Friday, February 24, 2012

தேசிய செயற்பாட்டு திட்டத்தை அமுல்படுத்த அரசியலமைப்பை திருத்தவும் தயார்

தேசிய செயற்பாட்டுத் திட்டம் தொடர்பில் பல்வேறு குழுக்கள் சிவில் சமூகத்தினர் ஆகியோருடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்புக்கள் மற்றும் கண்காணிப்பதற்கு அமைச்சரவை உப குழுவிற்கு வழங்கப்பட்டது.

 அந்த தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கும் அரசியலமைப்பை திருத்துவதற்கும் அரசாங்கம் தயார் என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

இந்த செயற்றிட்டத்தை பாராட்டாத எதிர்க்கட்சி தலைவர் சர்வதேச ரீதியில் ஒப்பந்தங்களை செய்து கொண்டு இலங்கையின் மீது சேறு பூசுவதற்கே முயற்சிக்கின்றார். எனினும் எமது நாட்டின் இறைமையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க விடுத்த விசேட கூற்றுக்கு சபையில் நேற்று பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நாட்டின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் அரசாங்கம் ஒரு செயற் திட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு பொறிமுறையொன்றை ஏற்படுத்தி வருகின்றோம். இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை ஏற்படுத்தி மனித உரிமையை பாதுகாக்க முன் வந்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவத்தின் கீழ் அதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதில் மனித உரிமைகள் தொடர்பில் பொறிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிவில் பாதுகாப்பு அரசியல் உரிமை, சமூக, பொருளாதார கலாசார உரிமை, சித்திரவதை, சிறுவர்கள்,தொழிலாளர்கள், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், பெண்கள் உள்ளக இடம்பெயர்ந்தோர் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

மேற்படி விவகாரங்கள் தொடர்பில் சமூக பிரதிநிதிகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டு அரசதனியார் துறைகளில் நிபுணத்துவம் பெற்றோர்களை உள்ளடக்கி 8 உப பிரிவுகளை நிறுவியது.

ஒவ்வொரு துறையிலும் சட்ட வரம்பை ஏற்படுத்துவதற்கு சிவில் அரசியல் சமூகத்துடன் கலந்துரையாடப்பட்டது. அது பத்து அமைச்சர்கள் கொண்ட குழுவினால் மீளாய்வு செய்யப்பட்டு மீண்டும் சிவில் சமூகத்திற்கு அனுப்பப்பட்டது.

240 நிறுவனங்கள் தனிப்பட்டோர் உள்ளிட்டோரின் எண்ணங்கள் அபிப்பிராயங்கள் கலந்துரையாடப்பட்டு வரைபு தயாரிக்கும் சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது. இவை தொடர்பில் 2011 ஆம் ஆண்டு மீண்டும் கலந்துரையாடப்பட்டது என்பதனால் தேசிய செயற்பாட்டு திட்டத்தை பாராட்ட வேண்டும்.

எட்டு பிரிவுகளிலும் முக்கிய இலக்குகள், குறிகாட்டி, நோக்கம், முகவர்கள், அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்புகள் கண்காணித்தல் அமைச்சரவை உப குழுவிற்கே வழங்கப்பட்டது.

கண்காணிப்பு குழு சிவில் சமூகத்துடன் கலந்துரையாடி முன்னகர்த்த வேண்டிய திட்டத்தை சமர்ப்பிக்கும் அந்த திட்டம் ஐந்து வருட காலப் பகுதிக்குள் குறிப்பிட்ட வகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும் அதனை முன்னிட்டு இணையத்தளம் ஒன்றும் உருவாக்கப்படும்.

இந்த செயற்பாட்டு திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் பாராட்டவில்லை. குறைபாடுகளை சுட்டிக்காட்டவில்லை என்றாலும் அந்த தேசிய செயற்திட்டத்திற்கு செப்டெம்பர் 17 ஆம் திகதி அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் செயற்பாடுகளை மக்கள் அறிவார்கள். அவர் எங்கு சென்று கொண்டிருக்கிறார் என்றும் அறிவார்கள். எதிர்க்கட்சி தலைவர் சர்வதேசத்துடன் ஒப்பந்தங்களை செய்துகொண்டு இலங்கையின் மீது சேறு பூசுவதற்கு முயற்சிக்கின்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.