Wednesday, November 16, 2011

கொழும்பிலிருந்து 400 குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை!

கொழும்புத் துறைமுகத்திலிருந்து கொலன்னாவை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வரையிலான எரிபொருள் விநியோகக் குழாய்கள் உள்ள பிரதேசங்களில் சட்டவிரோதமாக வசிக்கும் 400 குடும்பங்கள் வெளியேற்றப்படவுள்ளதாக எரிபொருள் களஞ்சியப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யூ.டி. சொய்சா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வெளியேற்றப்படுவோருக்கு வாழ்வதற்கு தற்காலிகமாக வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, மேஜர் ஜெனரல் எம். ஆர்.டபிள்யூ.டி. சொய்சா மேலும் தெரிவித்திருப்பதாவது,

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனையின் கீழேயே இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.இதன் முதற்கட்டமாக புளூமெண்டால் மற்றும் மஹவத்த பிரதேசங்களில் எரிபொருள் குழாய்களுக்கு மேலாக வீடுகளை நிர்மாணித்து வாழும் 150 வீடுகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படவுள்ளன.

வெளியேற்றப்படுவோருக்கு அருகிலுள்ள மைதானத்தில் தற்காலிகமாக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும்.40 வருடங்களுக்கு மேலாக இப்பிரதேசங்களில் சட்டவிரோதமாக வாழும் இம்மக்களுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பங்களிப்புடன் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும்.

அத்தோடு 60 வருடங்களுக்கு மேலாக பழுதடைந்துள்ள விநியோகக் குழாய்களுக்குப் பதிலாக புதிய குழாய்களை பொருத்தும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் இச்சட்டவிரோத குடியிருப்பாளர்களால் அதற்கு தடங்கல் ஏற்பட்டுள்ளன.

அண்மையில் இப்பிரதேசத்திலுள்ள பழுதடைந்த குழாய் ஊடாக எபொருள் கசிவு ஏற்பட்டது. இது மிகவும் ஆபத்தானதாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.