிறிலங்காவின் புலனாய்வு அமைப்பபையும் விடுதலைப் புலிகள் குழப்பத்திற்கு உள்ளாக்கி வருகின்றனர். ஆனால் விடுதலைப் புலிகள் எங்கு தமது கடுமையான தாக்குதல் சமரை ஆரம்பிக்கப் போகின்றனர் என்பது தான் தற்போதைய முக்கிய கேள்வி அரச கட்டுப்பாட்டில் உள்ள யாழ். குடாநாட்டின் நிர்வாகத்தை அவர்கள் சீர்குலைக்கலாம் என்பதும் ஒரு கணிப்பு.

குடாநாட்டுக்குள் பெருமளவில் ஊடுருவும் விடுதலைப் புலிகள்

கல்முனையில் இருந்து தனங்கிளப்பு, அரியாலை பகுதிகளினூடாக விடுதலைப் புலிகள் யாழ். குடாநாட்டிற்குள் பெருமளவில் ஊடுருவி வருவதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தப் பகுதியில் உள்ள கடற்படையினரின் நடமாட்டங்களையும் அவர்கள் தொடர்ச்சியாக அவதானித்து வருகின்றனர். குடாநாட்டின் தெற்குப் பகுதியில் நாக்கு போன்று உள்ள பகுதியான கல்முனை மற்றும் நாகதேவன்துறை போன்ற பகுதிகளில் விடுதலைப் புலிகள் தமது பீரங்கிகளை நிறுத்தியுள்ளனர்.

குடாநாட்டிற்குள் ஊடுருவும் விடுதலைப் புலிகள் மரபுவழியான தாக்குதல்களை நடத்தாத போதும், கண்ணிவெடி தாக்குதல்கள் மூலம் அதன் உறுதித்தன்மையை சீர்குலைக்கலாம் என புலனாய்வுதுறை எச்சரித்துள்ளது. இது வன்னி மீதான படையினரின் கவனத்தை சீர்குலைக்கலாம். அத்துடன் வடக்கு, கிழக்கிற்கு வெளியில் உள்ள பொருளாதார மற்றும் இராணுவ இலக்குகளையும் அவர்கள் தாக்கலாம். எனினும் யாழ். குடாநாட்டின் மீதான தாக்குதல் அச்சம் முக்கியமானது என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

படையினரின் கவனத்தை திசை திருப்புவதற்காக விடுதலைப் புலிகள் வேறு பகுதிகளில் தமது படையணிகளை நகர்த்தலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிப் பேச்சுக்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ வேண்டுகோள் எதுவும் விடுக்கப்படவில்லை: இளந்திரையன்

[ஞாயிற்றுக்கிழமை, 30 செப்ரெம்பர் 2007]

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அமைதிப் பேச்சுக்களை மீளத் தொடங்குவது குறித்து நோர்வேயோ சிறிலங்கா அரசாங்கமோ உத்தியோகபூர்வ வேண்டுகோள் எதனையும் விடுக்கவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இளந்திரையன் கூறியுள்ளதாவது:

அமைதிப் பேச்சுக்களை மீளத் தொடங்குவது தொடர்பிலான புதிய முன்னெடுப்புக்கள் எதனையும் நோர்வே அனுசரணையாளர்கள் எமக்குத் தெரிவிக்கவில்லை. உத்தியோகபூர்வமாக நோர்வேயோ அல்லது சிறிலங்கா அரசாங்கமோ பேச்சுக்களை மீளத் தொடங்க அழைப்பு விடுவிக்கவில்லை. அமைதிப் பேச்சுக்களுக்கான மகிந்தவின் அழைப்பு என்று ஒரு வாய்ச்சொல்தான்.

இதுவரை புலிகள் தரப்பில் எதுவித நிபந்தனையும் முன்வைக்கப்படவில்லை. உரிய நேரத்தில் அதுபற்றி பேசுவோம்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண சிறிலங்காவின் எந்த ஒரு சிங்கள அரசாங்கமுமே உண்மையான ஈடுபாட்டை வெளிப்படுத்தியதில்லை.
வெளிநாடுகளிலிருந்து கொண்டு அறிக்கைகளை மட்டுமே விட்டுக் கொடுக்கின்றனர் என்றார் இளந்திரையன்.

மக்களின் செயற்பாடுகள்- விடுதலை சார்ந்ததாக வேகம்பெற வேண்டும்: கேணல் தீபன்

[ஞாயிற்றுக்கிழமை, 30 செப்ரெம்பர் 2007]

மக்களின் செயற்பாடுகள் விடுதலை சார்ந்ததாக வேகம் பெறும் போது களத்தில் போராளிகளிடம் அவை பாரிய மாறுதல்களை ஏற்படுத்தும் என்று வடபோர் முனை கட்டளைத் தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கோட்ட அரசியல்துறையின் ஏற்பாட்டில் களமுனைப் போராளிகளுக்கு உலர் உணவுகள் கையளிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை வடபோர் முனையின் முகாம் ஒன்றில் நடைபெற்றது. களத்தில் போரிடுகின்ற போராளிகளுக்காக இந்த உலர் உணவுப்பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

அனுப்பி வைக்கப்பட்ட உலர் உணவுகளைப் பெற்றுக்கொண்ட கேணல் தீபன் கூறியதாவது:

வடபோர் அரங்கில் எதிரியின் செயற்பாடுகள் அதிகரித்து வருகிறது. இராணுவத்தின் தாக்குதல்களும் எறிகணை வீச்சுக்களும் தினமும் நடைபெற்று வருகிறது. இதனை எமது போராளிகள் துணிவுடனும் விடுதலை உணர்வுடனும் எதிர்கொண்டு நிற்கின்றனர்.

போராளிகளின் அசைக்க முடியாத மன உறுதி போர் முனையில் எமக்கு பாரிய நம்பிக்கைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அனைத்துப் போராளிகளும் எதிரியை எதிர்கொள்வதற்கு தயாராகி நிற்கிறார்கள்.

அண்மையில் வட போர்முனையில் இருமுறை சிறிலங்கா இராணுவத்தினருடன் மோதல்கள் நடைபெற்றுள்ளன. அதில் எமது போராளிகளின் செயற்பாடுகள் திறமைகள் நிறைந்தவையாக இருந்தன. விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரை களத்தில் நிற்கின்ற போராளிகள் இயங்குவதைப் போல பின்புலத்தில் இருக்கின்ற மக்களும் செயற்பட வேண்டும். மக்களின் செயற்பாடுகள் விடுதலை சார்ந்ததாக வேகம்பெறும் போது களத்தில் போராளிகளிடம் அவை பாரிய மாறுதல்களை ஏற்படுத்தும்.

களமுனைப் போராளிகளின் செயற்பாடுகளிற்கு ஊக்கம் தரும் வகையில் மக்களின் செயற்பாடுகள் அதிகரித்து வருகிறது. தற்போது மக்கள் உலர் உணவுகளை போராளிகளுக்கு அதிகளவில் அனுப்பி வைக்கிறார்கள். இதன் மூலம் மக்கள் வெளிப்படுத்தும் அன்பு களத்தில் எதிரியை எதிர்கொள்ளும் போராளிகளுக்கு மிகவும் மகிழ்வையும் தெம்பையும் ஏற்படுத்துகின்றது. மக்களின் இத்தகைய செயற்பாடுகள் இன்னும் வேகம்பெற வேண்டும்.

இனிவரும் காலங்களிற்கு ஏற்ப மக்கள் தங்களை விரைவாக தயார்படுத்திக் கொள்ளவேண்டும். கடந்த காலங்களில் எமது மக்கள் விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு மாற்றங்களுக்கு ஏற்பவும் எவ்வாறு தங்களை உருவாக்கிக் கொண்டார்களோ அதனைப்போல இனிவரும் காலங்களுக்கு ஏற்பவும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.

எமது போராளிகளின் அசைக்க முடியாத மனவலிமையும் தேசியத் தலைவரின் வழிகாட்டலும் நிச்சயம் எமக்கான விடுதலையைப் பெற்றுத்தரும். எனவே மக்கள் களம் சார்ந்து தம்மை மாற்றமடையச் செய்ய வேண்டும் என்றார் கேணல் தீபன்.

விடுதலைப் புலிகளின் இராணுவ பலம்தான் இனப்பிரச்சனைக்குத் தீர்வு என்பதை வெளிப்படுத்துகிறது ஐ.தே.க. நிலைப்பாடு: "ஈழநாதம்"

[ஞாயிற்றுக்கிழமை, 30 செப்ரெம்பர் 2007]

இலங்கை இனப்பிரச்சனைக்கு சமஷ்டி முறையை முன்வைத்த ஐக்கிய தேசியக் கட்சி இப்போது அந்நிலைப்பாட்டிலிருந்து மாறியிருப்பதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ பலம்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வை உருவாக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது என்று தாயகத்திலிருந்து வெளிவரும் "ஈழநாதம்" நாளிதழின் தலையங்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈழநாதம் நாளிதழின் இன்றைய (30.9.07) வெளியீட்டின் ஆசிரியர் தலையங்கம்:

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பது தமிழ் மக்களின் கோரிக்கைகளின் பாற்பட்டதாக அல்லாது தமிழ் மக்களின் இராணுவ ரீதியிலான பலத்தின் அடிப்படையில் மட்டு;மே தீர்மானிக்கப்படக்கூடியது என்பதையே ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய கொள்கை மாற்றம் வெளிக்காட்டுவதாய் உள்ளது.

விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டதோடு இனப்பிரச்சினைக்கு சமஷ்டித் தீர்வு குறித்து ஆராய்வதற்குத் தயாராக உள்ளதாகவும் கூறிவந்த ஐ.தே.கட்சி தற்பொழுது சமஷ்டி குறித்த பேச்சைக்கைவிடவும் யுத்த நிறுத்த உடன்பாட்டை மாற்றிக்கொள்ளவும் முடியும் எனத் தெரிவித்துள்ளமை ஐ.தே.க.வின் நிலைப்பாட்டில் செய்யப்பட்டுள்ள மாற்றம் எனக் கொள்ளப்படுகின்றது.

ஆனால் அண்மையில் ஐ.தே.க. முன்னர் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொண்ட நிலைப்பாட்டை தற்பொழுது மீண்டும் மாற்றிக் கொண்டுள்ளது என்பதே சரியானதாகும். ஏனெனில் ஐ.தே. கட்சி சமஷ்டி குறித்துப் பேசியதானது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை எட்டும் நோக்கிலானது என்பதை விட சமஷ்டி குறித்து மேற்குலக நாடுகள் பரிசீலிக்கத் தயாராகிய நிலையிலேயே ஆகும். அதாவது மேற்குலகைத் திருப்தி செய்யும் நோக்கிலானதே ஆகும்.

ஐ.தே.க.வும் சரி, வேறு எந்த சிங்களக்கட்சிகளும் சரி இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்விற்குத் தம்மை என்றுமே தயார்ப்படுத்திக்கொண்டவையாக இருந்ததில்லை. அவர்கள் மீதான இராணுவ, அரசியல், பொருளாதார நெருக்கடிகளே அவர்களை இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்துப் பேச வைப்பவையாகும்.

தற்பொழுது ஐ.தே. கட்சியின் மாற்றமானது ஜே.வி.பி.யுடன் ஒரு அரசியல் கூட்டிற்குத் தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ளும் நோக்கிலானது எனப் பொதுவில் கருதப்பட்டாலும், ஐ.தே. கட்சிக்கும் மகிந்த அரசு கூறிக்கொள்ளும் இராணுவத்தீர்வில்ஃ இராணுவ வெற்றிகளில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கலாம்.

சிங்கள அரசியற் கட்சிகளைப் பொறுத்தும் சிங்கள மக்களைப் பொறுத்தும் இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை வலுவடைந்துள்ளது போல் உள்ளது. மகிந்த அரசின் இராணுவ வெற்றிகள் குறித்த பிரசாரங்கள் அத்தகைய தொரு நம்பிக்கையைத் தோற்றுவித்திருக்கலாம்.

இத்தகையதொரு நிலையில் ஐ.தே.கட்சியும் இராணுவத்தீர்வில் நம்பிக்கை கொண்டிருக்கலாம.; அது மட்டுமன்றி இராணுவத்தீர்வில் சிங்களவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கையில் அரசியல் தீர்வு பற்றிப் பேசுவதில் பயன் இல்லை எனவும் கருதியிருக்கலாம். இதனால் யுத்த நிறுத்த உடன்படிக்கையையும் சமஷ்டியையும் கைவிட்டு இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி முறையின் கீழ் தீர்வொன்றைக்காண்பதற்கும், யுத்தத்தில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பது குறித்துப் பேசவும் தீர்மானித்திருக்கலாம்.

ஐ.தே.கட்சியின் இம்மாற்றமானது இனப்பிரச்சினைக்கு எத்தகைய தீர்வு என்பதை விடுதலைப் புலிகளின் பலத்தைப் பொறுத்தே நிர்ணயிக்க சிங்கள ஆட்சியாளர்கள் முற்பட்டு நிற்பதை வெளிக்காட்டுவதாய் உள்ளது. இந்த வகையில் பார்த்தால் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முடியுமானால் இனப்பிரச்சினை என்பதற்கு தீர்வென்பதே தேவையில்லை என்பதே அர்த்தமாகும்.

இது ஒன்றும் தமிழ் மக்களுக்கோ அன்றி புலிகளுக்கோ தெரியாத விடயமல்ல. விடுதலைப் புலிகளின் பலம் மட்டுமே தமிழ் மக்களின் உரிமைகளைத் தீர்மானிப்பதாக இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரிந்தே உள்ளது. ஆனால் இதனைப்புரிந்து கொள்ள வேண்டியவர்கள் சர்வதேச சமூகத்தினரே.

ஏனெனில் இவர்கள் இனப்பிரச்சினைக்கு சிறிலங்கா அரசு அரசியல் தீர்வொன்றை முன்வைக்கும் என எதிர்பார்த்துள்ளனர். இவ் எதிர்பார்ப்புடன் சிறிலங்காவிற்கு இராணுவம் மற்றும் பொருளாதார உதவிகளையும் மேற் கொண்டு வருகின்றனர்.

ஆனால் சிறிலங்கா ஆட்சியாளர்கள் இந்நம்பிக்கையை மெய்ப்பிக்கப்போவதில்லை. ஆகையினால் இனப்பிரச்சினைத் தீர்;வில் அக்கறை கொண்ட வெளிநாட்டவர்கள் யாராயினும் சரி சமபல நிலை ஒன்று இல்லாது பிரச்சினையைத்தீர்க்க முடியாது என்பதை விளங்கிக்கொள்ளுதல் வேண்டும்.

ஆகையினால் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வென்பது தமிழ் மக்களின் பலத்தின் அடிப்படையில் மட்டுமேயே தீர்மானிக்கப் படுவதாக இருக்கும். சுருக்கமாகச்சொன்னால் விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியில் பலம் பெறும் போதே அது சாத்தியமாகும். அவ்வாறு இல்லாது விடில் இனப்பிரச்சினை என்றபேச்சையே பேரினவாத ஆட்சியாளர்கள் இல்லாது ஒழித்துவிடுவர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்தவிடம் 760 மில்லியன் ரூபா பெற்ற எமில் காந்தன் புலி அல்ல- ஈ.பி.டி.பி.யைச் சேர்ந்தவர்: டக்ளஸ் ஒப்புதல்

[ஞாயிற்றுக்கிழமை, 30 செப்ரெம்பர் 2007] சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இரகசிய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் பிரதானமாக கூறப்பட்ட எமில் காந்தன் என்ற நபர், ஈ.பி.டி.பி. குழுவைச் சேர்ந்தவர் என்று டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "த சண்டே லீடர்" வார இதழ் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் த சண்டே லீடரில் வெளியாகியுள்ள செய்தி விபரம்: தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய புலனாய்வுப் பொறுப்பாளர் என்று கூறி சிறிலங்காவின் பயங்கரவாத தடுப்பு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட எமில் காந்தன் என்பவர் தன்னுடன் சேர்ந்தியங்கும் நபர்களில் ஒருவர் என்று டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். சிறிலங்கா அரச தலைவர் தேர்தலுக்கு முன்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மகிந்தவுக்கும் இரகசிய ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டதாகவும் மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்ச மூலமாக தேர்தலுக்கு முன்பாக சில பில்லியன் தொகை வழங்கப்பட்டதாகவும் இதற்கு எமில் காந்தன் என்பவர் அனுசரணையாக இருந்ததாகவும் கூறப்பட்டு வந்தது. சிறிலங்கா அரச தலைவர் தேர்தலுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக எமில் காந்தனால் உருவாக்கப்பட்ட போலி வர்த்தக நிறுவனங்களுக்கு 760 மில்லியன் ரூபா தொகைக்கான வீடமைப்புத் திட்டங்களுக்கு மகிந்த அரசாங்கம் ஒப்புதல் அளித்தது என்று த சண்டே லீடரில் கடந்த வாரம் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. எமில் காந்தனுக்கு பணம் கொடுத்ததாக முன்னாள் வானூர்தி நிலைய தலைவர் டிரான் அலெஸ் மற்றும் \"மௌபிம\" நாளிதழின் நிதித்துறை இயக்குநர் துசந்த பஸ்நாயக்க ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாத தடுப்பு திணைக்களம் மற்றும் குற்றத் தடுப்பு திணைக்களத்தினரின் விசாரணைகளில் எமில் காந்தன், தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர் எனக் கூறப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர் என கூறப்பட்ட காந்தனுக்கு பணம் கொடுத்தமை தொடர்பாக பயங்கரவாத தடுப்பு திணைக்களத்தினரால் கடந்த வாரம் டிரான் அலெஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்ய முயன்ற நபராகவும் எமில் காந்தனை பயங்கரவாத தடுப்பு திணைக்களம் அடையாளப்படுத்தியது. இருப்பினும் கடந்த வாரம் த சண்டே லீடருக்கு அளித்த நேர்காணலில் சுனாலி ரட்ணநாயக்க, எமில் காந்தன் என்பவர் டக்ளசுடன் சேர்ந்தியங்கும் நபர்களில் ஒருவர் எனத் தெரிவித்தார். இது தொடர்பில் தேவானந்தா கூறுகையில், \"எமில் காந்தன் என்னுடன்தான் எனது அலுவலகத்தில்தான் இருந்தார். அவர் என் மீது எதுவித தாக்குதல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. அப்படியான நிலையில் எப்படி இப்படியான கதை உருவானது என தெரியவில்லை. என்னை கொலை செய்ய முயற்சித்ததாக அவர் மீது வழக்கு இருப்பதாக கூறப்படுவது உண்மையில்லை. அதனை நான் உறுதி செய்துவிட்டேன். என்னைக் கொலை செய்ய எதுவித முயற்சியும் எமில் காந்தன் மேற்கொள்ளவில்லை. தடுத்து வைக்கப்பட்டிருந்த எமில் காந்தன் விடுவிக்கப்பட்டுவிட்டார்\" என்று கூறினார். டக்ளசின் நேர்காணல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாவுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பில் கருத்து தெரிவிக்க பிரித்தானியா மறுத்துவிட்டது.

[ஞாயிற்றுக்கிழமை, 30 செப்ரெம்பர் 2007]

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துiணை இராணுவக் குழுவைச் சேர்ந்த கருணாவுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பில் கருத்து தெரிவிக்க பிரித்தானியா மறுத்துவிட்டது.

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் பேச்சாளர் ஜோன் சுல்லியிடம் இது தொடர்பிலான கேள்வியை கொழும்பு ஊடகவியலாளர்கள் நேற்று சனிக்கிழமை கேட்டபோது பதில் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

"விசா கோரி விண்ணப்பிக்கும் தனிநபர்கள்" குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் சிறிலங்காவில் உள்ள பிரித்தானியா தூதரகத்தினால் வழங்கப்பட்ட விசாவினூடே பிரித்தானியாவுக்குள் கருணா நுழைந்திருப்பதாக கொழும்பு "ஐலண்ட்" நாளிதழில் லண்டன் செய்தியாளர் சுஜீவ நிவுன்கெல உறுதி செய்துள்ளார்.

"இலங்கையின் கிழக்கு பகுதி நிலைமைகளை கருணா குழு என்றழைக்கப்படுவோர் சீர்குலைத்து வருவதாக" கடந்த 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் சாடியிருந்தார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அண்மையில் பேசிய அந்நாட்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் இலங்கை- பிரித்தானிய உறவுகளுக்குப் பொறுப்பானவருமான கிம் ஹெளல்ஸ், நீதிக்குப் புறம்பான படுகொலைகளைக் கருணா செய்து வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

2007 ஆம் ஆண்டு மே மாதம் பிரித்தானியா நாடாளுமன்றில் பேசிய கிம் ஹெளல்ஸ், தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே வன்முறையில் ஈடுபடவில்லை. கருணா குழுவுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் கூறினார்.

மேலும் "இலங்கையில் நீதிக்குப் புறம்பான படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல், சிறார்களை படையணிகளில் சேர்த்தல் ஆகியவற்றுக்கு கருணா குழுதான் பொறுப்பு" என்றும் "பொதுமக்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் கருணா கைவிட வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

அதே பிரித்தானியாதான் இப்போது அதே கருணாவுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது. இலங்கை இனப்பிரச்சனையில் அனைத்துலக நாடுகள் தொடர்ந்தும் கடைப்பிடிக்கின்ற இரட்டை வேடத்தையே இது வெளிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சந்திரிகா வெளியேற உத்தரவு

[ஞாயிற்றுக்கிழமை, 30 செப்ரெம்பர் 2007]

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவுக்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

மகிந்தவின் செயலாளர் லலித வீரதுங்க இது தொடர்பில் சந்திரிகாவின் செயலாளர் பி.திசநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

"சந்திரிகாவின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அலுவலகத்திலிருந்து அவர் வெளியேறுவார். மகிந்தவின் செயலாளர் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள படி பொருட்களும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும்" என்று சந்திரிகாவின் செயலாளர் பி.திசநாயக்க கூறியுள்ளார்.

சந்திரிகாவுக்கான சிறப்புரிமைகளை இரத்துச் செய்து சிறிலங்கா தலைமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கையை மகிந்த அரசாங்கம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அவுஸ்திரேலிய வழக்கில் செய்மதியூடாக சாட்சியம் அளிகிறது சிறிலங்கா

[ஞாயிற்றுக்கிழமை, 30 செப்ரெம்பர் 2007] அவுஸ்திரேலியாவில் தமிழர் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக கொழும்பில் இரகசிய இடம் ஒன்றில் செய்மதி நிறுவப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விபரம்: அவுஸ்திரேலியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மூவருக்கு எதிரான வழக்கில் சிறிலங்காவின் இராணுவம், சட்டம் மற்றும் காவல்துறையினர் சாட்சியமளிக்க கொழும்பில் இரகசிய இடம் ஒன்றில் செய்மதி இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த வழக்கு விசாரணைகள் தொடங்கின. சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, காவல்துறை மா அதிபர் விக்ரர் விக்டர் பெரேரா, பிரதி சட்ட மா அதிபர் யசந்த கொடேகொட, அட்மிரல் திசர சமரசிங்க உள்ளிட்ட பல்வேறு இராணுவம் மற்றும் காவல்துறையினரும் சட்டத்துறை திணைக்களத்தினரும் இந்த வழக்கில் சாட்சியமளிக்க உள்ளனர். விசாரணையின் போது சத்தியப் பிரமாண சாட்சியத்தை தாக்கல் செய்ய சட்ட மா அதிபர் சி.ஆர்.டி.சில்வா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இச்செய்மதியை பயன்படுத்த உள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு அல்ல- பயங்கரவாத இயக்கமே என்பதற்கான ஆதாரங்களை சாட்சியமளிப்போர் தாக்கல் செய்வர். இச்செய்மதியை தமிழீழ விடுதலைப் புலிகள் சேதப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக அதிபாதுகாப்பாக இது அமைக்கப்பட்டுள்ளது என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தை இராணுவத் தீர்வின் அடிப்படையில் தீர்க்க வேண்டும்: ஐ.தே.க. வலியுறுத்தல்.!

[ஞாயிற்றுக்கிழமை, 30 செப்ரெம்பர் 2007] பயங்கரவாதத்தை இராணுவத் தீர்வின் அடிப்படையிலேயே தீர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ள சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பிரிவினைவாதத்திற்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள பத்து அம்சத் திட்டங்களாக வகுக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரிவினைவாதத்தை நாம் எதிர்க்க வேண்டும். பயங்கரவாதம் இராணுவத் தேவையை உணர்த்துகிறது. பிரிவினைவாத தேவைக்கான காரணிகள் அரசியல் தீர்வை கோருகின்றன . அதேநேரம் பேச்சுவார்த்தையில் முறிவுகளோ அல்லது அரசியல் தீர்வுக்கு முட்டுக்கட்டைகளோ ஏற்படும் பட்சத்தில் அதனை அணுகும் விதத்திலான திட்டம் ஒன்று இருக்க வேண்டும். இது அரசியல் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியிருக்க வேண்டும். சமாதான நடவடிக்கையில் வெற்றியீட்டுவதற்காக நாம் மனப்பூர்வமாக செயற்படுவதுடன் சகல கட்சிகளினதும் ஒத்துழைப்பைப் பெறுவதற்கான முயற்சிகளையும் எடுக்க வேண்டும். அரசியல் தீர்வானது கலவரங்களை தவிர்த்து மனித உரிமை மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்து சமூகத்தவரதும் நியாயபூர்வமான அபிலாசைகளுக்கு பொருந்தக்கூடியதாக அமைய வேண்டும். தமிழ் மக்களின் துயரங்கள், இனச் சுத்திகரிப்பு தொடர்பிலான வடகிழக்கு முஸ்லிம் மக்களின் அச்ச உணர்வுகள், அதிகாரப் பகிர்வு பிரிவினைக்கு இட்டுச் செல்லும் என்ற சிங்கள மக்களது சில பிரிவினரது எண்ணம் போன்றன களையப்பட்டதாகவே அந்த அரசியல் தீர்வானது இருக்க வேண்டும். அத்துடன் அந்த அரசியல் தீர்வு சிங்கள, தமிழ், முஸ்லிம் பறங்கியர் மற்றும் இதர சிறு சமூகத்தவர்கள் ஆகியோரால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருத்தல் வேண்டும். அனைத்துலக சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றதாகவும் அது விளங்க வேண்டும். இலங்கையின் பிரதேச ஒருமைப்பாட்டையும் மக்களின் இறைமையையும் பாதுகாப்பதாகவும் சிறுபான்மையோரின் உரிமைகளைப் பாதுகாப்பதாகவும் அந்த அரசியல் தீர்வானது இருக்க வேண்டும். தற்போதைய அரசியலமைப்பு (13 ஆவது திருத்தம்) மாகாண அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. ஆகவே, எதிர்காலத்தில் அதிகாரப் பரவலாக்கல் என்பது மாகாணங்கள் மட்டத்திலானதா அல்லது பிராந்திய மட்டத்திலானதா என்பதனை நாம் தீர்மானிக்க வேண்டும். அதிகாரப் பரவலாக்கலில் புதிய பகுதிகள் நிர்ணயிக்கப்பட்டால் அது அரசியல், சமூக மற்றும் பொருளாதார அலகுகளின் அடிப்படையில் அமைய வேண்டும். தேசிய அரசுக்கும், பிராந்திய அல்லது மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு நம்பக் கூடியதாக இருக்க வேண்டும். தேசிய அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரம் மத்திய அரசினுடையதாக தக்க வைக்கப்படல் வேண்டும். மற்ற அதிகாரங்கள் இரண்டு மட்டங்களில் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும். அதிகாரங்கள் பிராந்தியம் அல்லது மாகாண மட்டத்தில் பகிரப்படுவது குறித்த அச்ச உணர்வை வடக்கில் வாழும் மக்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். தென்பகுதி மக்கள், மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சி, எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிராந்திய அல்லது மாகாண சபைகளின் அதிகாரத்தை கைப்பற்றலாம் என அபிப்பிராயப்படுகிறார்கள். அதேபோன்று பிராந்திய அல்லது மத்திய பகுதிகளில் ஆட்சியில் உள்ள கட்சி தமது அதிகாரங்களைக் கைப்பற்றலாம் என உள்ளூராட்சி சபைகள் கவலைப்படுகின்றன. ஆகவே, பகிரப்பட்ட அதிகாரத்தை பாதுகாப்பதற்கான முறையொன்று இருத்தல் அவசியம். சட்ட விதிகளைப் பற்றி மட்டுமல்லாமல் நடைமுறைச் சிக்கல்கள் பற்றியும் நாம் எமது அவதானத்தைச் செலுத்த வேண்டும். தேசிய அரசுக்கும் பிராந்திய அல்லது மாகாண நிர்வாகங்களுக்கும் இடையில் மத்தியில் அதிகாரப் பகிர்வின் போது இந்தப் பிரேரணைகள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். இணைத்தலைமை நாடுகளும், இந்தியாவும் போரை முடிவுக்கு கொண்டுவர கோரப்பட வேண்டும். அத்துடன் பேச்சை தொடரவும் உதவ வேண்டும். பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்கு பொருத்தமான சூழ்நிலையை ஏற்படுத்த அது அத்தியாவசியமானது. அத்துடன் மனித உரிமைகளை நிலைநிறுத்த சகல கட்சிகளும் இணங்கி கடத்தல், காணாமற் போதல் தொடர்பிலான விசாரணைகள் நடத்தப்படல் வேண்டும். கடந்த சில வருடங்களில் ஏற்பட்ட அனுபவத்தின் மூலம் வடகிழக்கில் தற்போது நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீளாய்வு செய்ய வேண்டும். போர் நிறுத்த உடன்படிக்கை 2002 ஆம் ஆண்டு செய்யப்பட்ட போது இருந்த சூழ்நிலை இப்போது மிகவும் மாறியுள்ளது. உடன்பாட்டிற்கு அமைய சமாதானப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம் தூதுக்குழுவினரும் பங்குபெற வேண்டும். சமாதான நடவடிக்கைகளை நாம் திட்டமிட வேண்டும். விடுதலைப் புலிகளுடன் மட்டுமின்றி இதர கட்சிகள் மற்றும் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். பேச்சுவார்த்தை நடக்கும் காலத்தில் இந்தியாவுடனும் அனைத்துலக சமூகத்துடனும் நெருங்கிய நட்புறவை நாம் பேணவேண்டும். சகல சமூகத்தவர்களுக்கும் பொருந்தக் கூடிய வகையில் அரசியல் தீர்வு அமைய வேண்டும். அதன்பிறகு நேரடி வாக்கெடுப்பின் மூலம் அந்த தீர்வு மக்களால் ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும். நேரடி வாக்கெடுப்பின் மூலம் அரசியல் தீர்வு ஏற்றுக் கொள்ளப்பட்டால், நாடாளுமன்றத்தின் மூலம் அரசியல் திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்படும். இந்த அரசியல் திருத்தத்தை இரண்டாவது நேரடி வாக்கெடுப்பின் மூலம் மக்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, September 29, 2007

ஆட்சேர்ப்பில் முப்படையினரும் தீவிரம்: உதய நாணயக்கார

[சனிக்கிழமை, 29 செப்ரெம்பர் 2007] சிறிலங்கா இராணுவத்துக்கு ஆட்சேர்க்கும் மும்முரமான பணியில் சிறிலங்காவின் முப்படையினரும் குதித்துள்ளனர் என்று சிறிலங்கா இராணுவத்தின் புதிய பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: அண்மைக்காலமாக நடைபெற்று வரும் தமது இந்த மும்முரமான வேலைத்திட்டத்தினால் கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் சுமார் 24 ஆயிரம் பேர் சிறிலங்கா இராணுவத்தில் புதிதாக இணைந்துள்ளனர். வடக்கு - கிழக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கைகள் எமது இந்த ஆள்சேர்க்கும் பணிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. தெற்கில் இளைஞர்கள் இரானுவத்தில் இணைந்துகொள்ள மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர் என்றார் அவர். சிறிலங்கா இராணுவத்தினரின் தற்போதைய எண்ணிக்கை சுமார் 22 ரெஜிமென்டுகளில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேராகும். இவற்றை, கூட்டுப்படை கட்டளையகத்தின் சுமார் 11 டிவிசன்கள் நிர்வகிக்கின்றன.

தொழில் நுட்பக் கல்லூரி மாணவன் உட்பட இரு இளைஞர்கள் கடத்தப்பட்டார்கள்

[சனிக்கிழமை, 29 செப்ரெம்பர் 2007] சுன்னாம் பகுதியில் நேற்று இரவு வீட்டில் இருந்த இளைஞர் ஓருவர் இனம் தெரியாத ஆயததாரிகளினால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டார். இரவு 9.00 மணியளவில் வீட்டிற்க்கு சென்ற ஆயததாரிகள் வீட்டாரை துப்பாக்கி முனையில் நிறுத்திவிட்டு தொழில் நுட்பக் கல்லூரியில் கல்வி கற்க்கும் மாணவனான ஆனந்தரத்தினம் கஜன் 22 வயது இளைஞரையே கடத்திச் சென்றுள்ளார்கள். சுன்னாகம் ஈ.பிடி.பி முகாமுக்கு முன்னாள் உள்ள ஒழுங்கையில் வசிப்பவரே இவ்வாறு கடத்தப்பட்டவராகும். பெற்றோர்கள் இது சம்பந்தமாக யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறையிட்டுள்ளார்கள். இதேவேளை நேற்ற இரவு 9.30 மணியளவில் வாகனத்தில் சென்றவர்கள் வீட்டிற்க்குள் அத்து மீறிப் பிரவேசித்த ஆயததாரிகள் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதுடன் விட்டில் உள்ளவர்களையும் தாக்கி படுகாயங்களுக்கு உள்ளாக்கிவிட்டுக் சென்றுள்ளார்கள. அளவெட்டி வடக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம் பெற்றதுஇரவு வீட்டிற்க்கு வந்தவாகள் இளைஞரின் பெயரை கூறி அழைத்ததாகவும் வீட்டார் கதவைத் திறந்து கொண்டு சென்ற போது குறிப்பிட்ட இளைஞரை கடத்த முற்பட்டனர். இதனை தடுக்க முயன்ற வேளையில் ஆயுததாரிகளுக்கும் இளைஞனின் பெற்றோர்களுக்கும் இடையே பெரும் இழுபறி நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து தாயும் தகப்பனும் தலையில் தாக்கப்பட்டுள்ளார்கள். இதனைத் தொடாந்து கடத்தியவாகள் துப்பாக்கிப்பிரயோகம் மேற் கொண்டுள்ளார்கள். மயக்கமுற்ற நிலையில் தாயும் காயங்களுடன் தகப்பனும் தெல்லிப்பழை மாவட்ட வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அம்புலன்ஸ் வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் காயங்களுக்க உள்ளாகியவாகள் திரு திருமதி இராசதுரை என்பவர்களாகும் இவாகளின் 23 வயதான மகன் பிரபாகர் இவர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக புலிகளை ஏற்கவே மாட்டோம்! அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு.!!

[சனிக்கிழமை, 29 செப்ரெம்பர் 2007]

தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் புலிகள்தான் என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்த அமைதிப் பேச்சும் புலிகளோடு நாடாளுமன்றத்தில் தமிழ் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்துக் கொண்டே நடைபெறும். இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றது இலங்கை அரசு.

அரசின் இந்த நிலைப்பாட்டை அரசின் பாதுகாப்புத்துறைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல நேற்று வெளியிட்டார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிற்கு தமிழ் தலைவர்களும் தீர்வு யோசனைகளை முன்வைத்திருக்கின்றனர். இதன் மூலம் புலிகளைத் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும், புலிகளுடன் மாத்திரம் பேச்சு நடத்துவது என்பது ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல் என்றும் அவர் மேலும் சொன்னார்.

அமைதிப் பேச்சின் போது ஆனந்தசங்கரி போன்றோரின் யோசனைகள் கூட உள்வாங்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:கடந்த ஒன்றரை வருடகாலமாக புலிகளுடன் பேச்சு நடத்த அரசு மேற்கொண்டு வந்த முயற்சிகள் பற்றியும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை பற்றியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா. பொதுச்சபையின் 62ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் விளக்கிக் கூறினார்.

இவை தொடர்பான பல முக்கியமான விடயங்களை அவர் அவ்வுரையில் குறிப்பிட்டுள்ளார்.பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டுமென்பது இந்த உலகமே ஏற்றுக்கொண்ட ஒன்று. இலங்கையிலும் அதுதான் நடைபெறுகிறது. புலிகளின் பயங்கரவாதம் தோற்கடிக்கப்படும்போது, அரசுமீது புலிகள் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர். பயங்கரவாத முறியடிப்பு நடவடிக்கையின்போது மனித உரிமை தொடர்பில் அரசு மிகவும் விழிப்பாகவுள்ளது.

பயங்கரவாதத்தை முறியடிப்புச் செயற்பாட்டை மனித உரிமை மீறல் செயற்பாட்டாகக் காட்ட புலிகள் முயலுகின்றனர். இந்த நாட்டு மக்கள் ஜனநாயகரீதியான தேர்தலின் ஊடாக மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்தமை இந்நாட்டின் இறைமையையும் இந்நாட்டு மக்களின் உயிர்களையும் காப்பாற்றத்தான். இந்நாட்டு மக்கள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் போது அவர்களைக் காப்பாற்றவேண்டிய கடமை ஜனாதிபதிக்குண்டு. அதை அவர் சரிவர நிறைவேற்றி வருகின்றார்.

இப்போது தொடர்கின்ற இந்த இராணுவ நடவடிக்கை இப்பிரச்சினையின் இறுதித் தீர்வாக அமையாது. இந்நாட்டு மக்களை அடிமைப்படுத்தாத வகையில் நாட்டைக் காட்டிக் கொடுக்காத வகையில் நீதியான சமாதானம் ஒன்று எம்மால் முன்வைக்கப்படும்.

அரசியல் தீர்வே இறுதித் தீர்வாக அமையும்
அமைதிப் பேச்சின் ஊடாக எட்டப்படும் அரசியல் தீர்வே நிச்சயம் இறுதித் தீர்வாக அமையும். புலிகளைத் தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு அவர்களுடன் மாத்திரம்தான் பேச்சு நடத்தவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசு இல்லை. தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகள் தமிழர்களின் வாக்குகளால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டவர்கள் தான்.

அமைதிப் பேச்சின்போது தமிழ் முஸ்லிம் மக்களை நாடாளுமன்றில் பிரதிநிதித்துவம் செய்யும் ஏனைய அரசியல் கட்சிகளும் அப்பேச்சில் கலந்துகொள்ளச் செய்யப்படும்.

தமிழர்களின் அரசியல் தலைவர்கள் ஏற்கனவே சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு தமது அரசியல் தீர்வு யோசனைகளைச் சமர்ப்பித்துள்ளனர். இதன் மூலம் புலிகள் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் அல்லர் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

Thursday, September 27, 2007

இடம்பெயர்ந்தோருக்கு உதவச் சென்ற கத்தோலிக்க மதகுரு படுகொலை: புலிகள் கடும் கண்டனம்

[வியாழக்கிழமை, 27 செப்ரெம்பர் 2007]

மன்னாரில் இடம்பெயர்ந்த மக்களுக்காக உதவச் செல்லும் வழியில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் திட்டமிட்ட கிளைமோர் தாக்குதலினால் கத்தோலிக்க மதகுருவான அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளார் படுகொலை செய்யப்பட்டமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

அனைத்துலக கத்தோலிக்க அகதிகள் சபையைச் சேர்ந்த அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளார் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் மீது திட்டமிட்ட வகையில் கிளைமோர் தாக்குதல் நடத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளமையானது வன்மையாகன கண்டனத்துக்குரியது.

தமிழர் தாயகத்தில் மன்னார் மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக கத்தோலிக்க அருட்தந்தை பயணித்துக் கொண்டிருந்தார். அகதிகள் சபையின் இலட்சினையுடன் சென்ற அவரது வாகனம் குறிவைக்கப்பட்டுள்ளது.

அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்தோரின் உரிமைகளைப் பாதுகாப்பதனையும் அவர்களுக்கு சேவையாற்றுதலையும் இலக்காகக் கொண்டு அகதிகள் சபை செயற்பட்டு வருகிறது.

சிறிலங்கா இராணுவத்தினரின் அண்மைய ஆர்ட்டிலறித் தாக்குதல்களால் 10 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையத்தின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னாரில் இடம்பெயர்ந்திருந்த அந்த மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காக பயணித்துக் கொண்டிருந்த போதுதான் திட்டமிட்ட வகையில் அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளார் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் "இராணுவ" உத்தியின் குறியீடாக அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளாரின் படுகொலை உள்ளது. திட்டமிட்ட வகையிலான எறிகணைத் தாக்குதல்களை நடத்தி மக்களை இடம்பெயரச் செய்தலும் அவ்வாறாக இடம்பெயர்ந்து செல்லும் மக்களுக்கு உதவ விரைகின்ற மனிதாபிமானப் பணியாளர்களை படுகொலை செய்வதும்தான் சிறிலங்கா அரசாங்கத்தின் "இராணுவ" உத்தியாகும். இந்த இராணுவ உத்தியை "இனப்படுகொலை" என்றுதான் கூற இயலும்.

மதகுருவுரும், மனிதாபிமானப் பணியாளருமான அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளாரின் மரணமானது எம்மை ஆழ்ந்த அதிர்ச்சிக்கும், கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த படு பயங்கரமான நடவடிக்கையை நாம் கண்டிக்கிறோம்.

இப்படுகொலையையும் மனிதாபிமான பணியாளர்களுக்கு எதிரான சிறிலங்காவின் பிற கொடூரமான செயற்பாடுகளையும் அனைத்துலகம் வன்மையாகக் கண்டனம் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் - கேணல் சூசை

[வியாழக்கிழமை, 27 செப்ரெம்பர் 2007]

எங்களுடைய இனத்தின் விடுதலைக்காக, இனத்தினுடைய துபீட்சத்திற்காக, இந்த 30 ஆண்டு கால போராட்ட வரலாற்றில் பல வெற்றிகளையும், பல திருப்பு முனைகளையும் ஏற்படுத்தியவர் எங்களுடைய தலைவர் என கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை புதுக்குடியிருப்பு கோட்டத்தில் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கள் நினைவு வணங்க நிகழ்வு மற்றும் '' சிறகு விரித்த புலிகள் '' இறுவட்டு வெளியீட்டு நிகழ்விலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய பலத்தின் ஊடாகத்தான் எங்களுடைய இனத்தை தலைநிமிர வைத்திருக்க முடியும். 1995ம் ஆண்டு 6 இலட்சம் மக்கள் யாழ்ப்பாணத்திருந்து ஒரேயடியாக வெளியேற்றப்பட்ட போது உலகம் எந்தவொரு கருத்துக்களையும் சொல்லவில்லை.
நாங்கள் யாழ்ப்பாணத்தை நோக்கி 2000ம் ஆண்டு போனபோது இந்த உலகம் எல்லா இடங்களிலிருந்தும் வாரி இறக்கிக் கொடுத்தது.

அந்த மமதையில் மீண்டும் ஒரு இராணுவ நடவடிக்கையை சிறீலங்கா அரசாங்கம் முன்னெடுத்த போது முதுகெலும்பு உடைக்கப்பட்டது. அவர்களுடையை முதுகெலும்பை ஒட்ட வைப்பதற்காகத்தான் இவர்கள் இந்தப் பேச்சுக்களுக்கு ஊடாக சர்வதேசத் தலையீடு, பேச்சுவார்த்தை என்ற வலைக்குள் இழுத்துச் சென்றார்கள்.

நாங்கள் ஒன்றை மட்டும் இறுக்கமாகவும் தெளிவாகவும் சொல்லுகிறோம். நாங்கள் எந்தக் காலத்திலும் இராணுவ ரீதியில் எங்களுடைய மண்ணை அடிபணிய வைக்கிறதோ? அல்லது தோல்வியுனுடைய விழிம்புக்கு இட்டுச் செல்வதோ?. ஆயுத முனையில் இராணுவ ரீதியாக வென்றுகொண்டு எங்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காணலாம், பேச்சு நடத்தலாம் என்ற கருத்தை முன்வைப்பார்கள் என்றால்? அதை ஒரு காலமும் விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

திலீபனுக்கும் எங்களுடைய தளபதிகளுக்கும் தலைவர் ஊட்டிய ஓர்மம் அதுதான் நீர் அருந்தாமல் கூட 12 நாட்கள் நோன்பிருந்து தன்னுடைய உடலைத் தீயாக திலீபன் உருக்கியளித்தான்.

எங்களுடைய இனத்தின் விடுதலைக்காக இனத்தினுடைய, துபீட்சத்திற்காக, தலைவர் இந்த 30 ஆண்டுகால போராட்ட வரலாற்றில் பல வெற்றிகளையும், பல திருப்பு முனைகளையும் ஏற்படுத்தியவர்.

1999ம் ஆண்டு காலப் பகுதியில் புதுக்குடியிருப்பில் அருகில் இருக்கிற ஒட்டிசுட்டான் பகுதியில் படைகள் வந்து நின்ற போது, எல்லாரிடமும் ஒரு அச்சம் இருந்தது.

புதுக்குடியிருப்பா? அல்லது வட்டக்கச்சியா? அல்லது ஏ 9 நெடுஞ்சாலையால் இடங்களைப் பிடித்துக்கொண்டு போனால் எங்களுடைய நிலைமை என்ன? அந்த நிலைமையைத் தலை கீழாக மாற்றியமைத்தவர் எங்களுடைய தலைவர்.

தலைவருடைய கரங்களைப் வலுப்படுத்தி, இந்த விடுதலைப் போராட்டத்தை வீச்சாக்க வேண்டியது எல்லோருடைய கடமையும். எங்களுடைய தலைவர் தீர்க்க தரிசனமும், மதிநுட்பமும் நிறைந்த ஒரு தலைவர்.

அவருடைய நாட்களினுள் எங்களுடைய விடுதலைப் போராட்டத்தை எங்களுடைய விடுதலையை நாங்கள் வென்றெடுக்க வேண்டும். அதற்காகத்தான் வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்கு என்ற கருத்தோடு படை திரட்டல் நடவடிக்கையை மும்முரமாக செய்து கொண்டிருக்கிறோம்.

தீர்க்க தரிசம் மதிநுட்பம் என்பதற்கு ஒரு சான்று 1988ம் ஆண்டு தலைவரைச் சந்திக்கச் சென்ற போது, மணலாற்றுக் காட்டில் ''ஒப்பிரேச் செக் மேட்'' நடவடிக்கை நடந்துகொண்டிருந்தது.

அந்த நேரத்தில் கையில் குண்டு அடிபட்டு தலைவருடை இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டேன். தலைவர் இருந்த இடத்திற்கு பக்கத்திலேயே தலைவருக்கு அருகாமையில் இருந்து கொண்டிருந்து தலைவர் சிகிற்சைக்காக அனுப்பி வைத்தவர்.

ஆனால் அந்த சிகிற்சையை அண்டை நாட்டில தான் பெற்றுக்கொண்டோம். ஆனால் இன்றைக்கு அதைவிட மிக மோசமான நிலையில் கடலில் விபத்தைச் சந்தித்த போதும் கூட, குறிப்பிட்ட நாட்களில் உங்களிடம் கருத்துக்களைச் சொல்லக்கூடிய அளவுக்கு வந்திருக்கிறேன் என்று சொன்னால் தலைவர் தீர்க்க தரிசனத்தோடு உருவாக்கிய மருத்துவத்துறை தான்.

1988ம் ஆண்டு ஒரே ஒரு மருத்துவ துணையோடு மணலாற்றுக் காட்டுக்குள்ளே நிலை கொண்டிருந்த தலைவருடைய மையப் பணிமனை, இன்றைக்கு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எவ்வளவு விபத்துக்களை, எவ்வளவு போராளிகளின் விழுப் புண்களை அடைந்தாலும் அவர்களை களமுனையில் அனுப்பக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்தது என்றால் அது தலைவரின் தீர்க்க தரிசனத்தால் உருவாக்கப்பட்ட மருத்துவத்துறைதான்.

சிறீலங்கா அரசு விசமத்தனமான பிரச்சாரத்தை இன்று நேற்று மேற்கொள்ளவில்லை. அது காலம் காலமாக உளவியல் ரீதியாக சிங்கள தேசத்தையும் உலகத்தையும் ஏதோ ஒரு புரட்டுப் புரட்டி, அப்படியாவது ஆத்ம திருத்தியை காணலாம் எனப் பிரச்சாரத்தை செய்துவருகின்றது.

சிறீலங்கா அரசாங்கத்தின் பிரச்சாரங்கள் எல்லாவற்றுக்கும் நாங்கள் பதில் அளித்துக்கொண்டு இருப்போம் என்றால், நாளாந்தம் ஒரு மறுதலிப்பை விடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.

உங்களைவிட புலம்பெயர்ந்து வாழுகின்ற எங்களுடைய உறவுகள் தான் குழம்பியிருக்கிறார்கள். வீதியில் எங்களுடைய வாகனம் 100 மீற்றர் வேகத்தில் போகும் போது ''கியரை'' மாற்றாமல் வெட்டினால் வாகனம் பிரட்டும் அதே மாதிரித்தான் கடலிலும் அது பொருந்தும்.

வேகப் படகுகள் பரீட்சார்த்தமாக ஓடிப்பார்த்த போது, வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் படகு ஒன்று வந்து மோதியது. என்னுடைய மகன் இறந்தது உண்மை. அவரோடு கூட நின்ற என்றுடைய போராளி ஒருவர் இறந்தது உண்மை. இரண்டு மூன்று போராளிகள் விழுப்புண் அடைந்தது உண்மை இதுதான் நடந்தது.

ஆனால் ஒன்றை மட்டும் மிகத் தெளிவாகவும் இறுக்கமாகவும் சொல்லுகிறோம். தலைவருடை நாட்களினுள் எங்களுடைய இனத்தினுடைய விடுதலையை பேச்சு நடத்தித் பெறமுடியாது. இராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும். அதற்காகத்தான் வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்கு கண்டிப்பாக உங்களுடைய பிள்ளைகளை பங்களிப்பு மிக விரைவாக இராணுவ ரீதியான வெற்றிகளைத் தேடித்தரும் என கேணல் சூசை தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

சொல்ஹெய்முடன் மகிந்த ஆலோசனை

[வியாழக்கிழமை, 27 செப்ரெம்பர் 2007] அமெரிக்க தலைநகர் நியூயோர்க்கில் நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேசியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 62 ஆவது பொதுக்கூட்டத்தொடரில் கலந்துகொள்ளச் சென்ற இருவரும், இலங்கை இனப்பிரச்சினை குறித்து சுமார் ஒரு மணி நேரம் விவாதித்தனர் என்று கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன. சிறிலங்கா அரசாங்கத்தின் கிழக்கு இராணுவ நடவடிக்கை குறித்தும் வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்கள் குறித்தும் இந்த சந்திப்பில் எரிக் சொல்ஹெய்முக்கு மகிந்த விளக்கிக் கூறியதாகவும், சமாதான முன்னெடுப்புக்கள் குறித்து இருவரும் ஆராய்ந்ததாகவும் சிறிலங்கா அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழில் சிறிலங்கா இராணுவத்தினரால் இன்றும் இருவர் சுட்டுப் படுகொலை- 30 பேர் காயம்

[வியாழக்கிழமை, 27 செப்ரெம்பர் 2007] யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொதுச் சந்தையின் வெளிப்புறமாக வாகனத்தரிப்பிடம் அமைந்திருக்கும் பகுதியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 9:40 மணியளவில் கிளைமோர் தாக்குதலில் சிக்கி இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டனர். இராணுவத்தினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இரண்டு பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 13 பேர் படுகாயங்களும், 17 பேர் சிறுகாயங்களும் அடைந்தனர். படுகொலை செய்யப்பட்டோரின் உடல்களை சுன்னாகம் மருத்துவமனைக்கு பொதுமக்கள் கொண்டு சென்றனர். காயமடைந்தோர் தெல்லிப்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலதிக சிகிச்சைக்காக பலர் யாழ். போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்த சிறிலங்கா காவல்துறையினர் பலாலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். யாழ்ப்பாணம் சித்தங்கேணியிலும் கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த கிளைமோர் தாக்குதலை அடுத்து சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் இசை ஆசிரியை ஒருவரும், தொழில்நுட்ப பணியாளர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, September 26, 2007

லெப்.கேணல் தீலீபன் மற்றும் கேணல் சங்கரின் இறுதி நாள் வணக்க நிகழ்வில் தேசியத் தலைவர் அகவணக்கம்

[புதன்கிழமை, 26 செப்ரெம்பர் 2007]

வன்னியில் கேணல் சங்கர் மற்றும் லெப். கேணல் திலீபன் ஆகியோருக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் அகவணக்கம் செலுத்தினார்.

வன்னியில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் இன்று புதன்கிழமை (26.09.07) முற்பகல் 10.48 மணிக்கு நடைபெற்ற கேணல் சங்கர் மற்றும் லெப். கேணல் திலீபன் நினைவு நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பங்கேற்றார்.

இரு மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் சுடரேற்றி, மலர்மாலையினை அணிவித்து அகவணக்கம் செலுத்தினார்.



ஈகச்சுடர் லெப். கேணல் திலீபன், மூத்த தளபதி கேணல் சங்கர் ஆகிய மாவீரர்களுக்கு தமிழீழத் தாயகம் இன்று முற்பகல் 10.48 மணிக்கு அகவணக்கம் செலுத்தியது.

அம் மாவீரர்கள் வீரச்சாவைத் தழுவிய 10.48 மணிக்கு தமிழீழ மக்களால் மணி ஒலி எழுப்பப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் இந்த வணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.

சிறிலங்காவின் பல வெளிநாட்டுத் தூதுவர்கள் மாற்றம்.!

[புதன்கிழமை, 26 செப்ரெம்பர் 2007] சிறிலங்காவின் பல வெளிநாட்டுத் தூதுவர்களை மாற்ற அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு முடிவு செய்துள்ளது. பிரசெல்சிற்கான தூதுவர் கே.ஜே.வீரசிங்க, ஜேர்மனிக்கான தூதுவர் ஜயந்த பலிபனே மற்றும் பிரான்சுக்கான தூதர் சி.வகிஸ்வர ஆகியோரை நாடு திரும்ப சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பொதுத் தொடர்புகள் இயக்குநராகப் பணிபுரிந்து வரும் ரவிநாத் அரியசிங்கவை பிரசெல்சிற்கான தூதுவராகவும், ஜேர்மனிக்கான தூதுவராக வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் டி.பி.மடுவெகெதரவை நியமிக்கவும் மகிந்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மலேசியாவுக்கான தூதுவராக ஜாதிக ஹெல உறுமயவின் பிரபல சட்டவாளர் மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனத் தலைவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார். மேலும் சுவீடனின் தூதுவரும் மாற்றப்பட உள்ளதாக தெரிகிறது.

கருணா பிரித்தானியாவிற்கு தப்பியோட்டம்: கொழும்பு ஊடகம்.!

[புதன்கிழமை, 26 செப்ரெம்பர் 2007] சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் தீவிரமடைந்து வரும் மோதல்களைத் தொடர்ந்து அக்குழுவின் தலைவரான கருணா, நாட்டை விட்டு பிரித்தானியாவுக்கு தப்பியோடி விட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இன்று புதன்கிழமை (26.09.07) வெளிவந்த ஆங்கில நாளேடான டெய்லி மிரரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொழும்பில் உள்ள பிரித்தானியா தூதரகத்தில் நுழைவு அனுமதியைப் பெற்ற கருணா, கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார். பிரித்தானியாவில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வசித்துவரும் அவரது குடும்பத்துடன் அவர் தற்போது இணைந்துள்ளார். நிதி முறைகேடுகள் தொடர்பாக கருணா குழுவிற்குள் உள்ளக மோதல்கள் வெடித்திருந்தன. இதனைத் தொடர்ந்து பிள்ளையான் தனது குழுவினருடன் திருகோணமலைக்கு தப்பி ஒடியிருந்தார். எனினும் இரு தரப்பும் மறுதரப்பு உறுப்பினர்களை மாறி, மாறி படுகொலை செய்து வருகின்றன. பிள்ளையான அணியைச் சேர்ந்த சிலர் மட்டக்களப்பிற்குள் ஊடுருவியுள்ளதக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே சிறிலங்கா இராணுவத்தின் மற்றுமொரு துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி. குழுவின் மீது கருணா குழு தாக்குதல்களை தீவிரப்படுத்தியதனைத் தொடர்ந்து கருணா குழு மீது அரசின் துணையுடன் ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா அழுத்தங்களை பிரயோகித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்தை ஒத்திவைக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு.!!

[புதன்கிழமை, 26 செப்ரெம்பர் 2007] சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் மிகவும் ஆபத்தான கட்டத்தினை அடைந்துள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்து வருகின்ற போதும், சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்தை ஒத்திவைக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத அந்த இராஜதந்திரி மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானத்தை ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா.வின் மனித உரிமை சபையிலும், பிரசெல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திலும் கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், எதிர்வரும் மாதம் சிறிலங்காவிற்கு செல்லவுள்ள ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பின் ஆணையாளர் லூய்ஸ் ஆர்பரின் பயணத்தின் பின்னர் அதனை நடைமுறை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை நாடான போத்துக்கல் தீர்மானித்துள்ளது. ஆர்பரின் பயணத்தில் ஏற்படும் விளைவுகள் வரையிலும் காத்திருப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த இரு வருடங்களில் சிறிலங்கா அரசின் அழுத்தங்கள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவிற்கு எதிராக கொண்டுவர தீர்மானிக்கப்பட்ட தீர்மானத்தை மூன்று தடவைகள் ஒத்திவைத்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஆர்பரின் சிறிலங்கா பயணத்தைத் தொடர்ந்து ஒரு சிறப்புக் கூட்டத்தை கூட்டவேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதியான பீற்றர் ஸ்பிலின்ரர் தெரிவித்துள்ளார்.

Tuesday, September 25, 2007

தமிழ் மக்களின் இறைமையை ஐ.நா. அங்கீகரிக்க தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள்

[செவ்வாய்க்கிழமை, 25 செப்ரெம்பர் 2007]

தமிழ் மக்களினது இறைமையை அங்கீகரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் 62 ஆம் ஆண்டு பொதுச் சபைக் கூட்டத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையினரால் ஐக்கிய நாடுகள் சபைக்கு இது தொடர்பிலான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கிழக்குத் தீமோர் மற்றும் கொசோவோ மக்களுக்கு வழங்கப்பட்டதனைப் போல தமது அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கான பொருத்தமான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் வலியுறுத்தியிருக்கின்றனர்.

நேற்று திங்கட்கிழமை (24.09.07) அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில், சிறிலங்கா அரசாங்கம் தன்னுடைய இராணுவ நடவடிக்கைகளை, இனச் சுத்திகரிப்பை, மோசமான மனித உரிமை மீறல்களை நிறுத்தி, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரச்சினைக்குத் இறுதித் தீர்வைக் காண்பதற்கு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தை இந்த வழியில் கொண்டு வருவதற்கான அழுத்தத்தை அனைத்துலக சமூகம் கொடுக்க வேண்டும் எனவும் தமிழீழ விடுதலைப் புலிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள், அனைத்துலக சமூகத்தின் முன்பாக அவர்கள் மேற்கொள்ளும் பொய்ப்பிரச்சாரங்கள், போர் நிறுத்த உடன்படிக்கையைப் பலவீனப்படுத்தும் வகையில் அரசு திட்டமிட்ட முறையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் தமிழ் மக்களுடைய அபிலாசைகள் தொடர்பாகவுவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் விபரிக்கப்பட்டுள்ளது.

அனைத்துலகத்தின் முன் வலிய அம்பலப்படும் சிறிலங்கா

[செவ்வாய்க்கிழமை, 25 செப்ரெம்பர் 2007] சுவிஸ் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 6 ஆவது கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஐ.நா. உறுப்பு நாடுகளால் பாரிய அழுத்தங்களுக்கு சிறிலங்கா உள்ளாக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உள்ள சிறிலங்காவின் பிரதிநிதி, தனியான சந்திப்புக்களையும் அரங்கக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார். ஐ.நா. உறுப்பு நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை அவர் தனியே சந்தித்து வருகிறார். இருப்பினும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் பல்வேறு தரப்பினரது அழுத்தங்களினால் இப்போது ஏதேனும் ஒரு அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பு நடவடிக்கையை இலங்கையில் ஏற்படுத்துவது குறித்து வெளிப்படையான விவாதம் நடைபெற்று வருகிறது. சிறிலங்காவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2 பொதுக்கூட்டங்கள், இத்தகைய விவாதங்களுடன் முடிவடைந்துள்ளது. சிறிலங்காவின் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையப் பிரதிநிதி தயான் ஜயதிலக்க தலைமையில் நேற்று திங்கட்கிழமை 2 ஆவது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறிலங்காத் தரப்பில் அமைச்சர் ஜி.எல். பீரிஸ், சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க, சிறிலங்கா சட்ட மா அதிபர் திணைக்களத்தின் யசந்த கொடேகொட உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை பரிந்துரை குறித்து ஜி.எல்.பீரிசுக்கும் பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் செயலாளர் கிருபாகரனுக்கும் இடையே கடும் விவாதம் நடைபெற்றது. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக சித்தரித்து கருத்துக்கள் வெளியிடப்பட்டது குறித்து பேசிய கிருபாகரன், பயங்கரவாத இயக்கமாக விடுதலைப் புலிகளை கருதியிருந்தால், ஏன் அமெரிக்காவின் கொண்டலீசா றைசும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைத் தலைமை நாடுகளும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர் என்று கேள்வி எழுப்பினார். அப்போது சிறிலங்கா தரப்பு மௌனமாகி விட்டது. நன்றி:புதினம்

10 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள்

[செவ்வாய்க்கிழமை, 25 செப்ரெம்பர் 2007] யாழ்ப்பாணத்தின் தென்பகுதியில் உள்ள கிளாலி மற்றும் மன்னார் கட்டுக்கரைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த 10 போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். மன்னார் கட்டுக்கரை மன்னார் கட்டுக்கரைப் பகுதியில் நேற்று சிறிலங்கா இராணுவத்தினருடன் நடைபெற்ற நேரடி மோதலின் போது 7 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். 1. கப்டன் இசையறிஞன் என்ற ஆனந்தராசா கன்சிலீன் (சொந்த முகவரி: வவுனியா மாவட்டம், தற்காலிக முகவரி: ராதிகா புவனேஸ்வரன், திருவையாறு, கிளிநொச்சி) 2. கப்டன் நித்தியராஜ் என்ற கோபாலகிருஸ்ணன் பிரதீபன் (மட்டக்களப்பு மாவட்டம்) 3. லெப். அருள்மலர் என்ற சுப்பிரமணியம் சுமித்திரா (இலக்கம்-68, சிவபுரம் வவுனிக்குளம்) 4. 2 ஆம் லெப். அருள்மங்கை அல்லது குயிலினி என்ற மெய்யழகன் பபிதா (மூன்றாம் வட்டாரம், முள்ளியவளை) 5. வீரவேங்கை சத்தியா அல்லது கலையருவி என்ற சிவகுமார் சுபாஞ்சலி (சொந்த முகவரி: இலக்கம்-08, கனகாம்பிகைக்குளம் கிளிநொச்சி, தற்காலிக முகவரி: மூன்றாம் பகுதி, திருவையாறு, கிளிநொச்சி) 6. வீரவேங்கை எழிலரசி என்ற பத்மநாதன் கோகிலா (லாலா குடியிருப்பு, முழங்காவில்) 7. வீரவேங்கை அருளினி என்ற சற்குணராசா குணராஜேஸ்வரி (சொந்த முகவரி: யாழ். மாவட்டம், தற்காலிக முகவரி: கிராஞ்சி செல்வபுரம், பூநகரி) ஆகிய போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். கிளாலி யாழ்ப்பாணத்தின் தென்பகுதியில் உள்ள கிளாலிப் பகுதியில் நேற்று சிறிலங்கா இராணுவத்தினருடன் நடைபெற்ற நேரடி மோதலின் போது போராளிகள் இருவர் வீரச்சாவடைந்துள்ளனர். 1. லெப். பிரதீபன் என்ற அருணாச்சலம் றோஜன் (சொந்த முகவரி: வவுனியா மாவட்டம், தற்காலிக முகவரி: கே.குணா, புளியங்குளம், தடைமுகாம் பணியாளர், வவுனியா) 2. 2 ஆம் லெப். அமுதன் அல்லது சோழன் என்ற சண்முகராசா யோகராசா (சொந்த முகவரி: யாழ். மாவட்டம், மற்றொரு முகவரி: ஆழ்வாப்பிள்ளை முதலாம் வீதி, செம்மலை, அளம்பில்) ஆகிய போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். மன்னார் கட்டுக்கரைப் பகுதியில் நேற்று சிறிலங்க இராணுவத்தினருடன் நடைபெற்ற பிறிதொரு மோதலில் போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். கப்டன் நிலமகள் என்றழைக்கப்படும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நித்தியானந்தவடிவேல் அலைமகள் என்ற போராளி வீரச்சாவடைந்துள்ளார். இம் மாவீரர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றனர்.

கஞ்சிகுடிச்சாற்றுப் பகுதியில் எறிகணைத் தாக்குதல்கள்

[செவ்வாய்க்கிழமை, 25 செப்ரெம்பர் 2007] அம்பாறை கஞ்சிகுடிச்சாற்றுப் பகுதியில் முகாம் அமைத்த சிறப்பு அதிரடிப்படையினர் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி எறிகணைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் 30 நிமிடங்கள் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளும் மோட்டார் எறிகனைத் தாக்குலை நடத்தினர். இதில் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளிவரவில்லை.

எரிக் சொல்ஹெய்ம்- மகிந்த நாளை சந்திப்பு?

[செவ்வாய்க்கிழமை, 25 செப்ரெம்பர் 2007] ஐக்கிய நாடுகள் சபையின் 62 ஆம் ஆண்டு கூட்டத்துக்கு நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நாளை புதன்கிழமை நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் இலங்கைக்கான சிறப்புத்தூதுவர் ஹன்சன் பெளயர் ஆகியோரை சந்தித்துப் பேசக்கூடும் என்று நோர்வே தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. சிறிலங்கா நேரப்படி இன்று திங்கட்கிழமை இரவு ஐ.நா. பொதுச்சபையில் மகிந்த ராஜபக்ச உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து நாளை இந்த சந்திப்பு நடைபெறலாம் எனத் தெரிகிறது.

மன்னாரில் கடும் எறிகணைத் தாக்குதல்: பொதுமக்கள் படுகாயம்- இடம்பெயர்வு.!!

[செவ்வாய்க்கிழமை, 25 செப்ரெம்பர் 2007] மன்னாரில் தமிழீழ புலிகளின் நிர்வாகப் பகுதிகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் இன்றும் மேற்கொண்ட கடும் எறிகணை தாக்குதலில் பொதுமக்கள் பலர் படுகாயமடைந்தனர். கிபிர் வானூர்திகளும் இன்று தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளான மாந்தை, பள்ளமடு நோக்கி இத்தாக்குதல் நடத்தப்பட்டது. பள்ளமடுவில், சிறிலங்கா இராணுவத்தினரின் எறிகணைகள் கூடுதலாக வீழ்ந்து வெடித்துள்ளன. அப்பகுதிகளில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்ற போதும் அதனை உறுதிசெய்யமுடியவில்லை. காயமடைந்தவர்களை உயிலங்குளம் சோதனைச் சோதனைச் சாவடியூடாக கொண்டுவரும் முயற்சி பயனளிக்காத நிலையில் ஓமந்தையூடாக காயமடைந்தவர்களை கொண்டுவரும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக மன்னார் அரச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. சிறிலங்கா இராணுவத்தினரின் கடும் எறிகணைத் தாக்குலால் பள்ளமடுவிற்கு இடம்பெயர்ந்திருந்த மக்களும், பள்ளமடுவில் நிரந்தரமாக இருந்த மக்களும் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர்.

Monday, September 24, 2007

மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரின் பாரிய முன்நகர்வு முறியடிப்பு.!

[திங்கட்கிழமை, 24 செப்ரெம்பர் 2007] மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினர் இன்று மேற்கொண்ட பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் "புதினம்" செய்தியாளரிடம் இளந்திரையன் கூறியதாவது: மன்னார் - வவுனியா சாலையில் உள்ள கட்டுக்கரைக்குளம் அடைக்கலமோட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் பாரிய அளவில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர். பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலெறி எறிகணைகள், மோட்டார் எறிகணைகள் என்று பலமான சூட்டாதரவுடன் பெரும் எண்ணிக்கையிலான சிறிலங்கா இராணுவத்தினர் அடைக்கலமோட்டைப்பகுதி வழியாக முன்னகர்வை மேற்கொண்டனர். இம் முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் முறியடிப்பு அணிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தி சிறிலங்கா இராணுவத்தினருக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தினர். பெரும் இழப்புக்களுடன் தமது பழைய நிலைகளுக்கு சிறிலங்கா இராணுவத்தினர் பின்வாங்கிச் சென்றனர். சிறிலங்கா இராணுவத்தினரின் இம் முன்நகர்வு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு முறியடிக்கப்பட்டது. இந்த எதிர்ச் சமரில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த சிறிலங்கா இராணுவத்தினர், பின்தளங்களிலிருந்து சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்திகள் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். இதனிடையே மன்னார் உயிலங்குளம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் நேற்று நடைபெற்ற நேரடி மோதலின் போது லெப். கேணல் குயில் என்று அழைக்கப்படும் வத்திராயன் வடக்கு தாளையடியை சொந்த முகவரியாகவும், சிவக்குமார் அல்லது கனிகடை சாந்தி குடியிருப்பு கல்லாறு பிரமந்தனாற்றை வேறு முகவரியாகவும் கொண்ட தெய்வேந்திரம் லதா என்ற போராளியே வீரச்சாவடைந்துள்ளார். நன்றி:புதினம்

கருணா குழுவை "அரசியல் கட்சியாக" மாற்றிய பாதுகாப்பு அமைச்சு.!

[திங்கட்கிழமை, 24 செப்ரெம்பர் 2007] சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு "ஒரு அரசியல் கட்சியாக" "மாற்றம்" செய்துள்ளது. கிழக்கில் ஆயுதம் தாங்கிய நிலையில்தான் நாங்கள் நிற்போம் என்று கருணா குழு பகிரங்கமாக அறிவித்து வருகிறது. கருணா குழுவினரின் ஆயுதங்களைக் களைய வேண்டும் என்று அனைத்துலகமும் இதர துணை இராணுவக் குழுக்களும் வலியுறுத்தி வருகின்றன. கருணா குழுவும் இரண்டாகப் பிளவுபட்டு தொடர்ச்சியான ஆயுத மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். துணை இராணுவக் குழுக்களான ஈ.பி.டி.பி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எஃப் (பத்மநாபா அணி) ஆகியவற்றுடன் கருணா குழுவினர் நேரடி மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் ஈ.பி.டி.பி.யைச் சேர்ந்த ஒருவரை கருணா குழு படுகொலை செய்தது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை கருணா குழுவைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். கருணா குழுவைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டது குறித்து செய்தி வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம், "தமிழ் அரசியல் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள்" என்று குறிப்பிட்டுள்ளது. கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக வெளியேற்றிவிட்டோம் என்று கூறிவரும் அதே சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுதான் இப்படுகொலைகளுக்கு விடுதலைப் புலிகளே காரணம் என்று கூறி துணை இராணுவக் குழுக்களிடையேயான உள்மோதல்களை மூடி மறைக்கப் பார்க்கிறது. நன்றி:புதினம்

கிளாலி முன்நகர்வு முறியடிப்பு

[திங்கட்கிழமை, 24 செப்ரெம்பர் 2007] யாழ். தென்பகுதியில் உள்ள கிளாலி முன்னரங்க நிலைகளில் இன்று திங்கட்கிழமை சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இம் மோதலில் சிறிலங்கா இராணுவத் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 5 பேர் படுகாயமடைந்ததாகவும் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து மேலதிக தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.

மன்னார் பகுதியில் ஆட்டிலறி சூட்டு பரிமாற்றம்

[திங்கட்கிழமை, 24 செப்ரெம்பர் 2007] ஞாயிற்றுக்கிழமை வவுனியா மன்னார் எல்லைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையை தொடர்ந்து திங்கட்கிழமை காலை 5.30 முதல் கடும் எறிகணை தாக்குதல்களை சிறீலங்கா இராணுவத்தினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான மாந்தைப்பகுதிநோக்கி மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து மன்னார் பொதுவைத்தியசாலை, முருங்கன் மாவட்ட வைத்தியசாலை ஆகியனவும் உசார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சிறீலங்கா இராணுவத்தினர் செம்மந்தீவு மற்றும் கட்டைக்காடு ஆகியபகுதிகளில இருந்து மாந்தை மேற்கு பரப்புக்கண்டான் பகுதியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது. விடுதலைப்புலிகளும் இராணுவக்கட்டுப்பாட்டுப்பகுதி உயிர்த்தராசன்குளம் நோக்கி எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. சில எறிகணைகள் மன்னார் மதவாச்சி வீதியில் உள்ள விவசாய பயிற்சி நிலைய கட்டிடத்தொகுதிக்குள்ளும் மற்றும் சில உயிர்த்தராசன்குளம் விளையாட்டு மைதானத்தினுள் விழுந்து வெடித்ததாகவும் தெரியவருகிறது.

மோதல்களை நிறுத்தி சமாதான பேச்சுகளை ஆரம்பிக்க அவுஸ்திரேலியா நியுசிலாந்து அழைப்பு.!!

[திங்கட்கிழமை, 24 செப்ரெம்பர் 2007] இலங்கையில் மோதல்களை நிறுத்தி சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அவுஸ்திரேலியாவும்,நியுசிலாந்தும் இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் ,விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தும் கருணா குழுவிடமிருந்தும் விலகிய சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாரும் அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்தும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் இடம்பெறும் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த வெள்ளிக்கிழமை அமர்வின் போதே அவை இவ்வாறி தெரிவித்துள்ளன.அத்துடன் இலங்கையில் சமாதான பேச்சு வார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான சர்வதேச ஆதரவை தாம் வழங்குவதகவும் தெரிவித்துள்ளது. நியூசிலாந்து இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகளை மனித உரிமை மீறல்கள் மோதல்கள் தொடர்பில் கவலையடைந்துள்ளது.இவற்றில் ஈடுப்படும் தரப்புகள் வன்முறைகளை கைவிட்டு பேச்சுவார்த்தைகளை மீள் ஆரம்பிக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழு அமர்வில் நியூசிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட அமி.லௌரென்சன் தெரிவித்துள்ளார். அதேவேளை அவுஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட கெய் ஒபிரேன்ன மோதல்களால் இடம்பெயர்தல்கள் அதிகரித்துவருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான சிருவர்கள் பாதிக்கின்றமை கவலையளிக்கிறதாக தெரிவித்துள்ளனர் அத்துடன் வடக்கு கிழக்கு மோதல்கள் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பையும் நலன்களையும் பேணுவதற்கு வேவையான உதவிகளை வழங்குமாறு அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

போர் முடியும் வரை படைத்தளபதிகளை அரசு மாற்றப் போவதில்லை: "த நேசன்" வார ஏடு.!!

[திங்கட்கிழமை, 24 செப்ரெம்பர் 2007] தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வரும் வரையில் சிறிலங்கா இராணுவத்தின் தளபதிகளுக்கு தொடர்ந்தும் பணி நீடிப்புக்களை வழங்கி தக்கவைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கிறது என்று "த நேசன்" வார ஏடு தெரிவித்துள்ளது. "த நேசன்" வார ஏட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்காவின் முப்படைகளின் தளபதியான அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சிறிலங்காவிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் முக்கியமான பணியை செய்துள்ளார். அவர் தனது இரு படைத்தளபதிகளின் பதவிகளை நீடிப்புச் செய்துள்ளார். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொட மற்றும் இராணுவத்தளபதியான லெப். ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோரது பதவிகள் நீடிக்கப்பட்டுள்ளன. அவர்களின் பதவிக்காலங்கள் எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் முடிவடைய உள்ளது. வான்படைத் தளபதி ஏயர் வைஸ் மார்சல் றொசான் குனதிலக்கவின் பதவிக்காலத்தை நீடிக்க தேவையில்லை. ஏனெனில் அவர் ஏற்கனவே மேலதிகமாக மூன்று வருடங்களுக்கான பதவியைக் கொண்டுள்ளனர். இராணுவத் தளபதிக்கு கடந்த ஆண்டு பதவி நீடிப்பை வழங்குவதில் அதிக தாமதம் ஏற்பட்டிருந்தது. நவம்பர் மாத நடுப்பகுதியிலேயே நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது. எனினும் இந்த வருடம் பொன்சேகாவிற்கு பதவி நீடிப்பை வழங்குவதில் மகிந்தவிற்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை. எனவே அவரது பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு முன்னரே செப்ரம்பர் மாத நடுப்பகுதியில் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோத்தபாயா ராஜபக்சவுடன் இணைந்து இந்த போரை முடிப்பதற்கு சரத் பொன்சேகா முக்கியமானவர். அவர்கள் இருவரினதும் முக்கியத்துவம் உணர்ந்து விடுதலைப் புலிகளும் தற்கொலை தாக்குதல்கள் மூலம் அவர்களை அகற்ற முற்பட்டிருந்தனர். அனைத்துலகத்தின் ஆதரவுடன் போரை நிறுத்துவதற்கு விடுதலைப் புலிகள் முயற்சி செய்து வருகின்றனர். அதன் மூலம் அவர்கள் தமது இராணுவத்தை ஒழுங்குபடுத்தவும், மூச்சுவிடவும் கால அவகாசத்தை பெற முயற்சித்து வருவதாக ஓகஸ்ட் மாதம் 20 ஆம் நாள் நடைபெற்ற ஊர்காவல் படையினரின் அணிவகுப்பின் போது கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்தார். படைத் தளபதிகளின் பதவி நீடிப்பில் அனைத்துலகத்தின் அழுத்தங்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக மகிந்த ராஜபக்ச அதனை அதிக நாட்களுக்கு முன்னதாக செய்துள்ளார். இந்த மூன்று தளபதிகளின் சேவைகளில் கோத்தபாய ராஜபக்ச மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன், கடற்படைத் தளபதியின் பதவி நீடிப்புக்கான காலத்தையும் எதிர்பார்த்திருந்தார். விடுதலைப் புலிகளின் மூன்று கப்பல்களை கடற்படையினர் அழித்தது அதற்கான நல்ல காலமாக அமைந்துள்ளது. இந்த தளபதிகளின் பதவி நீடிப்பின் போது ஏனைய தளபதிகளுக்கு இடையில் மோதல்கள் ஏற்படாத படியும் மகிந்த ராஜபக்ச செயற்பட்டுள்ளார். கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட பதவி நிலையில் மூத்தவர். இவர் 2005 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 1 ஆம் நாள் பதவியேற்றிருந்தார். சரத் பொன்சேகா 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் நாள் பதவியேற்றிருந்தார். 1970 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் நாள் அவர் இராணுவத்தில் இணைந்ததில் இருந்து தரைத் தாக்குதலில் நீண்ட அனுபவத்தை உடையவர். சரத் பொன்சேகாவின் முக்கியத்துவத்திற்கு ஐக்கிய தேசிய முன்னணி அரசின் காலத்தில் யாழ். மாவட்டத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை அகற்றுவதற்கு அனுமதிக்காதனை உதாரணமாக கூறலாம். இராணுவத்தின் உயர் அதிகாரியான டொனால்ட் பெரேராவும் இராணுவத் தளபதியின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அனுமதிகளை வழங்கி வருகின்றார். அவர்களிடம் பிளவுகள் இல்லை. எனவே தான் அரசு போரை நிறைவு செய்வதற்கு முயற்சித்து வருகின்றது. படைத்துறையைச் சேர்ந்த பல ஜெனரல்களும் தளபதிகளும் ஒய்வுபெறும் போதும், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நிரந்தரமாக செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார். ஆனால் விடுதலைப் புலிகளை முறியடிக்கும் வரையிலும் படைத் தளபதிகளுக்கு பல பதவி நீடிப்புக்களை வழங்கி தக்கவைப்பதற்கு இந்த அரசு முயற்சித்து வருகின்றது. அரைப் பகுதியோ அல்லது மூன்றில் இரண்டு பகுதியோ முடிவடைந்த நிலையில் படையினர் தமது நடவடிக்கைகளை நிறுத்தப்போவதில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கடந்த மூன்று வாரத்தில் இருமுறை தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையானது முப்படைகளின் தளபதியாகிய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு முன்பாக திருகோணமலையில் கோத்தபாய ராஜபக்சவினால் வெளியிடப்பட்டிருந்தது. எனவே போர் தொடரப்போகின்றது என்பதற்கான உத்தியோகபூர்வமான அறிவித்தலே இது. தற்போது கிழக்கில் தமது காணிகளை சிங்கள மக்கள் அபகரித்துக்கொள்ளலாம் என்ற அச்சமும் முஸ்லிம் மக்களிடம் தோன்றியுள்ளது. இதற்கு ஆதாரமாக அண்மையில் சம்பூர் பிரதேசத்தையும் நிர்வகித்து வந்த மூதூர் பிரதேச செயலாளர் பதவி நீக்கப்பட்டு அவருக்கு கீழ்நிலையில் இருந்த அதிகாரி அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் முன்னாள் பிரதேச செயலாளர் கிழக்கு மாகாணசபையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கில் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசு எண்ணியுள்ள நிலையில் இவை நடைபெற்று வருகின்றன. இந்த தேர்தல்களை கண்காணிக்க சார்க் பிராந்திய, ஐரோப்பிய ஒன்றிய, அணிசேரா நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் அழைக்கப்படலாம். தேர்தலுக்கு பின்னர் அரசு 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவையும் ஏனையோரையும் திருப்திப்படுத்தும் நடவடிக்கை. ஆனால் அதில் உள்ள நெருக்கடியான விடயம் வடக்கு - கிழக்கு இணைப்பை அரசு பாதுகாக்க தவறியதாகும். இந்த இணைப்பை கருணா குழுவினரை போன்ற ஒரு சில குழுக்களை தவிர எல்லோரும் ஆதரித்திருந்தனர். அனைத்துச்கட்சி குழு தனது தீர்வுத்திட்டத்தை இந்த வருட இறுதியில் முன்வைக்கலாம். வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரை எல்லா நடவடிக்கைகளையும் நிறுத்தி வைப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அதுவரை போரை தொடர்வதற்கு அரசு முயற்சித்து வருகின்றது. எனினும் அனைத்து கட்சிக்குழுவின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு ஆதரவு தேவை என்பது குறித்த அச்சமும் அரசுக்கு உண்டு. ஆனால் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவையில்லை. அரசு கிழக்கை வெற்றியின் மாதிரி வடிவமாக்கி வடக்கில் அதனை பின்பற்ற முயற்சிப்பதாக தெரிகின்றது. கிழக்கின் தேவைகள் குறித்த ஆய்வுகள் ஏற்கனவே 2003 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்தன. அந்த பகுதிகளில் இந்தியாவின் உதவித் திட்டத்தின் அடிப்படையில் அதன் முதலீடுகளை அரசு பெறக்கூடும். இது இந்த பிரதேசத்தில் அதன் பிரசன்னத்தை அதிகரிக்கச் செய்யும். அம்பாந்தோட்டை மற்றும் நுரைச்சோலை அபிவிருத்தி திட்டங்களை சீனாவிற்கு வழங்கியதற்கான மாற்றீடு இதுவாகும். இந்தியாவை சுற்றி சீனா, பர்மா, பாகிஸ்தான் என முக்கோண வடிவில் எதிரான நாடுகள் சூழ்ந்திருப்பது அதற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனுடன் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ புலனாய்வு அமைப்பும் கிழக்கில் இயங்கி வந்ததான சந்தேகங்கள் தோன்றியிருந்தன. சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் இருந்து சிறிலங்கா ஆயுதங்களை கொள்வனவு செய்வது தொடர்பாக இந்தியா அதிருப்தி அடைந்துள்ள அதேசமயம், ரஸ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிடம் இருந்து சிறிலங்கா ஆயுதம் வாங்குவது குறித்து அது கவலைப்படவில்லை. சீனாவின் படைத்துறை வளர்ச்சியை கட்டுப்படுத்தும் முகமாக அமெரிக்காவும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் தனது பிரசன்னத்தை அதிகரித்துள்ளது. அது இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளதுடன், சிறிலங்காவுடன் பொருட்கள் சேவைகள் வழங்குதல் ஒப்பந்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மன்னார் கடல் பகுதியில் எண்ணெய்ப் படிவுகள் இருப்பதும் அமெரிக்காவை தொடர்ந்து கவர்ந்து வருகின்றது. இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு அதன் அகழ்வுப் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு எல்லோருடனும் ஒத்துப்போவதாக தெரிகின்றது. அதாவது போரை முடிப்பதற்கான ஆதரவை பெறும் வரையிலும் இந்தியா, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் என எல்லோருடனும் அது அனுசரித்து போகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி:புதினம்

இராணுவத்தினர் உதவியுடன் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் துணை இராணுவக் குழுவினர்: கொழும்பு வார ஏடு.!!

[திங்கட்கிழமை, 24 செப்ரெம்பர் 2007]

சிறிலங்கா இராணுவத்தினர் உதவியுடன் மனித உரிமை மீறல்களில் துணை இராணுவக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் என்று கொழும்பு வார ஏடு தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து வெளியாகும் "த நேசன்" வார ஏட்டில் வெளியான கட்டுரையின் தமிழ் வடிவம்:

திருகோணமலை பொது மருத்துவமனை மருத்துவர்களும், தாதியர்களும் கருணா குழுவினரின் பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் தற்போது சிக்கியுள்ளனர். அவர்கள் துணை இராணுவக் குழுவினரின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

அதிகாரிகளிடம் 500,000 ரூபாய்கள் கப்பமாக கருணா குழுவினரினால் கோரப்பட்டுள்ளது. இந்த பெரும் தொகையை தம்மால் செலுத்த முடியாது என்று அதிகாரிகள் கூறிய போது வெளிநாடுகளில் உள்ள அவர்களின் உறவினர்களை கருணா குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் தமது அலுவலகங்களில் உள்ள உயர்மட்ட உறுப்பினர்களுடன் பேசி இந்த தொகையை குறைக்க முடியும் எனவும் கருணா குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து பணியாளர்களின் தொழிற்சங்க போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

இதே போன்ற சம்பவங்கள் வவுனியா மாவட்டத்திலும் நடைபெற்றுள்ளன.

எனினும் கப்பமாக கோரப்பட்ட தொகை குறைவானது. வெளிநாடுகளில் உறவினர்களை கொண்டிருப்பவர்களுக்கு 300,000 ரூபாய்களும், ஏனையோருக்கு 100,000 ரூபாய்களும் கப்ப பணமாக கோரப்பட்டுள்ளது.

இந்த தொகையை ஒரே தவணையில் செலுத்த முடியாதவர்களுக்கு மாதாந்தம் 20,000 ரூபாய்கள் செலுத்த வேண்டும் என்ற தவணைமுறை செலுத்தும் "வசதி"களையும் துணை இராணுவக் குழு அறிமுகப்படுத்தியுள்ளது. புளொட் அமைப்பே இதனை செய்து வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

கோவில்குளம், தோணிக்கல், சிதம்பரபுரம், வேப்பம்குளம் ஆகிய பகுதிகளில் புளொட் அமைப்பு பணம் பறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஈபிடிபியினர் நிலைகொண்டுள்ள தீவுப் பகுதிகளிலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பணம் அறவிடுதல் நடைபெறுகின்றது.

மகிந்த ராஜபக்ச அரசு பதவிக்கு வந்த பின்னர் தமிழ் மக்களிடம் துணை இராணுவ குழுவினர் பணம் அறவிடுதல் அதிகரித்துள்ளது. கிழக்கிலும் வரிகளை அறவிடுதல் மக்களை துன்புறுத்துதல் என்பன துணை இராணுவக் குழுவினரால் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைய காலங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களை கடத்தி பணம் பறிக்கும் நடவடிக்கைகள் கொழும்பிலும் அதனைச் சூழ உள்ள பகுதிகளிலும் அதிகரித்து காணப்பட்டது. விடுதலைப் புலிகளுடன் போர் தொடங்கியதிலிருந்து அரசுகள் துணை இராணுவ குழுவினருக்கு நிதிகளை வழங்கி வருவது இரகசியமானது அல்ல.

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தின் போதும் அது நடைபெற்றே வந்தது. துணை இராணுவக் குழுவினர் பொதுமக்களுக்கு நெருக்கடிகளை கொடுப்பதனை தவிர்ப்பதற்காகவே இது மேற்கொள்ளப்பட்டு வந்தது. துணை இராணுவக் குழுவினரின் இந்த பணம் பறிக்கும் நடவடிக்கைகள் இந்த குழுவினருக்கு நிதியை வழங்குவதனை அரசு நிறுத்தி விட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

எனினும் துணை இராணுவக் குழுவினர் விரைவாக பணம் சம்பாதித்து கொண்டு நாட்டை விட்டு தப்பி ஓடிவருவதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இராணுவத்தைச் சேர்ந்த சிலரும் இதில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த கடத்தல்கள் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது தொடர்பான விசாரணைகள் தேவை.

இந்த கடத்தல்களில் ஈடுபட்டதாக வான்படை அதிகாரி உட்பட பலர் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையிலும் விசாரணைகளில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் தகவலை அடுத்தே வான்படை அதிகாரி கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனை தீர்ப்பதற்கு ஒரே வழி துணை இராணுவக் குழுவினரை இராணுவத்தில் இணைப்பதுதான். கருணா குழுவினருடன் இராணுவத்திற்கு தொடர்புகள் உள்ளது என்பது இரகசியமல்ல. திருகோணமலையில் கருணா குழுவினர் பகல் நேரங்களில் பல அலுவலகங்களில் பணியாற்றி வருகின்றனர். இரவு நேரங்களில் கறுப்பு உடைகளுடன் சுற்றுக்காவலில் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியாவில் புளொட் அமைப்பினரின் உதவியை இராணுவத்தினர் பெற்று வருகின்றனர். கள நிலமை தொடர்பான தகவல்கள், மொழி போன்றவை தொடர்பான உதவிகளை இராணுவத்தினர் அவர்களிடம் பெற்று வருகின்றனர்.

மேலும் விடுதலைப்புலி உறுப்பினர்களை அடையாளம் காண்பதற்கும், புலனாய்வு தகவல்களை பெறுவதற்கும் துணை இராணுவக்குழுவினர் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். சில சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படுவதுடன் அரசுகள் அவர்களை பாதுகாத்தும் வருகின்றது.

அவர்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டால், உயிரிழக்கும் போது அவர்களது குடும்பத்தினருக்கு கொடுப்பனவுகளும் கிடைக்கும். அரசியல் தீர்வை முன்வைக்கும் திட்டம் அரசிற்கு இருப்பின் தமிழ் இளைஞர்களை இராணுவத்தினர் சேர்க்க அவர்கள் முன்வர வேண்டும். தற்போது இராணுவத்தில் தமிழர்கள் இல்லை.

துணை இராணுவக் குழுவினரை இராணுவத்தில் இணைப்பதன் மூலம் அனைத்துலக சமூகம் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் குற்றச்சாட்டுக்களை அரசு தவிர்க்க முடியும். இது விடுதலைப் புலிகளுடனான மோதல்களுக்கு முக்கியமானது.

தமிழ் மக்கள் மற்றும் தொண்டர் அமைப்புக்கள் மீதான மனித உரிமை மீறல்களில் இராணுவத்தினர் சிலரது உதவிகளுடன் துணை இராணுவக் குழுவினரே பெருமளவில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:புதினம்

Sunday, September 23, 2007

யாழில் சிறிலங்கா இராணுவத்தினரால் இரு இளைஞர்கள் சுட்டுப் படுகொலை.!!

[ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2007] யாழ். வடமராட்சி பருத்தித்துறையில் சிறிலங்கா இராணுவத்தினரால் இரு இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை சிவன் கோவிலடியில உள்ள உணவுச்சாலை உரிமையாளரான பருத்தித்துறை ஜயனார் வீதியைச் சேர்ந்த குலேந்திரமோகன் சுதாகர் (வயது 27) சிறிலங்கா இராணுவத்தினர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.50 மணியளவில் அவரது உணவத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்தனர். இவரது உணவகத்தினை நேற்று ஆறு உந்துருளிகளில் சென்ற சிறிலங்கா இராணுவத்தினர் சோதனையிட்டு விட்டு சென்றதனைத் தொடர்ந்து இன்று சுட்டுக்கொல்லப்பட்டார். பருத்தித்துறை தும்பளை லட்சுமணன் தோட்டப்பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியம் லட்சுமணன் ஜயர் (வயது 37) இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணியளவில் அவரது வீட்டில் இருந்தபோது உந்துருளியில் வந்த சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

மன்னார் மோதலில் இராணுவத்தைச் சேர்ந்தவர் பலி

[ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2007] மன்னார் மடு தம்பனைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். 8 பேர் காயமடைந்தனர். தம்பனைப் பகுதியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு இம் மோதல் நிகழ்ந்துள்ளது. இதனிடையே மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதலில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். பள்ளமடுப் பகுதியில் நேற்று சிறிலங்கா இராணுவத்தினர் தொடரான பல்குழல் வெடிகணை மற்றும் எறிகணைத் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் கண்ணாட்டியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான யோசப் அமலேஸ்வரன் (வயது 48) என்பவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக பள்ளமடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தியாகி திலீபன் நினைவு நிகழ்வுகள்

[ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2007] தியாகி லெப். கேணல் திலீபனின் 20 ஆம் ஆண்டு நினைவு நாட்களில் அடையாள உண்ணாவிரதங்கள், சிரமதானப் பணிகள் ஆகியவற்றில் மக்கள் உணர்வுபூர்வமாகப் பங்கேற்று வருகின்றனர். முல்லைத்தீவு கோயில் குடியிருப்பு தேசியப்பணிக்குழு ஒழுங்குபடுத்தலில் அடையாள உண்ணாவிரதமும் நினைவு நிகழ்வும் நேற்று காலை சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் கிழக்கு மாதிரிக் கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை கடற்புலிகளின் வட்டப் பொறுப்பாளர் தமிழ்மாறன் ஏற்றினார். திருவுருவப் படத்திற்கான ஈகச்சுடரினை லெப். களப்பாவையின் தாயார் ஏற்றினார். முல்லை. மாவட்ட தமிழீழ நிர்வாக சேவையின் ஒழுங்குபடுத்தலில் கரைத்துறைப்பற்று பல நோக்குக் கூட்டுறவுச் சங்கப் பணியாளர்கள், பணிப்பாளர்கள், பொது முகாமையாளர்கள் ஆகியோர் அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று சிரமதானப் பணி மூலம் துயிலும் இல்லத்தின் உட்பகுதி துப்புரவு செய்யப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது. வள்ளிபுனம் கிராமத்தில் நேற்று சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.30 மணிவரை பல ஆண்டுகாலமாகக் குன்றும் குழியுமாக இருந்த பாரதி இல்ல வீதி சிரமதானம் செய்யப்பட்டது. இதற்கு வள்ளிபுனம் வட்ட அரசியல்துறையினரின் ஏற்பாடு செய்திருந்தனர். அடையாள உண்ணாவிரதமும் நினைவு நிகழ்வும் நேற்று முன்தினம் வெட்டுவாய்க்கால் அ.த.க. பாடசாலையில் வட்டுவாகல் தேசியப் பணிக்குழுத் தலைவர் கிருபாகரன் தலைமையில் நடைபெற்றது. விசுவமடு வட்டத்தைச் சேர்ந்த மக்கள், பொது அமைப்புப் பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள், ஆகியோர், விசுவமடுப் பகுதியில் சிரமதானப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். சிரமதானப் பணி மூலம் இந்த வட்டத்திற்கு உட்பட்ட பொது இடங்கள், தேராவில் மாவீரர் துயிலும் இல்லம், வீதிகள் என்பன தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதேபோன்று கண்டாவளை வட்டத்திலும் சிரமதானப் பணி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரமந்தனாறு வட்டம், தருமபுர வட்டம், வள்ளுவர் வட்டம் ஆகிய இடங்களைச் சேர்ந்த மக்கள், மாணவர்கள், வர்த்தகர்கள், கமக்கார அமைப்பினர், பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் சிரமதானப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிளி. முரசுமோட்டை றோமன் கத்தோலிக்க அந்தோனியார் வித்தியாலயத்தில் நேற்று முன்நாள் கோரக்கன் கட்டு தேசியப் பணிக்குழு பொருளாளர் டேவிட் தலைமையில் அடையாள உண்ணாவிரத நிகழ்வுகள் இடம்பெற்றன.

அக்கரைப்பற்றில் கருணா குழுவைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை.!

[ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2007] அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். அக்கரைப்பற்று ஆலையடிவேம்புப் பகுதியில் உள்ள கருணா குழு அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை இரவு 8.45 மணிக்கு இச்சூட்டுச் சம்பவம் நடந்துள்ளது. படுகாயமடைந்த கருணா குழுவின் இரண்டு உறுப்பினர்களும் அம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே 4 அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட நபர் ஒருவர் தப்பியோட முயற்சித்த போது துப்பாக்கிச் சூட்டுக்குள்ளாகி உள்ளார். அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவுப் பகுதியில் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது நேற்று நள்ளிரவு அவரை கடத்த முயற்சித்துள்ளனர். சூட்டுக்காயமடைந்த இளைஞர் காரைதீவு ஊர்வீதியைச் சேர்ந்த வடிவேல் லோகாநாதன் (வயது 26) என தெரியவந்துள்ளது.

அமெரிக்கத் தடையிலிருந்து தப்பிக்க தொடர்ந்து போராடும் சிறிலங்கா.!

[ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2007]

சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தும் தீர்மானத்தை அமெரிக்கா நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் தீவிரமாக போராடி வருகிறது.

அமெரிக்க செனட்டில் சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை நிறுத்துவது தொடர்பான அமெரிக்க செனற்றர் பற்றிக் லியககி தீர்மானத்தை அண்மையில் கொண்டுவந்தார்.

இந்தத் தீர்மானத்தைச் சட்டமாக்கி செயற்படுத்துவதைத் தடுக்க அமெரிக்காவின் அரச செயலகத்தின் கொள்கை வகுப்பாளர்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளை சிறிலங்கா மேற்கொண்டு வருகிறது. இச்செயலகத்தின் பரிந்துரைகளைத்தான் அமெரிக்க அரச தலைவர் ஏற்பார் என்றும் சிறிலங்கா நம்புகிறது.

அமெரிக்காவின் வோசிங்ரனில் உள்ள சிறிலங்கா தூதரகம், கொழும்பில் உள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சகம் ஆகியவை இணைந்து இந்த செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே ஹியூமன் ரைட்ஸ் வோட்ச் எனப்படும் மனித உரிமைகள் காப்பகம், அனைத்துலக மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள், சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை நிறுத்துவதை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் முனைப்புடன் உள்ளதாக தெரிகிறது.

வன்னி நோக்கி படையினர் நகர்வதற்கு முன்னோடியாகவே வான் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன: கொழும்பு ஊடகம்.!!

[ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2007] வன்னியை நோக்கி சிறிலங்காப் படையினர் நகர்வதற்கு முன்னோடியாகவே வான் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்று கொழும்பு ஊடகமான "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் லக்பிமவின் பாதுகாப்பு ஆய்வுப் பத்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எரித்திரியாவில் இருந்து விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கொள்வனவு செய்து வருவதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. வறுமையில் வாடும் இந்த நாட்டில் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளையும், நவீன ஆயுதங்களையும் குறைந்த விலையில் பெறமுடியும். எனவே விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை பெறுவதற்கான இலகுவான இடம் எரித்திரியாவாகும். இரண்டாம் உலக போருக்குப் பின்னர் மிக்-29, சுக்கோய் தாக்குதல் வானூர்திகள், பல்குழல் உந்துகணை செலுத்திகள், கனரக பீரங்கிகள் போன்றவற்றை கொண்டு ஆபிரிக்க நாடுகள் மோதிய வரலாறும் இதுவே. 2000 ஆம் ஆண்டு பெரும் மோதல்கள் இடம்பெற்றதுடன் எதியோப்பியப் படையினர் எரித்திரியாவின் முக்கிய நகரான பரன்ரு நகரையும் கைப்பற்றியிருந்தனர். விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் தொடர்பான புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் 1,200 - 2,000 கடற்புலி உறுப்பினர்களை கொண்டுள்ளனர். அவர்களின் படகு தொகுதியில் 15 தொடக்கம் 20 படகுகள் மணிக்கு 35 கடல்மைல் வேகத்தில் பயணிக்க கூடியவை. இவற்றில் 23 மி.மீ, 12.7 மி.மீ, 30 மி.மீ பீரங்கிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. கடற்புலிகளின் இந்தப் படகுத் தொகுதியில் 10 படகுகள் 50 அடி நீளமானவை. அவை விநியோக பணிகளை மேற்கொள்பவை. மேலும் 30 - 40 தற்கொலைப் படகுகளும் அவர்களிடம் உண்டு. படையினரின் கடல் நடமாட்டங்களை விடுதலைப் புலிகள் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட ராடார்களின் உதவியுடன் அவதானித்து வருகின்றனர். அவை 30 - 40 கடல் மைல் தூர வீச்சுக்கொண்டவை. சிறிலங்கா இராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரி-55 ரக பிரதான போர் டாங்கிகள் இரண்டை விடுதலைப் புலிகள் முல்லைத்தீவு கடற்கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த டாங்கிகளின் எறிகணைகள் 6,900 மீற்றர் தூர வீச்சுக் கொண்டவை. இவை தவிர பின்னுதைப்பற்ற பீரங்கிகள் பலவற்றையும் கொண்டுள்ளனர். இவை விடுதலைப் புலிகளின் கரையோர நடமாட்டங்களுக்கு ஆதரவானவை. தற்காப்பு போரையே நடத்தி வருவதாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கடந்த வாரம் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் முகமாலை நாகர்கோவில் முன்னரங்கு, மன்னார் மற்றும் ஒமந்தை மேற்கு பகுதிகள், மணலாறு போன்ற மூன்று முனைகளில் தற்காப்பு சமரில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னார் மடுவிற்கு மேற்குப் பகுதியில் படையினரின் நடவடிக்கைகளை தடுப்பதற்கு விடுதலைப் புலிகள் அதிகளவான உறுப்பினர்களை பயன்படுத்தி வருகின்றனர். இது அவர்களின் நகர்வுகளை மட்டுப்படுத்தியுள்ளது. சிறிலங்காப் படையினர் மணலாற்றில் புதிய களமுனையை திறக்கும் திட்டத்தை கொண்டுள்ளனர். ஏற்கனவே அங்கு மோதல்கள் இடம்பெற்று வருகின்றதும் குறிப்பிடத்தக்கது. மணலாற்றில் நிறுத்தப்பட்டுள்ள புதிய படையணியான 58 ஆவது படைப்பிரிவு முல்லைத்தீவை நோக்கி நகரலாம். இந்த படையணி இரு பிரிகேட்டுக்களை கொண்டது. எனினும் ஒக்ரோபர் மாத இறுதியில் அது முழுப் படையணியாக உருவாக்கப்பட உள்ளது. மேலும் ஒரு புதிய படையணியான 59 ஆவது படையணியை உருவாக்கும் திட்டமும் படையினரிடம் உள்ளது. எனினும் தமது மாவீரர் நாள் உரைக்கு முன்னதாக விடுதலைப் புலிகள் ஒரு இராணுவ வெற்றியை ஈட்ட முனையலாம். வடக்கை விட தெற்கிலும் அவர்கள் தாக்குதலை நடத்தலாம். சிறிலங்கா வான்படையினர் தற்போது முல்லைதீவுப் பகுதிகளில் மூன்றாவது நாளாக தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் மிக்-27, கிபீர் தாக்குதல் வானூர்திகள் ஈடுபட்டு வருகின்றன. படையினர் வன்னியை நோக்கி முன்நகர்வதற்கு முன்னர் விடுதலைப் புலிகளை பலவீனமாக்கும் முயற்சி இதுவாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி:புதினம்

கிளிநொச்சி மாணவன் தமிழ் மூல புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம்.!

[ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2007] கிளிநொச்சி திரேசா கல்லூரி மாணவன் திருமாறன் ஈழவரன் தமிழ் மூலமாக புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றி அகில இலங்கை ரீதியில் 190 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை 200 க்கு 200 புள்ளிகளை பெற்று களுத்துறை – ஹொரண கல்லூரி மாணவன் சாகி பசுரு வீரக்கோன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளதாகவும் தெரியவருகிறது. இம்முறை பரீட்சைக்கு நாடு பூராகவுமிருந்து 2 இலட்சத்து 93 ஆயிரத்து 937 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 70 ஆயிரத்து 209 மாணவர்கள் தமிழ்மொழியில் பரீட்சைக்கு தோற்றியதும் குறிப்பிடத்தக்கது.

உலக சாதனை படைக்கும் "மகிந்த நிறுவனம்": சிங்கள ஏடு கிண்டல்.!!

[ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2007] ஒரு ஜனநாயக நாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் அமைச்சரவையில் இருப்பதும் அவர்கள் அரச நிறுவனங்களில் 90 விழுக்காடு அதிகாரத்தை கொண்டிருப்பதும் புதிய உலக சாதனையாகப் போகிறது என்று கொழும்பிலிருந்து வெளியாகும் வார இறுதி சிங்கள ஏட்டின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலகின் முதலாவது பெண் பிரதமராக சிறிமா பண்டாரநாயக்கவும், பிரதமராகவும், அரச தலைவராகவும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஏற்கெனவே சாதனை படைத்துள்ளனர். மகிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகிய நால்வரும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பார்களா என்பதற்கு உறுதியான தகவல்கள் எதுவும் இல்லாத போதும் ஜனநாயக நாட்டில் குடும்ப நிர்வாகத்திற்கு ஏற்ப ராஜபக்ச குடும்பம் கட்டாயமாக உலக சாதனைக்கு தகுதி பெறுவதாகவே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில காலமாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினால் தொடர்ச்சியாக ராஜபக்ச நிறுவனம் என்று குறிப்பிட்டு தற்போதைய அரசியல் நிர்வாகத்தை விமர்சித்து வந்த போதிலும் அதுகுறித்து எவ்வித அச்சமோ, வெட்கமோ இன்றி அந்த விடயத்தை மேலும் உறுதிப்படுத்தி பசில் ராஜபக்சவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்ததனூடாக இந்த உலக சாதனைக்கு ராஜபக்ச குடும்பத்தினர் உரிமை கோருகின்றனா. மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்சவை பெலியத்த தொகுதி அமைப்பாளராகவும், சமல் ராஜபக்சவின் மகனை மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய தொகுதி அமைப்பாளராகவும் நியமிக்க அதிகாரபூர்வமற்ற வகையில் மகிந்த முடிவு செய்யப்பட்டிருப்பதனூடாக இது மேலும் உறுதியாவதாகவும் அந்த ஏட்டின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வில் கண்டனம் கொண்டுவர முடியுமா?: ஜெனீவா கூட்டத்தில் சவால் விட்ட சிறிலங்காப் பிரதிநிதி

[ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2007] மனித உரிமை மீறல்களுக்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தில் கண்டனம் கொண்டுவர முடியுமா? என்று ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டத்தில் மனித உரிமைகள் அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் சிறிலங்காவின் ஐ.நா. பிரதிநிதி தயான் ஜயலதிக்க சவால் விட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 6 ஆவது மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் பங்கேற்போருக்கான கூட்டத்தை கடந்த வியாழக்கிழமை (20.09.07) சிறிலங்கா அரசாங்கம் நடத்தியது. சிறிலங்காவின் ஐ.நா. பிரதிநிதி தயான் ஜயதிலக்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறிலங்கா சார்பில் சிறிலங்கா சமாதான செயலகத்தின் செயலாளர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க, சிரானி குணதிலக்க, சிறிலங்கா சட்டமா அதிபர் காரியாலய பிரதிநிதி பெர்ணான்டோ ஆகியோர் பங்கேற்றனர். அமெரிக்காவின் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் ஹியுமன் றைட் வோட்ச் எனப்படும் மனித உரிமைகள் காப்பகத்தின் ஜெனீவாப் பிரதிநிதிக்கும் சிறிலங்காத் தரப்பினருக்கும் கடுமையான விவாதங்கள் நடைபெற்றன. சிறார்களை கருணா குழு தமது குழுவிலும் சிறிலங்கா இராணுவத்திலும் சேர்ப்பது மற்றும் அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை சிறிலங்கா ஏற்பது ஆகியன தொடர்பில் பிரதானமாக விவாதிக்கப்பட்டன. தமிழ்ப் பிரதிநிதிகளான இமானுவேல் அடிகளார், அல்போன்ஸ் பேர்னாட் அடிகளார், வழக்கறிஞர் சிவபாலன், தமிழர் மனித உரிமைகள் யைமத்தைச் சேர்ந்த கிருபாகரன் ஆகியோர் சிறிலங்காவின் அரசின் பிரதிநிதிகளுடன் வடக்கு - கிழக்கின் மனிதாபிமான விடயங்கள் மற்றும் வடக்கு - கிழக்குப் படுகொலைகள் தொடர்பில் கேள்விகள் எழுப்பினர். இக்கூட்டத்தில் பேசிய சிறிலங்கா சமாதான செயலகத்தைச் சேர்ந்த இருவரும் சமாதானப் பேச்சுக்கள் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை. மேலும் சிறிலங்காவில் நடைபெறுவது வேறு இங்கே நீங்கள் உரையாற்றும் விடயங்கள் வேறு என்றும், இதற்கு உதாரணமாக ஹேரால்ட் றிபுயுனில் செப்ரெம்பர் 17 ஆம் நாள் வெளியான சிறிலங்காவில் போர்தான் சமாதானத்தை கொண்டுவரும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டதனையும் உதாரணமாக எடுத்துக்காட்டினர். இதனைத் தொடர்ந்து, "சிறிலங்காவில் இயங்குவது சமாதான செயலகம் அல்ல என்றும் போர்ச் செயலகம் என்று கேள்விப்பட்டதாகவும் அதனையே சிறிலங்கா சமாதான செயலகத்தைச் சேர்ந்தவர்கள் இக்கூட்டத்தில் பிரதிபலித்துள்ளனர் என்று தமிழ்ப் பிரதிநிதிகளில் ஒருவர் சுட்டிக்காட்டினார். ஐ.நா. வுக்கான அரச பிரதிநிதிகள், ஐ.நா.வின் முக்கிய புள்ளிகள், அனைத்துலக அமைப்புக்களின் பிரமுகர்களள், அரச சார்பற்ற பிரதிநிதிகள் என 75-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். கொழும்பை தளமாகக் கொண்டு இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களை இக்கூட்டத்தில் சிறிலங்காவில் அரச பிரதிநிதிகள் கடுமையாக சாடினர். அரச சார்பற்ற பிரதிநிதிகள் கொழும்பிலிருந்து கொண்டு பணத்தை வாங்கி புலனாய்வு மற்றும் தகாத வேலைகள் செய்வதாகவும் சாடினர். மேலும் சிறிலங்காவின் ஐ.நா. பிரதிநிதி தயான் ஜயதிலக்க அங்கு கூடியிருந்த இதர தரப்பு பிரதிநிதிகளிடம் முடிந்தால் எம்மீது கண்டனம் கொண்டு வந்து நிறைவேற்ற முடியுமா என்று சவால் விட்டுள்ளார். இக்கூட்டத்தில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த நிமால் குலதுங்க என்ற நபர் சிறிலங்காவின் பிரதிநிதிகளுடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் திங்கட்கிழமை சிறிலங்கா அமைச்சர் ஜி.எல்.பீரிசும் இது போன்ற ஒரு கூட்டத்தை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பர்தா அணிந்த முஸ்லிம் தாயாருக்கு பாடசாலையில் நுழைய அனுமதி மறுப்பு.!

[ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2007] கொழும்பு நகரில் பர்தா அணிந்த முஸ்லிம் தாயாருக்கு பாடசாலையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு ஊடகச் செய்தி: பொரளையில் உள்ள ரத்னவெலி பாலிகா மகா வித்தியாலயத்துக்கு அதன் அதிபரை சந்திக்க, முஸ்லிம் பெண்களின் உடையான "பர்தா" அணிந்து ஒரு மாணவியின் தாயார் சென்றுள்ளார். ஆனால் அவரை அந்த பாடசாலையின் பாதுகாப்பு அதிகாரி தடுத்து நிறுத்தி உள்ளார். பாடசாலைக்குள் செல்ல வேண்டுமெனில் "பர்தா"வை நீக்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். "பர்தாவை" நீக்காமல் உள்ளே செல்ல ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து வேறுவழியின்றி "பர்தா"வை நீக்கி பாடசாலை அதிபரை சந்தித்துவிட்டு அந்த முஸ்லிம் தாயார் திரும்பியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்த முஸ்லிம் தாயார், முகம் தெரியும்படியாக "பர்தா" அணிந்துதான் தான் சென்றதாகவும் ஆனால் வேறு வழியில்லாமல் பாதுகாப்பு அதிகாரி வலியுறுத்தியபடி "பர்தா"வையும் நீக்கிவிட்டுச் செல்ல வேண்டியதாக இருந்தது. அதேபோல் முஸ்லிம் மாணவிகளின் உடைகளுக்கும் அந்த பாடசாலை கட்டுப்பாடு விதித்துள்ளது என்றார் . பௌத்த பிக்கு ஒருவர் அந்த பாடசாலைக்கு அண்மையில் சென்று திரும்பிய பின்னரே இத்தகைய முடிவுகளை அந்தப் பாடசாலை நிர்வாகம் கடைபிடித்து வருவதாகத் தெரிகிறது என்று கொழும்பு ஊடகத்தின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.