Friday, February 24, 2012

ஆணைக்குழு தொடர்பில் திருத்தங்களை ஏற்பின் தெரிவுக்குழுவில் ஐ.தே.க இணைய தயார்

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் எமது திருத்தங்களை விசேட தெரிவுக்குழு ஏற்றுக் கொள்ளுமாயின் எமது பங்களிப்பினை தெரிவுக்குழுவுக்கு பெற்றுக் கொடுக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

ஐ.நா. வுக்கு சமர்ப்பிக்கப்படுகின்ற தேசிய செயற்றிட்டம் தொடர்பில் அரசாங்கத்திடம் பதிலை எதிர்பார்த்தேனே தவிர தனிப்பட்ட ரீதியில் எவரையும் குற்றம் சாட்ட விளையவில்லை. அத்துடன் முன் வைக்கப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்களை ஐ.தே.க ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை நாம் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றோம் என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அமர்வின் போது ஐ.நா. வுக்கு சமர்ப்பிக்கப்பட விருக்கின்றதான தேசிய செயற்றிட்டம் தொடர்பில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சித் தலைவரால் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பதிலளித்தார்.

இதன் பின்னர் எழுந்து கருத்து வெளியிடுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் கூறுகையில்,

அரசாங்கத்தினால் ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்பட விருக்கின்ற தேசிய செயற்றிட்டம் தொடர்பில் கேள்வியெழுப்பி பதிலைப் பெற்றுத் தருமாறு கேட்டேனே தவிர தனிப்பட்ட ரீதியில் எவர் மீதும் குற்றம் சாட்ட நான் விளையவில்லை. ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பதாக அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்தியிருந்தேன்.

இவ்விடயத்தை சபாநாயகர் சற்று சீர்தூக்கிப் பார்த்தல் அவசியமாகும். இந்த செயற்றிட்டம் ஏன் சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது தான் எமது கேள்வியாக இருக்கின்றது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்து இங்கு நான் பேச வரவில்லை. கேள்வியும் கேட்கவில்லை. எனினும் குறித்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் உள்நாட்டில் விவாதிக்கப்பட வேண்டும்.

அதில் உள்ள சில பரிந்துரைகளை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அது மாத்திரமின்றி முன் வைக்கப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்களை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நாம் தொடர்ச்சியாகக் கூறி வந்திருக்கிறோம். இந்நிலையில் தான் நான் வெளிநாடுகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக என்னைத் தூற்றுகின்றனர். எது எவ்வாறிருப்பினும் தேசிய செயற்றிட்டம் தொடர்பில் அரசு இங்கு விளக்கமளித்தல் வேண்டும்.

தினேஷ்

இந்த சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளிட்ட மேற்படி விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக தெரிவுக் குழுவில் இணையுமாறு நாம் ஐ.தே.க விடம் கூறினோம்.

இருப்பினும் ஐ.தே.க உறுப்பினர்களைப் பிரேரிக்கவில்லை. அவ்வாறு உறுப்பினர்கள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு பெயரிடப்பட்டனரா என்று எதிர்க் கட்சித் தலைவரைப் பார்த்து கேள்வியெழுப்பினார்.

ரணில்

இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறுகையில்; கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் விவாதிப்பதென்றால் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைய முடியும் என்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.