Friday, June 10, 2011

வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழக சட்டப் பேரவையின் தீர்மானம்! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

தமிழகசட்டப் பேரவையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றச் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களை ஈழத் தமிழர் தேசத்தின் சார்பில் வாழ்த்துவதிலும் பாராட்டுவதிலும் நாம் பெருநிறைவடைவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பிரதமர் விசுவாநாதன் ருத்திரகுமாரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக சட்டப் பேரவையில்; நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப் படும் வகையில் தமிழகம் தொடர்ந்து செயற்படவேண்டும் என நாம் பணிவுடன் வேண்டுகிறோம் எனவும் தமிழக முதல்வர் இதற்கு ஆவன செய்வார் எனவும் உறுதியாக நம்புவதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரால் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா அரசின் மீதான பொருளாதாரத் தடைக் கோரிக்கையை உலக அளவில் மேலும் வலுவூட்டச் செய்வதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்க நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் திட்டமிடுகிறது என்ற செய்தியினை தமிழக முதல்வருக்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்கும் இத் தருணத்தில் வெளிப்படுத்த விரும்புகிறோம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம் :

தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் புரிந்தவர்களை போர்க்குற்றவாளிகள் என அறிவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையினை வலியுறுத்த வேண்டும் எனவும் தமிழ் மக்கள் சமத்துவமான நிலையில் வாழ்வதற்கான தீர்வு எட்டப்படும்வரை சிறிலங்காவுக்கு எதிரான பொருளாதாரத் தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்திய மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை கண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பெருமகிழ்வடைகிறது.

இத் தீர்மானத்தை முன் மொழிந்து, இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டிய காரணங்களைத் தெளிவாகச் சட்டப்பேரவையில் வெளிப்படுத்தி பேரவையின் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் இத் தீர்மானத்தை நிறைவேற்றச் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களை ஈழத் தமிழர் தேசத்தின் சார்பில் வாழ்த்துவதிலும் பாராட்டுவதிலும் நாம் பெருநிறைவடைகிறோம்.

இத் தீர்மானத்துக்கு ஆதரவளித்த அனைத்துக் கட்சிகளுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கெல்லாம் ஆதாரமாக நிற்கும் தமிழக மக்களின் கரங்களை நாம் நன்றியுணர்வுடன் இறுகப் பற்றிக் கொள்கிறோம்.

தமிழ் நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். ஈழத் தமிழ் மக்கள் தமிழக மக்களின் தொப்புள் கொடியுறவுகள் என்பதனையும் சிங்களம் அவர்களை இனப்படுகொலைக்குள்ளாக்கி, அடக்கி ஒடுக்கி இரண்டாம்தரக் குடிமக்களாக நடாத்தி வருகிறது என்பதனையும், சிங்களத்தைப் பணிய வைக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதனைத் தவிர வேறுவழியேதும் இல்லை என்பதனையும் தமிழ் நாட்டு மக்கள் சார்பாக நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானம் இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும் அனைத்துலகத்துக்கும் உணர்த்தி நிற்கிறது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒரு அச்சுறுத்தலாகவும் அமைந்துள்ளது.

இத் தருணத்தில் சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்பான நமது வரலாற்றுப் பட்டறிவினையும் பதிவு செய்ய விரும்புகிறோம். சிங்கள ஆட்சியாளர்கள் கொடூரமும் சூழ்ச்சியும் மிக்கவர்கள். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஒரு தடவை சொன்னதைப் போல வயிற்றில் குத்துவதாகப் பாசாங்கு செய்து முகத்தில் குத்தக் கூடியவர்கள். தமக்கு அழுத்தங்கள் வரும் போது பணிவது போல நடிப்பதும் வந்த அழுத்தங்களில் இருந்து விடுபட்டதும் துள்ளியெழுந்து மிதிப்பதும் சிங்கள ஆட்சியாளர்களுக்குக் கைவந்த கலை. தம் மீதான அழுத்தத்தை எதிர் கொள்ள தற்போதய சூழலில் சீனாவை வைத்து இந்தியாவினைக் கையாளும் அணுகுமுறையினை சிங்களம் கடைப்பிடித்து வருகிறது. இந்திய மத்திய அரசோ சிறிலங்காவை சிறிய அரசாகக் கருதி அதனைத் தாம் இலகுவாகக் கையாளலாம் என்ற பாணியில் செயற்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் சிறிலங்கா அரசை அழுத்தங்கள் இன்றிக் கையாள்வது சாத்தியமானதல்ல. தமிழக முதல்வர் சிறிலங்கா அரசினைப் பேசி வழிக்குக் கொண்டுவர முடியாது என்பதனையும், கடுமையான நடவடிக்கைகள் தேவை என்பதனையும் புரிந்து செயலாற்றியிருப்பது அவரது ஆற்றலையும் ஆளுமையையும் வெளிப்படுத்துகிறது.

தமிழக சட்டப் பேரவையில்; நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப் படும் வகையில் தமிழகம் தொடர்ந்து செயற்படவேண்டும் என நாம் பணிவுடன் வேண்டுகிறோம். தமிழக முதல்வர் இதற்கு ஆவன செய்வார் எனவும் உறுதியாக நம்புகிறோம்.

போர்க்குற்றம் புரிந்தவர்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலகளாவியரீதியில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. தமிழக சட்டப்; பேரவையின் இத் தீர்மானம் நமது முயற்சிகளுக்கு வலுவூட்டும்.

தமிழக முதல்வரால் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா அரசின் மீதான பொருளாதாரத் தடைக் கோரிக்கையை உலக அளவில் மேலும் வலுவூட்டச் செய்வதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்க நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் திட்டமிடுகிறது என்ற செய்தியினை தமிழக முதல்வருக்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்கும் இத் தருணத்தில் வெளிப்படுத்த விரும்புகிறோம்.

நன்றி

விசுவநாதன் ருத்ரகுமாரன்

பிரதமர்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.