Thursday, February 09, 2012

அனைத்துலக சமூகத்தின் தலையீடு அவசியம் -சம்பந்தன்

உள்நாட்டுக்குள்ளேயே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சிறிலங்கா ஆட்சியாளர்கள் அக்கறை காட்டாத நிலையில், அனைத்துலக சமூகத்தின் தலையீடு அவசியமாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்

சிறிலங்காவுக்கு பயணம் செய்துள்ள, போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் ஒபாமா நிர்வாகத்தின் சிறப்புத் தூதுவர் ஸ்டீபன் ராப்புடன் நடத்திய சந்திப்புத் தொடர்பாக பிபிசிக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அமெரிக்கா சென்றிருந்த போது ராப்பை தாம் சந்தித்துப் பேசியதாகவும், அவர் சிறிலங்கா வந்தபோது தம்மைச் சந்திக்க விரும்பியதன் அடிப்படையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவில் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்தும் பேச்சு நடத்தப்பட்டதாகவும், போரின்போது அனைத்துலக மனிதாபிமான, மற்றும் மனிதஉரிமைச்சட்டங்கள் மீறப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பற்றிய கேள்விகளுக்கு தாம் அவரிடம் பதிலளித்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐநா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சிறிலங்கா விவகாரம் பேசப்படும் என்று தாம் எதிர்பார்க்கப்படுவதாகவும் இரா. சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உள்நாட்டுக்குள்ளேயே இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு சிறிலங்கா ஆட்சியாளர்கள் அக்கறை காட்டாத பட்சத்தில் அனைத்துலக சமூகத்தின் அக்கறை தேவைப்படுவதாகவும், அது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் தாம் இந்த சந்திப்பில் கருத்துக்களை விளக்கியதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இனப்பிரச்சனைக்கான தீர்வு உள்நாட்டிலேயே எட்டப்பட வேண்டும், வெளிநாட்டு சக்திகள் தலையிடக் கூடாது என்று சிறிலங்கா அரசு கூறுவதை ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிறிலங்கா அரசு, ஐ.நா உள்ளிட்ட அனைத்துலக அமைப்புகளிலும், வெளிநாடுகளிலும் தனது பரப்புரைகளை மேற்கொண்டு வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களான நாம் அனைத்துலக சமூகத்தின் முன் பரப்புரைகளை மேற்கொள்வதில் என்ன தவறு என்றும் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரச்சினை உள்நாட்டில் தீர்க்கப்படவில்லை என்பதாலேயே சிறிலங்கா அரசு அனைத்துலக சமூகத்தின் முன் கேள்விகளுக்குப் பதிலளித்து வருகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.