‘எமது மக்கள் சிங்கள இனவாத அரக்கர்களால் கொன்று குவிக்கப்படும்போது, முழு உலகமுமே கவலை கொள்ளலாம், கண்டனங்கள் தெரிவிக்கலாம், கண்ணீர் வடிக்கலாம். ஆயினும், எமது மக்களைப் பாதுகாத்து அவர்களது சுதந்திரத்தை வென்றெடுக்கும் மாபெரும் பொறுப்பு, விடுதலைப் போராளிகளாகிய எம்முடையது என்பதை, நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.
தமிழீழத்தின் தேசியத் தலைவர் தீர்க்கதரிசனமாகக் கூறிய வார்த்தைகளை இன்று நாம் கண்கூடாக நிதர்சனமாகக் காண்கின்றோம்.
சனல்-4 மீண்டும் ஒரு தடவை தமிழர்களின் அழிவுகளை ஜெனீவாவில் ஆதாரங்களுடன் முன்வைத்திருக்கின்றது. No fire Zone ஆவணப்படத்தைப் பார்த்த பல நாட்டுப் பிரதிநிதிகளையும் அதிலுள்ள காட்சிகள் உலுப்பியெடுத்துள்ளன. ‘இப்படியெல்லாம் கொடுமைகள் இலங்கையில் நடந்தனவா?’ என வாய்விட்டுக் கேட்குமளவிற்கு அவர்களிடம் இந்த ஆவணப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்கள் மீதான தங்களது கரிசனையையும் வெளிப்படுத்தியுள்ளார்கள். ஆனால், தமிழர்களுக்கு நேர்ந்த பேரழிவைப் பார்த்து அதிர்ந்தவர்களாலும், அழுதவர்களாலும் தமிழர்களுக்கு ஒரு சிறு தீர்வைத்தன்னும் அல்லது அதற்கான நீதியைப் பெற்றுத்தந்தவிட முடியுமா..?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் கடந்த ஆண்டு அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் சிறீலங்காவிற்கு எதிரானதுபோன்றும், தமிழர்களுக்கு நீதியை வழங்கப்போவதுபோன்றும் பூதாகரமாகக் காண்பிக்கப்பட்டது. ஆனால், இறுதியில் கொலையாளிகளே தங்களைத் தாங்கள் விசாரித்து வெளியிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணையில் வந்த முடிவை நடைமுறைப்படுத்துமாறும், அதற்கு ஒருவருட கால அவகாசம் வழங்குவதாகவும் அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானம் கூறியது.
ஆனால், அதனை ஏதோ சிறீலங்காவிற்கு வரப்போகும் ஆபத்துப்போலவும், முறியடிக்க வேண்டும் என்றும் அப்போதும் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. ஆனால் அந்தத் தீர்மானத்தில் சொல்லப்பட்ட எதனையும் சிறீலங்கா நிறைவேற்றவில்லை என்பது மட்டுமல்ல, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர்தான் தமிழின அழிப்பில் மிகத்தீவிரமாக இறங்கியது. தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்து, காலாச்சாரங்களைச் சீரழித்து, சிங்கள பௌத்த விகாரைகளைப் பெருக்கி தமிழர் தாயகத்தை சிங்கள தேசமாக மாற்றியமைக்கும் காரியத்தை மிகவும் வெளிப்படையாகச் செய்தது.
தமிழர்களின் ‘ஜனநாயக வழியிலான போராட்டங்களை’ கழிவெண்ணை ஊற்றியும், கிறீஸ் பூதங்களை அனுப்பியும் தடுத்ததுடன், தமிழர்கள் காணாமல் போவதும், மர்ம மரணங்களும், பாலியல் வன்முறைகளும் தொடரவே செய்தன. எனினும், தீர்மானத்தைக் கொண்டுவந்த அமெரிக்காவோ, அல்லது தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் அமைப்போ இதனைக் கண்டுகொள்ளவும் இல்லை, தடுக்கவும் முனையவில்லை.
இந்நிலையில்தான், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர இருக்கின்றது. இத்தீர்மானம் சிறீலங்காவை பெரும் ஆபத்துக்குள் தள்ளிவிடுவதுபோலவும், தமிழர்களுக்கு சார்பானது போலவும் பாசாங்கு செய்யப்படுகின்றது. ‘யானை வரும் என்று காத்திருந்தால், பூனை வந்ததுபோல’ இம்முறை அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானமும் கடந்தமுறையைப் போல ஒரு புஸ்வானம்தான் என்பதைக் கசியும் செய்திகள் உறுதிப்படுத்தி வருகின்றன.
கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையே அதாவது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பதையே இம்முறையும் குறிப்பிட்டுள்ளதுடன், ஐந்து விடயங்கள் உள்ளடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
1) ஐ.நா. மனிதவுரிமை ஆணைக்குழுவின் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கையை இந்தத் தீர்மானம் வரவேற்கிறது.
2) போரின் போதான கற்கைகள் மற்றும் இனங்களின் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் ஆரோக்கியமான பரிந்துரைகளை விரைவாகச் செயற்படுத்துதல், இலங்கைத் தீவின் அனைத்துப் பிரசைகளிற்கும் நீதி, சமத்துவம், மீளிணக்கம், பொறுப்பாற்றல் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான சுயாதீன நடைமுறையை ஏற்படுத்துதல்
3) மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியோரின் சுயாதீனச் செயற்பாடுகள் தொடர்பாக ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்களிற்கு சிறீலங்கா உத்தியோகபூர்வமாக பதிலிறுக்க வேண்டுதல், சுதந்திரமாக கருத்துக்கூறல், தனிநபர்களின் ஒன்றுகூடுதலிற்கான உரிமை, நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள், விசாரணையற்ற கொலைகள், சிறுபான்மையினரின் விவகாரங்கள், காணமற் போதல் தொடர்பான விவகாரங்கள் மற்றும் பெண்களிற்கெதிரான வன்முறைகள் தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுத்தல்
4) மனிதவுரிமை ஆணைக்குழு இது தொடர்பாக விடயங்களில் சிறீலங்காவிற்கு தேவையான ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்குதல்.
5) மேற்கண்ட விவகாரங்களில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்து அடுத்த மனிதவுரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் இது தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் அவையின் மனிதவுரிமை ஆணையகம் சமர்ப்பித்தல்.
ஆகியனவே அமெரிக்கா முன்வைக்கவுள்ள தீர்மானங்கள் என்று தெரியவந்துள்ளது. அதாவது சிறீலங்கா ஆட்சியாளர்களுக்கு ஏற்கனவே கொடுத்த அவகாசத்தை மேலும் ஓராண்டு காலம் நீடிப்பதே தற்போது வரப்போகும் தீர்மானம். இதை நிறைவேற்றத்தான் தனக்கு ஆதரவான நாடுகளை வளைத்துப்பிடிக்க அமெரிக்காவும், தங்களுக்கு ஆதரவான நாடுகளை வளைத்துப்பிடிக்க சிறீலங்காவும் கடுமையாக முயற்சிக்கின்றனவாம்.
சிறீலங்கா மனித உரிமை மீறல்களில், போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டியே அந்நாட்டின் மீது நடவடிக்கை எடுக்க முனைகிறது அமெரிக்கா. ஆனால், போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் சிறீலங்காவின் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஐ.நா. சபையின் சிறீலங்காவுக்கான வதிவிடப் பிரதிப் பிரதிநிதியாக இருக்கின்றார். அந்த இராணுவத் தளபதியிடம்தான், பயங்கரவாதத்தை எவ்வாறு வெற்றி கொள்வது என்பது தொடர்பில் அமெரிக்கக் கடற்படையினர் பயிற்சிக் கருத்தரங்குகளை எடுக்கின்றனர்.
எனவே, தமிழர்களுக்கான நீதியையோ அல்லது நியாயத்தையோ யாருமே பெற்றுத்தந்துவிடப்போவதில்லை. தங்கள் சுய இலாபங்களுக்காகவே இந்த உலகம் சுழன்றுகொண்டிருக்கின்றது. விடுதலைப் புலிகளை அழித்தவிட்டதால் தமிழர்களின் போராட்ட குணம் அழிந்துவிடும் என்று சிங்களமும் அதற்குத் துணைபோபவர்களும் எண்ணுகின்றனர்.
ஆனால், மாடு இழைத்தாலும் கொம்பு இளைக்காது என்பதைத் தமிழ் மக்கள் புரியவைக்கவேண்டும். சோர்வின்றி தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போராட்டங்களின் மூலமே தமிழ் மக்கள் தங்களுக்கான நீதியை மட்டுமல்ல, அதனூடாக விடுதலையையும் பெறமுடியும். எமக்கான விடுதலைக்கு நாமே போராடவேண்டும். இதனையே தமிழீழத் தேசியத் தலைவர் அன்றே தீர்க்கதரிசனமாகச் சொல்லியிருக்கின்றார்.
நன்றி: ஈழமுரசு
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.