Thursday, March 01, 2012

இலங்கையில் இன்னும் கடத்தல், கொலை, சித்திரவதை தொடர்கிறது - சர்வதேச மன்னிப்புச் சபை.

மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சர்வதேசம் ஏற்கனவே கோரிக்கை விடுத்தபோதெல்லாம் அவற்றை நிராகரித்த இலங்கை அரசு மேலும் காலநேரம் கோருவதையிட்டு மனித உரிமை கண்காணிப்பகம் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது.

ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரின் ஆரம்ப நாளில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இலங்கையில் மனித உரிமை மீறல் மீறல் தொடர்பில் உள்நாட்டு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகக் கூறினார்.

இந்த நிலையில் மனித உரிமை விடயங்களில் காலம், நேரம் பற்றி இலங்கை கதைப்பது ஒன்றும் புதிய விடயம் அல்ல என சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை ஆய்வாளர் யொலன்டா பொஸ்டர் தெரிவித்துள்ளார்.

விசாரணை குறித்து மேலும் மேலும் வலியுறுத்திய போதெல்லாம் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை மீறிச் செயல்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையில் தற்போதும் கடத்தல், கொலை, சித்திரவதை தொடர்வதாக பொஸ்டர் கூறியுள்ளார்.

காணாமல் போனவர்கள், தடுத்து வைக்கப்பட்டிருப்போர் தொடர்பில் பட்டியல் வெளியிடுமாறு ஒரு வருடத்திற்கு முன்னர் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கேட்டுக் கொண்டதை பொஸ்டர் நினைவுபடுத்தியுள்ளார்.

ஆனால் அரசாங்கம் அந்தப் பட்டியலையும் சமர்பிக்கத் தவறிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மனித உரிமை விடயங்கள் குறித்து விசாரணை செய்ய இலங்கைக்கு நேரம் ஒரு தடையல்ல என மனித உரிமை கண்காணிப்பகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரட் எடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்தப்படும் என இலங்கை ஏற்கனவே உறுதி அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து 3 வருடங்கள் முடிந்தும் மனித உரிமை மீறல் குறித்த விசாரணைகளில் இலங்கையின் ஆரம்ப செயற்பாடு, யோசிக்க கற்பனைக்கு எட்டாத தூரத்தில் உள்ளது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரட் எடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.