Thursday, March 01, 2012

இலங்கைக் கெதிரான தீர்மானம் தோல்வியடையலாம்! முண்டுகொடுக்குமா கூட்டமைப்பு?! (செய்திப்பார்வை)

ஜெனீவாவில் நடைபெற்றுவருகின்ற மனித உரிமைகள் தொடர்பிலான மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற தீர்மானம் தோல்வியடையும் சாத்தியங்கள் உணரப்பட்டுவருவதாக இராஜதந்திரமட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மேலும் தெரியவருதாவது,

ஜெனீவாவில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற தீர்மானத்தினை எதிர்கொண்டு தோற்கடிப்பதற்கான தன்னாலான அனைத்து நடவடிக்கையிலும் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுவருகின்றது. இதன் அடிப்படையில் ஜெனீவாவில் கூடியிருக்கின்ற அரச பிரதிநிதிகள் நேற்று முன்தினம் 30 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கான விருந்துபசாரத்தினை முன்னெடுத்திருக்கின்றனர். குறித்த சந்திப்பின் போது இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டிருக்கின்றது.

அங்கு தெரிவிக்கப்பட்டவற்றின் சாராம்சம் வருமாறு,

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு மாதங்களே நிறைவடைந்திருக்கின்றன. குறித்த அறிக்கையில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசம் போதாமல் உள்ளது. இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு கணிசமான காலப்பகுதி தேவையாகும். எனவே இலங்கை மீது மேற்கொள்ளவுள்ள தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பில் உலக நாடுகள் மென்போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இலங்கை அரச தரப்பினரால் விருந்துபசாரத்தில் பங்குகொண்டவர்களிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டிருக்கின்றது.

இதனைவிடவும் தனித்தனியாக வெளிநாட்டுப் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுக்களில் ஈடுபட்டுவருகின்ற அரச தரப்புப் பிரதிநிதிகள் தாம் தெரிவிக்கும் கருத்துக்களை வலுப்படுத்துவதற்காக இலங்கையில் இருந்து சென்ற அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ் கட்சிகளின் பிரமுகர்களையும் கலந்துரையாடல்களில் பங்கேற்கச் செய்துவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் மட்டுமே உலக நாடுகளைச் சென்றடைவதால் அவற்றிக்கு எதிரான உண்மை நிலைப்பாட்டை விளக்குவுதற்கு தாயகத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஜெனீவா சென்றிருக்க வேண்டும் இல்லையேல் இலங்கை அரசு சந்திக்கவிருக்கின்ற நெருக்கடி நிலையில் இருந்து அதனைக் காப்பாற்றும் முயற்சியாகவே ஜெனீவாவிற்கான கூட்டமைப்பின் புறக்கணிப்பு அமையலாம் என்று நோக்கர்கள் கருத்து வெளியிட்டிருக்கின்றனர்.

பிந்திய தகவல்களின்படி ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்திற்கெதிரான தீர்மானத்தினை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை பெரும்பான்மையை எட்டவில்லை என்றும் இதனை மாற்றியமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலத்தை வீணடிக்காது ஜெனீவா செல்லுமா? அல்லது ஜெனீவா சென்றிருக்கின்ற தமிழ் கட்சிகளின் செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இலங்கையிலேயே காலூன்றிக்கொள்ளுமா?

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.