Tuesday, February 07, 2012

சிறிலங்கா பயணம் செய்யவுள்ள அமெரிக்க இராஜதந்திரிகள் போர்க்குற்றங்கள் பற்றிப் பேசுவர்! ஏ.எவ்.பி செய்திச்சேவை.

அமெரிக்காவின் பிரதான இரண்டு இராஜதந்திரிகளை அடுத்தவாரம் சிறிலங்காவுக்கு அனுப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இவர்கள், போரின் போது சிறிலங்கா படைகளால் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலளிப்பது குறித்து பேச்சு நடத்தவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது என்று ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம், மனிதஉரிமைகள் தொடர்பான கீழ் நிலைச்செயலர் மரியா ஒட்டேரோ மற்றும் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் ஆகியோர் வரும் 12ம் நாள் தொடக்கம் 14ம் நாள் வரை சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

சிறிலங்கா வரும் ஒட்டேரோ இந்தியா மற்றும் நேபாளத்துக்கும் செல்லவுள்ளார். பிளேக் பங்களாதேசுக்கும் செல்லவுள்ளதாக இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தப் பயணத்தின் போது அமைதி, பொறுப்புக்கூறுதல், நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக இவர்கள் சிறிலங்கா அரசதரப்புடன் கலந்துரையாடுவர் என்றும், சிறிலங்கா அரச மற்றும் சமூகப் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்துவர் என்றும் இராஜாங்கத் திணைக்களம் கூறியுள்ளது.

இந்தமாத இறுதியில் ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது. போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை நடத்த, ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானம் கொழும்புக்கு அழுத்தம் கொடுக்கும் என்று வொசிங்டன் நம்புகிறது.

ஆனால், "இப்போது எம்மீது அமெரிக்காவின் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. எனினும் இந்த நெருக்கடியில் இருந்து எம்மால் மீள முடியும். ஏனென்றால், இந்தியாவின் பலமாக ஆதரவு எமக்கு உள்ளது" என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏஎவ்பியிடம் கூறியுள்ளது.

இதற்கு முந்திய ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டங்களில் நெருக்கடிகள் ஏற்பட்ட போது சீனா, ரஸ்யா, இந்தியாவின் ஆதரவுடன் அதிலிருந்து சிறிலங்கா மீண்டிருந்தது என்றும் ஏ.எவ்.பி சுட்டிக்காட்டியுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.