Thursday, December 01, 2011

வடகிழக்கு மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்- சரா எம்.பி!

எமது மக்களின் பிரச்சினைகள் யாவும் இந்த அரசின் தீர்மானம் எடுக்கும் செயற்பாட்டுக்கு அப்பாற்பட்டதாகவே இருந்து வருகின்றன. இந்த மனப்போக்கு மாற்றமடைய வேண்டும். அரசு தனது சம்பளம் வாங்கும் அடிவருடிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் தகவல்களின்படியே செயற்படுகின்றது.

அவர்கள் ஆயுதம் தரித்த படைத்தரப்பினர்களாக இருந்தாலும் சிவில் சேவைகளைச் சேர்ந் தவர்களானாலும் தங்கள் எஜமானாகளின் கீழ் கடுமையான கட்டுப்பாடுகளை அவர்கள் முகம் கொடுத்து செயற்படுபவர்களாக உள்ளனர்.

எனது கோரிக்கை என்னவென்றால் அரசு மக்கள் பிரதிநிதிகளின் குரல்களுக்குச் செவிசாய்க்க வேண்டும் என்பதே. வடக்குகிழக்கில் மக்கள் பிரதிநிதிகள் அரசின் தீர்மானம் எடுக்கும் செயற்பாடுகளில் உண்மையான முறையில் பங்களிப்பு வழங்குவதற்கு சந்தர்ப்பம் இல்லாமல் இருக்கின்றது. எல்லா மட்டங்களிலும் உள்ளூர் ஆட்சி மட்டங்களிலும் கூட இதே நிலைதான் நிலவுகின்றது. இந்த நிலைமை இதுபோல் தொடருமானால் அது முழு நாட்டினதும் எதிர்காலத்துக்கு ஆபத்தாக முடிந்துவிடும்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வரவு செலவுதிட்ட விவாதத்தின் போது உரை நிகழ்த்துகையில் எச்சரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் சபையில் தொடர்ந்து நிகழ்த்திய தமது உரையில் மேலும் தெரிவித்த முக்கிய கருத்துக்கள் வருமாறு:

ஜனாதிபதி சபையில் தமது வரவு செலவுதிட்ட உரையை நிகழ்த்திய போது அதனை செவிமடுத்துக் கொண்டிருந்த நான் வடக்கு, கிழக்கு மக்களின் துன்பங்களை இந்த சபையில் எடுத்து வைக்கவேண்டும். எவ்வாறு அரசு அவர்களை மீண்டும் ஏமாற்றிவிட்டது என்பதை சுட்டிக்காட்ட வேண்டும் என்று நினைத்தேன்.

பயங்கரவாதத்தை ஒழித்து அமைதியை நிலைநாட்ட மாற்றுப் பொறி முறையொன்றை கொண்டுவரப் போவதாக ஜனாதிபதி அறிவித்த போது அதனை ஆவலுடன் நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம். மாநாட்டின் முதல் முக்கிய பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு ஏதாகிலும் திட்டம் வெளியிடப்படும் என்று நம்பினோம் ஆனால் அவரது பிரகடனங்களுக்கும் முன்மொழிவுகளுக்கும் இடையில் எதுவித சம்பந்தமும் காணப்பட வில்லை என்பது கவலை தருவதாகும்.

உறுப்பினர்களின் கருத்துக்களையும் கவனத்தில் கொண்டே வரவு செலவுத்திட்டத்தைத் தாம் தயாரித்ததாக ஜனாதிபதி கூறியிருந்தார். ஆனால் நாம் பிரதிநிதித்துவம் செய்யும் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் மற்றும் அபிலாசைகள் கவனத்தில் எடுக்கப்படவில்லை என்பது கவலையளிப்பதாகும்.

வடக்கு, கிழக்குமக்களின் பிரச்சினைகள் யாவும் தேசியப்பிரச்சினைகளை சுட்டிக்காட்டி ஒதுக்கித்தள்ளப் பட்டுவிட்டன. கடந்த வரவு செலவுத்திட்டத்தின் போதும் அதற்குப் பிறகும் கூட நாம் தெரிவித்த கருத்துக்கள் யாவும் வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தவர்களால் ஓரங்கட்டப்பட்டு விட்டன.

பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி

பாதுகாப்பு அமைச்சுக்கு அரசு பெருந்தொகைப் பணத்தை ஒதுக்குவதில் விடாப்பிடியாக இருந்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் முக்கிய தேவைகளில் ஒன்று வீட்டு வசதியாகும்.

பெரிய அளவில் பிரசாரம் செய்யப்பட்ட இந்திய வீடமைப்பு திட்டம் இன்னமும் வந்து கொண்டிருக்கின்றது. ஆனால் பாதுகாப்பு அமைச்சுக்கு நிரந்தர வசிப்பிடங்கள் மற்றும் பாதுகாப்பு கட்டடங்களுக்கென 3000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கண்ணிவெடி அற்ற நாடு ஒன்றை உருவாக்கப்போவதாக அறிவித்திருக்கும் நீங்கள், இடம்பெயர்ந்த மக்களை இனிமேலும் தடைசெய்யாமல் தங்கள் சொந்த இடங்களில் சென்று குடியமர்வதற்கு அனுமதியுங்கள்.

முக்கிய பிரச்சினை

எமது இன்றைய முக்கிய பிரச்சினைகள் மீள் நல்லிணக்கமும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுமே. இந்த விடயத்துக்கு வரவு செலவுத் திட்டத்தில் எதுவித முக்கிய கவனமும் செலுத்தப்பட்டிருப்பதாக தெரியவில்லை.

மாகாண சபைகளிலும் நாடாளுமன்றத்திலும் சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகள் இடம் பெற்றிருப்பதானது பேச்சு வார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு உறுதியான வழியை ஏற்படுத்தியிருப்பதாக ஜனாதிபதி கூறினார். ஆனால் இந்த வித அர்த்தமற்ற வார்த்தைகளை எம்மால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது.

வடமாகாண சபையானது கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆளுநர் அமைச்சரின் பொம்மையாக இருந்து வருகின்றார்.

தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் எதுவித தீர்மானம் எடுக்கும் செயற்பாடுகளிலும் இந்த இராணு ஆளுநரின் கீழ் ஈடுபடமுடியாமல் இருக்கிறது. ஆளுநருக்கு எமது சிவில் கலாசார நிர்வாகம் தெரியாது. மக்கள் பிரதிநிதிக்கு எதுவித மதிப்பும் கூட அவரிடம் கிடையாது இவ்வாறு சரவணபவன் எம்.பி தமது உரையில் குறிப்பிட்டார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.