Friday, June 10, 2011

வழக்கம் போல பழைய பல்லவியோடு கொல்லை நாடி விரைகிறது நிருபமா குழு மீள் குடியேற்றம், மறுவாழ்வு பற்றி ராஜபக்சேவிடம் பேசிவிட்டுத் திரும்புவார்களாம்!

இலங்கை விவகாரத்தை மத்திய அரசு சொதப்பியதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் முன்னாள் தேசிய பாதுகாப்பு செயலாளரான எம்.கே.நாராயணன் மற்றும் அப்போது வெளியுறவுத்துறைச் செயலாளராக இருந்த சிவசங்கர மேனன் மற்றும் இலங்கைக்கான முன்னாள் இந்தியத் தூதர் நிருபமா ராவ் மற்றும் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக அரசு.

இப்போது நாராயணன் மேற்கு வங்க ஆளுநராகிவிட்டார். வெளியுறவுத்துறைச் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற சிவசங்கர மேனன் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகிவிட்டார். இலங்கைக்கான தூதராக இருந்த நிருபமா, வெளியுறவுத்துறைச் செயலாளராகிவிட்டார். திமுக அரசும் போய்விட்டது.

ஆனாலும், மத்திய அரசின் கொள்கைகள் அப்படியே தான் தொடர்கின்றன. காரணம், அதை வரையறுப்பது இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான ரா. ஆட்சியில் இருக்கும் மத்திய அரசுக்கு ஏற்ப ரா உருவாக்கித் தரும் கொள்கைகளை அமலாக்குவதே வெளியுறவுத்துறையின் பணியாக உள்ளது.

இப்போது இலங்கைப் பிரச்சனையை வைத்து மத்திய அரசு நெருக்கி ஸ்பெக்ட்ரம் ஊழலில் இருந்து தப்ப திமுக நினைக்கிறது. அதற்கு வழி கொடுத்துவிடாமல் இருக்க, இலங்கை விவகாரத்தில் கச்சத்தீவு பிரச்சனையை கையில் எடுத்துவிட்டார் முதல்வர் ஜெயலலிதா.

திமுக தலைவர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் போட்டி அரசியல் இலங்கை விஷயத்தில் தங்களை தோல் உரித்துக் காட்டிவிடும் என்ற பயம் மத்திய அரசுக்கு வந்துவிட்டது.

குறிப்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று திமுகவும் அதிமுகவும் குரல் கொடுத்து அதை தமிழகத்தின் மற்ற கட்சிகளும் ஆதரிக்க ஆரம்பித்தால், மத்தியில் காங்கிரஸ் நிம்மதியாக இருக்க முடியாது.

அந்த நிலைமை வந்துவிடக் கூடாது என்பதற்கான வேலைகளை மத்திய அரசு ஆரம்பித்துள்ளது. முதல் கட்டமாக திமுகவை ஒடுக்கி, அதிமுகவுக்கு துணை நிற்பது என்ற நிலையை காங்கிரஸ் எடுக்கலாம். இதன்மூலம் இலங்கை விவகாரத்தில் அதிமுகவையும் நிலை மழுங்கச் செய்யலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது.

திமுகவைப் பொறுத்தவரை அது என்ன தான் தனியாக கூச்சல் போட்டாலும் மக்களிடம் எடுபடாது. காரணம், கடந்த காலங்களில் இலங்கை விவகாரத்தில் காங்கிரசிடம் பணிவைக் காட்டுவதற்காக, திமுக நடத்திய நாடகங்கள் மற்றும் ஸ்பெக்ட்ரம் விவகாரம். இந்த விஷயத்தில் திமுக-அதிமுக கைகோர்த்தால் மட்டுமே நிலைமை மாறும்.

அப்படி ஒரு நிலை வந்துவிடாமல் தடுக்கும் வேலைகளை உளவுப் பிரிவுகள் போட்டு்த் தரும் திட்டப்படி, மத்திய அரசு ஆரம்பித்துவிட்டது. இந் நிலையில் இன்று நிருபாமா ராவுடன் ஒரு குழு இலங்கை செல்கிறது. இதில் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனும் இடம் பெற்றுள்ளார். இவர்கள் வழக்கம்போல தமிழர்களின் மீள் குடியேற்றம், மறுவாழ்வு பற்றி ராஜபக்சேவிடம் பேசிவிட்டுத் திரும்பி வரவுள்ளனர்.

மற்றபடி இறுதிக் கட்ட போரின்போது 20000 தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து பேசும் நிலையில் மத்திய அரசு இல்லை. காரணம், அந்தப் போரின்போது இலங்கைக்கு எல்லா உதவிகளையும் தந்ததே மத்திய அரசு தான் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந் நிலையில் தனது இலங்கை பயணம் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் சிவசங்கர மேனன் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு இலங்கையிடம் வலியுறுத்துமாறு ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.

இந்த சந்திப்பாலோ அல்லது இந்தக் குழுவின் இலங்கை பயணத்தாலோ ஒரு பயனும் இருக்கப் போவதில்லை என்பதையும் இப்போதே சொல்லிவிடலாம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.