Monday, December 05, 2011

அரசுடனான பேச்சில் விரிசல் நிலை ராஜதந்திரிகளுக்கு கூட்டமைப்பு விளக்கம்;அடுத்த நகர்வு குறித்து சர்வதேசம் கவனம்

இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுகளில் தற்போது ஏற்பட்டுள்ள தடங்கல் பின்னடைவு நிலைமை தொடர்பாக கொழும்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை விவரமாக தெளிவாக விளக்குவதற்குத் தீர்மானித்துள்ளது எனத் தெரியவருகிறது.

தீர்வுப் பேச்சில் திடீரென ஏற்பட்டுள்ள முடக்கம் குறித்த தமது நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் கூட்டமைப்புக்கு உள்ளது. அதற்காக கூட்டமைப்பின் தலைவர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அரசு கூட்டமைப்பின் பேச்சின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதை அறிந்துகொள்வதில் சர்வதேச நாடுகளின் கவனம் திரும்பி உள்ளது என்றும் அதேசமயம் தற்போதைய இலங்கையின் அரசியல் நிலைமை குறித்தும் அந்த நாடுகள் கூர்ந்து கவனித்து வருகின்றன என்றும் அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பேச்சு ஒழுங்கின்படி அல்லாமல் நேற்று முன்தினம் திடீரென நடைபெற்ற அரசு கூட்டமைப்புப் பேச்சில் தெரிவுக்குழு நியமிக்கும் விடயத்தில் சர்ச்சை எழுந்தது.

தெரிவுக்குழுவுக்கான தமது உறுப்பினர்கள் பெயர்களைக் கூட்டமைப்பினர் தரவேண்டும் என்று அரச தரப்பு ஒரே பிடியாக இருந்தது. ஆனால் அதனை ஏற்க கூட்டமைப்பினர் அடியோடு மறுத்துவிட்டனர்."முதலில் தீர்வு பற்றிய இரு தரப்பு இணக்கம்; பின்னரே தெரிவுக்குழு'' இதுதான் எமது நிலைப்பாடு என்றும் அடித்துக் கூறிவிட்டனர் கூட்டமைப்பினர்.

இவ்வாறான நிலையில், அரசியல் தீர்வு விவகாரத்தில் அரசு தரப்பு முன்னர் தெரிவித்த உறுதிப்பாட்டை மீறியுள்ளதே பேச்சில் ஏற்பட்டுள்ள தடங்கல் நிலைக்குக் காரணம் ஆகும். இந்தச் சூழ்நிலையிலேயே கூட்டமைப்பினர் மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு தமது நிலைப்பாட்டை விவரமாக விளக்க உள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.