Thursday, February 02, 2012

சிறிலங்காவுக்கு மட்டுமல்ல, புலம்பெயர் தமிழர்களுக்கும் பெரும் சவால்கள் நிறைந்த போர்க் களமாக மாறிவரும் ஜெனிவா!

அடுத்து வரும் மூன்றாவது வாரத்தில் ஆரம்பமாகப்போகும் ஜெனிவா ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையின் மாநாடு சிங்கள ஆட்சியாளர்களுக்குப் பெரும் சவாலாகவே இருக்கப் போகின்றது.
முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாவது ஆண்டை எட்டியிருக்கும் நிலையில் கூடவிருக்கும் இந்த மாநாட்டில் சிறிலங்காவை நோக்கிப் பல குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படலாம் என்றே நம்பப்படுகின்றது.


இறுதி யுத்த காலத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் குறித்த பொறுப்புக் கூறும் கடப்பாட்டையும், ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வையும் முன்வைத்து சிறிலங்கா ஆட்சியாளர்கள்மீது அழுத்தங்களைப் பிரயோகித்துவரும் அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் இந்த மாநாட்டிலும் மென்மையான போக்குக்களைக் கடைப்பிடிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.


இறுதிப் போர் முடிவுக்கு வரும்வரை, அனைத்துலக நாடுகளின் அழுத்தங்களின்றி அதனைத் தொடர்வதற்காக சர்வதேச சமூகத்திடம் சிங்கள ஆட்சியாளர்கள் வழங்கியிருந்த எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.


விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் ஈழத் தமிழ் மக்களது அவல வாழ்வுக்கு நிரந்தரமான தீர்வு எதனையும் சிங்கள ஆட்சியாளர்கள் இதுவரை வழங்கவில்லை. மாறாக, தமிழ் மக்களது வாழ்விடங்கள் அனைத்தும் இராணுவ முற்றுகைக்குள்ளாக்கப்பட்ட நிலையில், இப்போதும் தமிழின அழிப்புப் போரின் தொடர்ச்சி நீண்டு வருகின்றது.


நியானமான காரணங்களுடன் தமக்கான நீதிக்காக உலகின் மனச்சாட்சிக் கதவைத் தட்டிக்கொண்டே இருக்கும் தமிழ் மக்களது உணர்வுகளைத் தொடர்ந்தும் தம்மால் புறக்கணிக்க முடியாது என்பதை மேற்குலகு நன்றாகவே புரிந்து வைத்துள்ளது. இதனால், சிங்கள ஆட்சியாளர்கள்மீதான அதன் அழுத்தங்கள் இன்னும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.


கடந்த வாரம் ஜெனிவா அக்கடமியில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஏற்பாடு செய்த மாநாட்டில் கலந்துகொள்ள சிறிலங்காவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அத்துடன் இந்த மாநாட்டைத் தடுப்பதற்கு ஜெனிவாவிலுள்ள சிறிலங்காத் தூதரகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதும் அது வெற்றியளிக்கவில்லை.

 
இலங்கை தொடர்பான மிக முக்கியமான மாநாட்டுக்கு சிறிலங்கா அழைக்கப்படாததுடன், அதில் உரையாற்றிய பல நாடுகளின் பிரதிநிதிகள் சிறிலங்கா ஆட்சியாளர்களை அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்துள்ளார்கள்.


இதனிடையே, ஜெனிவாவில் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான நகர்வுகளை மேற்கொள்ள செய்யப்படும் பரப்புரைகளை முறியடிக்க சிறிலங்கா அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் முழுக் கண்காணிப்புடன் மேற்கொள்ளப்படும் இந்த முறியடிப்பு நடவடிக்கைகளுக்காக அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் பல்வேறு நாடுகளுக்கும் பரப்புரைகளுக்காகவும், ஆதரவு கோருவதற்காகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


ஜெனிவா மாநாட்டில் சிறிலங்கா அரசுக்கெதிரான அழுத்தங்களை அதிகரிக்கச் செய்வதற்காகப் புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்டுவரும் பரப்புரைகளையும், ஜெனிவா முன்றலில் அவர்கள் நடாத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தினையும் குழப்புவதற்கான நகர்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளெங்குமிருந்து ஜெனிவாவுக்குப் பெருந்திரளாகத் தமிழர்கள் சென்றுவிடுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி சிங்கள அரசு தனது தூதராலயங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.


புலம்பெயர் தமிழர்களிடையே பிளவுகளையும், குழப்பங்களையும் விளைவித்துவரும் சிறிலங்காவின் தமிழ்ப் புலனாய்வாளாகள் இதற்காக உசார் படுத்தப்பட்டுள்ளனர். குழப்பங்களையும், எதிர்ப் பேரணிகளையும் நடாத்துவதன் ஊடாகத் தமிழ் மக்களை எரிச்சலடையச் செய்யவும், அதனூடாகத் தமிழ் மக்களது பங்கேற்பைக் குறைக்க முடியும் எனவும் சிறிலங்கா உளவாளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


சிங்கள தேசத்தின் நிகழ்ச்சிநிரல் இவ்வாறு இருக்க, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கான அழைப்பை விடுத்துள்ளது. கடந்த வருட இறுதியில் முடிவு செய்யப்பட்டதன்படி, புலம்பெயர் தமிழ்க் கட்டமைப்புக்கள் மார்ச் மாதம் 05 ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டத்திச்கான அழைப்பை விடுத்து, அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மீண்டும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.


புலம்பெயர் தேசங்களில் உருவாகிவரும் அமைப்புக்களில் வேறுபாடு இருந்தாலும், அதன் இலக்கு ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பதே புலம்பெயர் தமிழர்களது முடிவாக உள்ளது. எமது போர்க் களம் தமிழீழத்தை மீட்பதற்கானதாகவும், தமிழீழ மக்களை விடுவிப்பதற்கானதாகவும் மட்டுமே இருக்கவேண்டுமே தவிர, எமக்குள் மோதிக்கொள்வதற்காகவும், எம்மிடையே பலப் பரீட்சை மேற்கொள்வதற்காகவுமான களமாக இருக்கக்கூடாது. ஐரோப்பிய நாடுகளில் நடாத்தப்பட்ட இரண்டு மாவீரர் தினங்கள் எப்படி சிங்கள ஆட்சியாளர்களை மகிழ்வித்ததோ, அவ்வாறே இரண்டு ஜெனிவாப் போராட்டங்களும் எதிரியை மகிழ்விக்கவும், பலப்படுத்தவும் மட்டுமே உதவும் என்பதை இதில் சம்மந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள மறுப்பது வேதனையானது.


இதனால்தான், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள போட்டி ஜெனிவா ஆர்ப்பாட்டத்திற்குப் பலம் சேர்க்கும் நோக்கில் லண்டனிலிருந்து ஜெனிவா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் தமிழர்களை பிரான்சில் வரவேற்பதில்லை என்ற முடிவை பிரான்ஸ் தமிழ் வர்த்தகர் சமூகம் எடுத்துள்ளது. ஆர்ப்பாட்டங்களும், நடை பயணங்களும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட மார்ச் 05 ஆம் திகதியை இலக்கு வைத்து நிர்ணயிக்கப்பட வேண்டும். அதுவே தமிழீழ மண்ணின் விடுதலைக்கும், தமிழீழ மக்களது விடிவிற்கும் பலம் சேர்க்கும் என்பதைப் புரிந்து கொண்டு இனிமேலாவது போட்டி நிகழ்வுகளைக் கைவிடும்படி அவர்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.


போட்டி மாவீரர் தின நிகழ்வுகளை நிறுத்துவதற்காகப் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு தோற்றுப்போன தமிழ்த் தேசிய உணர்வாளர்கள், போட்டி ஜெனிவா ஆர்ப்பாட்டத்தையாவது தடுத்து, புல்ம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் மனம் தளராமல் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துவதைத் தவிர எமக்கு வேறு வழி இருப்பதாகவும் தெரியவில்லை.

- சுவிசிலிருந்து கதிரவன்-

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.