Wednesday, February 01, 2012

பெப்ரவரி 04 இல் எமக்கான சுதந்திரத்தைக் கோரி, இந்த உலகத்திடம் நியாயம் கேட்போம்! தமிழீழ மக்கள் பேரவை.

64 வருடங்களுக்கு முன்னர் ஈழத் தமிழர்கள் ஏமாற்றப்பட்ட கொடிய நிகழ்வின் காரணமாக வேதனைச் சிலுவைகளை இப்போதும் சுமக்கிறார்கள். 64 வருடங்களுக்கு முன்னர் சிங்களர்கள் ஏமாற்றமாட்டார்கள் என்று நம்பிய தமிழர்களால் நாங்கள் புதை குழிக்குள் செல்லக் காரணமான துயர நாளான பெப்ரவரி 04 மீண்டும் வருகின்றது.
இலங்கைத் தீவின் சுதந்திரத்தை பிரித்தானியா 1948 பெப்ரவரி 04 இல் சிங்களத்திடம் கையளித்தபோது எங்கள் தலைவர்கள் வெள்ளையனே வெளியேறு என்ற காந்தியின் கைத்தடியின் பின்னே அணிவகுத்து நின்றிருந்த காரணத்தால் எங்கள் இனம் புதைகுழியில் மாட்டிக்கொண்டது.

ஆனாலும், காந்தியமும் எங்களைக் கரைசேர்க்க வரவில்லை. அதற்கான விலையை இன்றும் எம் இனம் செலுத்துகின்றது. இரத்தம் சிந்துகின்றது, உயிர்களை விலையாகத் தருகின்றது.

சிங்களத்தின் இன அழிப்பு இன்னும் வேகமாக, இன்னும் மோசமாக இப்போதும் தொடர்கின்றது. இராணுவ ஆக்கிரமிப்பால் தமிழினம் விழிபிதுங்கி நிற்கிறது. புலிக்கொடி பறந்த வன்னி மண்ணில் சிங்களப் பேரினவாதத்தின் சிங்கக் கொடி பறக்கின்றது. வீர வேங்கைகள் கால் படர்ந்த ஈழ மண்ணில் கொடிய சிங்களவன் நிலம் அதிர நடக்கின்றான்.
வரலாறு திரும்பும், எமது மண்ணில் மீண்டும் கார்த்திகைப் பூக்கள் மலரும். செண்பகங்கள் பறக்கும். வாகைகள் பூச் சொரியும். நாளை தமிழீழம் மலரும் என்ற நம்பிக்கையுடன் இன்றைய பொழுதை எமக்கானதாக்கப் போராடுவோம்.

எங்கள் மண்ணில் சிந்திய இரத்தம் வீணாகிப் போய்விடாது. எங்கள் மண்ணில் சாய்ந்த புலிகளது இலட்சியம் கனவாகிப் போய்விடக் கூடாது. அங்கே வீழ்ந்த ஒவ்வொருவருமாக நாங்கள் இங்கே எழுவோம்! எங்களுக்கான நீதிக்காய் நாங்கள் ஒன்றாய் எழுவோம்!

முள்ளிவாய்க்காலில் தரித்து நிற்கும் விடுதலைத் தேரை வேகம் கொண்டு முன் நகர்த்துவோம்! வாருங்கள் எம் உறவுகளே! பெப்ரவரி 04 இல் எமக்கான சுதந்திரத்தைக் கோரி, இந்த உலகத்துடன் போர் தொடுப்போம்! எம்மிடம் பறிக்கப்பட்ட எமது மண்ணை மீட்க ஒன்றாகப் போராடுவோம்.

தமிழீழ மக்கள் பேரவை - பிரான்ஸ்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.