Friday, January 27, 2012

இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கி குறித்து பாகிஸ்தான் கவலை.

தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகள் இப்பகுதியில் ஆயுதப்போட்டியை தவிர்க்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை இந்தியா முறைப்படி பெற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் தனது கவலையை வெளியிட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் நிருபர்களிடம் பேசிய அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அப்துல் பசித்திடம் இந்தியா, ரஷ்யாவிடமிருந்து பெற்ற அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது அவர் கூறுகையில், தெற்காசிய பிராந்தியம் ஏழ்மை மற்றும் நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள நாடுகள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயல்களில் கவனம் செலுத்த வேண்டும்.

இன்னும் கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் ஆயுதப்போட்டி ஏற்படாத வகையில், நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உலக நாடுகளை அவர் கேட்டுக்கொண்டார். மேலும், ரஷ்யாவுடனான தங்கள் நாட்டின் உறவுகள் மேம்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியா ரஷ்யாவிடம் சுமார் ஒரு பில்லியன் டாலர் செலுத்தி, 8140 டன் எடை கொண்ட அகுலா 2 என்ற அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை 10 ஆண்டு குத்தகைக்கு பெற்றுள்ளது. ஏற்கனவே கடந்த 1988ம் ஆண்டு ரஷ்யா கட்டிய நீர்மூழ்கி கப்பலை இந்தியா 3 ஆண்டு குத்தகைக்கு பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளளது.

அதே நேரம் இந்தியா சொந்தமாக அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் ஒன்றையும் கட்டி வருகிறது. இந்தாண்டு இறுதியில் இப்பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை இயக்க இந்திய வீரர்களுக்கு ரஷ்யா உதவி செய்ய முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.