பிரிட்டனின் பல நகரங்களிலும் வன்முறைகளும் கலவரங்களும் பரவியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லண்டனில் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
லண்டன் நகரம் சற்றே அடங்கிய நிலையில், ஏனைய முக்கிய நகரங்களான பர்மிங்ஹாம், லிவர்பூல், மான்செஸ்டர், நாட்டிங்ஹாம், பிரிஸ்டல் உள்ளிட்டவற்றின் வீதிகளில் நான்காவது இரவாக வன்முறைகள் வெடித்தன.
ஆக்ரோஷமான இளைஞர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று, வீதிகளிலுள்ள கடைகள், அலுவலகங்களைச் சூறையாடுவது, கார் உள்ளிட்ட வாகனங்களுக்குத் தீவைத்துக் கொளுத்துவது உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபட்டனர்.
ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், தற்போதை கலவரங்களால் பிரிட்டன் அரசுக்கு மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் முழுவதும் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு நாடு முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை ஏறத்தாழ 1,100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
தற்போது, லண்டனில் சுமார் 16,000 போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
கலவரக்காரர்கள் மீது பிளாஸ்டிக் குண்டுகளில் சுடுவதற்கு பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது. வன்முறை வெடித்துள்ள பகுதிகளைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் பிரிட்டன் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
கலவரம் வெடிக்கக் காரணம்…
சட்டவிரோதா செயல்களில் ஈடுபட்டுள்ள லண்டன் வாழ் கறுப்பின சமுதாயத்தினரிடையே விசாரணை மேற்கொண்ட போது, ஆயுதமேந்திய போலீஸாரால் மார்க் டக்கன் என்ற 29 வயது கறுப்பின இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தச் சூழலில், இந்தச் சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் இளைஞர்கள் பலரும் வன்முறையில் இறங்கினர். அங்கு தொடங்கிய கலவரம், பிரிட்டனின் பல்வேறு நகரங்களுக்கும் பரவியுள்ளது.
கடந்த 1985-ம் ஆண்டு இதேபோல் மிகப் பெரிய அளவில் பிரிட்டனில் கலவரம் வெடித்தது. லண்டன் வாழ் கறுப்பின சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை தடுத்து நிறுத்தி தீவிரமாக சோதனையிடும் போலீஸாரின் செயலைக் கண்டித்து அந்தக் கலவரம் அரங்கேறியது இங்கே நினைவுகூரத்தக்கது.
கேமரூன் அதிரடி…
பிரிட்டனில் சட்டம், ஒழுங்கை மீண்டும் நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பிரதமர் டேவிட் கேமரூன் உறுதியளித்துள்ளார்.
இதுவரை நடந்தவை அனைத்தும் முழுக்க முழுக்க குற்றச் செயல்கள் என்றும், அவை தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கடுமையாக பேசியுள்ளார்.
நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டியுள்ள அவர், இந்த கலவரம் தொடர்பாக விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதனிடையே, தெற்கு லண்டனில் திங்கட்கிழமை நடந்த வன்முறைச் சம்பவத்தில் சுடப்பட்ட ஒருவர் உயிரிழந்தார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.