Thursday, March 22, 2012

நோர்வே ஈழத் தமிழர் அவை தனது விளக்கத்தை தெரிவித்துள்ளது !

நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஈழத்தமிழர் அவையினர் சந்திப்பு பற்றிய செய்தி ஒன்றை அதிர்வு இணையம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. மக்கள் தெரிவித்த சில விமர்சனங்களையும் நாம் இதன்போது வெளியிட்டு இருந்தோம். இது குறித்து நோர்வே ஈழத் தமிழர் அவை தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது. இதன் விபரம் பின்வருமாறு.

கடந்த 16 ஆம் நாள், நோர்வே ஈழத்தமிழர் அவை உறுப்பினர்கள் உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களுடன் இணைந்து நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை சந்தித்து சம கால அரசியல் நிலவரங்கள், நோர்வே எடுக்கவேண்டிய சர்வதேச நிலைப்பாடு, தமிழீழத்தின் இன்றைய நிலவரம் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்தினர். நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த இச்சந்திப்பின் பொழுது, எரிக் சொல்ஹைம் (சுற்றுச்சூழல் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர்), எர்னா சோல்பர்க் (எதிர்க்கட்சித் தலைவி, வலதுசாரி), காரின் வோல்செத் (நாடாளுமன்ற உறுப்பினர், முன்னேற்றக்கட்சி) மற்றும் வெளிநாட்டு அமைச்சின் ஆசிய தொடர்பாடல் குழுவினரோடும் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின்பொழுது, ஈழத்தமிழர் நிலங்களில் சிங்கள அரசு செய்யும் இராணுவமயமாக்கல், சிங்கள குடியேற்றங்கள், கலாச்சார இனவழிப்பு, தமிழ் மொழிச்சிதைவை திட்டமிட்டு செய்வது போன்றவற்றை விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் தமிழ் மீனவர்களை அச்சுறுத்தல் மற்றும் அவர்கள் வாழ்வாதாரங்களை அழித்தல் போன்ற கொடுஞ்செயல் புரிவது தொடர்பான தகவல்களையும் ஆதாரத்துடன் எடுத்துரைத்தனர். பாதுகாப்பற்ற நிலையில் 86000 போர் விதவைகள் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் வாழ்வும் எதிர்காலமும் கேள்விக்குறியாக இருக்கிறது என்பதை சர்வதேச சமூகம் கவனிக்கத் தவறியிருக்கிறது என்றும் எடுத்துரைத்தனர்.

மேலும், சமகால நிலவரம் தொடர்பான விவாத்தின்பொழுது, இலங்கை அரசின் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான சர்வதேச சுயாதீன விசாரணையை இவ்வுலக நாடுகள் முன்னின்று மேற்கொள்ள நோர்வே குரல் கொடுக்கவேண்டும் என்றும் இலங்கை அரசு வெளியிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பக்கச்சார்பான அறிக்கையை முழுமையாக எதிர்க்கிறோம் என்பதனை எடுத்துரைத்துனர். உலகத் தமிழர் பேரவையினருடன் இணைந்து நோர்வே ஈழத்தமிழர் அவை பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச அரசியல் பிரதிநிதிகளை சந்திக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது என்பதனையும் இவ்வேளையில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

இவண்,
ஊடகத்துறை,
நோர்வே ஈழத்தமிழர் அவை,
நோர்வே

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.