Saturday, September 21, 2013

சூடுபிடித்துள்ள வடமாகாண சபைத் தேர்தலும் மக்களை வாக்களிக்க விடாமல் துரத்தும் படையினரும்!


வடக்கு மாகாணசபை தேர்தல் வாக்களிப்பு சூடு பிடித்துள்ள நிலையில், இன்று மதியம் 12மணி வரை யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 22 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் வாக்களிப்பு வீதம் அதிகரித்துள்ளபோதும் 70சதவீத வாக்காளர்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று காலை முதல் வாக்களிப்பு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றபோதும், சில வாக்களிப்பு நிலையங்களில், வாக்களிப்பு வீதம் மிகவும் மந்தகதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. எனினும் கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் வாக்களிப்பு நிலையங்களில் பெருமளவு வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து, வாக்களிப்பதையும் காண முடிந்தது.
இதனிடையே பல பகுதிகளிலும் பகிரங்கமாக படையினர் வாக்களிக்க வந்த வாக்காளர்களை விரட்டியமை தொடர்பான தகவல்கள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. இன்று காலை தென்மராட்சி பகுதியில் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் ஏற்பாட்டில், அங்கவீனர்களை வாக்களிப்பதற்காக ஏற்றிவரப்பட்டபோது படையினர் என நம்பப்படுபவர்கள் வாகனத்தின் சாரதியை கடுமையாக தாக்கியதுடன், வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களையும் தீர்த்துள்ளனர்.
இதேவேளை வலி,வடக்கு மற்றும் மாதக ல் ஊர்காவற்றுறை தம்பாட்டி, கொக்கிளாய், கொக்குதொடுவாய், கிளிநொச்சி-பன்னங்கண்டி மற்றும் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் படையினர் மற்றும் அரச அதரவு குழுக்கள் இணைந்து வாக்காளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வாக்களிக்க விடாது திருப்பியும் அனுப்பியுள்ளனர்.
இதேவேளை பிந்திய தகவல்களின் பிரகாரம் கிளிநொச்சி மாவட்டத்தில், நண்பகல் 29 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. பரவலாக தேர்தல் நடவடிக்கைகளில் படையினர் தலையிடமாட்டார்கள் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பையும் மீறி படையினர் வாக்களிப்பு நிலைய வட்டாரங்களில் உலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கொல்லங்கலட்டி பகுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வாக்களிக்கச் சென்றிருந்த சமயம் அங்கு வாக்களிக்க வந்த ஏனைய வாக்காளர்களை புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்தியவர்கள் அச்சுறுத்துவரை அவதானித்துள்ளார்.
பின்னர் விடயத்தை பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த புலனாய்வாளர்கள் பொலிஸாரினால் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
இதேபோன்று மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்று நிலைமைகளை நேரில் அவதானித்து வருகின்றனர்.
மன்னார் மாவட்டத்திலும் வாக்களிப்பு வீதம் குறிப்பிடத்தக்கதாக இருந்து வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், வணபித ஒருவர் பொலிஸாரினால் வாக்குச்சாவடி பகுதியில் முறைகேடாக நடமாடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை மற்றுமொரு வணபிதா பொலிஸாரினால் தாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.