Tuesday, January 17, 2012

நாம் இனவாதத்தை தூண்டிவிடவும் மாட்டோம் - இனவாதிகளும் அல்லர் - ஆனால் சம்பிக்கவின் கருத்தில் அரசினது இரட்டைக் கொள்கை புலப்படுகிறது!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்து வகிக்கும் சம்பிக்க ரணவக்க, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினது அறிக்கை தொடர்பில் கடும் விமர்சனம் செய்துள்ளமை அரசாங்கத்தின் இரட்டை கொள்கையின் வெளிப்பாட்டை உறுதிப்படுத்தியிருக்கிறது என ஐ தே க பிரதிப் பொதுச் செயலாளர் ஜயலத் ஜயவர்தன எம்.பி. சாடியுள்ளார்.

அண்மையில் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய மின்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க விமர்சித்திருந்தார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன எம்.பி. மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

அமைச்சர் சம்பிக்க ரணவக்க அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் என்ற வகையில் பொறுப்புவாய்ந்தவராக நடந்துகொள்ள வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நியமித்தார்.

காணாமல் போனோர், யுத்தத்தில் உயிரிழந்தோர், பயங்கரவாதத் தடைச்சட்டம், அதிகாரப் பரவலாக்கல், சுயாதீன பொலிஸ் மற்றும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல் குறித்து மட்டுமன்றி, சட்டவிரோத ஆயுதக் குழுக்களை நிராயுததாரிகளாக மாற்றுதல் தொடர்பாகவும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர். அகிம்சை குறித்து நித்தமும் பேசுபவர். அவ்வாறு பேசுபவரால் ஆயுதக் குழுக்களை நிராயுததாரிகளாக மாற்றுமாறு நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதை நிராகரிக்க முடியுமா?

ஐக்கிய தேசியக் கட்சி என்றும் குறுகிய அரசியல் செய்ததில்லை. நாம் இனவாதத்தை தூண்டிவிட மாட்டோம். நாம் இனவாதிகள் அல்லர். அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவ்வாறு கூறியது நாட்டில் மீண்டும் இனவாதத்தை தூண்டிவிடவா? அல்லது தமிழ் மக்களுக்கு கிடைக்கவுள்ள நீதியைத் தடுப்பதற்கா என்று நான் கேட்கின்றேன்.

சிங்களவர் என்ற வகையில் நான் அப்பாவி தமிழ் மக்களுக்கு இடம்பெறும் அநீதி குறித்து நேரடியாக பேசியுள்ளேன். அதுமட்டுமன்றி நடவடிக்கை எடுத்துள்ளேன். அதனால் எனக்கு பல்வேறுபட்ட வகையில் அவமானங்களைச் சந்திக்க நேரிட்டது. இப்போதாவது அரச அமைச்சர்கள் பொறுப்புடன் இனவாதமில்லாது செயற்பட வேண்டும். அரசாங்கம் நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கையை அரச அமைச்சர்களே சவாலுக்கு உட்படுத்துகின்றமை நகைப்புக்குரிய விடயமாகும்.

எனவே தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வை அரசாங்கம் உடன் வழங்க வேண்டும்' என்று ஜயலத் எம்.பி. மேலும் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.