Friday, March 16, 2012

“இலங்கையில் ஆட்சி மாறினால் தான் முன்னேற்றம் காணமுடியும்” ஜான் ஹோம்ஸ்

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் போர்க்காலத்தில் நடந்த்தாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விஷயங்களில் பொறுப்பு கூறுவது குறித்த பிரச்சினையில் முன்னேற்றம் காண முடியும் என்று ஐ.நா மன்றத்தின் மனிதநேய விவகாரங்களுக்கான முன்னாள் துணைத் தலைமைச் செயலர் சர் ஜான் ஹோம்ஸ் கூறியிருக்கிறார்.

இலங்கையில் நடந்த்தாக்க் கூறப்படும் இந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் விஷயத்தில், சர்வதேச சமூகமும் ஐ.நா மன்றமும் மேலும் அதிகமாக செய்ய வேண்டியிருக்கிறது என்ற ரீதியில் எழும் கருத்துக்களுக்கு பதிலளித்த சர் ஜான் ஹோம்ஸ், இதைவிட அதிகமாக என்ன செய்யமுடியும் என்று கூறுவது தற்போதைக்கு கடினமாக இருக்கிறது, ஐநா மன்றத் தலைமைச்செயலர் நியமித்த வல்லுநர்கள் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துவிட்ட்து. அது வெளிப்படையாக பொதுமக்கள் பாவனையில் இருக்கிறது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், இப்போது மேலதிகமாக ஏதாவது செய்யவேண்டும் என்றால் அதற்கு இலங்கை அரசின் ஒத்துழைப்பு கிடைக்காது என்பதுதான் இப்போதுள்ள பிரச்சினை என்றும் அவர் கூறினார்.

“இந்த விசாரணைகள் மூலம் சர்வதேச நாடுகள் தன்னைக் குறிவைப்பதாக இலங்கை அரசு நம்புகிறது; அவர்களை இதில் யாரும் குறி வைக்கவில்லை. ஆனால் அவர்களின் கடந்தகால நடவடிக்கைகள்தான் இந்த விசாரணைகள் கவனம் செலுத்தும் கருப்பொருள். எனவே அவர்கள் இந்த முயற்சிகளுக்கு, அதாவது ஒரு புதிய விசாரணைக்கு, முழுதாக ஒத்துழைக்கமாட்டார்கள். எனவே நாம் இந்த அரசு மாறும்வரை பொறுத்திருக்கவேண்டும். அதன் பின்னர் வரும் புதிய அரசில் இருப்பவர்கள் இதற்கு ஒத்துழைத்தால்தான் நாம் உண்மைகளை வெளிக்கொண்டுவரலாம்”, என்றார் ஜான் ஹோம்ஸ்.

சர்வதேச சமூகம் அமைதியாக இல்லை

ஆனால் ஆட்சியில் இருக்கும் அரசு ஒத்துழைக்கவில்லை என்பதற்காக சர்வதேச சமூகம் அமைதியாக இருந்துவிடமுடியுமா என்று கேட்டதற்கு, சர்வதேச சமூகம் அமைதியாக இருந்துவிடவில்லை என்றார் ஜான் ஹோம்ஸ். “ஐநா மன்ற வல்லுநர் குழு இது தொடர்பில் தனது அறிக்கையை சமர்பித்தது. பல தன்னார்வக் குழுக்கள் அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன.

அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு அறிக்கை தந்திருக்கிறது. சேனல் 4 தொலைகாட்சியின் விவரணப்படம் கூட இதன் ஒரு அங்கம்தான். ஐ.நா மன்ற மனித உரிமைக் கவுன்சில் இதை ஒரு முறை ஆராய்ந்திருக்கிறது. எனவே சர்வதேச கவனம் இதில் இருக்கிறது. பிரச்சனை என்னவென்றால் இந்தப் பிரச்சினைகள் நடந்த இடத்தில் இருக்கும் அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. இது கவலையளிக்கும் ஒரு விஷயம் ஆனால் அதுதான் தற்போதைய யதார்த்தம்” என்றார் ஹோம்ஸ்

ஆனால் போருக்கு பிந்தைய காலகட்டத்தில் இவர் கூறும்ப் பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் போரின் இறுதிக்கட்டத்தில், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்ட்டபோது, சர்வதேச சமூகம், குறிப்பாக ஐ.நா மன்றம் சரியாகத் தலையிடவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனம் இருக்கிறதே என்று அவரிடம் பிபிசி கேட்டபோது, ஒரு இறையாண்மை பெற்ற அரசை, ஐநா மன்றம் , அந்த அரசின் விருப்பத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்த முடியாது என்று விளக்கமளித்தார் ஜான் ஹோம்ஸ்.

“இலங்கை விவகாரத்தில் ஐ.நா மன்ற பாதுகாப்பு கவுன்சிலில் கருத்தொற்றுமை இல்லை. ரஷ்யாவும் சீனாவும் இந்த விஷயத்தில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்படுவதற்கு தயாராக இல்லை. எனவே ஐ.நா மன்றத்தின் உறுப்பு நாடுகளிடையே கருத்தொற்றுமை இல்லாத நிலையில், ஐ.நாவால் நடவடிக்கை எடுக்க முடியாது” என்றார் ஜான் ஹோம்ஸ்.

மேலும் ஐ.நா மன்றம் பொதுமக்கள் உயிர்ச்சேதங்களைத் தவிர்க்கும் நோக்கத்தில், இலங்கை அரசை, அந்த யுத்தப் பகுதியில் கனரக போர் ஆயுதங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு வற்புறுத்திக்கொண்டிருந்ததாக கூறிய ஜான் ஹோம்ஸ், இலங்கை அரசோ அந்தப்பகுதியில் சாதாரணப் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்றே கூறிக்கொண்டிருந்ததாகவும், ஆனால் அது உண்மையல்ல என்றும் கூறினார்.

அதேசமயம், ஐநா மன்றாம் விடுதலைப்புலிகளிடமும், சாதாரணப் பொதுமக்களை விடுவியுங்கள் என்று கூறிக்கொண்டிருந்ததாவும் தெரிவித்தார். “ஏனென்றால் அதுவும் ஒரு அடிப்படையான பிரச்சினை.

சாதாரண மக்கள் அவர்களின் விருப்பத்துக்கு எதிராக அங்கே பிடித்து வைக்கப்படிருந்தார்கள். ஐ.நா மன்றம் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்துகொண்டிருந்தது. ஆனால் ஐ.நாவிடம் ஒரு அதிசயத் தீர்வு இருந்தது என்ற கருத்து உண்மையான கருத்தல்ல” என்றார் ஜான் ஹோம்ஸ்.

இது ஒரு புறமிருக்க, போர் முடிந்து இரண்டாண்டுகளுக்கு மேலாகியும், அங்கே போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மனித நேய உதவிகள் கூட சரியாகத் தரப்படவில்லை.

இந்த சிறிய விஷயத்தில் கூட ஐ.நா மன்றமோ சர்வதேச சமூகமோ தமிழ் மக்களுக்கு உதவ முடியவில்லை என்ற கருத்து பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று பிபிசி கேட்டதற்கு பதிலளித்த ஜான் ஹோம்ஸ், “ஐ.நா மன்றம் தமிழ் மக்களுக்கு பெரிய அளவில் உதவியிருக்கிறது, ஐநா மன்றம்தான் அரசிடம் பேசி, போர் நடந்த பகுதிகளிலிருந்து வெளியேறும் மக்களுக்கு நிவாரண முகாம்களை அமைக்குமாறு வலியுறுத்தியது.

 அங்கே அவர்கள் சுந்தந்திரமாக நடமாட முடியவில்லை என்பது போன்ற பிரச்சினைகள் இருக்கத்தான் செய்தன. அந்தப் பிரச்சனைகளுக்கு ஒரு சில மாதங்களில் தீர்வு காணப்பட்டது. அவர்களில் பெரும்பாலோனோர் தங்கள் வீடுகளுக்கு இப்போது திரும்பிவிட்டார்கள்”, என்று தெரிவித்தார்.(பி.பி.ஸி)

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.