Tuesday, March 20, 2012

போராட உரிமையுண்டு அணிதிரள்வோம் ஜெனீவா ஐ.நா. முன்றலில்!


நீதிக்கு முன் வருவதற்குத் தயங்கி நிற்கும் சிறிலங்கா அரசாங்கம். அதிலிருந்து தப்புவதற்காக தமிழ் மக்களைப் பயன்படுத்தலாமென நினைக்கின்றது.

ஆகவேதான், நீதிக்கெதிரான போராட்டங்களை அவர்கள் செய்து வருகின்றனர். அதற்காகத் தமிழரை மிரட்டி அழைக்கும் செயல் நாட்டில் நடக்கின்றது. தமிழ் மக்களை அழித்தவர்கள் தங்களைக் காப்பற்றத் தமிழரைத் துணைக்கழைக்கின்றனர். இதனைப் புரிந்து கொள்ள வேண்டியபொறுப்பு தமிழ் மக்களுடையது.

எங்கள் தாயகத்தில் தமிழ் மக்கள் தங்களின் உரிமைக்காக எந்தவொரு போராட்டத்தையும் செய்வதற்கான சூழ்நிலையில்லாமல் இருக்கின்றார்கள். இது உலகத்திற்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிந்திருக்கும் உண்மையாகும். தமிழ் மக்கள் தங்களின் உரிமைக்காகக் குரல்கொடுக்கக் கூடிய ஒரே இடம் புலத்தில் தான் மையம் கொண்டுள்ளது.

எனவே, புலத்துவாழ் தமிழீழ மக்கள் தங்களின் பலத்தைக் காண்பிக்க வேண்டும். இன்றைய காலத் தேவையை உணர்ந்து மக்கள் அணிதிரளவில்லை என்றால் கடந்தகாலப் போராட்ட வரலாறு அர்த்தமற்றுப் போய்விடும்.

22 அல்லது, 23 மார்ச் 2012 அன்று சிறிலங்காவின் விவகாரத்தை முற்படுத்தி ஐ.நா.வில் வாக்கெடுப்பொன்று நடைபெறவுள்ளதால் இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர் போராட வேண்டும். வாக்கெடுப்பு நடைபெற வேண்டுமென வலியுறுத்துவதுடன் சிறிலங்கா மீது தமிழ் இன அழிப்புக் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் தமிழரின் சுயநிர்ணய உரிமையை ஏற்று அவர்களிடம் விருப்பறிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இதனைச் சொல்வதற்கு ஒரு அறிக்கை மட்டும் விட்டால் போதுமா?

ஆகவே 21-22.03.2012 ஆகிய இருநாட்களும் ஜெனீவாவில் ஐ.நா.முன்றலில் காலை 8.00 மணிதொடக்கம் 17.00 மணிவரை துண்டுப்பிரசுர கவனயீர்ப்பும் 14.00 மணியிலிருந்து 17.00 மணிவரை கவனயீர்ப்புப் போராட்டமும் நடைபெறவுள்ளதால் இதில் பெரும்திரளான மக்கள் கலந்து கொள்வது எதிர்காலத்தில் நல்லதொரு மாற்றம் வருவதற்குத் துணைபுரியும். எனவே மக்களே திரண்டு வாருங்கள் இது தமிழினத்தின் அரசியல் விடுதலையை வென்றெடுப்பதற்கான அழைப்பு.

இவ்வளவு நாளும் போராடி என்ன கண்டோம்? உலகம் எம்மைக் கடைக்கண்ணாலும் பார்க்கவில்லையே என்றெல்லாம் கேட்டவர்கள் அல்லவா நாம். அவர்கள் இன்று எம்மைப் பற்றிப் பேசுகின்றனர் தமிழர் நாம் பார்வையாளர்களாக ஆற அமர உட்கார்ந்திருக்கலாமா?

என்றுமில்லாதவாறு தாய்த் தமிழகத்தில் இருந்து எமது தொப்புழ் கொடி உறவுகளின் ஒன்றுபட்ட இனஉணர்வினால் அனைத்துக் கட்சிகளும் இலங்கை அரசிற்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு அளித்தது போல் நாமும் ஐ.நா.முன்றலில் அணிதிரண்டு நீதி கேட்போம்.

இரு நாட்களும் அனுமதி எடுக்கப்பட்டுள்ளது. இந்த நாளைப் பயன்படுத்துவது தமிழரின் பொறுப்பு. இந்தப் போராட்டம் வெறும் கவனயீர்ப்புப் போராட்டம் மட்டுமல்ல காலம் கனிந்து வரும் காலத்தில் காலமுணர்ந்து செய்யும் போராட்டம் சொந்தத் தேவைகளிற்கொல்லாம் விடுப்பெடுத்துப் பழகியவர் நாம். தன்னினத்தின் விடுதலைக்காக ஒரு நாள் விடுப்பெடுக்காரோ? உணர்வை மெதுவாகத் தட்டிப் பார்த்து ஓரணியில் திரள்வது நல்லதொரு அறுவடையைத் தரும். விடுதலையைப் பெற்று வாழும் காலத்தைச் சமைக்கப் புறப்படுவோம் முடியும் என எண்ணி முன்வருவோம் நினைத்தால் முடியும் நிமிர்ந்தெழுவோம் போராடுவோம் இலக்கை அடைவோம். அதற்காய் அணிதிரள்வோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”
சுவிஸ் தமிழர் ஓருங்கிணைப்புக் குழு
swisstcc@gmail.com

1 comment:

  1. புலம் பெயர் உறவுகளே. இங்கு எம் கைகள் பின்புறமாகக் கட்டபட்டு துப்பாக்கி முனையில் உயிரை நாளும் கையில் பிடித்தபடி வாழ்கின்றோம். எமக்கு போராட சக்தியில்லை. சிங்களக் கழுகுகள் ஒருபுறம் இனத்துரோகிகள் ஒருபுறம் எம்மை கண்கொத்திப்பாம்பாய் நோட்டமிட்டவண்ணம் உள்ளனர். உறவுகளே எமக்காய் இந்த சந்தர்ப்பத்திலாவது ஒன்று சேர்ந்து ஒற்றுமையாய் போராட வாருங்கள். காலம் எமக்காய் காத்திருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டு மறுபடியும் கொலைவெறியரின் காலின் கீழ் மிதிபட எம்மை கைவிட்டு விடாதீர்கள். உரிமையுடன் வேண்டிக் கொள்கின்றோம். எமக்காய் இந்த ஒரே ஒரு முறையாவது ஒன்று பட்டு போராட வாருங்கள். நன்றியுடையவராயிருப்போம். தமிழக தொப்பிற்கொடி உறவுகள் எமக்காய் போராட ஒன்றாக இணைந்துவிட்டனர். நாம்......!?

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.