Hi Friend, Get paid 72 times per day!

My Advertising Pays, It Pays To Be On M.A.P!

Saturday, May 05, 2012

விடுதலைப் போராட்டத்தை நான் காட்டிக் கொடுத்ததென்பது அப்பட்டமான பொய்!- கே.பி. பேட்டி

தமிழர் விடுதலைப் போராட்டத்தை நான் ஒருபோதும் காட்டிக் கொடுக்கவில்லை. அப்படிச் சொல்வது அப்பட்டமான பொய் என விடுதலைப் புலிகளின் ஆயுத முகவராகச் செயற்பட்டுவந்தவரும் தற்போது இலங்கை அரசின் பாதுகாப்பில் உள்ளவருமான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்தார்.
யாழ் உதயனின் சகோதரப் பத்திரிகையான "சுடர்ஒளிக்கு' வழங்கிய செவ்வியிலேயே அவர் இப்படிக் கூறினார். அந்தக் கேள்விக்கு அவர் வழங்கிய பதில் இங்கே

கே: தமிழ் மக்கள் மனங்களில் உள்ள முக்கியமான கேள்வியொன்றை நான் கேட்க விரும்புகிறேன். அதை பகிரங்கமாக கேட்டு உங்கள் பதிலையும் பகிரங்கப்படுத்த வேண்டியது எனது ஒரு பொறுப்பு என்றும் கருதுகின்றேன்.

தமிழர் விடுதலைப் போராட்டத்தை நீங்கள் இறுதி நேரத்தில் காட்டிக் கொடுத்துவிட்டீர்கள்? நீங்கள் துரோகி என்பது தான் தமிழர்களின் மனநிலை. உங்களின் பதில் என்ன? நீங்கள் குற்றவாளியா, இல்லையா?
ப: பிரபாகரன் என்னும் எனது உயிர் நண்பனுடன் சேர்ந்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தவர்களில் நானும் ஒருவன். நானே அந்த இயக்கத்தை ஆரம்பித்து எனது வாழ்நாளில் 30 வருடத்திற்கும் மேலான காலத்தை அதற்காகச் செலவிட்டிருக்கிறேன்.

நான் ஒரு மரக்கொப்பில் இருந்துகொண்டு அந்தக் கொப்பை நானே வெட்டுவேனா?

முதலாவதாக, ஒரு ஆத்மரீதியான உறவு அந்தப் போராளிகளுக்கும், எனக்குமிடையில் இருந்தது. இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டைப் பார்த்தால் நான் எனது தாயைக் காட்டிக்கொடுத்தது போல் தான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நான் எனது வாழ்க்கையில் சந்தித்த ஒரேயொரு உயிர் நண்பன் பிரபாகரன். அவரைக் காட்டிக் கொடுத்ததாக சொல்வது அப்பட்டமான பொய். தமிழர்களைப் பொறுத்தவரை போர் ஏன் தோற்றது என்பது புரியாத புதிராக இருக்கிறது.

பிரபாகரனை அவர்கள் கடவுளாகப் பார்த்தார்கள். அரசனாகப் பார்த்தார்கள். அவர் தோற்க மாட்டார் என்று அவர்கள் மனதில் வைத்துவிட்டார்கள். திடீரென்று தோற்றுவிட்டார். இதற்கு என்ன காரணம். யாரோ பின்னணியில் இருந்து காட்டிக்கொடுத்துவிட்டார்களோ என்று சந்தேகம். இதில் புலம்பெயர் சமூகத்தில் இருக்கும் ஒருசில குழப்பவாதிகள் கே.பி. தான் இதற்கு காரணமென இலகுவாகக் கூறிவிட்டனர். அதனை அப்பாவி மக்களின் ஒருசிலரும் நம்பி கே.பி. தான் காட்டிக்கொடுத்டதுவிட்டாரோ என்று நம்புகின்றனர்.

நான் மலேசியாவில் ஒரு அறைக்குள் தனியே இருந்தேன். பிரபாகரன் இங்கு எத்தனை தளபதிகள், எத்தனை ஆயுதங்கள் எத்தனை தாங்கிகளுடன் நின்றிருந்தார். நான் மலேசியாவிலிருந்து காட்டிகொடுத்து அவர் போரில் தோற்றார் என்பது நிஜம் அல்லவே!

யதார்த்தமாக நீங்கள் சிந்தியுங்கள். கருணா வெளியேறினார். கருணா வெளியேறியவுடன் பிரபாகரன் தோற்றாரா? கருணாவுக்குத் தெரியாத விடயங்கள் எனக்குத் தெரிந்ததா? இல்லையே... கருணா தலைவரின் பக்கத்தில் இருந்தவர். அவர் விலகும்போது அவரால் பிரபாகரனை அழிக்க முடிந்ததா? இல்லையே. இதே குற்றச்சாட்டை முன்வைக்கும் அரசியல்வாதிகள் தான், பிரபாகரன் மீண்டும் வருவார் என்கின்றனர்.
ஒரு பக்கத்தில் கே.பி. காட்டிக்கொடுத்துதான் பிரபாகரன் அழிந்துவிட்டார் என்றும் கூறும் அதே ஆட்கள்தான் மறுபுறம் பிரபாகரன் மீண்டும் வருவார், மீண்டும் போர் வெடிக்கும் என்று கூறுகின்றனர்.

இவர்கள் உண்மையைப் பேசுவதில்லை. அதுதான் முக்கியமான காரணமேயொழிய வேறொன்றுமில்லை. இதை நினைக்கும் போதே மனதுக்கு கவலையாக இருக்கிறது. நான் நேரத்துக்கு நேரம் ஒரு கதை பேசி இருப்பவன் அல்ல. எனது மக்களுக்காக 35 வருடகாலமாக வேலை செய்துகொண்டிருப்பவன்.

இவர்கள் போல் நேரத்துக்கு நேரம் பேசும் மனிதன் அல்ல. அப்படியான சூழலில் நான் வளரவும் இல்லை. அரசியல்வாதிகள் போல் பொய்கூறி நான் மக்களிடம் செல்லவும் இல்லை. இது ஒரு அப்பட்டமான பொய்..

கே: போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தீர்களா என்று நான் கேட்டபோது நீங்கள் பதிலளிக்கையில் உங்களது கண்கள் கலங்குவதைக் கண்டேன். அந்த கேள்விக்கு பதிலளிக்கும்போது ஏன் அந்த உணர்ச்சிபூர்வம்?

ப: (மீண்டும் கண்கலங்குகிறார்) மனித வாழ்க்கை அற்புதமானது. எனது வாழ்க்கையை எனது மக்களுக்காக அர்ப்பணித்துள்ளேன். ஆனால், இவர்கள் கூறும் அப்பட்டமான குற்றச்சாட்டு. எனது நட்பையே வியாபாரமாக பார்க்கிறது. அது வியாபாரம் அல்ல.... அது அரசியல் அல்ல... அவற்றிற்கும் அப்பாற்பட்டது. ஆத்மரீதியான நட்பு. அதனை இவர்கள் கொச்சைப் படுத்துகின்றனர். (நா தழுதழுக்கிறது) இதனை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கே: பிரபாகரன் உங்கள் நல்ல நண்பன் என்கிறீர்கள். திரும்பி வரமாட்டார் என்கிறீர்கள். அவரின் மறைவு தமிழர்களின் அரசியல் அல்லது அரசியல் போராட்டத்தில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதா?

ப: அந்த பிரபாகரனின் தலைமைத்துவத்தைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது உண்மை. காரணம் இது அரசியல் போராட்டம் மட்டுமல்ல. அவர் உருவாக்கிய சமூக கட்டமைப்பு பல சீர்குலைந்துவிட்டன. இன்று பார்த்தீர்களானால் யாழ்ப்பாணத்தில் அல்லது வன்னியில் எத்தனையோ சமூக விரோத செயல்கள் மலிந்து போயுள்ளன. ஆனால், அவர் இருக்கும்போது அவை நடக்கவில்லை. தமிழ் மக்களுக்குரிய சரியான தலைமைத்துவம் இல்லாமல் போயிருக்கிறது. அது கவலைக்குரிய விடயம். இதனை நிவர்த்தி செய்வது அவ்வளவு இலகுவான காரியமல்ல.

கே: மக்கள் சேவைக்காக உங்களை அர்ப்பணித்துள்ளதாகக் கூறுகிறீர்கள். அந்தச் சேவையை ஒருபடி மேலே சென்று செய்வதற்காக அரசியலுக்கு வரும் நோக்கம் எதுவும் இருக்கிறதா?

ப: என்னைப் பொறுத்தவரை நான் இப்போது செய்வது மனிதாபிமான சேவை. அரசியலில் நான் இறங்கும்போது இவை பாதிக்கப்படும். இது வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கப்படும். என்னைப் பொறுத்தவரை அரசியலில் நான் நாட்டமில்லாதவன். மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்பதே எனது இலட்சியம். ஆனால், இந்த மக்களைத் தொடர்ந்து தமிழ் அரசியல் தலைமைகளும், தமிழ்நாட்டு அரசியல் பிரமுகர்களும் ஏமாற்றி, வாட்டி வதைப்பார்களானால் நான் சிலதை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவேன்.

கே: நீங்கள் நேரடியாக அரசியலுக்கு வரப் போகின்றீர்கள் என நான் எடுத்துக்கொள்ளலாமா?

ப: அது நேரடியாகவா, மறைமுகமாகவா என்பதை முடிவாக என்னால் சொல்ல முடியாது. ஆனால், இந்த மக்களைக் காப்பாற்ற வேண்டிய ஒரு கடப்பாடு எனக்குள்ளது. அது அரசியலில் இறங்கித்தான் செய்ய வேண்டுமென்றால் வேறு வழியில்லை. இறங்கித்தான் ஆக வேண்டும். மக்களைத் தொடர்ச்சியாக இப்படியான அவலத்தில் வைத்திருக்க முடியாது.

கே: தேவைப்பட்டால் நீங்கள் அரசியலுக்கு வருவீர்கள் என்கிறீர்கள். அது வட மாகாணசபைத் தேர்தலாக இருக்குமா?

ப: ( சத்தமாகச் சிரிக்கிறார்) நீங்கள் பெரிய குண்டையே தூக்கிப் போடுகின்றீர்கள். அப்படி எதனையும் இதுவரை என் மனதில் யோசிக்கவில்லை. இன்றுவரை இல்லை. ஆனால், எனது மக்களைக் காப்பாற்ற வேண்டிய தேவை வந்தால், தொடர்ந்தும் எமது மக்களைத் தமிழ்த் தலைவர்கள் ஏமாற்றினால், அதுதான் ஒரே வழியென்றால் நான் மறு பரிசீலனை செய்துதான் ஆகவேண்டும் என்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.