Wednesday, August 03, 2011

'யாழ் மக்கள் மத்தியில் உளவியல் பாதிப்பு'

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் மத்தியில் யுத்தம் மற்றும் இடப்பெயர்வுடன் தொடர்புடைய உளவியல் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுவதாக அமெரிக்க மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தின் பின்னர், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் உளநலம் எப்படி இருக்கின்றது என்பதைக் கண்டறிவதற்காகக் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தொடக்கம் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரீஎஸ்டி எனப்படும் நெருக்கீட்டிற்குப் பிற்பட்ட மனவடு நோய் 13 வீதமாகவும், அங்சைட்டி எனப்படும், பதளிப்பு நோய் 48.5 வீதமாகவும், டிப்ரஸ்ஸன் அதாவது மனச்சோர்வு 41.8 வீதமாகவும் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இது உள நலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள கொசோவா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் போருக்குப் பிந்திய மக்களின் உளவியல் நிலைமையுட்ன் ஒப்பு நோக்கத்தக்கது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின்றது.

யாழ் மாவட்டத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் 68 வீதமானவர்கள், ஆகக்குறைந்தது ஒரு மன நெருக்கீட்டுச் சம்பவத்திற்கு அல்லது பலதரப்பட்ட மனநெருக்கீட்டுச் சம்பவங்களுக்கு இடப்பெயர்வின்போது ஆளாகியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது மூன்று லட்சம் மக்கள் போரினால் இடம்பெயர நேரிட்டது.

மருத்துவர் கருத்து

நெருக்கீட்டிற்குப் பிற்பட்ட மனவடு நோய் அப்போது அந்த மக்கள் மத்தியில் உச்ச நிலையில் காணப்பட்டதாகவும், பல்வேறு இழப்புகளுக்கும் குடும்ப உறவினர்களின் பிரிவுகளுக்கும் ஆளாகியிருந்த அவர்கள் அந்த நிலையில் இருந்து மீள்வதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருந்ததாகவும் வவுனியா பொது மருத்துவ மனையின் உளநலப்பிரிவுக்கு பொறுப்பான மருத்துவர் டாக்டர் சிவஞானம் சுதாகரன் தெரிவித்தார்.

உளவியல்பாதிப்பு காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் தற்கொலை முயற்சிகள் அதிகமாக இருந்திருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், மனிக்பாம் இடைத்தங்கல் முகாமின் சூழல் அத்தகைய முயற்சிகளுக்கு ஏற்றதாக அமைந்திருக்கவில்லை என்றும், தற்கொலைக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் அங்கு இல்லாதிருந்ததும் இதற்குக் காரணமாக இருக்கலாம் எனவும் டாக்டர் சுதாகரன் சுட்டிக்காட்டினார்.

''மிகமோசமான யுத்தச் சூழ்நிலைக்குள் தமிழ் மக்கள் வன்னிப்பிரதேசத்தில் வாழ்ந்திருக்கின்றார்கள். அலையலையாக வந்த இடப்பெயர்வு அத்துடன் கூடிய கஸ்ட நிலைமைகளை அவர்களில் பலர் தாங்கும் திறனுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ச்சியான யுத்தச் சூழ்நிலையில் வாழ்ந்து வந்தமையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்'' என்றும் டாக்டர் சுதாகரன் தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.