Wednesday, February 01, 2012

கிருஷ்ணாவின் இலங்கை பயணத்தால் எதுவித மாற்றங்களும் நிகழப் போவதில்லை - உலகை ஏமாற்றுவதற்கான போலி நாடகமாகும்: வைகோ பரபரப்பான குற்றச்சாட்டு!

13ஆவது அரசமைப்புத் திருத்தம் தமிழர் பிரச்சினைக்கு முழுமையான நிரந்தரமான தீர்வாக அமையாது. இலங்கை அரசுடன் இணைந்து இந்தியா கூட்டுநாடகத்தை அரங்கேற்றி உலகத்தை ஏமாற்றுகிறது. கிருஷ்ணாவின் இலங்கைப் பயணத்தின் நோக்கமும் இதுவே. கிருஸ்ணாவின் பயணம் வெறும் ஏமாற்று வித்தை. இரு நாடுகளின் அரசுகளும் இணைந்து தமிழருக்கு எதிராகக் கூட்டுச் சதி செய்கின்றன. இதில் தமிழ் மக்கள் ஏமாந்து விடக் கூடாது.

இவ்வாறு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியுமான வை.கோ.
நல்லிணக்கத்தைப்பற்றிப் பேசும் இலங்கை அரசு, தமிழர் பிரதேசங்களில் திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்களை அரங்கேற்றுவது ஏன் என்றும், எதற்காகத் தொடர்ந்தும் அங்கு இராணுவம் நிலைகொண்டுள்ளது என்றும் அவர் கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார்.


"இறுதி யுத்தத்தின் போது எமது உறவுகள் பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்பட்டனர். இலங்கை அரசின் அடாவடித்தனத்தால் அல்லோலகல்லோலப்பட்டனர்.இவ்வாறான கொடூரங்கள் நித்தம் நித்தம் அரங்கேற்றப்படும்போது எமது மனம் கொந்தளித்தது. ஆனால், கைகட்டி வேடிக்கைப்பார்த்த கூட்டுக் குற்றவாளியான இந்தியா, இப்பொழுது ஈழத் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் அபிவிருத்தி என்ற போர்வையில் உலகை ஏமாற்றும் நாடகத்தை அரங் கேற்றுகின்றது.


வீடு அமைத்துக் கொடுப்பதாலோ அல்லது வீதி அமைத்துக் கொடுப்பதாலோ எமது உறவுகளின் துன்பங்கள் தீரப்போவதில்லை என்பதை இவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.உலகத்தை ஏமாற்றும் நோக்கில் இலங்கை அரசு நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தது. இந்தப் போலியான நாடகத்துக்கு சோனியா அரசும் பக்கபலமாக இருந்து வருகிறது.


நல்லிணக்கத்தைப்பற்றிப் பேசும் சிங்கள அரசு, தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை அரங்கேற்றுவது ஏன்? இராணுவத்தை வாபஸ் பெறாதது ஏன்? தமிழர்களுக்கு சுயாட்சியை வழங்காதது ஏன்? நல்லிணக்கம் என்பது பேச்சளவில் மட்டுமே. இன ஒழிப்பே இலங்கை அரசின் நடவடிக்கையாக உள்ளது.


13ஆவது அரசமைப்புத் திருத்தம் தமிழர் பிரச்சினைக்கு முழுமையான நிரந்தரமான தீர்வாக அமையாது. தமிழ் மக்கள் அவ்வாறானதொரு சட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஈழத் தமிழர்களின் நலனில் இந்திய அரசு எதுவித அக்கறையும் காட்டாது என்பது தெட்டத்தெளிவு.
கிருஷ்ணாவின் இலங்கை பயணத்தால் எதுவித மாற்றங்களும் நிகழப் போவதில்லை. இவையெல்லாம் கூட்டுக் குற்றவாளிகளான இரு நாடுகளும் இணைந்து உலகை ஏமாற்றுவதற்காக அரங்கேற்றும் போலி நாடகமாகும் எனக் குறிப்பிட்டார் வைகோ

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.