Friday, March 09, 2012

புலிகள் ஆதரவாளர்களை வெல்ல முடியவில்லை: ஒப்புக்கொள்ளும் இலங்கை

தாம் மனித உரிமை ஆர்வலர்கள், என்று சொல்லிக்கொண்டு புலிகள் இயக்க ஆதரவாளர்களும் அனுதாபிகளும் உலகப் பரப்பு முழுவதும் செயல்பட்டு வருவதாக விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பேச்சாளரான விக்ரமசூரிய தொடர்ந்து குறிப்பிடுகையில், பல தமிழர்கள் தம்மை அரசியல்வாதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் என்று தெரிவித்து, பல மேற்குலக அரசியல்வாதிகளைச் சந்தித்து அவர்களைத் தம்பக்கம் இழுத்துவருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இல்லாத பொல்லாத கதைகளை இவர்கள் அரசியல்வாதிகளுக்கும் , எம்.பிக்களுக்கும் சொல்லி அவர்கள் மனத்தை மாற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந் நடவடிக்கையானது படுவேகமாக நடைபெறுகிறது என்று அவர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையை இரண்டாகப் பிரிக்கவே இவர்கள் இந் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர் என்று குறிப்பிட்ட விக்ரமசூரிய, இவர்கள் தற்போது அவுஸ்திரேலியாவிலும் தமது ராஜதந்திர நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம் என்று குறிப்பிட்ட அவர், புலிகளை தாம் யுத்தரீதியாக வென்றபோதிலும் அவர்கள் அனுதாபிகள் மற்றும் ஆதரவாளர்களை தம்மால் கட்டுபடுத்த முடியவில்லை என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். கனடா, லண்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மன், மற்றும் சுவிஸ் போன்ற நாடுகளில் அவர்களின் செல்வாக்கு அதிகமாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதாவது, அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் வேடிக்கையானவை. காரணம் ஆயுதங்களை எடுத்துப் போராடிய விடுதலைப் புலிகளை பல உலக நாடுகள் பயங்கரவாதப் பட்டியலில் இட்டதே தவிர, அவர்களை அரசியலில் ஈடுபடக்கூடாது என்று எந்த ஒரு நாடும் சொல்லவில்லை. ஆனால் விக்ரமசூரிய அரசியலில் ஈடுபடும் தமிழர்களையும் புலிகள் என்று கூறி அவர்களும் பயங்கரவாதிகள் என்கிறார். இதனை மேற்குலகம் எவ்வாறு ஏற்றுக்கொள்ளும் ?

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.