Wednesday, August 03, 2011

ஆதிவாசிகள் என்ற பெயரில் வாகரையில் சிங்கள குடியேற்றம்!

மட்டக்களப்பு மாவட்ட வாகரை பிரதேசத்திலுள்ள பனிச்சங்கேணி பகுதியில் ஜனாதிபதி தலைமையில் கிழக்கு முதலமைச்சரின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட ஆதிவாசிகள் நிகழ்வானது அப் பிரதேசத்தில் சிங்கள குடியேற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பனிச்சங்கேணி பகுதியில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஒழுங்கமைப்பில் கலாசார மரபுரிமைகள் அமைச்சின் வழிகாட்டலில் நடாத்தப்பட்ட ஆதிவாசிகள் நிகழ்வானது வாகரைப் பிரதேசத்தில் சிங்கள குடியேற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி மாத்திரமின்றி வாகரையில் முன்னேற்றப் பாதையில் செல்லும் தமிழ் மக்களை மீண்டும் அம்புவில் தாங்கி ஆதிவாசி என்ற ரீதியில் உருவாக்கி அவர்களது முன்னேற்றப்பாதைக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடாகும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த கால சுனாமி யுத்த சூழலின் பின் தற்போது வாகரைப் பகுதி மக்கள் தங்களை பலதுறையில் வளம்படுத்தி வரும்போது அரசாங்கம் திட்டமிட்ட வகையில் கடந்த இரு வருடமாக சில நபர்களை அனுப்பி குஞ்சங்குளம், கிரிமிச்சை, கட்டுமுறிவு, பனிச்சங்கேணி, பால்சேனை உட்பட சில கிராமங்களை ஆராய்ந்து இங்கு ஆதிவாசிகள் என்ற ரீதியில் தமது சிங்கள குடியேற்றத்தை அமைக்கலாம் என்ற ரீதியில் ஆதிவாசிகள் நிகழ்வை பனிச்சங்கேணியில் ஏற்பாடு செய்துள்ளது.

இன்று பல்துறையிலும் இப்பகுதி மக்கள் முன்னேறிவரும் போது இவர்களை ஆதிவாசிகள் என்ற வகைக்குள் உட்படுத்த முனைவது மிகவும் வேதனையையே தருகின்றது. ஆதிவாசிகள் என்ற வகையில் இந்நாட்டில் வாழும் சிங்கள மக்கள் மத்தியில் இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்யலாம். ஆனால் திட்டமிட்டு தமிழர்கள் மத்தியில் ஆதிவாசி சிங்கள மக்களை வாகனங்களில் ஏற்றி வந்து இங்கு குவித்து ஆதிவாசி மக்களின் நிகழ்வை நடாத்தியுள்ளமை தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட நடவடிக்கையே ஆகும்.

அது மட்டுமின்றி ஆதிவாசிகள் என்ற வகையில் வாகரைப் பிரதேசத்தின் சில கிராமங்களில் மக்களின் பிறப்புச் சான்றிதழ் மாற்றும் நடவடிக்கையையும் ஆரம்பித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தால் அனுப்பப்பட்ட ஒருவர் இங்கு குஞ்சங்குளம், கிரிமிச்சை, கட்டுமுறிவு உட்பட்ட சில கிராம அதிகாரி பிரிவில் வசிக்கும் எமது தமிழ் மக்களின் பிறப்புச் சான்றிதழில் ‘இலங்கைத் தமிழர்’ என்ற சொற்பதத்தை மாற்றி வேடர் என்ற சொற்பதத்தை மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். சிலருக்கு இதற்கான அனுமானவரி சான்றிதழ் ஆதிவாசி நிகழ்வில் வழங்கப்பட்டுள்ளது.

ஏனெனில் வேடர் என்ற வகையில் சிங்க ஆதிவாசிகளின் குடியேற்றத்தை வாகரையில் ஏற்படுத்தி சிங்கள மக்களின் தொகையை இம்மாவட்டத்தில் அதிகரிக்க செய்து சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சிங்கள அரசியல் வாதிகளை இம்மாவட்டத்தில் உருவாக்குவதே அரசின் நோக்கமாகும். அதுமட்டுமின்றி கிரிமிச்சை கடற்படைக்கான குடியேற்றத்துக்கு 1200 ஏக்கர் காணி பெறப்பட்டு அதற்கான விடுதிகள் தாபிக்கப்படுகின்றது.

வடமுனை ஊத்துச்சேனை பகுதியில் 5000 ஏக்கர் நிலம் 100 சிங்கள தனவந்தர்களுக்கு வழங்க ஏற்பாடாகி தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அரசாங்கம் யுத்தம் முடிவுற்றதும் வெந்த புண்ணில் வேல் நுழைப்பது போன்று தமிழர் மத்தியில் இந்நடவடிக்கையை மேற்கொள்கின்றது.

வாகரைப் பிரதேசத்தில் பிறப்பு பதிவுகளில் சாதி ‘இலங்கை தமிழர்’ என்பதை வேடர்கள் என மாற்றும் செயற்பாட்டுடன் அவர்களுக்கான தேசிய அடையாள அட்டையிலும் வேடர்கள் என்றே குறிக்க ஏற்பாடாகின்றது.

இதுவரை காலமும் பல வகையில் முன்னேறிய எங்கள் சமூகத்தை பின்நோக்க செய்யும் செயற்பாடாகும். இதற்கு எங்கள் மாவட்டத்தில் உள்ள அரசாங்கத்துடன் இயங்கும் தமிழ் அரசியல்வாதிகள் துணைபோயிருப்பது மிகவும் வேதனையே தருகின்றது. கல்வி அறிவு படைத்த எவரும் இதற்கு அனுமதிக்கமாட்டார்.

வாகரைப் பிரதேசத்தில் வாழும் சில கிராம மக்கள் வேடர்கள் என பிறப்பு பத்திரம் தேசிய அடையாள அட்டைகளில் மாற்றப்பட்டால் அச்சமூகம் சார்ந்த அரசியல் வாதிகள், கல்விமான்கள், உயர் அதிகாரிகள் தமது பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டைகளை முதலில் இலங்கைத் தமிழர் என்பதை மாற்றி வேடர்கள் என மாற்ற முன்வருவார்களா? என பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கல்வி அறிவு குறைந்த எமது மக்களிடம் வீடு கட்டித் தருகின்றேன், பொருள் தருகின்றேன் என கூறி அவர்களை வேடர்களாக மாற்றி அம்பு, வில் சகிதம் நடமாட ஏற்பாடு செய்பவர்கள் இச்சமூகத்தில் சார்ந்த கல்வி மான்கள்,அரசியல் வாதிகளையும் அவ்வாறே உருவாக்க வேண்டும்.

காட்டுக்கு சென்று சுதந்திரமாக தேன் எடுக்க அனுமதிக்காத இவர்கள் கூட்டுக்குள் சென்று கவலக்கிழக்கு எடுக்கும் எம் மக்களை புதையல் தோண்டுபவர்கள் என காட்டுக்குள் தள்ளுபவர்கள் இன்று எம்மக்களை வேடர்கள் என பெயர் சூட்டி சிங்கள குடியிருப்பை ஏற்படுத்த முயல்கின்றனர்.

இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதற்கு எதிரான நாங்கள் எங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என தமது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு சிங்கள ஆதிவாசி தலைவர், ஆதிவாசிகள் சார்பாக ஒப்பந்தம் செய்யும் இடம் பனிச்சங்கேணி ஆக முடியாது எனவும்,ஒருவரின் பிறப்புச் சான்றிதழில் அவரது சாகியம் மாற்றப்படுவதனால் நீதிமன்றத்தின் உத்தரவிலேயே நடாத்த முடியும் என்பதையும் யாரும் தன்னிச்சையாக இதனை மேற்கொள்ள முடியாது எனவும் சுட்டிக்காட்டிதுடன், வாகரைப் பிரதேச மக்கள் இச்செயற்பாட்டில் மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் வேண்டியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.