Monday, March 05, 2012

இலங்கையைக் காப்பாற்ற இந்தியா அமெரிக்காவுடன் பேச்சு! விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டது வொஷிங்டன்!

போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசு பொறுப்புக் கூறும் கடப்பாட்டை வெளிப்படுத்தவேண்டும் என வலியுறுத்தியும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கோரியும் இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை தொடர்பில் தளர்வுப் போக்கைக் கடைப்பிடிக்குமாறு அமெரிக்காவிடம் இந்தியா இராஜதந்திர அடிப்படையிலான வேண்டுகோளை விடுத்துள்ளது என மிகவும் நம்பகரமாகத் தெரியவருகின்றது.

இதற்கமைய ஜெனிவாவில் நிலைகொண்டுள்ள டில்லி அரசின் இராஜதந்திரிகள் குழாம், அமெரிக்காவின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இலங்கை விவகாரம் தொடர்பில் முக்கியமான பேச்சுகளை நடத்தியுள்ளது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜெனிவா மாநாட்டில் இலங்கையை ஆதரிக்கப் போவதாக சீனா உத்தியோகபூர்வமாக அறிவித்ததை அடுத்தே, இந்தியா தனது மௌனத்தைக் கலைத்துள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையைத் தாம் பகைத்துக்கொண்டால், சீனாவின் பிரசன்னம் இலங்கையில் மேலோங்கிக் காணப்படும் என்றும், கொழும்புக்கும் டில்லிக்கும் இடையிலான பொருளாதார ரீதியிலான உறவில் விரிசல் என்றும் இந்திய அரசு கருதியதாலேயே இவ்வாறானதொரு முடிவை அந்நாடு எடுத்துள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேற்குலக நாடுகளுக்கும், இலங்கைக்கும் இராஜதந்திர போர் உக்கிரமடைந்துள்ள தற்போதைய பரபரப்பான சூழ்நிலையில், இலங்கை விவகாரம் தொடர்பில் வொஷிங்டனுடன் பேச்சுகளை முன்னெடுத்துள்ள இந்தியா, கொழும்புக்கு எதிரான பிரேரணையைத் தடுத்துநிறுத்தும் வகையில் காய்நகர்த்தலில் ஈடுபட ஆரம்பித்துள்ளது என்றும் கூறப்படுகின்றது.அத்துடன், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு கால அவகாசம் வழங்குமாறும் இந்தியா அந்நாட்டிடம் கோரியுள்ளது.

உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர், இலங்கை அரசு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுத்துவரும் அபிவிருத்தி நடவடிக்கை, மீள்கட்டுமான செயற்பாடுகள், புனர்வாழ்வு உட்பட கொழும்புக்குச் சாதகமான வகையிலான காரணிகளையும் இந்தியா மேற்குலகத்திடம் எடுத்துரைத்துள்ளது என்றும் அறியமுடிகின்றது.அதேவேளை, இந்தியாவின் கோரிக்கையை நிராகரிக்கும் வகையில் அமெரிக்காவின் பதில் அமைந்துள்ளது என இராஜதந்திர மட்டத்திலான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசு, சர்வதேசம் வழங்கிய சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்தத் தவறிவிட்டது. எனவே, இனிமேலும் கால அவகாசத்தை வழங்க தாம் தயாரில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ள அமெரிக்கா, பிரேரணை சபைக்கு வந்தேதீரும் என ஆணித்தரமாக இடித்துரைத்துள்ளது என்றும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

அமெரிக்கா தனது கோரிக்கையை நிராகரித்ததால், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய உறுப்புநாடுகளுடன் பேச்சுகளை நடத்துவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது என அறியமுடிதுள்ள போதும், அது குறித்து உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
 
 
எது எப்படியிருப்பினும், இலங்கை தொடர்பிலான பிரேரணை, வாக்கெடுப்புக்கு விடப்படும்போது அதனை 25இற்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவளிப்பதற்கான சாத்தியப்பாடுகளே ஜெனிவாவில் மேலோங்கிக் காணப்படுகின்றன என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் 10ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் உறுப்புநாடொன்று பிரேரணையொன்றை சமர்ப்பிக்கவேண்டுமாயின், மாநாடு நிறைவடைவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னரே அது குறித்து அறிவிக்கவேண்டும். அந்த அடிப்படையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை 19ஆம் திகதி சமர்ப்பிக்கப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.