Thursday, March 01, 2012

25வது நாளாக தொடர்கின்ற நீதிக்கான நடைப்பயணம் Yverdon எனும் இடத்தை நாளை சென்றடைகின்றது

ஈழத்தமிழர்களுக்கான விடிவினைப்பெற்றுக்கொடுக்க உலகத்தமிழினமே சர்வதேசத்திடம் உண்மைகளை எடுத்துச்சொல்லி நீதிகேட்போம். எம்மோடு மார்ச் 5ம் திகதி அனைவரும் வாருங்கள் என்று அன்புரிமையோடு அறைகூவல் விடுத்து நீதிக்கான நடைப்பயணம் இன்று 25வது நாளாகவும் தொடர்கின்றது.

தமிழர் தாயகத்தில் பேரழிவுகளை கொடுத்து எம்மக்களை முட்கம்பிகளுக்குள் முடக்கிவைத்திருக்கும் சிங்கள அரசின் கொடுங்கோல் ஆட்சியினை உலகிற்கு அம்பலப்படுத்தி நிற்கதியாய் நிற்கும் எம் இனத்திற்கு சாதகமான பதிலைப் பெறுவதற்கு எல்லோரும் சிந்தித்துச் செயற்பட வேண்டிய நேரம் இதுவாகும்.

வன்னிப் பெருநிலப்பரப்பில் கொடுரமாக தாண்டவமாடிய சிங்கள அரசு அங்கு ஏதுவுமே நடக்கவில்லை என்றவாறு சர்வதேசங்களின் வாசற்படி ஏறி சிங்கள அமைச்சர்கள் நாடகமாடி வருகின்றனர். நடந்த கொடுரங்களை மறைக்க தமிழின துரோகிகளும் மும்மரமாக செயல்ப்பட்டு வருகின்றனர்.

அன்புக்குரிய தமிழ் உறவுகளே எங்களுக்கு நடந்த அநீதிகளை வீட்டுக்குள்ளேயே இருந்து எமக்குள்ளே பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை. தமிழர் தாயகத்தில் நடந்தது என்ன என்பதை உலக தமிழினம் ஒன்றுபட்டு ஒருமித்த குரலில் எடுத்துச்சொல்வோம் மார்ச் 5ம் திகதி வரலாற்றுக்கடமையுணர்வுடன் அனைவரும் திரண்டு வரவேண்டும் என்று இந்த நடைப்பயணத்தினை தொடர்கின்ற வேலுப்பிள்ளை மகேந்திரராஜா, லோகநாதன் மருதையா , மற்றும் ஜக்கமுத்து கிரேசியன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புலத்தில் வாழ்கின்ற உறவுகள் மார்ச் 5ம் திகதி ஐநாமுன்பு ஒன்றுகூடுவதற்கான பயண ஏற்பாடுகள் அந்தந்த நாட்டில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. எனவே காலத்தின் தேவைகருதி உங்கள் வருகையை உறதிப்படுத்தி கொள்ளுங்கள்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.