Tuesday, August 09, 2011

அதிகாரப் பகிர்வு என்பது தமிழர்களுக்கு கிடையாது - கோத்தபாய திட்டவட்டம்

தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு கூடுதலான அதிகாரங்களை வழங்குவது சாத்தியமில்லை என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்­ஷ தெரிவித்துள்ளார். ஹெட்லைன்ஸ் ருடே என்னும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், தற்போதுள்ள அரசியலமைப்புச் சட்டமே இலங்கை மக்கள் அனைவரும் ஒருமித்து வாழப் போதுமானது என்று கூறியுள்ளார்.

இப்போது விடுதலைப்புலிகளும் இல்லை. மாற்றங்கள் செய்யவேண்டிய அவசியம் என்ன? இதற்கு மேலதிகமான அதிகாரங்கள் வழங்கவேண்டியதில்லை இப்போதுகூட உள்ளூராட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. விரைவில் மாகாணசபைத் தேர்தல்களும் நடத்தப்படும் . ஜனாதிபதி முதல்வர்களையும் அமைச்சர்களையும் நியமிப்பார். இதற்கும் மேல் செய்வதற்கு எதுவுமில்லை என அச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.

போர்க்குற்ற விசாரணை கூடாது என இலங்கை வாதிடுகின்றது. விடுதலைப்புலிகளுடனான மோதல்களின் இறுதிக் கட்டங்களில் பல்லாயிரக்கணக்கில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து சர்வதேச நீதிமன்ற விசாரணை தேவை என்ற கோரிக்கை நியாயமற்றது.

விசாரணை வேண்டும் எனக் கோரும் அமெரிக்காவோ, பிரிட்டனோ மட்டும் உலகமாகிவிடாது. ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், பல ஆபிரிக்க நாடுகள், தென்கிழக்காசிய நாடுகள் தங்கள் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றன. இந்தியாவும் ஆதரிக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. எனவே விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை.

அத்தகைய விசாரணை வேண்டும் என வற்புறுத்தும் அண்மைய தமிழக சட்டமன்றத் தீர்மானம் இலங்கையில் நிலவும் யதார்த்தங்களை உணராமல் நிறைவேற்றப்பட்டதாகும். தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார். உண்மையிலேயே இலங்கைத் தமிழர்கள் மீது அவருக்கு அக்கறை இருக்குமானால் தமிழக மீனவர்கள் நாட்டு எல்லை தாண்டி இலங்கைப் பகுதிக்கு வந்து மீன்பிடிப்பதைத் தடுக்கவேண்டும் என கோத்தபாய கூறியதாக ஹெட்லைன்ஸ் ருடெ தெரிவிக்கிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.