Wednesday, January 25, 2012

தமிழீழ நிலப்பரப்பிலிருந்து சிங்கள ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட வேண்டும். அதற்கான சர்வதேச சூழ்நிலையை நாம்தான் உருவாக்க வேண்டும்.

மாவீரா நாளைக் குறிவைத்து ஒரு தாக்குதல் களத்தை உருவாக்கிய சிங்கள தேசத்தின் புலனாய்வாளர்கள், எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 19 வது கூட்டத் தொடரை நோக்கிய பலமானதொரு நகர்வை மேற்கொண்டுள்ளது
இறுதி யுத்த காலத்தில் சிங்களப் படைகளால் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொறுப்புக் கூறத் தவறியுள்ளதுடன், பலத்த இழப்புக்களையும், அவலங்களையும் எதிர்கொண்டு அதிலிருந்து மீளும் வகையற்றுத் திறந்த சிறைச்சாலை வாழ்விற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள தமிழினத்திற்கு நிலையானதும், நீதியானதுமான தீர்வை வழங்கும் கடப்பாட்டிலிருந்து நழுவிச் செல்லும் சிங்கள அரசை சர்வதேச அழுத்தங்களிலிருந்து காப்பாற்றும் பொருட்டு சிங்கள தேசத்தின் புலனாய்வாளர்கள் இந்த நகர்வினை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த செப்ரம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைப் பேரவையில் 18 வது கூட்டத் தொடரை புலம்பெயர் தமிழர்கள் தமக்கானதொரு அரசியல் களமாக மாற்றியதுடன் ஜெனிவாவில் பொங்குதமிழ் பேரெழுச்சியையும் நடாத்தி முடித்தார்கள். மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரை மையப்படுத்தி, பிரான்ஸ் தமிழர் ஒருங்கிளைப்புக் குழு ஐரோப்பிய பாராளுமன்றத்திலிருந்து ஐ.நா. வரைக்குமான நடை பயணம் ஒன்றிற்கான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இந்த நடை பயணம் ஜெனிவாவை வந்தடையும் நாளில் மீண்டும் ஒரு பேரெழுச்சிக்கான முழுமையான ஆயத்தங்களும் தமிழ்த் தேசிய தளங்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

புலம்பெயர் தமிழர்களது இந்தப் பெரெழுச்சி நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றால், சிங்கள ஆட்சியாளாகள் மீதான சர்வதேச அழுத்தங்கள் பல மடங்காக அதிகரிக்கும் என்பதுடன், அனைத்துலக நாடுகளும், மனித உரிமை அமைப்புக்களும் தொடுக்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத நெருக்கடியும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுவிடும்.இதனாலேயே, புலம்பெயர் தமிழர்களது தமிழீழ விடுதலை நோக்கிய நகர்வினை முறியடிக்கும் முயற்சியில் சிங்கள தேசத்தின் புலனாய்வாளர்கள் முழு மூச்சுடன் களம் இறங்கியுள்ளார்கள்.

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு வந்து ஜெனிவாவின் ஐ.நா. முன்றலில் நீதி கோரும் போராட்டத்தை முறியடிக்கும் ஆள் பலமோ, ஆதரவு பலமோ இல்லாத நிலையில் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலுள்ள பிளவுவாத சக்திகளைத் தூண்டிவிட்டு, மாவீரர் தினத்திற்குப் போட்டியாக இரண்டாவது மாவீரர் தினத்தை நடாத்தத் தூண்டியது போலவே, தமிழ்த் தேசிய தளங்களது இந்தப் போர்க் களத்தைச் சிதைப்பதற்கும் அதே பிளவுவாத சக்திகளையே களம் இறக்க முயற்சி செய்கின்றது.

சிங்கள தேசத்தின் புலனாய்வாளர்களது நோக்கங்களை முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் தங்கள் தலைக்கு அளவான முடிகளைத் தேடும் கிளர்ச்சியாளர்கள் புரிந்து கொள்ள மறுத்தாலும், புலம்பெயர் தமிழர்கள் தங்களது தாயக இலட்சியத்தைத் தோற்கடிக்கும் சிங்கள தேசத்தின் சூழ்ச்சிகளுக்குப் பலியாகிவிடக் கூடாது.இன்று போராடுவதை விடவும், ஒன்றுபட்டு நின்று, ஒரே குரலில் நமது தேசத்தின் விடுதலைக்காக ஓங்கிக் குரல் எழுப்புவதே புலம்பெயர் தமிழர்களது முதன்மையான பணியாக இருக்க வேண்டும்.

நாங்கள் பல கூறாகப் பிளவுபடுத்தப்பட்டுவிட்டால், எதிரி எப்போதும் வெற்றிப் பாதையில் சென்றுகொண்டே இருப்பான். தமிழீழ மக்கள் நிரந்தர அடிமைகளாக, அதற்குள் உயிர்வாழக் கற்றுக்கொண்டுவிடுவார்கள். அல்லது, இறுதித் தமிழனும் அங்கிருந்து வெளியேறும்படியான அவலங்களை எதிர்கொள்வான்.

எங்களுக்கேயான எங்களது தேசம் எங்களுக்கு மீண்டும் கிடைக்க வேண்டுமானால், தமிழீழ நிலப்பரப்பிலிருந்து சிங்கள ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட வேண்டும். அதற்கான சர்வதேச சூழ்நிலையை நாம்தான் உருவாக்க வேண்டும். அதற்கான போர்க் களத்தில் நாம் ஒன்றாகவே நிமிர்ந்து நின்று உரத்துக் குரல் எழுப்ப வேண்டும். இது காலமும், எங்கள் தேசத்து மக்களும், விடுதலைப் புலிகளும், தேசியத் தலைவரும் எமக்கு இட்ட கட்டளை. இந்த வரலாற்றுக் கடமையிலிருந்து யாரும் தப்பித்துக்கொள்ள முடியாது.

தமிழீழ இலட்சியம் ஒன்றைத் தவிர எதையுமே எதிர்பாராமல், தமிழீழக் கனவினை மட்டும் எடுத்துச் சென்ற மாவீரர்களும், மக்களும் சிங்திய குருதியும், அர்ப்பணிப்புக்களும் வீணாகிப் போய்விடக் கூடாது.

தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்காகக் களமாடிய பெண் போராளிகள் மட்டுமல்ல, தமிழிச்சியாகப் பிறந்ததனால் சிங்களக் காமுகர்களால் சிதைத்துச் சின்னாபின்னமாக்கப்பட்டு மரணித்துப்போன எங்கள் உடன் பிறப்புக்களின் அவலங்கள் எங்கள் உள்ளங்களில் தீயாகப் பரவட்டும்.

ஈழத் தமிழினம் தோற்றுவிடக் கூடாது என்ற ஆதங்கத்துடன் தன்னை எரித்துக் களமாடிய முத்துக்குமாரன் முதல், செங்கொடிவரை அத்தனை ஈகப் பேரொளிகளது ஆத்மாக்களும் எங்களுக்கான கதவுகளைத் திறக்கட்டும்.வாருங்கள்! அத்தனை தமிழர்களும் ஒன்றாகக் கரம் கோர்த்து மார்ச் 5 ஆம் திகதி முருகதாசன் திடலில் நின்று எமது தேசத்தின் அவலங்களுக்கு நீதி கோருவோம்! இனி எங்களைப் பிளவு படுத்தவும், பிரித்தாளவும் எவனுக்கும் இடமில்லை என்று அறைந்து முரசொலிப்போம்!

இசைப்பிரியா

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.