Saturday, March 03, 2012

சர்வதேசத்தை மூன்று வருடங்களாகக் காத்திருக்க வைத்துள்ள இலங்கை அரசு

இலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் நிலைத்த சமாதானத்தை காணமுடியாது என்று கூறியுள்ள அமெரிக்கா ஆனால் காலம் கடந்துகொண்டிருக்கிறது என்றும் கவலை தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைக் கவுன்ஸிலின் 19 வது கூட்டத்தொடரில் உரையாற்றிய அமெரிக்காவின் பிரதிநிதியான பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான அமெரிக்க அரசுத்துறை சார்நிலைச் செயலரான மரியா ஒட்டேரோ அவர்கள் சர்வதேச சமூகம் இலங்கை விவகாரத்தில் மூன்று வருடங்களாக நடவடிக்கைகளுக்காக காத்துக்கிடப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை மனித உரிமைக் கவுன்ஸிலில் உரையாற்றிய அவர் சிரியா பர்மா வடகொரியா உட்பட பல விடயங்கள் குறித்து அறிக்கை ஒன்றைப் படித்தார்.

'' எங்களது கடந்த கால அனுபவங்களின் படி நல்லிணக்கம் மற்றும் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கான பொறுப்புக்கூறல் ஆகியவை இல்லாமல் நிரந்தர சமாதானம் எங்கும் ஏற்பட முடியாது. ஆனால் இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை காலம் கடந்துகொண்டிருக்கிறது என்று அமெரிக்கா கவலை கொள்கிறது'' என்றார் அவர்.

''இலங்கையின் நடவடிக்கைகளுக்காக சர்வதேச சமூகம் சுமார் மூன்று வருடங்கள் காத்துக்கிடந்தது. இலங்கையின் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நாங்கள் வரவேற்கின்றோம். அதேவேளை அந்த அறிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டாக வேண்டும்'' என்றும் ஒட்டேரோ கூறினார்.

''2009 ஆம் ஆண்டில் போர் முடிந்தது முதல் இந்த விடயங்கள் தொடர்பாக நாங்கள் இலங்கையுடன் இரு தரப்புப் பேச்சுக்களை நடத்தி வருகின்றோம். அவர்களுடன் தொடர்ந்து சேர்ந்து பணியாற்றவும் தயாராக இருக்கிறோம். இந்த சபையில் தற்போது எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் அங்கு அமைதிக்கான விதைகளை விதப்பதாக இருக்க வேண்டும்'' என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை அணிசேரா நாடுகளின் சார்பில் பேசிய எகிப்திய பிரதிநிதிஇ இலங்கை தனது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்கு முன்பாக இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானம் தேவையற்றது என்றும் கூறியுள்ளார்.

இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை மனித உரிமைக் கவுன்ஸில் விவாதத்துக்கு எடுக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை கூறியுள்ளார்.

ஐநா நிபுணர் குழுவில் கூறப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறல் போன்ற விடயங்களில் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை சில குறைபாடுகளை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.மனித உரிமைகளுக்கு மதிப்புக்கொடுக்கும் வகையில் நாட்டு மக்களின் அச்சங்களை தீர்த்து வைக்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.