Thursday, March 01, 2012

இந்தியா தமிழர் சார்பு நிலையை எடுக்கவேண்டும் – எக்கொனமிக்ஸ் சஞ்சிகைக்கு உருத்திரகுமாரன் பேட்டி!

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மிகக் கொடூரமான இராணுவத்தால் அடக்கி ஆளப்படும் சிறிலங்காத் தமிழர்களின் குரல்கள் இன்னமும் மௌனமாகவே உள்ளன. குறிப்பாக சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிறிலங்காவில் உள்ள தமிழ் மக்களின் குரல்கள் தொடர்ந்தும் நசுக்கப்படுகின்றன.

ஆனால் தாய்நாட்டை விட்டு புலம்பெயர்ந்து வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தாம் ஓர் அணியில் ஒன்று திரள்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்குவதற்கான தேர்தல்கள் புலம்பெயர்ந்து 12 நாடுகளில் வாழும் சிறிலங்காத் தமிழர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டன. இத் தேர்தலின் மூலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் [TGTE] பிரதமராக உருத்திரகுமாரன் விசுவநாதன் தெரிவு செய்யப்பட்டார்.

இது வரையில், TGTE எந்தவொரு நாட்டாலும் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் செயற்படும் அமைப்புக்களின் ஆதரவை TGTE பெற்று வருவதாக நியூயோர்க்கில் வசிக்கும் விசுவநாதன் தெரிவித்துள்ளார்.

TGTE ஆனது தீவிரவாத அமைப்பு என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்து வருகிறது. ஆனால், ஜனநாயக வழிமுறையின் ஊடாக சிறிலங்காத் தமிழர்களுக்கு அமைதியான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்காக போராடுகின்ற அமைப்பாகவே TGTE உள்ளதாக அதன் பிரதமர் விசுவநாதன் தெரிவித்துள்ளார். 54 வயதான விசுவநாதன், தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்தியாவை தளமாகக் கொண்ட The Economic Times ஊடகத்தின் செய்தியாளர் Ullekh NP உடன் மேற்கொண்ட நேர்காணலின் விபரம் வருமாறு:

கேள்வி: உங்களுடைய செயற்பாட்டுத் திட்டங்கள் எவை?

பதில்: தற்போது, சிறிலங்காத் தமிழர்களின் அரசியல் அவாக்கள் அவர்களது சொந்த நாட்டில் மறுக்கப்பட்ட நிலையிலேயே வாழ்கின்றனர். அத்துடன் இவர்களது அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா அரசாங்கமானது சட்ட ரீதியான தடைகள், இராணுவ ஆக்கிரமிப்புக்கள், கொலைகள் போன்றவற்றை மேற்கொள்வதன் ஊடாக, தமிழ் மக்களின் அரசியல் அவாக்கள் மற்றும் அவர்களுக்கான உரிமைகளை வழங்காது அவர்களது குரல்களை நசித்து வருகிறது. ஜனநாயக வழிமுறையின் ஊடாக அரசியற் போராட்டம் ஒன்றை நடாத்தி, சிறிலங்காத் தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதை நோக்காகக் கொண்டே புலம்பெயர் தமிழர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கியுள்ளனர்.

கேள்வி: இந்தியாவில் நீங்கள் தனியான கிளை அலுவலகத்தைக் கொண்டுள்ளீர்களா?

பதில்: இந்தியாவில் TGTE இன் ஆதரவுடன், அதன் ஒருங்கிணைப்பு மையம் மற்றும் தமிழ் இளையோர், மாணவர் அமைப்பு என்பன உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலுள்ள பிரதிநிதிகளைக் கொண்டு TGTE க்கான நாடாளுமன்ற உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இந்திய செயற்பாட்டாளர்கள், கல்விமான்கள், பொது அமைப்புக்கள், உள்ளுர் அரசியல்வாதிகள் ஆகியோர்களின் ஆதரவையும் TGTE பெற்றுள்ளது.

கேள்வி: TGTE ஆனது தனது இலக்கை அடைந்து கொள்வதற்குத் தேவையான அனைத்துலக சமூகத்தின் ஆதரவை எவ்வளவு தூரம் வெற்றி கொண்டுள்ளது என நீங்கள் நம்புகிறீர்கள்?

பதில்: அனைத்துலக சமூகமானது சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொண்ட நிலையில், ‘பாதுகாப்பு வலயத்தில்’ அமைந்திருந்த வைத்தியசாலை மீது சிறிலங்கா இராணுவத்தால் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்காவின் வடபகுதியில் அமைந்துள்ள முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட மனிதப் படுகொலை தொடர்பில் அனைத்துலக சமூகமானது தனது கவனத்தை திசைதிருப்பிய நிலையில், சிறிலங்கா அரச இயந்திரமானது திட்டமிட்ட வகையில் இவ்வாறான படுகொலை நடவடிக்கைகளை மேற்கொண்டது தொடர்பான உண்மைகளை அனைத்துலக சமூகமானது கண்டறிந்து கொண்ட நிலையில், தமிழ் மக்களின் அடையாளங்களை முற்றாக அழிப்பதற்காக சிறிலங்கா அரசாங்கமானது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது தொடர்பில் அனைத்துலக சமூகமானது தனது கவலை தெரிவித்த நிலையில், அனைத்துலக சமூகமானது எமக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

ஐ.நா வல்லுனர் குழுவின் அறிக்கை, பிரித்தானியாவின் சனல் 04 தொலைக்காட்சி சேவையால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட ஆவணப்படம் என்பன ஏற்கனவே அனைத்துலக சமூகத்தின் மனச்சாட்சியை தட்டி எழுப்பியுள்ளன. வருகின்ற நாட்களில், சிறிலங்கா இராணுவத்தின் உயர் மட்ட அதிகாரிகளிடமிருந்து இறுதி யுத்த நடவடிக்கை தொடர்பாக மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிப்படுத்தப்படும்.

கேள்வி: TGTE இன் நோக்கங்கள் எவை? அவற்றை அடைந்து கொள்வதற்காக தங்களால் கைக்கொள்ளப்படும் திட்டங்கள் எவை?

பதில்: சிறிலங்காவிற்கு உள்ளே அமைதி வழியில், ஜனநாயக வழிமுறையைப் பயன்படுத்தி, தமிழீழம் என்கின்ற இறையாண்மை நாட்டை உருவாக்கிக் கொள்வதை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பே TGTE ஆகும். TGTE ஆனது ஆயுத வழியில் செயற்படுவதைத் தனது தெரிவாகக் கொண்டிருக்கவில்லை. எவ்வாறிருப்பினும், TGTE ஆனது தனது கொள்கை உரையில் குறிப்பிட்ட விடயங்களை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில், எவ்வாறான வழிமுறைகளை நாம் கையாளுவோம் என்பதை என்னால் தற்போது எதிர்வுகூற முடியவில்லை.

கேள்வி: இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியன TGTE விடயத்தில் எவ்வாறான கருத்துக்களைக் கொண்டுள்ளன?

பதில்: இந்நாடுகளிடமிருந்து பூரண அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கவில்லை. தமிழர் பிரதேசங்கள் மீது சிறிலங்கா அரசாங்கத்தால் பிரயோகிக்கப்படும் இறையாண்மையை வெளிப்படையாக எதிர்த்து நிற்கும் TGTE ஆனது அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளிடமிருந்து முற்றுமுழுதான, தெளிவான அங்கீகாரத்தை எதிர்பார்த்து நிற்கவில்லை. ஆனால் இந்நாடுகளின் அரசாங்கங்கள் சிறிலங்கா அரசாங்கத்துடனான தமது இராஜதந்திர ரீதியான உறவில் ஆழமான மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதையே நாம் கோரி நிற்கிறோம். எவ்வாறிருப்பினும், தென்னாசியாவில் நிகழும் பூகோள அரசியல் மாற்றங்கள், இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் நலன்கள், தமிழர் நலன்கள் என்பன ஒரு புள்ளியில் சந்திக்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

கேள்வி: இந்தியாவின் செயற்பாடுகள் தொடர்பில் திருப்தி கொண்டுள்ளீர்களா?

பதில்: தென்னாசியப் பிராந்தியத்தின் அதிகார சக்தியாக உள்ள இந்தியாவானது மிக முக்கிய பங்காற்ற வேண்டிய நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, ஐ.நா வல்லுனர் குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் அமுல்படுத்தப்படுத்துவது தொடர்பில் இந்தியாவானது அழுத்தம் கொடுத்திருக்க முடியும். சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்றை உடனடியாக உருவாக்க வேண்டும் என ஐ.நா செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவால் பரிந்துரைக்கப்பட்டது. அத்துடன் சிறிலங்கா அரசாலும் அதன் இராணுவத்தாலும் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் வல்லுனர் குழு பரிந்துரைத்தது. அத்துடன், யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மற்றும் காணாமற் போனவர்களுக்கான மரண சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் எனவும், யுத்தத்திலிருந்து மீண்டெழுந்த அனைவருக்கும் உளவியல் ரீதியான ஆற்றுப்படுத்தல் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தமிழ் மக்களின் கலாசார விழுமியங்கள் மதிக்கப்படுவதுடன், பாரம்பரிய வழக்காறுகள் பேணுவதற்கான அனுமதிகள் வழங்கப்பட வேண்டும் எனவும், இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் அவர்களது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கான உதவிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா வல்லுனர் குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

கேள்வி: இந்தியா, சிறிலங்கா மீது எவ்வாறான வெளிநாட்டுக் கொள்கையைக் கொண்டுள்ளது என நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: இந்து சமுத்திரத்திலும், சிறிலங்காவிலும் தற்போது சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை நாம் கவனத்திற் கொண்டுள்ளோம். இந்தியாவானது தனது உண்மையான நண்பர்கள் யார் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். 1971ல் இந்திய – பாகிஸ்தான் யுத்தம் இடம்பெற்ற போது, இந்தியாவுக்கு எதிராக தாக்குதலைப் புரிவதற்காக பாகிஸ்தான், கொழும்பு விமான நிலையத்தைப் பயன்படுத்திக் கொண்டது என்பதை இங்கு நினைவுபடுத்த நான் விரும்புகிறேன். சிறிலங்காத் தீவில் தமிழ் மக்கள் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டால், சிறிலங்காவில் இந்தியா தனது எந்தவொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாது. சிங்கள ஆய்வாளர்கள் சிலரும் இவ்வாறே தெரிவித்துள்ளனர். இன்னொரு வகையில் கூறுவதானால், பௌத்த சிங்களப் பேரினவாதிகளின் பார்வையில் தமிழர்கள் எதிரிகளாகவே பார்க்கப்படுகின்றனர். சிறிலங்காவை முன்னர் ஆண்ட அரசாங்கங்களுக்கும் இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கும் இடையில் பல்வேறு நிகழ்ச்சி நிரல்கள் திட்டமிடப்பட்டிருந்தன என்பதை நாம் துப்பறிந்து கொள்ள முடியாது.

கேள்வி: வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கில், ராஜீவ் காந்தியைக் கொலை செய்தமையானது தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த மிகப்பெரிய தவறு என நீங்கள் கருதுகிறீர்களா? இதனை வே.பிரபாகரன் ஏற்றுக்கொண்டாரா?


பதில்: ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக விசாரணை செய்வதற்காக உருவாக்கப்பட்ட Jain ஆணைக்குழுவால் சந்தேகங்கள் எழுப்பப்பட்டதையும், அவ் ஆணைக்குழுவால் உருவாக்கப்பட்ட பல்வேறு நன்நடத்தை கண்காணிப்பு குழுவின் செயற்பாடுகள் நிறைவுபடுத்தப்படவில்லை என்பதையும் இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டமை ஒரு ‘துன்பியல் சம்பவம்’ என மறைந்த அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தெரிவித்திருந்தார். எவ்வாறிருப்பினும், தமிழர் தேசம் மீண்டும் புத்துயிர் பெறுவதிலும், அதிகார சக்தி மிக்க இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பிலும் ஒருவரின் படுகொலையானது தடையாக இருக்கக் கூடாது. இவ்வாறான நடவடிக்கையானது இந்து சமுத்திரத் தீவில் ஏற்படும் பூகோள அரசியல் மாற்றத்தை இந்தியா தனது சொந்த நலனுக்காக முகங் கொடுப்பதற்குப் பயன்படுத்தப்பட மாட்டாது என நாம் நம்புகிறோம்.

கேள்வி: 2009 ல் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது புலிகள் தோற்கடிக்கப்பட்டதற்கான முக்கிய காரணங்கள் எவை?

பதில்: சிறிலங்கா அரசாங்கத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் இதயசுத்தியுடனேயே பேச்சுக்களை ஆரம்பித்தனர். சிறிலங்காவில் இடம்பெற்ற மோதலுக்கான காரணங்களை கவனத்தில் எடுக்காது, அனைத்துலக சமூகத்தால் முன்னெடுக்கப்பட்ட தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தமானது சிறிலங்காவின் அதிகார சமநிலையில் குழப்பத்தை உண்டுபண்ணியதாக, சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகள் தொடர்பாக நோர்வேயால் நவம்பர் 11,2011 அன்று வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையான Pawns of Peace Report இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிடமிருந்தும் நிதி, இராணுவ மற்றும் இராஜதந்திர ரீதியான ஆதரவுகளைப் பெற்றுக் கொள்வதற்காக ராஜபக்ச அரசாங்கம் மூலோபாய ரீதியான போட்டியில் ஊறுவிளைவித்தது” என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள அரசாங்கமானது தான் விரும்பியதை அடைந்து கொள்வதற்காக அனைத்தலக சமூகத்தினதும் இந்தியாவினதும் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டது.
எவ்வாறிருப்பினும், இனப்படுகொலை ஒன்றுக்கு உறுதுணையாக இருந்ததன் மூலம் இந்தியாவானது தனது தேசிய நலனில் எதையும் சாதித்திருக்கும் என நான் நினைக்கவில்லை. சிறிலங்கா மீது தாம் செல்வாக்குச் செலுத்த விரும்பவில்லை என்றும், ஆனால் தாம் அவ்வாறு செய்ய வேண்டியிருந்ததாகவும் இந்திய இராஜதந்திரிகள் கருத்தரங்குகளில் வெளிப்படையாகத் தெரிவித்தனர்.
இந்தியாவானது ஒரே வெளிநாட்டுக் கொள்கையை தொடர்ச்சியாகப் பயன்படுத்தியதன் மூலம் எதனையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதே கவலைக்குரிய விடயமாகும்.

கேள்வி: சிறிலங்காவில் கட்டவிழ்த்துவிடப்படும் இராணுவ நடவடிக்கைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக நீங்கள் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளீர்கள்?

பதில்: கேடுகாலமாக, சிறிலங்காத் தீவில் உண்மை, நீதி என்பன நிலைநாட்டப்படும் என்பதில் நம்பிக்கை கொள்ள முடியவில்லை. நல்வாய்ப்பாக, சிறிலங்காத் தீவுக்கு வெளியேயும் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இதில் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு சாட்சியமாக உள்ள முன்னாள் சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் பலர் மற்றும் அனைத்துலக இராஜதந்திரிகள் பலர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.

முதலாவதாக, சிறிலங்காவில் இடம்பெற்ற படுகொலைகளை நேரில் கண்டவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் சேகரிக்கப்படுகின்றன. இவர்களிடமிருந்து பெறப்படும் தகவல்களைப் பயன்படுத்தி சட்ட ரீதியான, கல்வி சார், பொது அமைப்புக்களின் ஊடாக போர் மீறல்கள் தொடர்பான உண்மையான நிலைப்பாட்டை வெளிக்கொண்டு வருவதே இரண்டாவது நடவடிக்கையாகும்.

மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.