Hi Friend, Get paid 72 times per day!

My Advertising Pays, It Pays To Be On M.A.P!

Friday, September 20, 2013

வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களுக்கு தமிழ் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விடுக்கும் வேண்டுகோள்

தமிழர்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் அதன் கீழான மாகாண சபை முறைமையையும் தமது அரசியல் வேணவாக்களைப் பூர்த்தி செய்யும் தன்மையற்றது என தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்துள்ளனர். 2009 இற்கு முன்னர் எமது தாயகத்தில் நடந்த இரண்டு (1989, 2008) மாகாண சபைத் தேர்தல்களை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் புறக்கணித்திருந்தன. 2012இல் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டது. எதிர்வரும் செப்டம்பர் 21 அன்று  நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுகின்றது.

தமிழ் சிவில் சமூகத்தைச் சேர்ந்த நாம் 13ஆவது திருத்தத்தை தமிழர்களின் பிரச்சனைகளுக்கான ஒரு அரசியல் தீர்வல்ல என உறுதியாக கருதுகின்றோம். அது அரசியல் தீர்விற்கான ஆரம்பப் புள்ளி தானும் இல்லை என்பதே எப்போதும் எமது நிலைப்பாடு. கட்சிகளை முன்னிலைப்படுத்தும் அரசியலைக் கடந்து, தமிழர் தரப்பு அரசியல் தொடர்ந்தும், இருப்புக்கான தேசிய அபிலாசைகள் மற்றும் கொள்கை வழிப்பட்டதாக அதனூடான விழிப்புணர்வையும் மக்கள் எழுச்சியையும் நோக்கியதாகவே இருக்க வேண்டும், அதற்காக செயற்பட வேண்டும் என்பதே எமது நோக்கம்.

எனினும் வட மாகாணசபைத் தேர்தலில் அரசு சார்பு கட்சியொன்று ஆட்சியமைக்கின்ற சூழ்நிலையைத் தவிர்க்கும் பொருட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் தமது ஏகோபித்த ஆதரவை இத் தேர்தலில் தெரிவிப்பது அவசியம்தான் என நாம் கருதுகின்றோம்.

தமக்கெதிராக இழைக்கப்படும் அட்டூழியங்களிற்கு எதிராகத் தமது எதிர்ப்பைக் காட்டுவதற்காக தமிழ் மக்கள் தேர்தல்களில் பங்குபற்ற வேண்டும் என்பதனால் நாம் மக்களை இத் தேர்தலில் பங்குபற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுக்கின்றோம். 

எமது நிலம், பொருளாதாரம், கல்வி, கலை, கலாசாரம், பண்பாடு போன்ற தமிழரின் தனித் தேசத்திற்குரிய கூறுகள் யாவற்றையும் அழிக்கும் சிறிலங்கா அரசின் தொடர்ச்சியான இனவழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தோடு ஒத்தியங்கும் கட்சிகளைத் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என நாம் வேண்டுகிறோம். தொடரும் இனவழிப்பின் ஒரு அங்கமாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்களைக் காவு கொண்ட இந்த இனப்படுகொலை அரசிற்கோ அதனது கொள்கைகளுக்கோ வக்காலத்து வாங்கும் கட்சிகளுக்கோ மக்கள் வாக்களிப்பது வரலாற்றுத் தவறாகிவிடும். 

‘அபிவிருத்தியையே தமிழ் மக்கள் கோருகிறார்கள் உரிமைகளையல்ல’ எனக்கூறி தமிழ் மக்களது  உரிமைகளை மறுதலிக்கின்ற காட்டிக்கொடுப்பு அரசியலை நாம் தொடர்ச்சியாக நிராகரித்தாக வேண்டும். இன்று அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுவதாகச் சொல்லப்படும் அபிவிருத்திகள் எல்லாமே எமது தேசத்தின் சுயாதீனமான இருப்பிற்குச் சவால் விடுக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. சிங்கள தேசம் தமிழ்த் தேசத்தின் 
பொருளாதாரத்தைக் கபளீகரம் செய்யும் வகையிலான அபிவிருத்தியே தமிழ்த் தேசத்தில் இடம்பெறுகின்றது. 

தமிழ் மக்களது இயலுமைகளை வளர்த்தெடுக்கும் வகையிலான, தமிழ் மக்களை பலமான சமூகமாக வளர்த்தெடுக்கும் அபிவிருத்தி இங்கு இடம்பெறவில்லை என்பதனைக் கவனிக்க வேண்டும். அரசும் அதன் ஆதரவாளர்களும் எம்மிடமிருந்து பறித்தவற்றை மீளத்தருவதற்கும்,  அழித்தவற்றை மீளக்கட்டித்தருவதற்கும் விலையாக தமிழரின் ஆன்மாவாகவும், இருப்புக்கு மூலாதாரமுமாக உள்ள தேசிய அபிலாசைகளை எம்மை கைவிடச் சொல்கின்றனர். 

ஆகவே வாக்களிக்கும் தகுதியுள்ள அனைத்துத் தமிழ் மக்களும் அரசின் நிகழ்ச்சித் திட்டத்தை நிராகரிக்கும் ஆயுதமாக தமது வாக்குச் சீட்டைப் பயன்படுத்துவது அவசியமானதாகும். எங்கள் வாக்குகளை அறிந்தவர் ஊரார், உறவினர், நண்பர் என்ற காரணுங்களுக்காகவோ அல்லது அபிவிருத்தி, அனைவரும் சமம் என்ற மாயாமாலங்களில் மயங்கியோ அரச மற்றும் அரச ஆதரவுக்கட்சிகளுக்கு வழங்கி நிரந்தர தீர்வு ஒன்றுக்கு வழியேதும் காணாமல் எம்மீது திணிக்கப்படும் தேர்தல்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பில் முன் யோசனையுடனும் தூர நோக்குடனும் செயற்படுவது இற்றைக் காலத்தில் தமிழ்த் தேசிய அரசியலின் முன்னகர்வுக்கு மிகவும் அத்தியாவசியமானது. எமது உரிமைக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களை தறுக்கணிக்கக் கூடிய மாகாண சபை முறைமைக்கான தேர்தல் தொடர்பில் நாம் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும். 

குறிப்பாக மாகாண சபை முறைமைக்கும் அரசியல் தீர்வுச் செயன்முறைக்கும் இடையிலான உறவு நிலை தொடர்பில் கூட்டமைப்பு தெளிவான நிலைப்பாட்டை தமது தேர்தல் அறிக்கை மூலம் முன்வைக்காமை எமக்குக் கவலையளிக்கின்றது. குறிப்பாக சமஷ்டியை நோக்கிய நகர்வில் மாகாண சபையில் பங்குபற்றுவது முதற்படியாக இருக்கும் என்ற த.தே.கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையின் பகுதிகளை மக்களையும் சர்வதேசத்தையும் தவறாக வழிநடத்தும் ஒரு ஆபத்தான – பிழையான செய்தியாக நாம் கருதுகின்றோம்;.

13ஆம் திருத்தத்திற்குள் எமது தேசிய அரசியலை முடக்கும் தமிழ்த் தேசிய நலன்களுக்கு எதிரானவர்களின் முயற்சிகளுக்கு த.தே. கூட்டமைப்பின் இத்தகைய நிலைப்பாடு வலுச்சேர்த்து விடுமோ என அஞ்சுகின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து, பின் உங்கள் விருப்பு வாக்குகளை வழங்கும் போது தமிழ்த் தேசிய 

அரசியலின் பால் உண்மையான பற்றும் உறுதியும் கொண்ட த. தே. கூ. வேட்பாளர்களைத் தெரிவு செய்து வழங்குவதும் எமது அமையவிருக்கும் மாகாண சபையிடம் எவ்வித நிரந்தர அதிகாரங்களும் இல்லை என்பதைத் தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தேர்தல் காலத்தில் மாகாண சபை மூலமாக செய்யக் கூடியவை தொடர்பில் வேட்பாளர்களால் முன்வைக்கப்படும் அதிகப் பிரசங்கித்தனங்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். ஆளுநரை மாற்றுவதாலோ அல்லது 13ம் திருத்தத்தில் உள்ளதாகக் கூறப்படும் அதிகாரங்களை முழுமையாகப் பெற்றுக்கொள்வதாலோ தமிழ்மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்திசெய்துகாள்ள முடியாது. தொடரும் இன அழிப்பிலிருந்து பாதுகாப்பேதும் பெற்றுக்கொள்ளவும் முடியாது என்ற உண்மையை நாம் மறக்கக்கூடாது.

வட மாகாண சபையில் போட்டியிடுவதற்கான நோக்கம் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க மாகாண சபை ஓர் ஆரம்பப் புள்ளிதானும் இல்லை என்பதனை நிரூபிப்பதற்காகவாகவும் இருக்க வேண்டும். வடமாகாண சபையில் வெற்றி பெற்றவுடன் குறிப்பிட்ட கால வரையறையுடனான மாகாண சபைக்கான வேலைத் திட்டத்தினை வரைந்து, அதனைப் பகிரங்கமாக முன்வைத்து, அவ் வேலைத்திட்டத்தின் கணிசமான பங்கு நிறைவேற்றப்பட முடியாதவிடத்து தொடர்ந்து த.தே.கூ மாகாண சபை நடவடிக்கைகளில் பங்கெடுப்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதை தமது தந்திரோபாயமாக வைத்திருக்க வேண்டும் என கூட்டமைப்பிடம் நாம் வலியுறுத்துகின்றோம். 

அதே வேளை த.தே.கூட்டமைப்பு தனக்குக் கிடைக்கும் வாக்குகளை மக்கள் ஆணையாகக் கருதி தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்கான வெளிப்படுத்தல்களை செய்யக்கூடிய ஒரு அரசியல், சமூக வெளியை உருவாக்கி, அவர்களுக்கு பக்கபலமான நிறுவனமாக இயங்க வேண்டுமென நாம் த. தே. கூட்டமைப்பிடம்; கோரி நிற்கின்றோம்.

எமது அரசியல் தீர்வுக்கான அடுத்த கட்டப் போராட்டம் மாகாண சபை முறைமையிலிருந்து பிறப்பெடுக்கமாட்டாது. தமிழ் மக்களை ஒரு பொறுப்பான அரசியல், சமூக அணி திரட்டலுக்கு உட்படுத்துவதிலும், தமிழ்த் தேசத்தின் சமூகக் கட்டுமானங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், சர்வதேச பூகோள அரசிலைச் சரியாகக் கையாளும் முறையிலுமே எமது அரசியல் தீர்வுக்கான போராட்டத்தின் வெற்றி தங்கியுள்ளது.  த. தே. கூடட்மைப்பு இத் தேர்தலில் தமக்கு மீண்டும் தமிழ் மக்கள் வழங்கும் ஆணை தமிழர்களுக்கான  இத்தகைய ஒரு அரசியல் வெளியை மாகாணசபை முறைமைக்கு வெளியில் உருவாக்குவதற்கான ஆணையென்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த வெளியை மக்களுக்கு வழங்கி மக்கள்திரள் அரசியலை கட்டி எழுப்புவதுதான் த.தே. கூட்டமைப்பின் முதன்மைப் பணியாக இருக்க முடியும்.

தமிழகமும் புலம்பெயர்ந்த தமிழர்களும் இன்று ஈழத்தமிழர்களின் பலமாக இருப்பவர்கள். எம்மீது உண்மையான கரிசனை உள்ளவர்களும் இவர்களுள் உள்ளார்கள்;. இன்று எமது இருப்புக்கு சிறிய அளவிலேனும் கிடைக்கின்ற பாதுகாப்புக்கு காரணமான உலகினது பார்வையை எம்மீது திருப்பி வைத்திருப்பவர்கள் இவர்கள். நாங்கள் விரும்பியும் பேச முடியாது மௌனிகளாக இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் போது எமது அபிலாi~களைப் பேசுபவர்கள் அவர்கள். அவர்களுக்கு உரிய நன்றிகளுடனும் கௌரவத்துடனும் அவர்களையும் இணைத்துக்கொண்டு எமது அரசியலைப் பலப்படுத்தக்கூடிய வேலைத்திட்டத்தை செயற்படுத்த வேண்டியது த. தே. கூட்டமைப்பின் முக்கியமான பணியாகும். மாறாக இந்த உறவை பலவீனப்படுத்தக் கூடாது. இதன் மூலமே அவர்களது உண்மையான கரிசனைக்கும் எமது உரிமைக் கோரிக்கைகளுக்கும் எம்மால் வலுச்சேர்க்க முடியும் என்று நாம் நம்புகின்றோம்.

எமது தமிழ்த் தேசிய அரசியல் அபிலாசைகளுக்கு எதிரானவர்களுக்கும் உரிமைகளைக் கேட்டதற்காக எமக்கு அவலங்களைத் தந்தவர்களுக்கும் அவர்களுக்கு துணை போனவர்களுக்கும் எதிரான உங்கள் எதிர்ப்பு வாக்குகளைப் பதிவு செய்யும் வகையில் 2013 செப்டம்பர் 21 சனிக்கிழமை அன்று நாம் அனைவரும்  வாக்களிப்பில் பங்குபற்றி தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களிப்போம் என உறுதி கொள்வோம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.