Thursday, March 08, 2012

இராஜதந்திரிக்களின் கருத்தறியும் உப மாநாட்டினை அமெரிக்கா நடத்தியது: இந்தியா மௌனம், எகிப்பு எதிர்ப்பு , பிரான்ஸ் ஆதரவு.

சிறிலங்கா தொடர்பிலான தனது பிரேரணையினை, ஐ.நா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா முன்வைத்திருந்த நிலையில், இன்று வியாழக்கிழமை இது தொடர்பிலான உப மாநாடொன்றினை ஐ.நா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா நடாத்தியிருந்தது.
இந்த உப மாநாட்டில் 25 நாடுகள் பங்கெடுத்திருக்கின்றன.
மனித உரிமை அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், ஐ.நா அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், இராஜதந்திரிகள் மற்றும்தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் என பலரும் பங்கெடுத்துள்ளனர்.

 அமெரிக்காவின் இந்த உப மாநாடு குறித்து, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி தெரிவிக்கையில் சிறிலங்கா உட்பட 25 நாடுகள் இதில் பங்கெடுத்திருந்தனர். சிறிலங்காவின் தரப்பில் மொகன் பீரிஸ் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். சபையில் சமர்பிக்கப்பட்ட பிரேரணை குறித்த கருத்துக்களை அமெரிக்காக கேட்டறிந்து கொண்டது.

அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக இந்த உப மாநாட்டில் பங்கெடுத்திருந்த நாடுகளில் நோர்வே, சுவிஸ், பிரான்ஸ், டென்மார்க், கங்கேரி , போலந்து , சுவீடன் , ஒஸ்றேலியா,பிரித்தானியா, ஒஸ்றியா , கனடா , போர்துக்கல் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் தங்களின் ஆதரவினை தெரிவித்திருந்தன.

பாகிஸ்தான் , றஸ்யா , கியூபா, சீனா ,எகிப்து , தாய்லாந்து , பிலிப்பைன்ஸ், அல்ஜீரியா , இந்தோனிசியா , சிம்பாவே ஆகிய நாடுகள் எதிர்பினை தெரிவித்திருந்தன.

மேற்குறிப்பிட்ட நாடுகளில் கனடா மற்றும் சிம்பாவே ஐ.நா மனித உரிமைச் சபையில் அங்கத்துவம் இல்லாத நாடுகளாக உள்ளன.
குறிப்பாக அணிசேரா நாடுகளே அமெரிக்காவின் குறித்த பிரேரணைக்கு எதிர்ப்பினை காட்டியுள்ளமை உணரக்கூடியதாக இருந்தது.
இதில் குறிப்பாக இந்தியா எந்தவித கருத்தினையும் தெரிவிக்காது மௌனத்தை கடைப்பிடித்தது.

மேலும் குறிப்பிட்ட சில நாடுகள், இவ்விவகாரத்தை சிறிலங்காவே பார்த்துக் கொள்ளும் என கூறியிருந்தன.

அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த நாடுகள், இந்த பிரேரணையை கொண்டு வருவதற்கு பொருத்தமான தருணம் இதுவல்லவென தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, சிறிலங்காவின் பிரதிநிதி மொகன் பீரிஸ் கருத்து தெரிவிக்கும் போது, சிறிலங்காவின் இறையாண்மைக்குள் தலையிடும் செயலாகவே இந்தப் பிரேரணை இருப்பதாக கூறியதோடு, சிறிலங்காவே தனது உள்நாட்டு விவகாரத்தை கையாண்டு கொள்ளும் என தெரிவித்திருந்தார்.

உப மாநாட்டின் ஒட்டுமொத்த நிலையினையும் காணும் போது, அமெரிக்கா தனது பிரேரணையில் உறுதியாக இருப்பதை உணரக்கூடியதாக இருந்ததோடு, அடுத்து வரும் நாட்கள் சிறிலங்காவுக்கு நெருக்கடி மிகுந்ததாகவே இருக்கும் என்பதனை இந்த உப மாநாடு உணர்த்தியுள்ளதாக தெரிவித்தார்.

தகவல்துறை அமைச்சகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.