Thursday, February 02, 2012

ஜெனிவாக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணை அச்சம்! - ஜீ.எல் பீரிஸ் தலைமையில் குழுவொன்று அமெரிக்கா செல்லத்தயார்!

அமெரிக்கா விடுத்துள்ள அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள இலங்கை அரசு, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்றை நியூயோர்க்குக்கு அனுப்புவதற்குத் தீர்மானித்துள்ளது கொழு்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளைமாளிகை கொழும்புக்கு எழுதிய கடிதம் தொடர்பில் தமது உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் மந்திராலோசனை நடத்திய பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மார்ச் மாதமளவில் அமெரிக்கா வருமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், குறிப்பிட்ட திகதிக்கு முன்னரே இலங்கைக்குழு அங்கு செல்வதற்கு உத்தேசித்துள்ள தெனக் கூறப்படுகின்றது. ஜெனிவா மாநாட்டை இலக்கு வைத்தே இலங்கை இந்தக் காய்நகர்த்தலை முன்னெடுத்துள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறினாலும், இதுவிடயம் தொடர்பில் அரசு இன்னும் உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை.


இதேவேளை, ஜெனிவாக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஆதரிப்பதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ள நிலையில், அந்த முடிவை மாற்றியமைக்கும் நோக்கிலேயே ஜெனிவாத் தொடருக்கு முன்னரே இலங்கை உயர்மட்டக்குழு அங்கு செல்வதற்கு எத்தனிக்கின்றது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இலங்கையின் வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப் பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், மனிதஉரிமைகள் செயற்றிட்டம் உட்பட முக்கியமான சில விடயங்கள் குறித்து அமெரிக்காவுக்குத் தெளிவுபடுத்தி அதன் நிலைப்பாட்டை மாற்றும் நோக்கிலேயே தமது விஜயத்தை இலங்கைக்குழு துரிதப்படுத்துவதற்கு உத்தேசித்துள்ளது என இராஜதந்திர மட்டத்திலான தகவல்கள் தெரிவித்தாலும், அமெரிக்கா இறுதிவரை உறுதியாகவிருக்கும் என மேற்குலக இராஜதந்திரிகள் தெரிவிக்கின்றனர்.


நல்லிணக்கப்பாடு கடப்பாடுகள், வடமாகாண சபைத்தேர்தல் உட்பட முக்கியமான சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வருமாறு கோரி அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் பீரிஸுக்கு அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.