Sunday, March 04, 2012

60 வருடமாக இன அழிப்புச் செய்யும் சிங்களம் தமிழர்களுக்கு நீதியை வழங்குமா? - தாயகத்தில் இருந்து இளங்கீரன்

தமிழர்களின் அரசியலுரிமைப் போராட்டத்தின் மூன்றாம் நிலைப்போராட்டம், விடுதலை யுத்தத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. கடந்தகாலம் கொடுத்திருக்கின்ற வலிகளுடனும், கனதியான வரலாற்று உண்மைகளின் அடிப்படையிலும், இந்த மூன்றாம் நிலைப்போராட்டம் முற்றுமுழுதாக இராஜதந்திர ரீதியானதாகவே அமையவேண்டும் என்ற வரலாற்று நியதி இன்று எங்கள் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதுவே எமது தேடலுக்கு நிரந்தமானதொரு விடையைப் பெற்றுக் கொடுக்கும் எனவும் நாம் நம்புகின்றோம்.

இதற்காக ஆயிரமாயிரம் மாவீரர்களும், இலட்சக்கணக்கான மக்களும் சிந்தியிருக்கும் உறைய உதிரத்திற்கும், எல்லாவற்றுக்கும் மேல் தலைவனுக்கும் வாழும் போராளிகளிற்கும் தமிழினம் கடமைப்பட்டிருக்கின்றது.
அவர்கள் நடந்து சென்ற தடங்களைத் தாண்டியோ, தவிர்த்தோ எமது இலக்குகளை நோக்கி எம்மால் ஒருபோதும் பயணிக்க முடியாது. இந்த உண்மையும், உணர்வும் சிலர் சொல்லிக் கொள்வதைப்போன்று இல்லாமல், எல்லா மக்களிடமுமே உள்ளார்ந்தமாக இருக்கின்றது.


ஆனால் இந்த இராஜதந்திரப் போரை தாங்கிச் செல்கின்றவர்கள், மக்களிடம் உண்ட சோற்றுக்கு இரண்டகம் நினைக்கின்றார்களோ என்ற எண்ணப்பாடும் எமக்கின்று எழுந்திருக்கின்றது.
 
 
நாம் முன்னரே குறிப்பிட்டிருந்தோம், யாரையும் விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணம் எள்ளளவும் எமக்கு கிடையாது. எமது இனத்திற்கு ஒரு நிம்மதியான வாழ்வு கிடைக்கவேண்டும் என்ற ஆசை, வெறி ஆழமாக பதிந்து கொண்டதால் சில விடயங்களை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

நாம் யாரைப் பற்றிப்பேசிக் கொண்டிருக்கின்றோம் என்ற விடயம் புரிந்திருக்கும், நிச்சயமாக கூட்டமைப்பை பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றோம். எமது அரசியலுரிமைப் போராட்டத்தை இராஜதந்திர ரீதியாக கொண்டு நகர்த்தும் பொறுப்பை தமிழர்கள் கூட்டமைப்பின் கைகளிலேயே கொடுத்திருக்கின்றார்கள்.
இந்த நிலையில் எவ்வாறாக தமிழரின் அங்கீகாரத்தை கூட்டமைப்பு பயன்படுத்திக் கொள்கின்றது என்பதை பற்றி தெரியாமலேயே உள்ளது. இலங்கைக்குள் தமிழ் - சிங்கள இனங்கள் எப்போதுமே ஒன்றினைந்து வாழ முடியாது, அந்நியர் இந்த நாட்டிற்குள் வரும்போதே இலங்கையில் வட-கிழக்கு தனித்துவமான இராசதானிகளாக இருந்தது என்பதை நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டும், அதன் பின்னர் அந்நியர்கள் தமது நிர்வாக நடவடிக்கைகளை சுலபமாக்குவதற்காக இலங்கையை ஒரு நிர்வாக அலகிற்குள் கொண்டுவந்தார்கள்.
 
 
தமிழர்கள் எப்போதும் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்ந்த வரலாறுகளே கிடையாது என ஆய்வாளர்கள் தெளிவு படுத்துகின்றனர். எனவே கடந்த காலத்தை மறந்துவிட்டு, ஒரு தேசம், ஒரே மக்கள் என்ற கதையின் கீழ் தமிழ் சிங்கள இனங்கள் ஒன்றிணைந்து வாழ்வதென்பது எப்போதுமே சாத்தியப்படாதவொரு கதை.
 
 
இந்த நிலையில் எம்மை நாம் ஆளக்கூடிய சுதந்திரமான வாழ்வையே நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம். அதைத் தேடிப் பெற்றுக்கொள்ளுவோம். அதற்கு எமக்கு போதுமானளவு தகுதியும் இருக்கின்றது. நாம் ஒரு இறைமையுள்ள தேசம். சிறுபான்மை இனமோ, வந்தேறு குடிகளோ கிடையாது. இந்த நாட்டில் எமது இறைமை மறுக்கப்பட்டிருக்கின்றது.

நாம் ஒரு தனித்தேசம் என்றவகையில் எமது சுயங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றது. எனவே நாம் கூட்டமைப்பிடம் ஒரு கேள்வியை கேட்கவிரும்புகின்றோம். கடந்த அறுபது வருடங்கள் மிகக் கொடுமையான இன அழிப்பை மேற்கொண்டிருந்த சிங்களம், இனிமேல் மட்டும் எப்படி எமக்
கென்றொரு நிரந்தரமான தீர்வைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றது. நிச்சயமாக கிடையாது.
13வது திருத்தத்தை அமுல்ப்படுத்தப்போவதுமில்லை, சமக்ஷ்டி முறைக்கு உடனப்படப் போவதுமில்லை, அதற்குமேல் அதிகாரப்பகிர்வுக்கு ஒருபோதும் உடன்படப்போவதுமில்லை.
இந்த நிலையில் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் கூட்டமைப்பு பேசிக் கொண்டிருப்பதன் பொருளின் அர்த்தம் என்னதானோ? 13வது அரசியலமைப்பை நாம் புறக்கணிக்கின்றோம், அதில் எதுவுமே கிடையாது எனக் கூறும் கூட்டமைப்பு, நாம் புறக்கணிக்கின்றோம் என்பதற்காக அதை முழுதாகத் தூக்கிவீசி விடவில்லை. சந்திரிகா காலத்தில் 13வது அரசியலமைப்பு அமுல்ப்படுத்தப்பட்டிருந்தது என்று கதைவேறு சொல்கின்றது.
 
 
இதற்கிடையில் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு 13வது வழியல்ல எனவும் கூறுகின்றது. எனவே இதன் பொருள் என்ன? அடிப்படையில் தேசியம், சுயநிர்ணம் போன்ற சொற்பதங்கள் அர்த்தமற்ற சூசகவார்த்தைகள் என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.
 
 
இவையெல்லாம் எதற்காக சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற உண்மை எமக்குப் புரியவில்லை. இராஜதந்திரம் என்பதற்காக உண்மைகளை விற்றுவிட முடியாது, 13வதை நிராகரிக்கின்றோம், நிராகரிக்கவில்லை என்பதற்கு கூட்டமைப்பிடம் உறுதியான பதில்கிடையாது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வவுனியாவில் கூட்டமைப்பிற்கும், சிவில் சமுகத்திற்குமிடையில் நடைபெற்ற சந்திப்பொன்று இந்த உண்மையை தெளிவு படுத்தியிருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் பொறிமுறை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமே ஒருங்குபட்ட கருத்துக்கள் இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.
 
 
இதுபோக பேச்சுவார்த்தைகளில் கடந்தகால தீர்வுப் பொதிகள் குறித்துப் பேசிக் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. அந்த தீர்வுப் பொதிகள் உருவாக்கப்பட்ட காலத்திலேயே நிராகரிக்கப்பட்ட வரலாறும், அதன் மூலம் சர்வதேசத்திற்கு தமிழர்களும், விடுதலைப் புலிகளும் பயங்கரவாதிகளாக காட்டப்பட்ட கசப்பான வரலாறுகளும் எமக்கு இன்னமும் மனக்கண்ணில் நிற்கின்றது.

நாம் ஒரு விடயத்தை சரியாகவும், தெளிவாகவும் புரிந்துகொண்டேயாகவேண்டும். அன்றும், இன்றும், என்றும் இலங்கையில் ஆட்சியில் பௌத்த பேரினவாத சிங்கள அரசாங்கமே ஆட்சியில் உட்கார்ந்திருக்கப்போகின்றது.

இந்த அரசாங்கங்கள், எப்போதும் தமிழரை நிம்மதியாக வாழவிடப்போவதில்லை. ஒரே நாடு, ஒரே மக்கள் என்று கூறிக் கொண்டிருக்கும்போதே, இலங்கை படைகள் ஆங்காங்கே தமது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொள்கின்றன. மேலும் தற்போது அரசு காத்துவரும் அமைதி சர்வதேசத்தில் இன்று அதற்கு எழுந்துள்ள தலைவலிகளை நிவர்த்தித்துக் கொள்வதற்காகவே. மற்றப்படி தமிழர்கள் மீது அதற்கு எந்தக் கரிசனையும் கிடையாது.

எனவே கடந்த 60 வருடம் இந்த நாட்டில் சிங்கள இனம் தமிழர்கள் மீது மேற்கொண்டிருந்த இன அழிப்பு நடவடிக்கைக்கு பதில் சொல்லும் வகையில் சர்வதேசம் சிறீலங்கா அரசை விசாரிக்கவேண்டும். அதன் மூலம் இறைமையுள்ள ஒரு தேசம் முடக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட விடயம் தெளிவு படுத்தப்பட்டு இலங்கையில் தனக்கென தனித்துவமான மொழி, கலை, கலாச்சாரம், பண்பாட்டு அடையாளங்கள், பாரியமான நீண்டகால வாழ்நிலம் ஒன்றுள்ளது என்ற அடிப்படையில் நாம் தனித்துவாழ அனுமதிக்கப்பட வேண்டும்.

அதுவே எமக்கு நிரந்தரமான நிம்மதியை பெற்றுக் கொடுக்க முடியும். அதையே எமது தலைவரும், உன்னதமான மாவீரர்களும், போராளிகளும் தங்கள் மனங்களில் சுமந்தார்கள், கூட்டமைப்பு மட்டுமல்ல புலம்பெயர்ந்த தமிழர்களும் அதற்காகவே போராடுங்கள்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.