Wednesday, November 16, 2011

புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து செயற்பட சிறிலங்கா அரசாங்கம் தயாராகவே உள்ளது! இருந்தும் புலிக்கொடி மிரட்டுகிறது என்கிறார் ஜி.எல்.பீரிஸ்.

புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து செயற்பட சிறிலங்கா அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், அதேவேளை விடுதலைப் புலிகளின் தனி ஈழத் திட்டத்துக்காக செயற்படுவோர் மீது அனைத்துலக சமூகம் வெளிப்படையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற 19 நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். புலம்பெயர் தமிழர்களை ஒதுக்க வேண்டிய தேவை சிறிலங்கா அரசாங்கத்துக்கு இல்லை. போருக்குப் பிந்திய சூழலில் அவர்களுடன் இணைந்து செயற்படத் தயாராவே உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகள் உள்ளிட்ட 32 நாடுகள் விடுதலைப் புலிகளை தடை செய்துள்ள போதும், அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது. தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் கொடிகளை ஏந்திச் செல்வதைத் தடுப்பதில் அனைத்துலக சமூகம் தோல்வி கண்டுள்ளது.

விடுதலைப் புலிகள் 2009 மே மாதம் தமது மரபுவழி இராணுவ பலத்தை இழந்த போதிலும் வெளிநாடுகளில் தொடர்ந்தும் நிதி சேகரிக்கிறார்கள். இருந்தபோதும், விடுதலைப் புலிகளுக்கு தயவு காண்பிப்பதாக எந்தவொரு நாட்டையும் குறிப்பிட்டுக் குற்றம்சாட்ட விரும்பவில்லை.

மிக அண்மையில் பேர்த்தில் கொமன்வெல்த் மாநாட்டின்போது கூட விடுதலைப் புலிகளின் கொடியை ஏந்தியபடி போராட்டம் நடத்தினார்கள். பிரித்தானியாவில் உள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் கூட தொடர்ந்து புலிகளின் கொடிகளை பகிரங்கமாக ஏந்திச் செல்கிறார்கள் என்றும் சிறிலங்காவிளது வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் விசனம் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.